Tuesday, May 31, 2011

பழ மரம்


”பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றால் செல்வம்
நயன்உடை யான் கண் படின்”

என்பது ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில் வரும் ஒரு குறள்.அதன் பொருள் என்னவென்றால் உலக நன்மை அறிந்து உபகாரம் செய்யும் ஒரு அறிஞனிடம் பொருள் சேர்வது ஊரின் நடுவே இருக்கின்ற பழமரம் ஒன்று நன்கு கனிந்து பலருக்கும் பயன்படுவது போலவாகும் என்பதாகும்.

ஒரு மரம், தனி மரம், ஊரின் நடுவே நிற்கிறது.அது மழைநீரை உண்டு பொது நிலத்தில் விரிந்து நிற்கிறது.யாரும் பரிபாலிக்க வேண்டிய தேவை இல்லை.விடலைச் சிறுவரகள் வெய்யில் பொழுதில் அதன் நிழலில் தான் மாபிள் அடித்து விளையாடுகிறார்கள். மதியப் பொழுதில் வயதானவர்கள் அதன் நிழலில் குந்தியிருந்து ஊர் புதினம் பேசுகிறார்கள். பஞ்சாயத்துக் கூடுவதற்கும் அது தான் இடம்.இரவு நேரங்களில் காதலர் சந்தித்துக் கொள்ள தோதான இடமும் அது தான்.வெளியூரில் இருந்து வருபவர்கள் கூட அந்த பொது மரத்தை அடையாளம் வைத்தே இடத்தைக் கண்டு பிடிக்கிறார்கள்.இடம் காட்டும் வழிகாட்டிகள் கூட இடத்தைச் சரியாகச் சொல்ல அந்த மரத்தில் இருந்தே இடத்தைக் காண்பிக்க ஆரம்பிக்கிறார்கள்.குருவிகளும் பறவைகளும் கூடுகளைக் கட்டுகின்றன.குடியும் குடித்தனமுமாய் அங்கேயே வசிக்கவும் செய்கின்றன.

அந்த மரத்திடம் நிறையப் பழங்கள். பூத்துக் காய்த்துப் பழுத்து இனியனவும் சுவை மிக்கதுமான கனிகளையும் அது அம்மக்களுக்குக் கொடுக்கிறது.அதன் மூலம் அம்மரம் பெறுவதென்ன? எதுவுமில்லை அல்லவா? பயன் கருதா சேவை; கைமாறு கருதா உதவி என்பன இவை தானே? ஒரு பழ மரம் எத்தனை பெரிய தத்துவத்தை நமக்குச் சொல்லிய வண்னம் நிற்கிறது.கீதையின் தத்துவமே அதுவாகியெல்லோ இருக்கிறது.அது போல ஒரு மனிதனும் சமூகத்துக்கு பயன்பாடு உள்ளவனாக இருக்க வேண்டும் என்பது அக்குறளின் பொருள்.

இந்தப் பழமரம் போல ஒரு அரசன். சங்க காலத்தில் வாழ்ந்திருக்கிறான்.அவன் பாரி மன்னன்.அம்மன்னனை கபிலர் நமக்குக் காட்டுகிறார்.புறநானூற்றின் 119வது பாடல் அது.பாரியினுடய வள்ளல்மையை கூறவந்த கபிலர்,’நிழல் இல் நீளிடைத் தனிமரம் போல’ இரந்து வருபவர்களுக்கு அதாவது, நிழல் இல்லாத நீண்ட வழியில் தனி மரம் ஒன்று இருந்து நிழலும் கனியும் வழங்குவதைப் போல வள்ளல் தன்மையுடயவனாக விளங்குகின்றான் பாரி என்று குறிப்பிடுகிறார்.

அந்தப் பழமரம் போல யாரேனும் ஒருவரை நாம் இக்காலத்தில் காண முடியுமா?

ஒரு மரமாகக் கூடவா நம்மால் இருக்க முடியவில்லை?

