தொடர்கிறது.....
இவ்வாறாக ஆரம்பித்த பல்கலைக் கழகப் பயணம் என்னோடு பயணித்த சிலரை இறக்கி விட்ட படியும்; புதிதாகச் சிலரை ஏற்றிக் கொண்ட படியுமாகச் சென்றது.
இந்த இடத்தில் நான் இருந்த வீடு பற்றியும் அன்னலட்சுமி அம்மா பற்றியும் நான் கட்டாயம் சொல்லியாக வேண்டும்.அவர் ஒரு ஏழைத் தாய்.மூன்று கெட்டிக்கார ஆண்பிள்ளைகளின் தாய்.தோட்டம் செய்து பிள்ளைகளைப் படிப்பித்து வந்த தாய்க் கரங்கள் அவரது. இலங்கையின் கல்வித்தரப் படுத்தலுக்குள்ளாலும்; வறுமையின் பிடியில் இருந்த போதும்; மகன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை எட்டிய கெட்டிக் காரன்.
இருந்தும் என்ன? விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த போது இலங்கை இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப் பட்டான்.(தாயாரின் மனநிலையை சற்றே நினைத்துப் பாருங்கள்) அதனால் இரண்டாவது மகனை நிறையக் கடனைப் பெற்று சுவிற்சலாந்து நாட்டுக்கு அனுப்பி இருந்தா. மூன்றாவது மகன் குட்டிப் பயல். நான் அங்கு போன போது.தாய் செய்யும் தக்காளித் தோட்டத்துக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்.(இப்போது அவனும் ஒரு இலங்கையில் பட்டம் பெற்ற பொறியியலாளன்.)
இத்தனை சுமைகளையும் தாங்கிக் கொண்டிருந்த தாயை நான் முதலில் சந்தித்தது ஒரு வெள்ளிக் கிழமை.காலையும் மதியமும் சந்திக்கும் 11 மணியளவாக இருக்கும்.யாழ்பாணத்து இந்து மதத்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சைவ போசணிகளாக இருப்பார்கள். அன்று அவர்களது சமையலறை கழுவப்பட்டு பாத்திரங்கள் மினுக்கப் பட்டு ஆசாரமான சமையல் ஆரம்பமாகும்.
அதுவும் அவ்வாறான ஒரு சமையல் பொழுதே.நான் அவரைக் கண்ட போது சமையலறை கழுவப் பட்டு, ஈரத்துக்காக நிலத்தில் சாக்கு விரிக்கப் பட்டு, அதன் மேல் பலகை போட்டு, சுற்றிவர பாத்திரங்களை வைத்த படி சமையலுக்காக முருங்கக்காய் வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது பல்கலைக் கழகத்தை அண்மித்திருக்கிற வீடுகள் பலவும் பக்க வருமானத்துக்காக வாடகைக்கு அறைகளை மாணவர்களுக்குக் கொடுத்திருந்த போதும் தன் பிள்ளைகளின் கல்வியின் நிமித்தம் தான் யாருக்கும் வீட்டின் அறைகளை வாடகைக்குக் கொடுக்க வில்லை என்றும்;குடும்பத்தில் நடந்த துக்க சம்பவங்களினாலும், சின்ன மகன் இப்போது சிறுவனாவனாக இருப்பதாலும், பணத்தேவைக்காக வாடகைக்கு உணவோடு அறை ஒன்றைக் கொடுக்க இம்முறை நினைத்திருப்பதாகத் தெரிவித்தார்.அத்துடன் நான் அங்கு இருக்கலாம் என்றும்; எனக்குப் பிடித்த எவரையேனும் எனக்குத் துணையாக அறையில் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
விசாலமானதும் இரண்டு ஜன்னல்களைக் கொண்டதுமான அறை அது.அந்த நாளில் இருந்து சுமார் பத்து வருடங்கள் அந்தத் தாயாரோடு நான் வாழ்ந்திருக்கிறேன்.நானும் என் அறைத்தோழி புவனாவோடும் தொடங்கிய அந்த வாழ்வு, புவனா முதல் வருடத்தோடு பல்கலைக் கழகக் கல்வியை விட்டுப் போன அடுத்த வருடத்தில் இருந்து நான் தனிக்காடு ராணியாக ஆட்சி செலுத்தத் தொடங்கியதில் இருந்து ஆரம்பித்தது.
