Monday, August 6, 2012

முகிழ்ந்து மணம்பரப்பிய பெண்ணியச் சிந்தனைகள்: இலக்கிய சந்திப்பு - 5 இனை முன்வைத்து..........!

            மனைவி – என் மனைவி

மனமெங்கும் வியாபித்திருப்பதால்
மனைவியோ? – வாழ்வு முழுக்க
துணையாய் வருவதனால் துணைவியோ?

மனதுக்குள் எழுந்ததொரு
பட்டிமன்றம் – ஒவ்வொருவர்
மனதையும் படம் பிடிக்கவே
சோதரியினிந்த வட்டமன்றம்!

இல்லத்து அரசி – அவளென்
இதயத்துள் உறை அரசி! – அவளை
சொல்லத்தான் நினைத்தேன்
மூளையை எழுது கோலால் உரசி!

அவள்,
இறைவன் தந்த வரம்
இனிய வாழ்வின் உரம்!
இயைந்தே பற்றினேன் கரம்
இமயமாய் உயர்ந்ததவள் குணத் திறம்!

கண்ணகியை, மாதவியை
கன்னித் தமிழீந்த சரஸ்வதியை
எண்ணிப் பார்த்தேன்
என்னிதயத் தராசோ இறங்கி நின்றது!
கண்ணிலும் கருத்திலும்
கரைந்தே இதயத்துள் நிறைந்தவளை
எண்ணிப் பார்த்தேன்
இவர் தம் இடமோ உயர்ந்தது!

காதலனாய் கணவனாய்
ஆனதினால் அயல் வீட்டு
மருமகனாய் மைத்துணனாய்
மாறியதென் மாயமென்ன?

மனைவியெனும் மைதிலியின்
மனமொன்றி கரம் பற்றிய
மாத்திரமே சாத்திரம்
மாறுமோ இந்தக் கதா பாத்திரம்?

பார்வதியோ ஈசனின்
இடப்பக்கம் – இந்த
பாமர நேசனுக்கோ
இதயத்துள் முழுப்பக்கம்       
இதயத்தை
எப்பக்கம் பகுத்தாலும்
அவள் முகம்!
இடப்பக்கமும் வலப்பக்கமும்
இதே திருமுகம்!

உணைர்ச்சிக்காக உரைக்கவில்லை வாழ்வை
உணர்ந்தே உரைத்த உண்மை!
புணர்ச்சிக்கும் புலன் பெறும் – பொய்யான
மகிழ்ச்சிக்கும் அல்லாது எனது
மகிழ்ச்சிக்காக வாய்த்த பிறவி – என்
மனமெங்கும் நிறைந்தாள் பரவி!
புகழ்ச்சி அவளுக்குத் தேவையில்லை – இந்த
புலவனின் வாழ்வுக்கு அவளே எல்லை!

மாணவியாய் வந்து
ஆசானாகிப் போனாள்!
தாரமாய் வந்து
தாயாகிப் போனாள்!
ஆதாரமாய் நின்று
அன்புத் திருவுருவானாள்!
சேதாரமாகாமல் என்வாழ்வு
செழிப்புறும் நல்லுரமானாள்!

என் மனைவி  என் வாழ்வின்,

வளமைக்கு கிட்டிய தூண்டுகோல்!
வயோதிபத்திற்குக் கிட்டிய ஊன்றுகோல்!
இளமைக்குக் கிட்டிய கடிவாளம்!
இனிமைக்குக் கிட்டிய பூபாளம்!

அவள்,  ஆலம் விழுது – ஆதலால்
ஆகவில்லை என் வாழ்வு பழுது!
அனுதினமும் மனதால் தொழுது
ஆனந்தமாய் செல்கிறதென் பொழுது!

’மெல்லினம்’ சஞ்சிகையின் உதவியாசிரியரும் கவிஞருமான குமார செல்வம்: 29.07.2012 அன்று வாசித்தளித்த இந்தக் கவிதையோடு ஆரம்பித்தது நம்முடய 5 வது இலக்கிய சந்திப்பு.

கடந்த 21ம் திகதி கோலாகலமாக நடந்தேறிய கம்பன் விழாவின் இயல் அரங்குக்கு குமார செல்வம் தன் மனைவி குழந்தைகளோடு வந்திருந்த போது அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

எப்போதும் இளம் குடும்பஸ்தர்கள் ஒரு நிகழ்ச்சிக்குத் தனியாக வருகை தரும் போது அவர்களுடய குடும்ப பாரத்தை வீட்டில் ஒருவர் சுமந்து நிற்கிறார். அவர்களுடய ஒத்தாசை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு, நற்குணம் இல்லாமல் இவை சாத்தியப்படாது. ஆனால் அவை எப்போதும் இலக்கிய அந்தஸ்துப் பெறாத தியாகங்களாகவே இருக்கின்றன. அதிகம் அவை பாடுபொருள் ஆனதில்லை என்ற மனக்குறை எனக்கெப்போதும் இருக்கிறது. அதன் காரணமாக அன்றய தினம் நம்முடய இலக்கியச் சந்திப்புக்கு வரும் போது மனைவி பற்றி ஒரு கவிதை எழுதி வாருங்கள் என்று சொன்னது தான் இந்தக் கவிதைக்கான பின்னணி.

நம் நிகழ்ச்சி திட்டமிட்டபடி 6.00 மணிக்கு நடைபெற இருந்ததில் சற்றே தடங்கல். நாம் பதிவு செய்திருந்த அதே நேரத்துக்கு வேறொரு நிறுவனத்தினரும் அதே நேரத்தைப் பதிவு செய்திருந்ததே அதற்குக் காரணம். அதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நாங்கள் வெளியே காத்திருக்க நேர்ந்தது. பலவித வேலைகளுக்கு மத்தியிலும் அவர்கள் நிகழ்ச்சிக்காகக் குளிருக்குள் காத்திருந்தார்கள். 

