1990ம் ஆண்டின் இறுதிப் பகுதி.
என் பல்கலைக் கழக வாழ்வின் இறுதியாண்டு.
நான்கு வருட கற்கை நெறி நாட்டின் போர் காரணமாக ஒரு வருடம் தள்ளிப் போய் இருந்தது.
சிறப்புத் துறையாக வரலாறை ஒரு பாடமாக எடுத்ததால் இறுதியாண்டில் ஒரு ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.
சிறப்புத் துறையாய் வரலாறை எடுத்துக் கொண்டதே ஒரு தற்செயல் தான்.சில தற்செயல்கள் எப்படி சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கையையே நிர்ணயித்து விடுகின்றது என்பதற்கு இது ஒரு சாட்சியாகவே எனக்கிருக்கிறது.
என் சிறு வயதுப் பிராயங்களில் படிப்பில் எனக்கு அத்தனை நாட்டம் இருந்திருக்கவில்லை.படிக்காமலே எடுத்த கல்விப் பொது தராதர சாதாரண தரத்தில் (G.C.E.O/L) என், கற்பித்தலில் விசுவாசம் உள்ள ஆசிரியர்களால் - அதில் சிறப்பாகச் சுபத்திரா ரீச்சரைச் சொல்ல வேண்டும். வகுப்பறைகளில் கேட்ட கேள்வி ஞானத்தைக் கொண்டும் கொஞ்சம் கொஞ்சம் வற்புறுத்தலுக்காகப் படித்ததைக் கொண்டும் 8 பாடங்களில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய பாடங்களில் C தரத்துச் சித்தியினைப் பெற்றதன் விளைவாக ( தண்டனையாக இப்போது ஆங்கிலம் பேசும் நாட்டில் வாழ வேண்டி வந்ததை என்னவென்பது?:))கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் (G.C.E.A/L)கலைப் பிரிவை பலரின் ஏளனத்தின் மத்தியிலும் தேர்ந்தெடுத்தேன்.
அக்காலங்களில் வர்த்தகப் பிரிவும் கணிதப் பிரிவும் விஞ்ஞானப் பிரிவுமே பிரபலமாய் இருந்தது.(இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன்)
அதன் பின்பு தான் உண்மையில் கல்வி மீது நாட்டம் பிறந்தது.அதிபர் லோகசிங்கம் அவர்களின் முறையான கண்காணிப்பில்;ரியூசன் காச்சலே அண்டவிடாமல் காத்துக் கொண்டு எம்மை ஆகர்சித்த அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டலில் பல்கலைக்கழக வாசம் முதல் தடவையிலேயே கிட்டியது.எங்கள் பாடசாலை வவுனியா மாவட்டத்தில் முதலாவது என்ற பெருமிதத்தை அது என் பாடசாலைக்கு வழங்கியிருந்தது.என் ஆசிரியர்களின் அன்றய பெருமிதம் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாதது.
என்றென்றைக்கும் நான் என் ஆசிரியர்களுக்கும் என் பாடசாலைக்கும் கடமைப் பட்டவள்.
யாழ்பல்கலைக் கழகத்துக்குப் போன போது மீண்டும் பாடத்தெரிவு பற்றிய குழப்பம்.5 வயதில் கோயில் மண்டபத்தில் அரிசியில் எழுதிய அ நாவும் கோயில் பரீட்சயமும் ஆயுட் பரியந்தம் தொடரத் தக்கதே என்ற உண்மை புரிந்த போது அதனைத் தவிர்த்து வேறேதேனும் புதிதாகக் கற்றுக் கொள்ளும் ஆவல் எழுந்தது.
10ம் வகுப்பில் சமூகக்கல்வி கற்பித்த யோகி ரீச்சரின் அழகான கற்பித்தல் எனக்கு சமூகவியலின் பால் தீராத ஆவலை உண்டாக்கி இருந்து. ஆனாலும் உயர்தர வகுப்புக்கு நான் வந்த போது அவ்வாசிரியரின் இடமாற்றமும் புதிதாக ஒருவரும் நியமிக்கப் படாமையும் அப்பாடத்தை தொடர்ந்து எடுக்க முடியாமைக்கு ஒரு காரணமாயிற்று. ஆனாலும் அப்பாடம் பற்றிய ஆசை மனதோடு இருந்தது.
