ஈழத்தின் கிழக்குக் கடற்கரை மணற்பரப்பில் தூக்கி வீசப்பட்ட கோகினூர் வைரம் ஒன்றை ஈழத்து முற்றத்தினூடாகக் காணக் கிட்டியது. அந்த வைரத்தின் பெயர் ”+ள் விகுதி” பெயரைப் பாருங்கள் வைரத்தின் - அது வீசும் அறிவொளியின் வெளிச்சத்தை - சொல்லே காட்டிக் கொடுத்து விடுகிறது இல்லையா?
1997ம் ஆண்டு இளவரசி டயானா இறந்த போது எல்டன் ஜோன் பியானோவின் முன்னால் அமர்ந்து கண்ணீரோடு பாடிய ‘குட்பாய் லண்டன் றோஸ்’ பாட்டு மனதைப் பிளிந்ததன் பின் சொற்களின் பாரம் என்னைத் தாக்கியது இந்த ள்+ விகுதியைப் பார்த்ததன் பின்னால் தான்.
ஆம், அது ஒரு வலைப்பூ.கீர்த்தனா என்ற பெண்ணால் 2007ம் ஆண்டு 12 பதிவுகளை மாத்திரம் கொண்டிருக்கும் வலைப்பூ.மே 23 அன்று ‘வணக்கம்’என்ற தலைப்போடு அறிமுகமாகிய அப்பெண் எழுத்தின் பின்னூட்டங்களை அப்படியே இங்கு தருகிறேன். பாருங்கள்.
வணக்கம்
வலைப்பதிவிட வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம்
பாழாய் போன நேரம் தான் கிடைப்பதில்லை.
பகுதி நேர வேலையோடும் படிப்போடும் போராடியே..வாழ்க்கை கழிகிறது.
வாய்காரி ஆதங்கம் மேலெழும்பவே நேரத்தை எப்படியோ ஒதுக்கி எழுத வந்திருக்கிறேன்.
முடிந்த வரைக்கும் தொடர்ச்சியான பதிவுகளை தர முயற்ச்சிக்கிறேன்.
நன்றி.
Posted by கீர்த்தனா at 1:01 AM
22 comments:
மு.மயூரன் said...
நீங்கள் வலைப்பதிவிடத்தொடங்கியமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் உற்சாகமாக எழுதுங்கள்.
3:11 AM
சோமி said...
வாழ்த்துக்கள் கீர்த்தனா.
நிரம்ப எழுதுங்கள். வாய்க்காரிகளின் கதைகள் எப்பவும் கலகமும் சுவாரசியமும் நிறைந்தவை.விரைவில் தமிழ்மணம் போன்ற ஏதொவொரு வலைபின்னலில் இணையுங்கள்.
1:01 AM
சினேகிதி said...
வணக்கம் கீர்த்தனா!
நீங்கள் வாய்காரியா :-))நல்ல விசயம்...அப்ப உங்கட வாயைக்காட்டுங்கோ சீ..எழுதுங்கோ.
1:07 AM
கீர்த்தனா said...
நன்றி மயூரன் ,சோமி, சினேகிதி..
(நக்கலா போச்சு ..சினேகிதிக்கு.. :-))
நேரம் கிடைக்கும் போது கட்டாயம் எழுதுவேன்.
2:28 AM
சினேகிதி said...
"+ள்" இதை எப்பிடி உச்சரிக்கிறது?? விகுதி என்றால் என்ன?? நீங்கள் சரியான கெட்டிக்காரியாம் என்று சொல்லினம் அதுக்காக இப்பிடி வந்த உடன புரியாத பாசைல எல்லாம் பயம் காட்டக்கூடாது சரியா :-) கேட்க கேள்விகளுக்கு ஒழுங்காப் பதில் சொல்லுங்கோ:-)
1:30 PM
கீர்த்தனா said...
சினேகிதி…
+ள் என்பதை = சக ள் என்று உச்சரிக்கலாம்.
தமிழில் பகுதி, விகுதி, சாரியை, சந்தி ,என்று சொற்களை பிரிக்கலாம்.
அந்த அடிப்படையில் விகுதி சொல்லின் பின்னால் வருவது.
உதாரணம் :- வந்தாள் என்பதை வந்து +த்+ ஆள்
என்று பிரிக்கலாம்.இதில் ஆள் என்பது விகுதி. (அள், ஆள் பெரும்பான்மையான பெண்பால் விகுதிகள்)
இந்த ஆள் என்பது ஆ+ள் சேர்ந்து வருவது.