மனித கவனயீனங்கள். போதாததற்குத் தாமதமாக உட்சென்ற போது தான் அறையின் இரகசியக் குறியீட்டு இலக்கம் கொண்ட தாளை நான் கொண்டு செல்ல மறந்தது நினைவுக்கு வர அதனால் சுமார் 10, 15 நிமிடங்கள் மேலும் வீணாயிற்று. இது ஒரு விதமான திருட்டு மாதிரி! நேரத்திருட்டு. ’ஏதோ ஒன்று’ இலகுவாக நிச்சயத்து விடுகிறது சிலவற்றை!

நிகழ்ச்சி 6.30 அளவில் தொடங்கியது.

அறைக்குள் சென்ற போது குளிரில் விறைத்துப் போயிருந்த எல்லோருக்கும் ’நீங்கள் தொடங்குங்கோ’ என்று சொல்லி எல்லோருக்கும் மிகச் சுவையான தேனீரை; கோப்பியை அவரவர் விருப்பம் தெரிந்து தயாரித்துத் தந்த படியும் செல்வத்தின் கவிதையைக் கேட்ட படியும் வந்தமர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தமிழ்முரசு அவுஸ்திரேலியா மின்னிதழ் ஆசிரியர், நாடக இயக்குனர், கவிஞர்,வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பல கலைமுகங்கள் கொண்ட பாஸ்கரன்.

அந்தப் புரிந்துணர்வும் உதவியும் ஒத்தாசையும் சுவை மிகுந்த தேனீரும் குளிர் மிகுந்த அந்தப் பொழுதை இதமான ஒரு பொழுதாக மாற்றியதில் பேருதவி புரிந்ததைச் சொல்லாமல் அப்பால் நகரவியலாது.

இன்றய ஆரம்பம் விரும்பியோ விரும்பாமலோ பெண் என்ற பாத்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்ச்சியாய் அமைந்து போனது நாம் திட்டமிட்டுச் செய்த ஒன்றல்ல. சுருக்கமாகச் சொல்வதானால் முகிழ்ந்து மணம் பரப்பிய பெண்ணிய சிந்தனைகளின் மலர்தோட்டமாக இந்த மணித்துளிகள் அமைந்திருந்தது. அது தனாக அமைந்து விட்ட ஒரு சிறப்பு. ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலே பெண்ணைப் பற்றியதான விடயங்களை எடுத்து வந்திருந்தார்கள்.

வழமை போல சிந்தனையைக் கிளறி விடும் வீரியமான கேள்வி  ஒன்றை செல்வத்தின் கவிதையைக் கேட்டதன் பின்னணியில் ஒரு துருப்புச் சீட்டாக பாஸ்கரன் முன் வைத்தார். பொதுவான ஆண்களின் மரபு சார்ந்த சிந்தனைப் போக்கை கேள்விக்குட்படுத்துவதாக அது இருந்தது.
அவர் முன் வைத்த கேள்வி ஆண்கள் ஏன் எப்போதும் தனக்கெப்படி பெண் உறுதுணையானவளாக இருக்கிறாள்? எப்படி எல்லாம் என்னைக் கவனித்துக் கொள்கிறாள்? என்று பாடுகிறார்களே ஒழிய அவளுடய பாரங்களையும் பாடுகளையும் தான் எப்படி சுமந்து கொள்கிறான்? எவ்வாறெல்லாம் அவளின் உயர்வுக்காகத் தான் பாடுபடுகிறான் என்று பாடுவதில்லை – எவ்வாறு அவள் உணர்வுகளைப் புரிந்து வைத்திருக்கிறான் என்று பாடுவதில்லை என்ற கேள்வியை முன் வைக்க ‘பெண் உலகினுள்’ இலக்கிய சந்திப்பு இலகுவாக உள் நுழைந்தது.

இது ஒரு மிகப்பெரும் விவாதத்துக்குரிய களமாகும். இந்தப் போராட்டம், கேள்வி குறித்த சிந்தனைகள் மரபின் வழிகளைக் வீரியத்தோடு எதிர்த்து நிற்கும் கேள்வியாகும். ஆண்களுடய சிந்தனைப் புலத்தை மாற்றங்களை நோக்கியதான ஒரு சமான்யனின் மனிதம் சார்ந்த கேள்வி. பாரதியும் பெரியாரும் நினைவில் வந்து போயினர்.

இந்தக் கேள்வி உடனடியாக எனக்கு என் தம்பியும் இலக்கிய ஆர்வலரும் சிங்கை நகரில் பொறியியலாளராக இருந்தவரும் தற்போது இங்கு வசிப்பவருமான ஜே.கே. சொன்ன ஒரு சம்பவத்தை நினைவு படுத்திச் சென்றது.அவர், பேராதனை பல்கலைக் கழகத்தில் இருந்து பட்டதாரியாக வெளியேறிய யாழ்ப்பானத்து மரபு வழி வளர்க்கப் பட்ட இளைஞன். முதன் முதலாக தன் மேலதிகாரியான சிங்கை நகர் பெண்அதிகாரியோடு  வேலை ஒன்றை அவசரமாக முடிக்க வேண்டி இருந்ததன் நிமித்தம் முதன் முதலாக அவர்களுடய வீட்டுக்குச் சென்றிருந்தாராம். தாம் போன போது அவ் இளம் பெண்னும் தானுமே வீட்டில் இருந்ததாகவும் வேலை செய்து கொண்டிருந்த போது மிக மிக உயர் பதவி வகித்துக் கொண்டிருந்த அவள் கணவன் வீட்டுக்கு வந்ததாகவும் சிறு புன்னகையோடு வரவேற்புக் கூறி குளித்து உடைமாற்றி மூவருக்குமாக தேனீர் போட்டுக் கொடுத்ததோடு அல்லாமல் அவர்களுக்கு இடையூறு கொடுக்காமல் தன்னையும் நின்று தான் சமைக்கும் உணவை ருசிபார்த்துச் செல்லச் சொல்லி சமையலும் செய்ய ஆரம்பித்தது தன் சிந்தனைக்குக் கிடைத்த எழ முடியாத பெரும் அடி.! என் மரபு வழிச் சிந்தனைக்குக் கிடைத்த அந்த அடி என் சிந்தனை வளர்ச்சியின் பாரிய திருப்பம்!! என்று சொன்னது நினைவுக்கு வந்து போனது. 