இயற்கையை விட்டு அது சொல்லும் பாடங்களை எல்லாம் தவற விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோமோ?

(பாடசாலை மாணவர்களுக்காக எழுதியது சிறு மாற்றங்களுடன் copy & paste செய்யப் பட்டிருக்கிறது)

Monday, May 9, 2011

என்னை வளர்த்த மண்ணும் பசளையும்


தொடர்ச்சி.....

மீண்டும் பல்கலைக் கழகத்து வாழ்க்கைக்கு வருகிறேன்.

சிறப்புத்துறைக்குள் சென்ற பின்னர் வீட்டில் நானே ஏக போக ராணியாக இருந்தேன். அவர்களுடய பெரிய அறை தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாகங்களையும் நான் ஆக்கிரமித்தும் இருந்தேன்.அவர்கள் விறாந்தையில் போட்டிருக்கும் விருந்தினர்களுக்கான நாற்காலி என் பரீட்சைக் காலங்களில் வீட்டின் பின் புறத்து மாமர நிழலுக்கும் கிணற்றுக் கரையோரங்களுக்குமாக நகர்ந்த படி இருக்கும்.கதிரையில் உட்கார்ந்து விட்டு இரண்டு கைபிடிக்கும் குறுக்காக ஒரு அகன்ற பலகையைப் போட்டு விட்டு அதில் புத்தகத்தை வைத்துப் படிப்பது நல்ல வசதி.அமைதியான சூழல்,அன்பான தாய்,நல்ல சாப்பாடு,முழு சுதந்திரம்,பிரச்சினைகள் ஏதுமில்லாத மனம்! படிப்பதற்கு என்ன குறை?

இப்படியாக இருந்த வீட்டு சூழலில் படிப்பில் என்னோடு தோழிமாராக இருந்தவர்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.நீலா,தங்கேஸ்வரி,அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.(தற்போது லண்டனிலும் சுவீடனிலும் இருக்கிரார்கள்) அதில் நீலா பொதுப் பட்டப் படிப்பை தொடர்ந்தார். அநேகமாக 11-12 ஒரு விரிவுரை இருந்தால் அடுத்தது 2-3 ஆக இருக்கும்.இவர்கள் எல்லோரும் மதியம் சாப்பாட்டைக் கொண்டு நான் இருந்த வீட்டுக்கு வருவார்கள். ஒன்றாக இருந்து உண்போம்.பின்னர் சின்னத் தூக்கம் பிறகு சிரம பரிகாரம் ஒப்பனைகள் எல்லாம் செய்து கொண்டு அடுத்த ஊர்வலம் போவோம்.

இப்படியாக இருந்த ஒரு நாளில் நீலாவின் அக்கா மீரா அறிமுகமானார். அவர் பல்கலைக் கழக நிதித்துறையில் கடமையாற்றி வந்தார்.உணவு உண்பதற்காக வந்த அவரோடு நாளடைவில் நான் மிக்க நெருக்கமானேன். நம் இருவருக்கும் இடையே அப்படி ஒரு ஒத்த ரசனை இருந்தது.அரசியலில் இருந்து சினிமா வரை நமக்குள் வேறுபட்ட அபிப்பிராயங்கள் பெரும்பாலும் இருக்கவில்லை.அப்படி இருந்தாலும் இறுதியில் ஒரு இணக்கப் புள்ளியில் வந்து நிற்போம்.

நான் கலைப் படங்கள் பற்றிப் பேசும் போது அவர் திருமறைக் கலா மன்றத்தின் கலைப் படைப்புகள் பற்றிப் பேசுவார்.நான் படித்த கிட்லர்,முசோலினி,அலக்சாண்டர்,காந்தி பற்றி - அவர்களுடய ஆளுமைகள் - நாட்டை என்ன உலகத்தையே புரட்டிப் போட்ட அவர்களின் அதீத இயல்புகள் பற்றிப் பேசும் போது, அவர் இந்திரா காந்தியின் ஆளுமை பற்றிப் பேசுவார்.நான் வைதீகத்தின் குறை நிறைகளைப் பேசும் போது அவர் கத்தோலிக்கத் தமிழர் பற்றிப் பேசுவார்.பல்கலைக்கழகக் கல்வியை தொடராத அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது நிறைய.