ஆக சக ள் = +ள்
புரிகிறதா???
- நான் ஒன்றும் பெரிய கெட்டிக்காரி இல்லை. ஆனால் கெட்டிக்காரி.:-)
உங்கட கேள்விக்கு நான் நல்ல பிள்ளையா பதில் சொல்லிட்டன்.
அம்மா மிரட்டுற மாதிரி என்ன மிரட்டகூடாது . சின்ன பிள்ளை பயந்து போயிடுவன் :-) ..
3:21 PM
சுந்தர் / Sundar said...
வாங்க .. வாழ்த்துக்கள்
12:08 AM
U.P.Tharsan said...
//தமிழில் பகுதி, விகுதி, சாரியை, சந்தி ,என்று சொற்களை பிரிக்கலாம்.
அந்த அடிப்படையில் விகுதி சொல்லின் பின்னால் வருவது.//
எங்கேயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கு. :-))
வலைப்பூ(வலைப்பதிவு)பதிய தொடங்கியாச்சா! ம்.. வாழ்த்துக்கள்.
8:44 AM
சினேகிதி said...
விளக்கம் எல்லாம் சரிதான் ஆனால் எனக்குத்தான் அதை உங்கட வலைப்பததிவுக்கு பெயரா வைச்சிருக்கிறதுதான் ஏனென்று விளங்காதாம்....
12:54 PM
கீர்த்தனா said...
சினேகிதி...
உங்களுக்கு விளங்குற மாதிரி சொல்ல வேணும் என்டால் ...
நான் "பெண்" என்டதால பெண் பால் "விகுதிய" என்ட பதிவுக்கு பெயரா வச்சன்.
புரிந்ததா??? இதுக்கு மேலயும் புரியாட்டி எல்லா வலைப்பதிவாளர்களையும் உதவிக்கு அழைக்க வேணும்.
:-)
3:03 PM
அபி அப்பா said...
வணக்"கம்"
4:55 PM
மு.மயூரன் said...
கீர்த்தனா,
உங்களுக்கு "ராக்கிங்" நடக்குது.
வலைப்பதிவுலகத்துக்கு புதுசா வாற ஆக்கள பகிடிவதை பண்ணுற குழப்படிக்கார பிள்ளைகளிட குழுவுக்கு சினேகிதிதான் தலைவி எண்ட மாதிரி அறிஞ்சு வச்சிருக்கிறன்.
நீங்க உங்கட அம்மாவையே கூப்பிட்டு பாடமெடுத்தாலும், விளங்காத மாதிரி நடிக்கிறவங்களுக்கு விளங்காது ;-)
பாருங்களேன் உங்கள மூன்று முறை ரொம்ப சீரியசா பதில் சொல்ல வச்சிட்டாங்க.
அடுத்தடுத்து உங்களுக்கு என்ன நடக்கப்போகுதோ....
அது சரி சிநேகிதி, அது யார் படத்தில இருக்கிற பிள்ளை?
6:00 PM
கொழுவி said...
//நான் "பெண்" என்டதால பெண் பால் "விகுதிய" என்ட பதிவுக்கு பெயரா வச்சன்.//
உங்கள் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தாராளமாக நீங்கள் இனி வலைப்பதியலாம். வரவேற்கிறோம். எங்கள் சார்பில் விசாரணைகளை மேற்கொண்ட மகளிர் விசாரணைக் கமிசன் அதிகாரி சிநேகிதிக்கு நன்றி.
6:14 PM
சினேகிதி said...
ஆகா புரளியக் கிளப்ப கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...மயூரன் அண்ணா எங்களுக்கு இந்த பகிடிவதை எல்லாம் கேள்விஞானம் மட்டும்தான் அதைப்போய் கீர்த்தனா போல வாய்காரிட்ட எல்லாம் பரிசோதிச்சுப்பார்ப்பனா நான்:-)
படத்தில இருக்கிற பிள்ளை நான்தான்.
10:34 PM
கீர்த்தனா said...
நன்றி மயூரன் என் சார்பு வழக்கறிஞராக களத்தில் இறங்கினதுக்கு.
நீதிபதி கொழுவி அவர்களின் உத்தரவு படி இனி யாராலும் தொந்தரவு வராது என்று நம்புகிறேன்.
:-)
4:18 PM
நாமக்கல் சிபி said...
வாழ்த்தி வரவேற்கிரோம்!
வருக! வருக!
2:13 PM
பகீ said...