மிக இயல்பாக நடக்கும் ஒரு சிறு சம்பவம் சிந்திக்கக் கூடிய ஒருவரின் வாழ்வில் மிகப் பெரும் மாற்றங்களை மிக அநாயாசமாக ஏற்படுத்தி விட்டுச் சென்று விடுகிறது இல்லையா?


மேலும் அவர், நாங்கள் சொல்வதை விட உங்களைப் போன்ற பெண்கள் தான் இவை பற்றி நிறையப் பேச வேண்டும் என்று கூறி, ‘A Thousand Splendid Suns’ என்ற KHALED HOSSEINE எழுதிய நாவலையும் எனக்குப் பரிசளித்துப் போயிருந்தார். ஆப்கானிஸ்தான் பெண்ணின் பாடுகளைப் பேசும் அற்புதமான புத்தகம் அது என்பது அவரின் ஆணித்தரமான கருத்து.

பெண்கள் கவனிக்க!


இந்தப் பாரம்பரிய ஆண்வழிச் சிந்தனை என்பது சங்க காலத்தில் இருந்தே இலக்கிய அந்தஸ்துப் பெற்றிருப்பதைக் காணலாம். நற்றிணை 10 ல்

“அன்னாந்து நோக்கிய வன முலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்பு மதி – பூக்கேள் ஊர!....."

என்று தொடங்கும் அப்பாடலில் தோழி தன் தோழியின் தலைவனைப் பார்த்து இப்படி உரைக்கிறாள்.”மேல் நோக்கி நிமிர்ந்துள்ள கொங்கைகள் தளர்ந்து போனாலும்; பொன் போல மிளிர்கின்ற இவளின் மேனியிலே கருமனிபோல கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கின்ற நீளமான கூந்தல் நரை தட்டிப் போனாலும்; இவளை நீ கைவிட்டு விடாமல் காக்க வேண்டும். அக்காலத்தில் இவள் உன் சுகத்துக்கு ஈடுகொடுக்கக் கூடியவளாக விளங்கமாட்டாள். ஆனால் அப்பொழுதிலும் இவளை நீ கை விடாது காக்க வேண்டும்” என்று தோழி தன் தோழியின் தலைவனுக்கு உரைப்பதாக இப்பாடல் அமைந்திருக்கிறது.

ஒரு பெண் எப்போது வேண்டுமானாலும் ஒரு கையறு நிலைக்குப் போகக் கூடியவளாகவே வரலாற்றில் இருந்து வந்திருக்கிறாள். அறிவுச் செல்வமும் பொருட் செல்வமும் கிட்டத்தகாத ஒருத்தியாக ஓர் ‘இலட்சியப் பெண்’ நம் பண்பாட்டு மரபில் இருந்து வந்ததோடு அச்சம், மடம் நாணம்,பயிர்ப்பு என்பன பெண்ணின் அணிகலனாகச் சொல்லப் பட்டும் வந்திருக்கிறது.’ பேதமை என்பது மாதர்க்கணிகலமாகப்’ பேசப்பட்ட மரபு நமது.

சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த சுப்பிரதீபக் கவிராயரின் இந்தப் பாடலைப் பாருங்கள்!

“கச்சிருக்கும் போது கரும்பானேன்: கைக்குழந்தை
வச்சிருக்கும் போது மருந்தானேன்: - நச்சிருக்கும்
கண்ணார் கரும்பானார்: காணவும் நான் வேம்பானேன்
அண்னாமலை அரசுக்கு!” – 

என்று பெண்ணின் நிலையைப் பாடுகிறார்.பல நூற்றாண்டுகளைத் தாண்டிய பின்பு இங்கும் அதே கையறு நிலைதான்.

இத்தகைய சிந்தனைகள் முன் வைக்கப் பட்ட போது எப்போதும் நாம் பார்க்காத கோணங்களில் இருந்து துணிவாகக் கருத்துகளை முன் வைக்கும் நாட்டியக் கலாநிதியும் வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான கார்த்திகா, இத்தகைய ஒரு சிந்தனைப் பின் புலத்தில் ஒரு “SINGLE MOTHER” ஆக மாதவி எத்தகைய சவால்களைச் சந்தித்திருக்கக் கூடும்? என்ற தர்ம சீற்றமிகு கேள்வியை முன் வைத்தார்.

சிலப்பதிகாரத்தின் எந்த ஒரு இடத்தில் தானும் கோவலன் தான் பெற்ற பிள்ளைக்கான பொறுப்பை – கடமையைச் செய்ததற்கான சான்றில்லை. தன் மரபு சார்ந்த, குலம் சார்ந்த பாதையில் இருந்து விலகி, ஆரம்ப நூற்றாண்டுகளிலேயே தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்டவள் மாதவி. அவளை, அவள் சுயசிந்தனை முனைப்புகளை எப்படி அந்த சமுதாயம் நடத்தியது, அவளுக்கு எத்தகைய இடத்தைச் சமுதாயத்தில் அது கொடுத்திருந்தது என்பதை அவள் இறுதியில் புத்த தர்மத்தை சரனடைந்ததில் இருந்தும், மகள் துறவியானதில் இருந்தும் கண்டு கொள்ளலாம். 