அமைதி,மென்மை,அன்பு, அதே நேரம் ஆழம் நிறைந்தவர்.அவரது புன்னகை விடயங்களை நிராகரிக்கும்,அன்புசெய்யும்,புறக்கணிக்கும்,கடந்து செல்லும்,நட்புக் கொள்ளும்.மெளனமும் புன்னகையும் இத்தனை விடயங்களைச் செய்யும் சக்தி வாய்ந்ததா என்று அந்நேரங்களில் நான் வியப்பதுண்டு.அருகில் இருப்பவருக்கு மட்டுமே கேட்கும் படியாக மிக மென்மையாகப் பேசுவார்.மெல்லிய புன்னகையோடு எந் நேரமும் காணப்படுவார்.அநேக நேரங்களில் அவருக்கு கோபம் வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவார் என்று நான் நினைப்பதுண்டு.அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவே இல்லை.என் வாழ்வில் அறிவாலும் தோழமையாலும் குணங்களாலும் என்னைக் கொள்ளை கொண்டு போனவர் ஒருவர் உண்டென்றால் அது அவர் ஒருவரே.அதன் பின்னரும் அவருக்கு முன்னரும் அவருடயதைப் போன்ற ஒரு நட்பு எனக்குக் கிட்டவில்லை.

அவர் கத்தோலிக்கர்.சைவத்தில் இருந்து தமிழைப் பிரித்து தமிழ் கத்தோலிக்கம் பற்றிய தெளிவை எனக்கு ஏற்படுத்தியவர் அவர் தான்.பொட்டு வைப்பது, பொங்கல் விழாக்கள் இந்துப் பண்பாடல்ல தமிழர் பண்பாடு என்று கற்றுத்தந்தவர்.மதங்களுக்கு வெளியே நின்று மதங்களை ஊடுருவிப் பார்க்கும் திறன் கொண்டவர்.திருமறைக்கலா மன்றம் அதன் செயற்பாடுகள் பற்றி நான் கார சாரமான விவாதங்களை நிகழ்த்துவேன்.நான் அதீத விமர்சனங்களை முன்வைக்கும் போதெல்லாம் புன்னகையோடும் நிதானத்தோடும் மாறாத குரலின் இனிமையோடும் எனக்கு பதில் தருவார்.இப்போது கண்டாலும்,’இப்பவும் அப்படியே தான் இருக்கிறீங்களா மீராக்கா?” என்று கேட்க ஆவல்.ஆனால்,1995ம் ஆண்டோடு தொடர்பு விட்டுப் போய் விட்டது.

அந்தக் கத்தோலிக்க திருமறைக்கலாமன்றம் திருக்குறளைக் கையில் எடுத்துக் கொண்டு அரசியலையும் உளவியலையும் பக்க பலமாகக் கொண்டு இந்துத் தமிழ் பண்பாட்டுக்கு எதிராக கத்தோலிக்கத் தமிழ் பண்பாட்டை நிறுவியது.அதற்கு அவர்கள் அரங்காற்றுக் கலையை ஊடகமாகப் பயன் படுத்தினார்கள்.யாழ்ப்பாணத்து விடுதலை அரசியலின் பின்னணியில் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அரங்காற்றுக் கலை மிக்க வீரியத்தோடு வெளிப்பட்டு நின்றிருந்தது.