வாங்க கீர்த்தனா,
சினேகிதி வலைச்சரத்தில செய்துவைச்ச அறிமுகம்தான் என்னை இங்க கூட்டிக்கொண்டு வந்து விட்டிருக்கு
தொடர்ந்து வலைப்பதிய வாழ்த்துக்கள்.
ஊரோடி பகீ
1:02 AM
கானா பிரபா said...
காதோரம் லோலாக்கோட வந்திருக்கிறியள் வாம்மா மயிலு
9:26 AM
poet said...
தமிழ் வலைப் பதிவுகள் பூத்துக் குலுங்குவது யார் யாரது என்று தெரியாமல் ஒரு எல்லயற்ற காட்டின் சுந்த்ந்திரத்தொடு விரிந்து செல்கிறது. புல்லின் பூவும் செடியின் பூவும் ரோஜாபோலவும் மககிழ்ழ் போல்லவும் நாகலிங்க பூவைப்போலலவும் அழ்கின் முழுமை என்பதை கடந்த வ்ருடம் ஆனைமலைக் காடுகளில் வாழ்ந்தபோது மேலூம் உணர்ந்தேஎன். எனது மூடியாத நாவலுக்காக கீர்தனாபோன்ற பல இளளயவர்களளது தளங்களில் இருந்து கற்றுக் கொள்கிறேஎன். வாழ்விம் மூழ்ழுமையான அழகும் அதன் வீடுபட்டதன்மையோடு வேறெங்கும் காணமுடீவதில்லை. இத்தனை சுதந்திரமான கலைப் பயணம் வேறெங்கும் கசாதியமும் இல்லை. வலைத் தளங்களில் இருந்தும் நாவலுக்கான தேட்டலை ஆரரம்பிக்க்கிறேன். ஒரு மாலைப் பொழுதில் பெண்கள் ஆய்வு மையத்தில்ல் கவிஞர் தி.பா கலந்துகொண்ட உரரையாடலின் பின்ன்னர் ஒரு சில்ல நிமடங்கள் பேசசிய கீர்த்தனாவா நீங்க்கள். அப்படியயாயின் ஒன்று சொல்ல வேண்டும். உங்களளல் 2005ல் வெளிவர வேஎண்டிய எனனது நாவல் (1824 - 2004 வரையில்லன பெண்களின் கதைகள் ) பாழாகிப் போனது. கூட்டம் மூடிந்து வண்டிக்கக தரித்தபோத்து தமிழ் நாவல்களின் உருவத்தைத் காரசசாரமாக நிரராகரித்துக் கொண்டிருந்தீர்கள். அன்றுபோய் எழுதியதை தூக்கிப் போட்டுவிட்டு தேடத் தொடங்கியதுதான் இன்னும் முடியவ்விலை.அந்தத் தேடலில்தான் +ள் வந்து சேர்ந்தது. இப்ப மீண்டும் பயமாய் இருக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்
3:15 AM
கீர்த்தனா said...
வ.ஐ.ச.ஜெயபாலன்,
//இத்தனை சுதந்திரமான கலைப் பயணம் வேறெங்கும் கசாதியமும் இல்லை//
உண்மைதான்..!
நன்றி..உங்கள் பின்னூட்டத்திற்க்கு
நான் அதே கீர்த்தனா தான் :-)
2:47 PM
உதயதேவன் said...
கீர்த்தனா...
உங்களட மொழி மிக அழகு....
யாழ் தமிழில் ஒரு +ள்
யார் அவள் என்று
அதிசயக்க செய்கிறது
நெருப்பாற்றில் பூத்த
குருஞ்சி மலராய்
தமிழும் அறிவியலும்
மண் வாசனையும்
மனித நேயமும்
மணமணக்க....
தமிழ் வலை உலகிற்கு
பாரதி கனவு கண்ட
ஒரு புதுமைப்பெண்...
வாழ்த்தி வரவேற்க்கும்
சகோதரன் உதயதேவன்
12:05 PM
உதயதேவன் said...
கீர்த்தனா...
உங்களட மொழி மிக அழகு....
யாழ் தமிழில் ஒரு +ள்
யார் அவள் என்று
அதிசயக்க செய்கிறது!
நெருப்பாற்றில் பூத்த
குருஞ்சி மலராய்
தமிழும் அறிவியலும்
மண் வாசனையும்
மனித நேயமும்
மணமணக்க....
தமிழ் வலை உலகிற்கு
பாரதி கனவு கண்ட
ஒரு புதுமைப்பெண்...