இது தான் சுயசிந்தனை கொண்ட பெண்ணுக்கு சமுதாயம் சொல்லி வைத்த பாடம்! தமிழ் காவியம்!!

ஒரு பெண்ணோடு விரும்பிய காலம் மட்டும் வாழ்ந்து விட்டு விரும்பிய நேரம் சுலபமாக விட்டுச் செல்லும்; மேலும் அப்பெண்ணை கேவலமாக இழித்துரைக்கும் ஒட்டுமொத்த ஆணாதிக்க வாழ்வு முறை மேலும் அதன் நடத்தை மீதான சீற்றமாகவும் கோபமாகவும் கூட  கார்த்திகாவின் அந்தக் கேள்வி வெளிபட்டது.

பாரமான – கனதியான ஓரமைதி அப்போது அங்கு நிலவியது. – அந்த அமைதிக்கு பல அர்த்தங்கள். அது அநாதரவாக வரலற்றில் தனித்து விடப்பட்ட ஒவ்வொரு பெண்ணினுடயதுமான மென்மையான மெளனம்! ஆணாதிக்க சிந்தனைகளை -அநீதியைக் கேள்வி கேட்ட மெளனம். அது ஒரு வரலாற்றின் விசும்பலுமாகும்.

இவற்றினூடு – பெண் நடந்து வந்த இத்தகைய வராலாற்றுப் பாதையினூடு தொடர்பு பட்டதாக இருந்தது இந்துமதி.ஸ்ரீநிவாசன் கொண்டு வந்திருந்த பாரதி தாசனின் ‘எழுச்சசியுற்ற பெண்கள்” என்ற தலைப்பில் இருந்து கொண்டு வந்திருந்த கவிதை.
.....................
பெருங்கல்விப் பண்டிதனே உனக்கோர் கேள்வி;
பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ ? என்றாள்.
தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான்.
தராவிடில்நான் மேற்கொண்டால் என்ன வென்றாள்.
திருமணமா காதவள்தன் பெற்றோரின்றிச் 
செயல்ஒன்று தான்செய்தல் அதர்மம் என்றான்.
.....................

இந்துமதி கம்பீரமான தொனிப்பான குரலுக்குச் சொந்தக்காரி. அவர் பேசுகின்ற போது ஒவ்வொரு சொல்லும் அதன் நெளிவு வளைவுகளும் உணர்ந்து முழுவதுமாக உச்சரித்து முடியும். குரல் கணீர் என்றொலிக்கும்.அதனால் அந்த ஒவ்வொரு  சொற்களும் நல்ல அழகாய் வந்து விழும். இந்தப் பகுதியில் இருந்த முழுப்பாடலையும் பொருளுணர்ந்து முழுமையாகக் கூறி தான் நயந்த பெண்ணின் துணிவை சுவை படச் சொன்னார்.
…………..
இதுகேட்டுச் செல்வப் பிள்ளை
என்னேடி, இதுஉனக்குத் தெரிய வில்லை;
மன்றல் செயும் விஷயத்தில் ஒன்றில் மட்டும்
மனம்போல நடக்கலாம் பெண்கள் என்றான்.


ஆண்களின் தமக்குச் சாதகமாக நிகழ்ச்சியை மரபுகளை மாற்றிக் காரியத்தைச் சாதிக்கும் வழக்கு இவரின் இப்பாடலில் சிறப்பாக வெளிப்பட்டு நிற்கிறது என அவர் மேலும் எடுத்துச் சொன்னார்.

பாரதி தாசனுடய மன உலகு தடுமாற்றத்துக்குரியதாக விளங்கியதா? என்ற கருத்துப் பரிமாற்றம் இக்கவிதையை அடியொற்றி நிகழ்ந்தது. இப்பாடலில் வீரமிக்க ஆணை எதிர்த்த பெண்ணைச் சுட்டிக் காட்டிய பாரதி தாசன், அவரின் ’குடும்ப விளக்கு’ என்ற பாடலில் பெண் என்பவள் செய்யும் வேலைகளை என்னவாறாகப் பட்டியலிடுகிறார்? பலரின் ஆர்வத்துக்குரிய பேசுபொருளாக அது இருந்தது.

குடும்பவிளக்காய் இருப்பவள் அவள். அவள்,காலை எழுந்து மாலை வரை என்னவெல்லாம் செய்கிறாள் எனப் பட்டியலிடுகிறார். எழுந்தாள், கோலமிட்டாள், வீட்டு வேலைகள் செய்தாள், கணவனுக்கு உதவினாள், குழந்தைகளுக்குத் தொண்டு செய்தாள், காலை உணவு தயாரித்தாள்,வாத்திச்சியாகவும் இருந்தாள், பள்ளிக்கு பிள்ளைகளைத் தயார்படுத்தி அனுப்பினாள், கடைக்கு புறப்பட்ட கணவனுக்கு பீத்தல் துணி தைத்து கொடுத்தாள், இத்தனையும் செய்த பின் காலையுணவு கொள்ளும் போது ‘இணையற்ற அவரன்புக்கு நிகராமோ இவையெல்லாம்’: ‘பள்ளிக்குச் சென்றிருக்கும் பசங்களில் சிறிய பையன் துள்ளிக் குதித்து மான் போல தொடர்ந்தோடி விழுந்தானோ’ என நினைத்தாள்.