நானே அவரோடு முதலாவதாகவும் கடைசியாவதாகவும் இருந்த பெண்.
எனக்குப் பத்து வருடங்கள் சாப்பாடு போட்டு முழுச் சுதந்திரமும் தந்து என் தன் மகளைப் போல பார்த்துக் கொண்ட அந்தத் தாயுள்ளம் எனக்குக் கிட்டியது என் பூர்வ ஜென்மத்துப் புண்ணியமே. நிச்சயமாக!
இன்னொரு பிறவி என்று ஒன்றிருந்தால் நான் கைமாறு செய்யவேண்டியவர்கள் வரிசையில் என் கிராமத்துப் பாடசாலை,அதில் எங்கள் அதிபர் திரு லோகசிங்கம் அவர்களைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்.அவர் மிக்க கோபக் காரன்.அவர் பல பாடசாலைக்கு மாற்றலாகி மாற்றலாகிப் போகின்ற போதும் இறுதியில் மீண்டும் எங்கள் பாடசாலைக்கு வந்து சேருவார்.எங்கள் பாடசாலையோடு அவருக்கு அப்படி ஒரு விருப்பமும் ஈடுபாடும் இருந்தது.சிறு வயதில் அவரிடம் நான் நன்றாகவே அடி வாங்கி இருக்கிறேன்.(வீட்டுப் பாடம் செய்யா விட்டால் சில ஆசிரியர்கள் அவரிடம் நம்மை அனுப்பி விடுவார்கள்).ஆனால் அவரைப் போல பாடசாலையைக் காதலித்த அதிபரை நான் காணவில்லை.அவரது வாழ்க்கை எங்கள் பாடசாலை.அவர் தன் குடும்பத்துக்கு உழைத்ததை விட எங்கள் பாடசாலைக்கு உழைத்தது அதிகம்.
அது போல,நாளொன்றுக்கு இரண்டு தரம் மட்டுமே ஓடும் எங்கள் கிராமத்து பஸ்களில் றைவர்கள் கொண்டாக்டர்களைப் பற்றியும் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும்.அவர்களிடம் இருந்த பொறுமை, நேர்மை, அக்கறை, இரக்கம்,நற்பண்பு எவ்வளவு சனக்கூட்டம் என்றாலும் எல்லோரையும் ஏற்றிச் சென்ற அந்த மனம்,அவர்களிடம் நாங்கள் வாங்கிய பேச்சுக்களும்,அவர்களுக்கு நாங்கள் வைத்த பட்டங்களும் கொஞ்சமா நஞ்சமா? அங்கு தான் எத்தனை உரிமை,கோபம்,சண்டைகள்! கொண்டாக்டர் கோபம் வந்து ஏற்ற முடியாது என்று பெல் அடித்து விட்டாலும் நகராது நிற்கும் பஸ் -
இவையெல்லாம் தங்களுக்குக் கிடைத்த சம்பளத்துக்காகச் அவர்கள் செய்த ஒன்றல்ல. அதை எல்லாம் தாண்டி அவர்களுக்கென்று ஒரு மனம் இருந்தது.கடவுள் குடி இருந்த மனம்!