வாழ்த்தி வரவேற்க்கும்
சகோதரன் உதயதேவன்
12:06 PM
‘வாய்க்காறி ஆதங்கம் மேலெழும்ப’ - என்ன ஒரு உயிர் துடிப்பான செறிவான கருத்துக் கொண்ட சொல்வீச்சு!
இத்தனை அழகாய் பதிவுலகத்துக்கு வந்து சேர்ந்த பெண் இவள்.அவரது ஆக்கங்கள் அவரின் ஆளுமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி நிற்கிறது. அதற்குள் கரப்பான், வறுமை மாடு மனிதன்,ஆண்சிலந்திகள்,பெண்ணின் மடி,கருவறை,ஆண்வண்டின் காதல், பழைய புது இருப்புகள் ஆகிய அப்பெண்னின் ஆக்க வெளிப்பாடுகள் அவரின் ஆளுமைக்கு மிகச் சிறந்த சான்றுகள்.
அவ் வலைப்பூ கொண்டிருந்த படம் இன்னும் அழகாய் அப் பெண்னின் ஆழுமையைச் சித்தரித்திருந்தது. ஓம். அது ஒரு பெண்ணின் காதும் அதில் அவள் அணிந்திருக்கும் வளையமும்.அதுவே ஒரு கவிதையாக இருந்தது.அத்தகையதான கவித்துவம் பெயரிலும் வடிவத்திலும் கொண்டமைந்திருந்த அழகிய வலைப் பூ அது.
ஏனோ அது இப்போது இயங்கக் காணோம். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.அதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உண்டு.அதனால் இது பற்றிப் பேசாதிருப்பதே உசிதம் என்று வாளாதிருந்தேன்.நேற்றய தினம் வாசிக்கக் கிடைத்த ஆனந்த விகடனில் வந்த ’சிட்டுக் குருவி’ என்ற தலைப்பிலான கவிதை மீண்டும் என்னை உசுப்பி விட்டது.வாளாதிருப்பதன் நேர்மையீனம் மீண்டும் உசுப்பி விடப் பட்டதன் பின்னணியிலேயே இந்தப் பதிவு இங்கு இடப் படுகிறது.அந்த உசுப்பலின் வரிவடிவங்கள் தான் என் மன மரத்தில் இருந்து இங்கு வார்த்தைகளாகச் சிந்துண்டு கிடக்கின்றன.
அந்த வலைப்பூவில் இறுதியாக இடம்பெற்றிருக்கிற கவிதையும் அதற்கு வந்த ஒரு பின்னூட்டமும் அதற்குக் காரணமாகியிருக்கலாமோ என்ற நியாயமான ஐயம் என்னை ஏனோ பதட்டமடைய வைத்துக் கொண்டிருக்கிறது.
அவர் இறுதியாக எழுதி இருக்கிற கவிதை (Wednesday, October 10, 2007 )
பழைய-- புது ...இருப்புக்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றிருக்கிறது.கவிதை இது தான்.
பரந்த வெளியில் .. சிதறுண்டு கிடக்கிறது என் பழைய இருப்பு
வெள்ளை மல்லிகை மலர்களில் மென்இதழ்களாய்..
கரு முகிலும் வெண்பனியும்
சருகுகளை ஸ்பரித்து செல்லும் மென்காற்றும் கூட
அதை நாசம் செய்யலாம்..
யாருமற்ற அநாதையாய் ..ஏங்கித்தவித்து..
மெதுமெதுவாய் அது வாடிப்போகும்….
காதலால் கட்டுண்ட என் விலங்குகள் அறுந்து
வானவெளியெங்கும் கருமுகில்களை சுற்றியவாறு
பரந்தது....
..காணாமல் போனது..!!
நீங்கள் யாரும் உங்கள் நாசம் செய்யும்
துர் வாடை வாயினால்…
எந்த ..கேள்வியும் கேட்க வேண்டாம்..
என் இருப்பற்றுப்போன கதைகளை என்னிடம் கிளற வேண்டாம்..
என் புது இருப்பு..
பூக்கூடைகளில் இருந்து..
ரோஐாக்களையும் .. அல்லிகளையும்
அள்ளியெடுத்தபடியும்..
அவ்வப்போது தென்படும் தென்றலுக்கு முத்தம் கொடுத்தபடியும்
தொடரும்..!!!
இந்தக் கவிதைக்கு வந்த பின்னூட்டம் ஒன்று பகை அரசன் என்ற பெயரோடு வந்திருக்கிறது.இது தான் அது.
ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை
தடை செய்வதற்கு தகுதியில்லாத கவிதை"
இதுவும் ஒரு கவிதை தான்(தெலுங்கு) ...
உங்க கவிதைனால் நீங்க இந்த சமூகத்துக்கும், மக்களுக்கும் என்ன சொல்ல வரீங்கா...
என்ன கவிதை எழுதுகிறீர்கள் யாருக்கும் ஒண்ணும் புரியாமல்...
கேட்டா.. கவிதைன்றது ஊற்று, உணர்ச்சி அப்படி இப்படின்னு எதாவது அசட்டு தனமா சொல்ல வேண்டியது..
தமிழகத்தில் சிலருக்கு மட்டுமே கவிதை வரையும் பாக்கியம் கிடைக்கிறது அதில்நீங்களும் ஒருவர்... அதை உருப்படியா செயங்கா..
நாலு கோடி மக்களுக்கு புரியுரமாரி எழுந்துங்க... நாலு பேருக்கு கூட புரியாத மாறி வேண்டாமே...”
------------------------------------------
’உங்களுக்கு ஒரு கவிதை புரியவில்லை என்றால் அது உங்களுக்குரிய கவிதை இல்லை’அன்பரே! அதைத் தாண்டிச் செல்லும் மனநிலையை வளர்த்துக் கொள்ளலே சிறந்த மனிதனுக்கழகு.சொற்களால் கொலை எதற்கு? இனிய உளவாக இன்னாதவை எதற்கு? கனியிருக்கக் காய் கவர்வதெதற்கு?
என்ன மனிதர்கள் இவர்கள்?
அதன் பின் அவரிடமிருந்து எந்த பதிவுகளும் அதில் வெளிவரவில்லை.இந்தப் மென்மையான பெண்மனம் இருந்த வலைப்பூ - அது இருந்த சுவடு keerthanakk.blogspot.com என்ற முகவரியில் இருக்கிறது.
இன்னும் மனம் சமாதானம் அடைவதாயில்லை.
இந்தப் பகையரசருக்குச் சொல்வதற்கு எனக்கொரு செய்தி இருக்கிறது.”ஒரு புதிய ஐடியா என்பது மிக மென்மையான ஒரு பொருள்.ஒரு கேலிச் சிரிப்பு அதைக் கொன்று விடும்.ஒரு கொட்டாவி அதைச் சாகடிக்கும்.ஒரு குத்தல் பேச்சு அதைக் குத்தி வீழ்த்தி விடும்.ஒரு முறைப்பு அதன் மூச்சை நிறுத்தி விடும்.” - இது அண்மையில் வாசித்த ஒரு வாசகம்.
ஒரு கலைஞனுக்குத் தன்னுடய படைப்பும் அது மாதிரித் தான். தான் பெற்றெடுத்த குழந்தையைப் போல.தன் உணர்வுகளால் எழுதியது.அவனைப் பொறுத்தவரை அது அவன் அனுபவங்களால் முழுமை பெற்ற படைப்பு.அதை எத்தனையோ தரம் பார்த்துப் பார்த்து, திருத்தித் திருத்தி இரவும் பகலும் அதைப் பற்றியே நினைத்து நினைத்து அதனை முழுமைப் படுத்தி இருப்பான்.பின் அது பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேடையேறும்.
ஆனால் அது மிக இயல்பாக எந்த ஒரு உணர்வுமின்றி அரக்கத் தனமாகப் புறக்கணிக்கப் படும் போது, அல்லது நிராகரிக்கப் படும் போது, தோளை உலுக்கி விட்டுக் கொண்டு போய்விடுகின்ற போது, குரூரமான பாஷையால் குத்திக் கிழிக்கும் போது இவர்கள் எத்தகைய மனிதத் தன்மை உள்ளவர்கள் என்று தான் சிந்திக்கத் தோன்றுகிறது.
அண்மையில் மழை என்ற வலைப்பூவில் திரு சந்தான கிருஷ்னன் அவர்கள் அதனை மையப் படுத்தி அழகான கவிதை ஒன்றைப் புனைந்திருந்ததைக் காண முடிந்தது.அது இது தான்.
கவிதையின் கண்ணீர்
பிரசுரத்துக்கு மறுக்கப் பட்ட
கவிதைகள் ஒன்று கூடி
குற்றஞ் சாட்டின
வாசிக்கப் படாமல் இருப்பதை விட
எழுதப் படாமல் இருப்பது
சாலச் சிறந்தது.