பின் வீட்டைச் சுத்தம் செய்தாள், மரச்சாமான்களைப் பழுதுபார்த்தாள், இடிந்துள்ள சுண்ணாம்புச் சுவரை சரி செய்தாள், இப்போது நாத்தனார் வீடு சென்ற மாமன் மாமி வருகிறார்கள்,. அவர்களை வரவேற்கிறாள், அவர்களோடு நல்லுறவினைப் பேணுகிறாள்,

மதிய உணவுக்காக மீண்டும் அவள் சிந்தனை இவ்வாறு ஓடுகிறது. ’கொண்டவர்க்கெது பிடிக்கும்,குழந்தைகள் எதை விரும்பும், மாமன் மாமிக்குத் தக்கதென்ன,உண்பதில் எவருடம்புக்கு எது உதவாதென்றெல்லாம் எண்ணிக் கடையில் பொருட்கள் வாங்குகிறாள்,
உணவினைச் சமைக்கின்ற போது அவள் நினைவுகள் இப்படியாகப் போகிறது.

இனிவாழும் நாள் நினைத்தாள்
இளையவர் மாமன் மாமி:
நனி இரங்கிடுதல் வேண்டும்
நானவர்க்கன்னை போல்வேன்.
எனதத்தாந்தனையும் பெற்று
வாழ்நாள் எண்ணும் போகில்
தனிக்கடன் உடையேன்
நானோர் தவழ்பிள்ளை அவர்கட்கென்றாள்

கிழங்கினை அளியச் செய்வாள்
கீரையைக் கடைந்து வைப்பாள்
கொழுங்காய்ப் பச்சடி வைப்பாள்
கொல்லையில் முருங்கைக்காயை
ஒழுங்காகத் தோலைச் சீவி
பல்லிலார் உதட்டால் மென்று
விழுங்கிடும் வகை முடித்து 
வேண்டிய எல்லாம் முடித்தே.


பின்னர் முதியவருக்கு மருத்துவிச்சியாக துணை இருக்கிறாள். பள்ளியால் வீடுவரும் பிள்ளைகளை வழிந்தோடும் புது வெள்ளத்தை வரவேற்கும் உழவர்போல் எழுந்தோடி மக்கள் தம்மை ஏந்துகிறாள், இருகையாலும்! மேலும் அவர்களுக்கு ஆகவேண்டியதைப் பார்க்கிறாள்.

இப்போது கணவன் வீடு வருகிறான். ’இன்றைக்கு மணம் புரிந்தான் என்னும் படி, நெஞ்சில் அன்பு குன்றாத விழியால் வரவேற்கிறாள். அன்றய நாள் நிலவரங்களைப் பேசுகிறாள். உணவருந்திய பின்பான ஓய்வில் அவன் பாடென்றான். அவள் யாழெடுத்துப் பாடுகிறாள். அவள் பாடல்,

உள்ளத்தில் கவிதை வைத்தே
உயிரினால் எழுப்பினாள்
வெள்ளத்தில் சுவையைக் கோத்தாள்
வீணையின் அளவிற் சாய்த்தாள்:
தெள்ளத்தெளிந்த நீர் போல்
செந்தமிழ் பொருள் போல் நெஞ்சப்
பள்ளத்தில் கோடைத் துன்பம்
பறந்திடப் பாய்ச்சி விட்டாள்
உயிரெல்லாம் தமிழில் தொக்கின

வீடெல்லாம் இசையே: வீட்டில்
நெஞ்செல்லாம் மெருகே: நெஞ்ச
ஏடெல்லாம் அறிவே: ஏட்டின் 
எழுத்தெல்லாம் களிப்பே: அந்தக்
காடெல்லாம் ஆடும் கூத்தே:
காகங்கள் குருவி எல்லாம்
மாடெல்லாம் இவ்வாறானால்
மனிதர்க்கா கேட்க வேண்டும்?

என்னும் படியாகப் பாடுகிறாள். இப்படியான பாடலுக்குச் சொக்கிப் போய் இருக்கும் கணவனுக்கு கடைக்குப் போகவேண்டும் என்பதை மேலும், நினைவு படுத்துகிறாள். சோம்பல் மிக்க கணவன் அவளைக், ’கடைக்குப் போய் கணக்கர் தம்மை உண்பதற்கனுப்பி உண்டு வந்த பின் வா’ என்கிறான். அவளும் அது போல கடைவேலைகளைச் செய்து கனக்கு வழக்குகளைச் சரியாக ஒப்புவிக்கிறாள். மாலையில் நோயுற்ற மாமனுக்கு பணிவிடையும் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறாள். வீட்டு வேலைகள் என்ன தெரியுமா?

வரிசையாய் காய வைத்த
வடகத்தை வற்றல் தன்னைப்
பெரிசான சாலில் சேர்த்தாள்:
பிணைந்துள்ள மாடுகன்றுக்(கு)
உரிய நல் தீனி வைத்தாள்:
உறிவிளக்குகள் துடைத்தாள்:


என நீள்கிறது வரிசை. குழந்தைகள் வீடு வர அவர்களை மாலையில் கடற்கரைக்கு அழைத்துப் போகிறாள். இருள் கவிக்கிறது. வீடு வருகிறாள்.

கட்டுக்குள் அடங்காதாடிக்
களித்திடும் தனது செல்வச்
சிட்டுகள், சுவடிக்குள்ளே
செந்தமிழ் தீனி உண்ண
விட்டுப் பின் அடுக்களைக்குள்
அமுதத்தை விளைவு செய்தாள்:
எட்டுமணி அடிக்க
அத்தானை எதிர்பார்க்கின்றாள்

இரவுணவு, இத்யாதிகள் எல்லாம் முடிந்த பின்னால் – குழந்தைகளும் தூங்கிய பின்னால் கணவனண்டை வந்து,

அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்பதல்லால்,
இதுவரைக்கும் பொது நலத்துக்கென்ன செய்தோம்?எனக் கேட்கிறாள். மேலும் அவள் சொல்வதைக் கேளுங்கள்,

“இன்றைக்குக் கறி என்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக்காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்யலாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச்சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்பதுண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவை தான் கண்டோம்.