பஸ் பற்றிப் பேசுகின்ற போது குச்சி ஐஸ் நினைவுக்கு வருகிறது.கூடவே சறோ அக்காவும் நினைவுக்கு வருகிறா.சரியாகப் பாடசாலை விடுகின்ற போது குச்சி ஐஸ் விற்கும் துவிச்சக்கர வண்டி வந்து நிற்கும்.அப்போது பஸ்ஸின் காசும் குச்சி ஐஸ்ஸின் காசும் ஒரே அளவு.நானும் நல்ல சமர்த்துப் பெண்ணாக பஸ்ஸுக்குக் காசை வைத்துக் கொண்டு நிற்பேன். நேரம் போகப் போக ஐஸ்கிறீம் குடிக்கும் ஆவல் மீதுர பஸ் காசில் ஐஸ்கிறீம் வாங்கிக் குடித்து விடுவேன். பஸ் வந்து நிற்கின்ற போது தான் அழ ஆரம்பிப்பேன்.சறோ அக்கா - அப்போது பெரிய வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவர்.’உம்மோடா பெரிய கரைச்சல் ’என்ற பேச்சோடு எனக்கு டிக்கட் வாங்கி அழைத்துச் செல்பவர் அவர் தான்.ஒரு போதும் அதை நான் என் வீட்டில் சொன்னதில்லை. அந்தக் காசைத் திருப்பி அவவுக்குக் கொடுத்ததும் இல்லை.
அது போல பொழுதாகியும் பஸ் வரவில்லை என்றால் பஸ்நிலையத்துக்கு ஆஜராகி எல்லோரும் போய் சேரும்வரை நின்று அனுப்பி வைத்த பிரமச்சாரி ஆசிரியர்கள், என் உயர் வகுப்பு ஆசிரியர்கள் என்ற வரிசைக்கப்பால் அன்னலட்சுமி அம்மாவுக்கும் நிச்சயமாக இந்தப் பட்டியலில் ஒரு விசேட இடம் உண்டு.அவரோடு இருந்த அத்தனை காலங்களிலும் அவரோடு எனக்கு எந்த ஒரு கருத்து முரண்பாடும் வரவில்லை என்று சொன்னால் நம்புவீர்களா?
அவர்கள் எல்லாம் எந்தக் கைமாறு கருதியும் அதனைச் செய்யவில்லை.அதனால் தான் அவர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள் போலும்!அவர்கள் இயல்பாகவே அவ்வாறான சுபாவங்களோடு இருந்தார்கள். அது தான் அதன் அழகு.இவ்வாறான மனிதர்களை என் வாழ்நாளில் நான் கண்டுகொண்டது எனக்குக் கிட்டிய ஒரு பெரு வரமே!
ஒரு விடயத்தைச் சொல்ல வருகின்ற போது கட்டுடைத்துக் கொண்டு வருகின்ற இந்த இவ்வாறான நினைவுகளை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை.’கட்டுகள்’ தகர்க்கப் படுகின்றன. இவற்றை எழுதுகின்ற போது கண்கள் நிறைகின்றன.மனம் விம்முகின்றது.சொல்லாமல் இருப்பது ஏதோ ஒரு துரோகத்தனம் போல தெரிகிறது.அதனால் பதிவின் நோக்கத்தை விட்டு நான் அப்பால் சம்பந்தம் இல்லாத விடயங்களைப் பேசினாலும் அன்பர்கள் என்னை மன்னிப்பார்களாக.
என்னைப் பாதித்த இந்த ஆழுமைகளைப் பற்றிப் பேசுகின்ற போது சுபத்திரா ரீச்சரின் ஞாபகம் மனதில் வந்து முட்டுகிறது. அவவைப் பற்றிச் சொல்லாமல் எப்படிப் போவது? நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது 1976ம் ஆண்டு.புதிதாக என் பாடசாலைக்கு மனையியல் கற்பிக்க வந்த
அழகி.அப்போது அவ 20களின் ஆரம்ப வயதுகளில் இருந்திருக்கக் கூடும்.சேலை கட்டுவதில் ஆகட்டும் ;குடை பிடித்துக் கொண்டு நடப்பதில் ஆகட்டும் ;கற்பித்தலில் ஆகட்டும் ;அவரின் ஆளுமை தனி. அவர் எங்கள் வகுப்புக்கு வகுப்பாசிரியராக 10ம் வகுப்பு வரை வந்தது நாங்கள் செய்த பாக்கியம். அதே நேரம்,அவரை ரசித்த அளவுக்கு நான் படிப்பை ரசிக்காமல் போனது என் தலையெழுத்து.ஆனால் அதற்காக அவவிடம் நான் வாங்கிய அடி இருக்கிறதே அது தான் அவவை என் மனதில் என்றென்றைக்குமாக இருத்தி வைத்திருக்கிறது.