அவைகளின் கண்ணீரைத்
துடைப்பதற்கேனும்
எழுத வேண்டும் ஒரு கவிதை!
ஒரு மென்மையான கவிஞ மனம் தன் கவிதைக்களுக்காக இப்படி இரங்குகிறது. அதற்குப் பின்னூட்டமிட்ட ஒரு இரசிகர் இப்படி ஒரு கவிதையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
மழைச் சகதியில்
யாரோ தவறவிட்ட
சிவப்பு கெட்சைப் போல
ரத்தம் கக்கிச் செத்தான் கவிஞன்.
பிரேத பரிசோதனை
செய்து பார்த்த
மருத்துவர்கள் சொன்னார்கள்.
அவன் நெஞ்சில்
புறக்கணிக்கப் பட்ட கவிதை ஒன்று
புற்றுக் கட்டி வளர்ந்திருந்தது.
இக்கவிதையை வே. இராமசாமி என்பவர் எழுதியிருந்ததாக அவ் வாசகர் குறிப்பிட்டிருக்கிறார்.
இத்தகைய எழுத்துலக அரசியலுக்கு வலைப்பூக்கள் ஒரு நல்ல மாற்று என்றே தோன்றுகிறது.இங்கு ஆசிரியப் பெருந்தகையோர் யாரும் அவற்றை வெட்டிச் சிதைத்து விட முடியாது. உருமாற்றி தம் வல்லமையைக் காட்டி விட முடியாது.பிற்போட்டு பிற்போட்டு அவனைக் காயப்போட்டு விட முடியாது.நினைத்ததை எழுதவும் பேசவும் பகிரவும் முடிவதால் இது ஒரு நல்ல மாற்றே!ஆனால் மென்மையான ஒரு கவிஞ மனத்தை இப்படியான அனாமதேயங்கள் வந்து குத்திக் கிழித்துக் காயப்படுத்தி குற்றுயிராக்கிப் விட்டுப் போய் விடுகின்றனவே! இதற்கு என்ன செய்வது?
இதற்கு மாற்று தம்மைப் பலப்படுத்திக் கொள்வதொன்று தான் என்பதை கீர்த்தா ஏனம்மா மறந்து போனாய்? BE STRONG டி.
மணலுக்குள் தூக்கி வீசப்பட்டு விட்ட கோகினூர் வைரமே எழுந்து வர மாட்டாயா?
போகு முன் இந்தக் கவிதையையும் ஒரு முறை பார்த்து விட்டுப் போங்களேன்!
சிட்டுக் குருவி
ஓர் அடைமழை நாளில்
சிட்டுக் குருவி ஒன்றைச் சந்தித்தேன்.
தொப்புர நனைந்திருந்த அது
ஒரு மரக்கிளையின் இலை மறைவில் அமர்ந்து
நடு நடுங்கிக் கொண்டிருந்தது
உடைந்த அதன் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
சிட்டுக் குருவிகள் வேகமாக அழிந்து கொண்டு வருகின்ற
இந்த நாட்களில்
அது எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை.
மருண்ட விழிகளோடு
இறகுக்குள் உயிர் ஒடுங்கி அமர்ந்திருந்த அது
ஒரு முறை வலிய பூட்ஸ் காலின் கீழே
சுருண்டு கதறியதைக்
கண்டேன்.
தானிய மணிகளைக் கொத்திக் கொண்டு
கவண் கண்களுக்குத் தப்பிப் பறந்த
சாகசத்தின் பழங்கதையை
அது மறக்கவே விரும்புகிறது.
நிசப்தமான மனிதர்கள் வாழும்
நிசப்தமான உலகில்
கீச்சு மூச்சுக் கூடாதென்பதை
உடைந்த மூக்கு அதற்குத் தெரிவித்து விட்டது.
மழை குறைந்து நின்றதும்
அது கிளம்பிப் போனது.
அதன் இறக்கைகள் எதிலும் காயங்கள் இல்லை
கால்கள் எதுவும் முடமாகவில்லை
என்றாலும்
அது மெள்ள மெள்ள நடந்து போனது.
அப்போது
சிட்டுக் குருவி என்ற பெயர்
அதை விட்டு விட்டுப்
பறந்து போனது.
(இக்கவிதை ஆனந்த விகடனில் பிரசுரமாகி இருக்கிறது.நன்றி;ஆனந்த விகடன்.23.02,2011; எழுதியவர்; இசை.)