தன்னலத்தால் என்ன நடக்கும்?

”தமிழரென்று சொல்லிக் கொள்கின்றோம் நாமும்:
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்புகின்றோம்:
எமதென்று சொல்லுகின்றோம் நாடோறுந் தான்
எப்போது தமிழனுக்கு கையாலான
நமதுழைப்பை ஒரு காசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்தி நினைத்தோமா? இல்லை:
அனைவரும் இவ்வாறிருந்தால் எது நடக்கும்?”

இச்சொல் கேட்டு மகிழ்ந்த கணவன் சொல்கிறான்.

”அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும்
ஆருக்கு வேண்டுமடி! அன்றன் ஆசைக்
குன்றத்திற் படர்ந்த மலர்க்கொடியே, மண்ணில்
குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம்
ஒன்றொன்றும் மறு நாளே பழைமை கொள்ளும்;
ஒன்றொன்றும் சில நாளில் தெவிட்டிப் போகும்;
அன்றன்று புதுமையடி, தெவிட்டலுண்டோ?
ஆருயிரே நீ கொடுக்கும் இன்பம்” என்றான்.


ஒரு பெண்னாக இத்தனை வேலைகளையும் செய்து அறிவுத்திறமும் படைத்த ஒரு பெண்ணைப் படைக்கும் பாரதி தாசன் காட்டிய இந்தப் பெண்ணுக்கு அவர் காட்டிய விடுதலை என்னவாக இருந்தது என்ற சிந்தனையையும் அவளுக்குக்கு அவர் என்ன செய்தார் என்ற சிந்தனையையும் அது விதைத்துச் சென்றது.

கூடவே, வீட்டில் இருந்து இத்தனையையும் செய்கிற பெண்ணை உங்கள் மனைவி என்ன செய்கிறாள் என்று யாரும் கேட்டால் “அவ வீட்டில சும்மா தான் இருக்கிறா” என்று சொல்லும் தற்கால நடைமுறை அந்த வரலாற்றின் நீட்சியைச் சற்றே நினைவுறுத்திச் சென்றது. “சும்மா தான் இருக்கிறா’ என்பதன் பின்னால் இத்தனை அர்த்தங்களும் நிறைந்திருக்கிறது என்ற உண்மை பெறுமதியானது. 

ஊழியம் என்பது பணத்தால் மாத்திரம் மட்டிறுக்கப் பட்டிருப்பதன் தாற்பரியத்தால் விளைந்தது அது. ஓய்வோ ஓய்வூதியமோ அற்ற தன் அந்திம காலம் வரை செய்யப்படும் அந்தத் தன்னலம் கருதா சேவை சேவிக்கப் படுவதில்லை. மாறாக ‘சும்மா வீட்டில இருக்கிறா’ என்ற ஒரு சொல்லால் இலகுவாகப் புறந்தள்ளப்பட்டு விடுகிறது.

1999ம் ஆண்டு சக்தி வெளியீடாக வெளிவந்த ’புது உலகம் எமை நோக்கி’ என்ற புத்தகத்தில் நந்தினி எழுதிய “மூளைக்குள் ஒரு சமையலறை” என்ற கதை பாரதி தாசன் காட்டிய இதே பெண்ணின் மன உலகு இன்றும் எப்படி மாறாதிருக்கின்றது என்ற சிந்தனையை சிறப்பாக வெளிப்படுத்தி நிற்கிறது. கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

நேரம் அதன் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தது.

இத்தகைய தகவல் பரிமாற்றங்கள் பெண் என்ற பிராகிருதியின் நிலையினையும் சவாலினையும் அவள் வகிக்கும் பாத்திரத்தையும் அவளின் வரலாற்றுத் துயரினையும் அவள் இன்னும் நடைபோடவேண்டி இருக்கின்ற தூரத்தையும் நம் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

மேலும், யசோதரன், பெண்ணுக்கென இருக்கும் இயற்கை உடலமைவுகள் அவள் வகிக்கும் பாத்திரத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது பற்றிச் சொன்னார். தன் மகள் இப்போதே தன் தம்பியைப் பார்ப்பதில் காட்டும் தாய்மை தன்னை வியப்புறச் செய்கிறது என்பதும் பெண்கள் மிக ஆழமானவர்கள் அவர்களினுடய சிந்தனைகளை கண்டறிவது கடினம் என்பதும் அவர் வைத்த கருத்தாக இருந்தது. 

அதே நேரம் ஆண்கள் அவர்களைப் புரிந்து கொள்ளவோ தம் உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முயல்வதோ இல்லை என்பது அற்கான மறுமொழியாக இருந்தது. நம் பண்பாட்டுப் புலத்தில் ’பலவீனமற்ற பாதுகாவலன்’ என்ற கருதுகோளை ஆண்கள் இலகுவாகக் கைவிடத் தயாராக இல்லாத தன்மையும்; பெண்களுக்கு அது எப்படி இலகுவாகவும் சவாலற்றதாகவும் தன்னை அறிந்து கொள்வதற்குத் தடையாகவும் அமைந்து விடுகிறது என்பதை கார்த்திகா சொந்த வாழ்வின் அனுபவங்களினூடும் வரலாற்று வழிகளினூடும் விளக்கிச் சொன்னார். மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில் இருபாலாருக்கும் இருக்கும் தன்மான இடைஞ்சலும் சமூகப் பாதுகாப்பு / சமூக அங்கீகாரம் என்ற மாய இழையும் கூடவே சிந்தனைத்தளத்துக்குரிய  பேசு பொருளாக இருந்தது.