’வீட்டுப் பாடம் செய்யாத ஆக்கள் எல்லாம் இஞ்சால வரிசையாக வரலாம் ’என்கிற போது எனக்கு நடுக்கம் ஆரம்பிக்கும்.இரண்டாவது வரிசையில் மூன்றாவது இடம் என்னுடயது என்பதால் வரிசையில் இடையில் எங்கேனும் ஒரு இடத்தில் தவறாமல் நான் நிற்பேன்.எனக்கு முன்னால் நிற்பவருக்கு அடி விழும் போது எனக்கு பின்னால் நிற்பவரை எனக்கு முன்னால் விட்டு விட்டு அவரது இடத்துக்கு நான் நகர்வேன். இப்படியாக நகர்ந்து கடசியாக நான் வருகின்ற போது கையை நீட்டுவதற்கு முன்பாக கண்ணில் இருந்து பொட்டு பொட்டாகத் துளிகள் நிலத்தில் விழும். கையை நீட்ட மாட்டேன்.அவ, பச்சைத் தடியினால் என் கையை கரையில் இருந்து மேலாகத் தூக்கி விரல்களை நீட்டச் சொல்லுவார்.ஒரு அடியின் பின் கைகளை உதறிக் கொள்வேன்.கடசி ஆளாக நான் நிற்கிற காரணத்தால் என் மீதான கவனமும் பேச்சும் அதீதமாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் 3 அடி என்றால் எல்லோருக்கும் 3 தான். அதில் மாற்றம் கிடையாது. ஆனால் விழுகின்ற பேச்சில் மாறுபாடுகள் நிகழும்.’நீர் பேசினாலும் பறவாயில்லை, என்னை உமக்குப் பிடிக்கா விட்டாலும் பறவாயில்லை,வீட்டில போய் சொன்னாலும் பறவாயில்லை.நீர் சரியா வீட்டுப் பாடம் செய்து கொண்டு வரும் வரைக்கும் அடி வாங்கத்தான் போறீர்’ என்பா.ஆனால் அவவோடு எனக்கு ஒரு போதுமே கோபம் வந்ததில்லை.
சிறு வயதுகளில் உங்களுக்கும் அப்படி ஒரு ஆசிரியரோ ஆசிரியையோ விருப்பத்துக்குரியவராக இருந்திருக்கக் கூடும். இருந்தால் சொல்லுங்களேன்!
நான் எதிர் பார்க்காமலே இந்தப் பதிவு என் வாழ்வில் இருந்து இறங்கிய பின்பும் மனதில் பதிந்து போயிருப்பவர்கள் பற்றியதாக அமைந்து விட்டது. இது திட்டமிட்டு எழுதியதல்ல. எழுத்து என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது.
இப்பதிவு நீண்டு விட்டதால் மீரா என்ற என் தோழி பற்றிய அறிமுகத்தோடு பதிவின் பயணத்தை நிச்சயமாக அடுத்த தடவை ஆரம்பிக்கிறேன். இனி மீராக்கா பற்றி மட்டும் தான் சொல்ல இருக்கிறது.(நம்புங்கள்:)
இது எல்லாவற்றுக்கும் இந்த நினைவுகளின் பிரவாகத்துக்கும் ‘பதிவொன்றின் பயணம்’தான் காரணம். :) அது தொடரும்.ஆனால் எப்போது அதை நான் எட்டப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது இருக்கிறது.