கத்தோலிக்கக் குருமார்களால் சமூகத்தை விளங்கிக் கொண்டு வெளிவந்த ‘நான்’என்ற உளவியல் சஞ்சிகை அவர்கள் எவ்வளவு வல்லமை பொருந்தியவர்கள் என்பதற்கும் தூரதிருஷ்டி நோக்கோடு செயற்பட்டார்கள் என்பதற்கும் நல்லதொரு சாட்சி.அதே நேரம் சைவ சித்தாந்தத் தத்துவங்களையும் சைவர்களை விட அதிகம் விளங்கிக் கொண்டவர்களாக அக் குருமார்கள் விளங்கினார்கள்.

அது நிற்க,

இவ்வாறாகச் சிந்தனைச் சுவாரிசங்களோடும் நாட்டின் அரசியல் பிரச்சினைகளோடும் நான்கு வருடங்கள் ஓடி முடிந்தன.அப்போது ’திசை’ என்றொரு வாரப் பத்திரிகை மிக அமைதியான முறையில் மிகக் கனதியான பக்கங்களோடும் புதிய சிந்தனைகளோடும் புதிய பார்வைகளோடும் வெளி வந்து கொண்டிருந்தது.

ஒருவாறாக நான் பல்கலைக்கழகத்தின் இறுதி வருடத்தை அடைந்தேன்.அப்போது ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்றை இறுதி வருடத் தேர்வுக்காக சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.அதற்கு எதனைப் பற்றி ஆய்வு செய்யலாம் என்ற கேள்வியோடு நான் இருந்த வேளை திசை பத்திரிகையில் ஒரு மூலையில் “நீர்கொழும்பில் சிங்களம் பேசும் தமிழர்கள்” என்ற தலைப்பில் ஒரு துணுக்குச் செய்தி இடம் பெற்றிருந்தது.எனது ஆய்வுக்கான தலைப்பு கிட்டியது இப்படித்தான்.

ஒரு பதிவொன்றின் பிறப்பு இப்படித்தான் ஆரம்பமாயிற்று!

அது இறுதி ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நேரம்.மூன்று மாதத்துக்குள் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க காலக்கெடு இருந்தது.நான் பரீட்சையை முடித்த கையோடு ஆய்வுக்காக நீர்கொழும்பு பயணமானேன்.தலைநகர் கொழும்பில் இருந்து நீர் கொழும்பு பஸ் எடுத்து அங்கு சென்று அங்குள்ள மக்களோடு அளவளாவி விடயங்களைச் சேகரித்துக் கொண்டு
மீண்டும் கொழும்பு வருவதாக என் ஆய்வு தொடர்ந்து கொண்டிருந்த ஒரு நாளில் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் இருந்து தந்தி ஒன்று வந்திருந்தது. அது உடனடியாக வந்து உங்களது’தற்காலிக உதவி விரிவுரையாளர்’பதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தக்வலைத் தந்தது.

இறுதித் தேர்வுக்கான ஒரு பாடப்பகுதியை இன்னும் சமர்ப்பிக்காத நிலையில் இவ்வாறான நியமனம் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்த, மறுநாள் ரயிலில் வவுனியா வந்து பின் ஒரு வாகனத்தில் யாழ்ப்பாணம் வந்து நியமனத்தைப் பெற்றுக் கொண்டேன்.

எனக்குக் கிட்டிய முதல் மாதச் சம்பளத்தில் அந்த ஆய்வுக்கட்டுரையை முடிக்கும் செலவை யும் பார்த்துக் கொண்டேன்.

இவ்வாறு பிறப்பெடுத்தது தான் “நீர்கொழும்பில் சிங்களம் பேசும் தமிழர்கள்” என்ற என் பதிவு!

தொடரும்.....

Monday, May 2, 2011

என்னோடு பயணித்தவர்கள்


தொடர்கிறது.....

இவ்வாறாக ஆரம்பித்த பல்கலைக் கழகப் பயணம் என்னோடு பயணித்த சிலரை இறக்கி விட்ட படியும்; புதிதாகச் சிலரை ஏற்றிக் கொண்ட படியுமாகச் சென்றது.