இளம் சந்ததிக் காலத்தைச் சேர்ந்த மைத்திரேயிஜி தன் வரமுடியாமையைத் தெரிவித்திருந்தார். அவர் வந்திருந்தால் இளம் சந்ததியின் சிந்தனைப் புலத்தையும் புலம்பெயர் சிந்தனையின் வழிவந்த சிந்தனைப் பண்பாட்டின் செல்வாக்கையும் இன்னும் வேறுபட்ட கோணத்தில் கண்டுணர வழி வகுத்திருக்கும்.

அது போல,பிரபல எழுத்தாளர் கோகிலா.மகேந்திரன் அவர்களும் அயல் மாநிலம் ஒன்றுக்குச் சென்றிருந்த காரணத்தால் வர இயலாமையைத் தெரிவித்திருந்தார். வந்திருந்தால் கண்ணுக்கும் நம் கருத்துக்கும் புலனாகாத வேறு சில அம்சங்களை அவர் தொட்டுச் சென்றிருப்பார்.

அண்மைக் காலமாக ஆனந்த விகடனில் ராஜுமுருகன் என்பார் ‘வட்டியும் முதலும்’ என்ற தலைப்பில் சமான்யர்களின் வாழ்க்கைக் கோலங்களை எழுத்துச் சித்திரங்களாய் பகிர்ந்து வருகிறார்.அதில் அவர் ஒரு முறை பெண்கள் பற்ரி எழுதி இருந்தார். அது இவ்வாறு முடிக்கப் பட்டிருந்தது.

பெண்கள் இல்லாமல் ஆண்களால் ஒரு நாள் ஜீவித்திருக்க முடியுமா? நம்மில் எத்தனை பேர் அவர்களைச் சரிசமமாய் சரிபாதியாய்ப் பார்க்கிறோம்? திடீரென்று யோசித்துப் பார்த்தேன். எனக்கு என் அம்மாவின் இளமைக் காலம் பற்றி எதுவுமே தெரியாது. அவளது சிறுபிராயம், படிப்பை நிறுத்தியபொழுதுகள், விளை யாட்டு, காதல் எதுவுமே தெரியாது. ஏனோ அது பற்றி எல்லாம் கேட்காமல் பேசாமலேயே இத்தனை காலம் வந்திருக் கிறோம். இப்படி எத்தனை எத்தனை அம்மாக்கள் இருக்கிறார்கள்... பகிரப்படாத நினைவுகளோடு

முன்பு நான் தங்கியிருந்த ஒரு குடியிருப் பில் கீழ் வீட்டில் ஒரு தம்பதி குடியிருந்தனர். அந்த ஆள் தினமும் மனைவியைக் கண்ட படி திட்டிக்கொண்டே இருப்பார். அச்சடிக்க முடியாத வார்த்தைகளால் கடாசுவார். அக்கம்பக்கத்து ஆட்களெல் லாம் பயங்கர டென்ஷனிலேயே இருப்பார் கள். அவர் அடிக்கடி, "இந்த பொம்பளைக் கழுதைங்களே இப்பிடித்தானடி... தே...... ஒன்னையெல்லாம் எவன்டி நம்புவான்?" என்கிற வார்த்தைகளாலேயே சுடு தண்ணியை வீசுவார். அந்த பெண்மணி அமைதியாக உட்கார்ந்தே இருப்பார். தனது பெண் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்து கேட் பக்கத்திலேயே நிற் பார். எனக்கெல்லாம் அவ்வளவு கோபம் வரும். தினமும் இப்படியே கிடக்கும். ஒருநாள் அந்த ஆள் திடுதிப்பென்று செத்துப் போய்விட்டார். நெஞ்சு வலியில் பொட்டென்று போய்விட்டார். வெளியே கண்ணாடி பெட்டியில் வைத்திருந்தார்கள். அந்தப் பெண்மணி உருண்டு புரண்டு அழுதார். தடுக்கவே முடியாமல் அப்படி அழுதார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"அவ்வளவு கேவலமான ஆளுக்கா இப்படி அழுவுது இந்தம்மா?" இதைக் கேட்டு மேல் வீட்டுத் தாத்தா சொன்னார், "பொம்பளைங்க அப்பிடித்தான் தம்பி... என் அனுபவத்துல சொல்றேன்... நாமெல்லாம் அவங்களோட நெழலுக்குக் கூட துப்பில்ல!"


ஏற்கனவே மிகத்தாமதமாய் தொடங்கி இருந்தது நிகழ்ச்சி. 8 மணிக்கு அறையைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது நமக்கு. நேரம் 7.55 ஆகி இருந்ததால் இன்னும் பேச சுவாரிசமான விடயங்கள் இருந்த போதும் நேரம் கருதி நிறைவு செய்யும் நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருந்தோம்.

அப்போது பாஸ்கரன், தான் இந்தியா சென்ற போது பார்க்கக் கிட்டிய ராஜ அரண்மனை ஒன்று எப்படி அரசன் மேலிருந்து கீழே இருக்கும் தன் மனைவிமாரை பார்க்கும் வண்ணமாகவும் ஆனால் கீழிருக்கும் மனைவிமார் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதவாறு அமைந்திருந்த தன்மையை கொண்டிருந்தது என்பதை நினைவு கூர்ந்தார். மேலும் ஆடல் அரங்கு எப்படி நிலத்தில் நிலைக்கண்ணாடி பதிக்கப் பட்டு மேல் விதானம் மேலும் கீழ் கண்ணாடியில் ஆடல் மகளிரின் அங்க லட்சணங்களை - உருவங்களை எதிரொலிக்கும் விதமாக இருந்தது என்பதைச் சொன்னார்.