அக்ஷய பாத்ரத்தைப் புரிந்து கொண்டவர்கள் என்னுடய இந்த நினைவோடைக் குறிப்பில் நான் தொலைந்து போனதையும் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
தொடரும்.......:)
(படம்; நன்றி - கூகுள் இமேஜ்.)
பழைய ஞாபகங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் பற்றி பகிர்வதே தனி ஆனந்தம் தான்.உங்கள் இனிய நினைவுகளை பிரிவின் வலிகளை உங்கள் எழுத்துக்கள் மூலம் நானும் உணர்கிறேன்.தான் தன் குடும்பம் உறவுகள் என்ற வட்டத்தை தாண்டி பொது நல நோக்குடைய நல்ல மனிதர்களை காண்பது கடினம் தான்..தொடர்ந்து எழுதுங்கள் தோழி..அன்புடன் ஹாசினி
ReplyDeleteஅட,அட,அட, இது யாரு? எனக்குத் தெரிஞ்ச மாதிரி இருக்கே!:) நலமா ஹாசி?
ReplyDeleteமகிழ்ச்சி.அதிலும் வெளி நாடு என்று வந்த பின்னால் இப்படியான விடயங்களை நிறைய மிஸ் பண்ணுகிறேன்.
’உண்மையான’மனிதர்களைக் கண்டு பிடித்தல் மிகக் கடினம்.ஒரு சந்தர்ப்பம் வருகின்ற போதில் தானே இவர் யார் என்பதைக் கண்டறிய முடிகிறது!
நான் நலம்.உங்கள் நலத்துக்கும் பிரார்த்திக்கிறேன்.பின்னூட்டம் இடாவிட்டாலும் இயன்றவரை உங்கள் பதிவுகளை வாசித்துகொண்டுதான் இருக்கிறேன்.
ReplyDeleteஉண்மையான’மனிதர்களைக் கண்டு பிடித்தல் மிகக் கடினம்.ஒரு சந்தர்ப்பம் வருகின்ற போதில் தானே இவர் யார் என்பதைக் கண்டறிய முடிகிறது! //
மிகவும் உண்மைதான்.மற்றவர்களின் நடத்தையை எம்மால் தீர்மானிக்கவோ மாற்றவோ முடியாது.அதனால் நாம் இயன்றவரை நல்லவராக இருப்போம்.இது தான் என் கொள்கை.:)
அதே நேரம் அதில் கிடைத்திருக்கிற அநுபவத்தின் சாரத்தையும் நமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகருதல் வேண்டும் ஹாசி!
ReplyDeleteஇல்லாவிட்டால் கிடைத்த அனுபவத்தால் ஒரு பயனும் இன்றிப் போய் விடும்.
‘எல்லாம் நன்மைக்கே’என்பது பின்னாளில் விளங்கும்.- இது தான் என் போக்கு!:)
//இவையெல்லாம் தங்களுக்குக் கிடைத்த சம்பளத்துக்காகச் அவர்கள் செய்த ஒன்றல்ல. அதை எல்லாம் தாண்டி அவர்களுக்கென்று ஒரு மனம் இருந்தது.கடவுள் குடி இருந்த மனம்!//
ReplyDelete//இந்த இவ்வாறான நினைவுகளை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை.’கட்டுகள்’ தகர்க்கப் படுகின்றன. இவற்றை எழுதுகின்ற போது கண்கள் நிறைகின்றன.மனம் விம்முகின்றது.சொல்லாமல் இருப்பது ஏதோ ஒரு துரோகத்தனம் போல தெரிகிறது//
தங்கள் கடந்த கால நினைவோடையில் நாங்களும் மூழ்கித் திளைக்கிறோம் தோழி... மலரும் நினைவுகளின் சுகந்தம் எம்மை கிறங்கச் செய்கிறது. தொடர்க:)
தாங்ஸ்ப்பா!
ReplyDelete