இந்த இடத்தில் நான் இருந்த வீடு பற்றியும் அன்னலட்சுமி அம்மா பற்றியும் நான் கட்டாயம் சொல்லியாக வேண்டும்.அவர் ஒரு ஏழைத் தாய்.மூன்று கெட்டிக்கார ஆண்பிள்ளைகளின் தாய்.தோட்டம் செய்து பிள்ளைகளைப் படிப்பித்து வந்த தாய்க் கரங்கள் அவரது. இலங்கையின் கல்வித்தரப் படுத்தலுக்குள்ளாலும்; வறுமையின் பிடியில் இருந்த போதும்; மகன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை எட்டிய கெட்டிக் காரன்.

இருந்தும் என்ன? விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த போது இலங்கை இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப் பட்டான்.(தாயாரின் மனநிலையை சற்றே நினைத்துப் பாருங்கள்) அதனால் இரண்டாவது மகனை நிறையக் கடனைப் பெற்று சுவிற்சலாந்து நாட்டுக்கு அனுப்பி இருந்தா. மூன்றாவது மகன் குட்டிப் பயல். நான் அங்கு போன போது.தாய் செய்யும் தக்காளித் தோட்டத்துக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்.(இப்போது அவனும் ஒரு இலங்கையில் பட்டம் பெற்ற பொறியியலாளன்.)

இத்தனை சுமைகளையும் தாங்கிக் கொண்டிருந்த தாயை நான் முதலில் சந்தித்தது ஒரு வெள்ளிக் கிழமை.காலையும் மதியமும் சந்திக்கும் 11 மணியளவாக இருக்கும்.யாழ்பாணத்து இந்து மதத்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சைவ போசணிகளாக இருப்பார்கள். அன்று அவர்களது சமையலறை கழுவப்பட்டு பாத்திரங்கள் மினுக்கப் பட்டு ஆசாரமான சமையல் ஆரம்பமாகும்.

அதுவும் அவ்வாறான ஒரு சமையல் பொழுதே.நான் அவரைக் கண்ட போது சமையலறை கழுவப் பட்டு, ஈரத்துக்காக நிலத்தில் சாக்கு விரிக்கப் பட்டு, அதன் மேல் பலகை போட்டு, சுற்றிவர பாத்திரங்களை வைத்த படி சமையலுக்காக முருங்கக்காய் வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது பல்கலைக் கழகத்தை அண்மித்திருக்கிற வீடுகள் பலவும் பக்க வருமானத்துக்காக வாடகைக்கு அறைகளை மாணவர்களுக்குக் கொடுத்திருந்த போதும் தன் பிள்ளைகளின் கல்வியின் நிமித்தம் தான் யாருக்கும் வீட்டின் அறைகளை வாடகைக்குக் கொடுக்க வில்லை என்றும்;குடும்பத்தில் நடந்த துக்க சம்பவங்களினாலும், சின்ன மகன் இப்போது சிறுவனாவனாக இருப்பதாலும், பணத்தேவைக்காக வாடகைக்கு உணவோடு அறை ஒன்றைக் கொடுக்க இம்முறை நினைத்திருப்பதாகத் தெரிவித்தார்.அத்துடன் நான் அங்கு இருக்கலாம் என்றும்; எனக்குப் பிடித்த எவரையேனும் எனக்குத் துணையாக அறையில் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

விசாலமானதும் இரண்டு ஜன்னல்களைக் கொண்டதுமான அறை அது.அந்த நாளில் இருந்து சுமார் பத்து வருடங்கள் அந்தத் தாயாரோடு நான் வாழ்ந்திருக்கிறேன்.நானும் என் அறைத்தோழி புவனாவோடும் தொடங்கிய அந்த வாழ்வு, புவனா முதல் வருடத்தோடு பல்கலைக் கழகக் கல்வியை விட்டுப் போன அடுத்த வருடத்தில் இருந்து நான் தனிக்காடு ராணியாக ஆட்சி செலுத்தத் தொடங்கியதில் இருந்து ஆரம்பித்தது.