அப்போது பல்கலைக் கழகத்தில் கலைப் பீட மாணவர்கள் பொருளாதாரத்தை சிறப்புப் பாடமாக எடுக்கும் காச்சல் ஒன்று நிலவியிருந்தமையால் என் சக தோழிகள் அதற்குள் சென்றார்கள். நான் புவியியலின் பால் கரிசனை காட்டினேன். என்றாலும் அது அடிப்படை தகைமை இல்லாததால் எடுக்க அனுமதி கிட்டவில்லை.ஆனாலும் அப்போது ஒரு வார காலம் விருப்பமான விரிவுரைகளுக்குச் சென்று பார்த்து பாட நெறியைத் தேர்வு செய்யலாம் என்று ஒரு நடைமுறை இருந்தது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது ஓர் 1984ம் ஆண்டு ஒக்ரோபர் மழைக்காலம்.நான் தங்கியிருந்த அறைக்கப்பால் உள்ள அடுத்த வீட்டின் பின் புற அறையில் 4 மட்டக்களப்புப் பெண்கள் தங்கிக் கல்விகற்றுக் கொண்டிருந்தார்கள். ராகிங் பயத்தினால் நாங்கள் எல்லோரும் கூட்டாகவே சேர்ந்து வளாகத்துக்குள் செல்வது வழக்கம். அங்கிருந்த சக மாணவிகள் ஏஞ்சலா, கிரிசாந்தி,மற்றும் இருவருமாக போன ஒரு நாளில் சீனிய மாணவர்களின் ராகிங்கிற்குப் பயந்து ஓடி ஒதுங்கிய விரிவுரை வகுப்பு வரலாறு.
வரலாறு நன்கே பிடிபட, அந்த நாள் ஒரு காரணமாயிற்று. தற்செயலான சந்தர்ப்பங்கள் இப்படித்தான் அமைந்து விடுகிறது.எந்த ஒரு அடிப்படை ஞானமும் இல்லாமல் துணிந்து வரலாறை ஒரு பாடமாக ஒரு இலக்குமற்று விருப்பம் ஒன்றே காரணமாய் எடுத்தேன்.
பின்னாளில் அதனைச் சிறப்புப் பாடமாக எடுக்கும் அளவுக்கு அதில் ஆர்வம் கூடியது. பெறுபேறும் நல்லவிதமாய் அமைந்திருந்தது.வெளியில் இருந்து பார்ப்பவர்கள் சொல்வது மாதிரி பாடமாக்கல்களோ ஞாபகம் வைத்திருக்க வேண்டிய இலக்கங்களோ இல்லாதது அதன் மீது நாட்டம் கொள்ள என்னை இன்னும் தூண்டியது.நாடுகளும் மக்களும் பண்பாடும் வாழ்வியலுமாக எல்லாம் சேர்ந்த ஒரு பார்சலாக வரலாறு இருந்தது என்பது தான் உண்மை.
நாங்கள் இருவர் ஒரு அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தோம். என் தோழி பொருளாதாரத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்திருந்தாள். அவளது இன்னொரு தோழியும் (வாணி)அப்போது எங்கள் தோழியாக இருந்தாள். அவளும் பொருளாதாரத்தையே ஒரு பாடமாக எடுத்திருந்தாள். அதில் என் தோழி அப்பாடத்தில் சித்தியடையாததால் விரக்தியுற்று பல்கலைக் கழகத்தையே உதறி விட்டு ஆசிரியப் பணியில் புகுந்து கொண்டாள். மற்றய தோழி கனடா பயணமானாள். நான் சிறப்புத் துறை நோக்கி முன்னேறினேன்.
2 மொழி தெரிபவன் இரண்டு மனிதன் என்பார்கள்.ஏனென்றால் அவனுக்கு 2 விதமான வாழ்க்கை முறைகள் தெரியும்.2 விதமான உலகம் புரியும். ஆனால் வரலாறு படிப்பவனுக்கு நாடுகளின் எழுச்சியும் வீச்சியும் அதற்கான காரணங்களும் ஒவ்வொரு நாடுகளில் வாழ்க்கை முறை பண்பாடுகளும், அழகும் அவலட்சணமும் தெரியும்.