நானே அவரோடு முதலாவதாகவும் கடைசியாவதாகவும் இருந்த பெண்.

எனக்குப் பத்து வருடங்கள் சாப்பாடு போட்டு முழுச் சுதந்திரமும் தந்து என் தன் மகளைப் போல பார்த்துக் கொண்ட அந்தத் தாயுள்ளம் எனக்குக் கிட்டியது என் பூர்வ ஜென்மத்துப் புண்ணியமே. நிச்சயமாக!

இன்னொரு பிறவி என்று ஒன்றிருந்தால் நான் கைமாறு செய்யவேண்டியவர்கள் வரிசையில் என் கிராமத்துப் பாடசாலை,அதில் எங்கள் அதிபர் திரு லோகசிங்கம் அவர்களைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்.அவர் மிக்க கோபக் காரன்.அவர் பல பாடசாலைக்கு மாற்றலாகி மாற்றலாகிப் போகின்ற போதும் இறுதியில் மீண்டும் எங்கள் பாடசாலைக்கு வந்து சேருவார்.எங்கள் பாடசாலையோடு அவருக்கு அப்படி ஒரு விருப்பமும் ஈடுபாடும் இருந்தது.சிறு வயதில் அவரிடம் நான் நன்றாகவே அடி வாங்கி இருக்கிறேன்.(வீட்டுப் பாடம் செய்யா விட்டால் சில ஆசிரியர்கள் அவரிடம் நம்மை அனுப்பி விடுவார்கள்).ஆனால் அவரைப் போல பாடசாலையைக் காதலித்த அதிபரை நான் காணவில்லை.அவரது வாழ்க்கை எங்கள் பாடசாலை.அவர் தன் குடும்பத்துக்கு உழைத்ததை விட எங்கள் பாடசாலைக்கு உழைத்தது அதிகம்.

அது போல,நாளொன்றுக்கு இரண்டு தரம் மட்டுமே ஓடும் எங்கள் கிராமத்து பஸ்களில் றைவர்கள் கொண்டாக்டர்களைப் பற்றியும் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும்.அவர்களிடம் இருந்த பொறுமை, நேர்மை, அக்கறை, இரக்கம்,நற்பண்பு எவ்வளவு சனக்கூட்டம் என்றாலும் எல்லோரையும் ஏற்றிச் சென்ற அந்த மனம்,அவர்களிடம் நாங்கள் வாங்கிய பேச்சுக்களும்,அவர்களுக்கு நாங்கள் வைத்த பட்டங்களும் கொஞ்சமா நஞ்சமா? அங்கு தான் எத்தனை உரிமை,கோபம்,சண்டைகள்! கொண்டாக்டர் கோபம் வந்து ஏற்ற முடியாது என்று பெல் அடித்து விட்டாலும் நகராது நிற்கும் பஸ் -

இவையெல்லாம் தங்களுக்குக் கிடைத்த சம்பளத்துக்காகச் அவர்கள் செய்த ஒன்றல்ல. அதை எல்லாம் தாண்டி அவர்களுக்கென்று ஒரு மனம் இருந்தது.கடவுள் குடி இருந்த மனம்!

பஸ் பற்றிப் பேசுகின்ற போது குச்சி ஐஸ் நினைவுக்கு வருகிறது.கூடவே சறோ அக்காவும் நினைவுக்கு வருகிறா.சரியாகப் பாடசாலை விடுகின்ற போது குச்சி ஐஸ் விற்கும் துவிச்சக்கர வண்டி வந்து நிற்கும்.அப்போது பஸ்ஸின் காசும் குச்சி ஐஸ்ஸின் காசும் ஒரே அளவு.நானும் நல்ல சமர்த்துப் பெண்ணாக பஸ்ஸுக்குக் காசை வைத்துக் கொண்டு நிற்பேன். நேரம் போகப் போக ஐஸ்கிறீம் குடிக்கும் ஆவல் மீதுர பஸ் காசில் ஐஸ்கிறீம் வாங்கிக் குடித்து விடுவேன். பஸ் வந்து நிற்கின்ற போது தான் அழ ஆரம்பிப்பேன்.சறோ அக்கா - அப்போது பெரிய வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவர்.’உம்மோடா பெரிய கரைச்சல் ’என்ற பேச்சோடு எனக்கு டிக்கட் வாங்கி அழைத்துச் செல்பவர் அவர் தான்.ஒரு போதும் அதை நான் என் வீட்டில் சொன்னதில்லை. அந்தக் காசைத் திருப்பி அவவுக்குக் கொடுத்ததும் இல்லை.

அது போல பொழுதாகியும் பஸ் வரவில்லை என்றால் பஸ்நிலையத்துக்கு ஆஜராகி எல்லோரும் போய் சேரும்வரை நின்று அனுப்பி வைத்த பிரமச்சாரி ஆசிரியர்கள், என் உயர் வகுப்பு ஆசிரியர்கள் என்ற வரிசைக்கப்பால் அன்னலட்சுமி அம்மாவுக்கும் நிச்சயமாக இந்தப் பட்டியலில் ஒரு விசேட இடம் உண்டு.அவரோடு இருந்த அத்தனை காலங்களிலும் அவரோடு எனக்கு எந்த ஒரு கருத்து முரண்பாடும் வரவில்லை என்று சொன்னால் நம்புவீர்களா?

அவர்கள் எல்லாம் எந்தக் கைமாறு கருதியும் அதனைச் செய்யவில்லை.அதனால் தான் அவர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள் போலும்!அவர்கள் இயல்பாகவே அவ்வாறான சுபாவங்களோடு இருந்தார்கள். அது தான் அதன் அழகு.இவ்வாறான மனிதர்களை என் வாழ்நாளில் நான் கண்டுகொண்டது எனக்குக் கிட்டிய ஒரு பெரு வரமே!

ஒரு விடயத்தைச் சொல்ல வருகின்ற போது கட்டுடைத்துக் கொண்டு வருகின்ற இந்த இவ்வாறான நினைவுகளை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை.’கட்டுகள்’ தகர்க்கப் படுகின்றன. இவற்றை எழுதுகின்ற போது கண்கள் நிறைகின்றன.மனம் விம்முகின்றது.சொல்லாமல் இருப்பது ஏதோ ஒரு துரோகத்தனம் போல தெரிகிறது.அதனால் பதிவின் நோக்கத்தை விட்டு நான் அப்பால் சம்பந்தம் இல்லாத விடயங்களைப் பேசினாலும் அன்பர்கள் என்னை மன்னிப்பார்களாக.

என்னைப் பாதித்த இந்த ஆழுமைகளைப் பற்றிப் பேசுகின்ற போது சுபத்திரா ரீச்சரின் ஞாபகம் மனதில் வந்து முட்டுகிறது. அவவைப் பற்றிச் சொல்லாமல் எப்படிப் போவது? நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது 1976ம் ஆண்டு.புதிதாக என் பாடசாலைக்கு மனையியல் கற்பிக்க வந்த
அழகி.அப்போது அவ 20களின் ஆரம்ப வயதுகளில் இருந்திருக்கக் கூடும்.சேலை கட்டுவதில் ஆகட்டும் ;குடை பிடித்துக் கொண்டு நடப்பதில் ஆகட்டும் ;கற்பித்தலில் ஆகட்டும் ;அவரின் ஆளுமை தனி. அவர் எங்கள் வகுப்புக்கு வகுப்பாசிரியராக 10ம் வகுப்பு வரை வந்தது நாங்கள் செய்த பாக்கியம். அதே நேரம்,அவரை ரசித்த அளவுக்கு நான் படிப்பை ரசிக்காமல் போனது என் தலையெழுத்து.ஆனால் அதற்காக அவவிடம் நான் வாங்கிய அடி இருக்கிறதே அது தான் அவவை என் மனதில் என்றென்றைக்குமாக இருத்தி வைத்திருக்கிறது.