இந்த இடத்தில் - பல ஆண்டுகளைக் கடந்து விட்டதால் அனுபவத்தோடும் ஒரு விடயத்தை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.யாழ்ப்பாணத்து நிலம் வரண்ட நிலப்பரப்புக்குரியது.சுண்ணாம்புக் கற்கள் நிறைந்தது. ஆறு குளம் அற்றது.பிரயாசையான விவசாயம் இருக்கின்ற போதும், அதன் வாழ்க்கையும் பொருளாதாரமும் கல்வியையே மூலாதாரமாகக் கொண்டது.
அதனால் தானோ என்னவோ பணவருவாயையும் மதிப்பையும் ஒருங்கே தரக் கூடிய டொக்டர், எஜ்சினியர், எக்கவுண்டன் போன்ற பதவிகளைத் தரும் கல்வித்துறைகள் மிகுந்த பிரபலமாக விளங்கின. இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளிடம் போதிய வாய்ப்புகள் வளங்கள் இல்லாமையும் இதற்கு இன்னொரு காரணமே. ஆனாலும் இயல்பான நாட்டம்,திறமை இல்லாமல் பல மாணவர்கள் அப்பாடங்களுக்குள் சென்று வீணே தம் எதிர்காலத்தைப் பாழடிக்கின்றனர்.
கலைத் துறை சார்ந்து எல்லோரிடமும் ஓர் ஏளனப் பார்வையே இருந்த போதிலும்;அப்படியான நிலைமைகளை நானும் பல தடவை எதிர் கொண்ட போதிலும்; என்னை அது எதுவும் பாதிக்க வில்லை. காரணம் எனக்கு எது பிடிக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்ததாலும் அதில் இருந்த நாட்டத்தின் நிமித்தமும் எதுவும் எதற்கும் குறைவில்லை என்ற என் தனி மனித சித்தாந்தமும் அதற்கு மிகவும் கை கொடுத்தன. எனக்குப் பிடித்ததை செய்ய எனக்கு வீட்டில் இருந்த சுதந்திரத்தையும் கட்டாயமாக இங்கு சொல்லியாக வேண்டும்.இப்படியாக எனக்கு அதில் இருந்த ஈடு பாட்டின் காரணமாகத் துணிந்து அப்பாடத்தை எடுத்தது பின்னாளில் எனக்கு மிகுந்த திருப்தியை அளித்தது என்பதை இங்கு சொல்லித் தானாக வேண்டும்.
பின் நாளில் சிட்னிக்கு வரும் வரை உயர்வான இடத்தையே அத்துறை எனக்குத் தந்திருந்தது.
வீணான பகட்டுக்கும் பெயருக்கும் ஏன் நம் சமூகம் ஆட்படுகின்றது என்பதும்;அதற்கு ஏன் பயந்து சாகிறது என்பதும் கேள்வி கேட்கப் பட வேண்டிய விடயங்கள் ஆகும்.எத்தனையோ மாணவர்களின் எதிர் காலம் அதனால் மண்னாகிப் போயிருக்கிறது.என் மைத்துணன் ஒருவன் இத்தகையவர்களில் ஒருவன்.
சரி அது போகட்டும்.
இது வரலாறு எழுத வந்த வரலாறு.
வரலாறு படித்ததால் இது ஒரு சிக்கல்.எங்கு தொடங்கி எங்கு முடிப்பதென்று தெரியவில்லை.சுருக்கமாய் எதையும் சொல்ல முடிவதில்லை:)சுருக்கமாய் சொன்னால் ஏதோ பிஸ்னஸ் ரோக் மாதிரி ஒரு திருப்தி வருவதில்லை.
இது ’தற்செயல்கள்’ எப்படி வாழ்வை சில வேளைகளில் நிர்ணயித்து விடுகிறது என்பதற்கு என் வாழ்வில் நடந்த ஒரு உதாரணமே.
மிகுதியை அடுத்த வாரம் தொடர்கிறேன்.
இது நான் சொல்ல வந்த விடயம் ஒன்றுக்கான பின்னணியே!
தொடரும்....