’வீட்டுப் பாடம் செய்யாத ஆக்கள் எல்லாம் இஞ்சால வரிசையாக வரலாம் ’என்கிற போது எனக்கு நடுக்கம் ஆரம்பிக்கும்.இரண்டாவது வரிசையில் மூன்றாவது இடம் என்னுடயது என்பதால் வரிசையில் இடையில் எங்கேனும் ஒரு இடத்தில் தவறாமல் நான் நிற்பேன்.எனக்கு முன்னால் நிற்பவருக்கு அடி விழும் போது எனக்கு பின்னால் நிற்பவரை எனக்கு முன்னால் விட்டு விட்டு அவரது இடத்துக்கு நான் நகர்வேன். இப்படியாக நகர்ந்து கடசியாக நான் வருகின்ற போது கையை நீட்டுவதற்கு முன்பாக கண்ணில் இருந்து பொட்டு பொட்டாகத் துளிகள் நிலத்தில் விழும். கையை நீட்ட மாட்டேன்.அவ, பச்சைத் தடியினால் என் கையை கரையில் இருந்து மேலாகத் தூக்கி விரல்களை நீட்டச் சொல்லுவார்.ஒரு அடியின் பின் கைகளை உதறிக் கொள்வேன்.கடசி ஆளாக நான் நிற்கிற காரணத்தால் என் மீதான கவனமும் பேச்சும் அதீதமாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் 3 அடி என்றால் எல்லோருக்கும் 3 தான். அதில் மாற்றம் கிடையாது. ஆனால் விழுகின்ற பேச்சில் மாறுபாடுகள் நிகழும்.’நீர் பேசினாலும் பறவாயில்லை, என்னை உமக்குப் பிடிக்கா விட்டாலும் பறவாயில்லை,வீட்டில போய் சொன்னாலும் பறவாயில்லை.நீர் சரியா வீட்டுப் பாடம் செய்து கொண்டு வரும் வரைக்கும் அடி வாங்கத்தான் போறீர்’ என்பா.ஆனால் அவவோடு எனக்கு ஒரு போதுமே கோபம் வந்ததில்லை.

சிறு வயதுகளில் உங்களுக்கும் அப்படி ஒரு ஆசிரியரோ ஆசிரியையோ விருப்பத்துக்குரியவராக இருந்திருக்கக் கூடும். இருந்தால் சொல்லுங்களேன்!

நான் எதிர் பார்க்காமலே இந்தப் பதிவு என் வாழ்வில் இருந்து இறங்கிய பின்பும் மனதில் பதிந்து போயிருப்பவர்கள் பற்றியதாக அமைந்து விட்டது. இது திட்டமிட்டு எழுதியதல்ல. எழுத்து என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது.

இப்பதிவு நீண்டு விட்டதால் மீரா என்ற என் தோழி பற்றிய அறிமுகத்தோடு பதிவின் பயணத்தை நிச்சயமாக அடுத்த தடவை ஆரம்பிக்கிறேன். இனி மீராக்கா பற்றி மட்டும் தான் சொல்ல இருக்கிறது.(நம்புங்கள்:)

இது எல்லாவற்றுக்கும் இந்த நினைவுகளின் பிரவாகத்துக்கும் ‘பதிவொன்றின் பயணம்’தான் காரணம். :) அது தொடரும்.ஆனால் எப்போது அதை நான் எட்டப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது இருக்கிறது.

அக்‌ஷய பாத்ரத்தைப் புரிந்து கொண்டவர்கள் என்னுடய இந்த நினைவோடைக் குறிப்பில் நான் தொலைந்து போனதையும் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

தொடரும்.......:)

(படம்; நன்றி - கூகுள் இமேஜ்.)