அது அன்று மாத்திரமா? இன்று வரை ஆணுக்கு இன்பமூட்ட மட்டுமே பிறந்த மங்கையராய் பெண்கள் இருக்கின்ற நிலை இன, மத, நிற, மொழி, நாடு என்ற வேறுபாடின்றி உலகமெங்கும் பெண்களின் நிலையாக இருப்பது உண்மை தானே? ஆங்கிலேயர் வட்டமேசையில் கூடி இருந்து பியர் குடிக்க பெண்ணானவள் மேசையின் மேல் ஏறி நின்று சுருக்குப் பாவாடை சுளன்றாட பார்த்து ரசிக்கும் கணவான்கள் கூட்டம் உலகமெங்கும் பிரசித்தம் தானே? உலகில் இப்படி எந்த ஒரு மிருகம் (காட்டு விலங்கு) தன் இணையை ஆடவைத்து வேடிக்கை பார்க்கிறது சொல்லுங்கள்?

ஒரு 24 வயது இளம் பெண் திறமையாகப் பாடக்கூடிய ஆற்றல் படைத்தவள் ஆசைப்பட்டுப் பாடினாள் என்ற ஒரே காரணத்தால் தந்தையையும் மகளையும் பகீரங்கமாகச் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியை ஆப்கானிஸ்தான் தீவிரவாதம் செய்ய, கண்கட்டி வாய் பொத்தி உலகம் பார்த்திருந்தது கடந்த மாதம் தான் நிகழ்ந்தது. show case பொம்மைகளாய் கண்ணாடிப் பேழைகளுக்குள் பார்வைக்குரிய பொருளாய் மேற்குலகில் பெண்கள் நிற்க; ஈழத்தில் குலைகுலையாக கற்பழிப்புக் கொலைகள் நிகழ்ந்தது முடிந்திருக்கிறது. பாரதத்தில் பெண் சிசுக்கொலையும் வரதட்சனை கொடுமைகளும் தொண்டைக்குள் சிக்கி இருக்கிற முள்ளைப் போல!...........

பெண் சமமாக மதிக்கப்படும் உயிரும் அறிவும் உணர்வும் சம உரிமையும் கொண்டவளாய் உயர்வதெப்போ?

இவ்வாறெல்லாம் பெண்ணுலகத்துக்குள் உலாவி வந்து 8.00 மணிக்கு குறியீட்டு இலக்கம் பதிந்து கதவு மூடினோம்.

வீடு வரும் போது வரலாற்றில் பெண்ணின் பாதையில் நடந்து வந்த களைப்புக்கு பாஸ்கரன் தயாரித்துத் தந்திருந்த சூடான பானம் ஒட்டு மொத்தப் பெண்ணுக்கான நடைக் களைப்பின் ஆறுதலுக்கான உயிரூக்கியாக இருந்தது நினைவுக்கு வந்து போனது. அது தூரத்தில் மங்கலாய் தெரியும் சமூக மாற்றத்தின் வெளிச்சமும் கூடவே!

ஆனாலும், இன்னும் பெண் நடக்க வேண்டிய பாதை தூரம்: அது வெகு தூரம்!

பெண் ஆண் உள்ளடங்கலான மனிதரையும் தேவர்களையும் தெய்வங்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் உயர்திணை எனத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

பெண் அடைய வேண்டி இருக்கிற அந்தத் தூரத்தை எட்டும் போது தான் “உயர்திணை” தன் சொல்லுக்கான முழுமையான பரிபூரணமான அர்த்தத்தை உண்மையில் எட்டும்.


”உயர்திணை!”………………………………………..

11 comments:

 1. மிக மிக அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றி மணிமேகலா. பெண்களின் நிலை பற்றிய இலக்கியங்களின், நடைமுறையின், பகிர்வுகள் இன்னும் போகவேண்டிய தூரத்தை நமக்கு உணர்த்தியபடியேதான் இருக்கின்றன. உங்களுடைய எழுத்தும் கருத்தும் என்னை வேற்றுலகு அழைத்துச் சென்றதுபோல் இருந்தது. ஒவ்வொரு நிகழ்வையும் நீங்கள் விவரிக்கும் விதம் கண்டு மலைத்துப்போகிறேன். உயர்திணையின் அங்கத்தவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. உங்களை நிறைய மிஸ் பண்ணுகிறேன் கீதா.ஒரு நாள் நீங்களும் இந் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் தீராத ஆசை.

  என் அன்பும் நன்றியும்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் ஆசை இருக்கிறது மணிமேகலா. மலைகளுக்கு நடுவில் ஒரு மடுவாய் இருப்பதில் எனக்குப் பெருமைதான். வாழ்க்கை இங்கு இன்னும் நிலைபெறவில்லை எனக்கு. வாய்ப்பு அமையும் நாளில் நிச்சயமாய் கலந்துகொள்கிறேன். தங்கள் அன்பான அழைப்புக்கு மிகவும் நன்றி.

   Delete
  2. கீதா,குன்றில் விளக்கு நீங்கள்! எப்போதும் நல்வரவுக்கான வாசல் உங்களுக்காய் திறந்திருக்கும்.

   மிக்க மகிழ்ச்சி கீதா.நாமெல்லாம் ஓரினம்!

   Delete
 3. நல்ல ஒரு பகிர்வு நன்றிகள்....இன்று புல‌ம் பெயர் தேசத்தில் வாழும் எம் ஆண்களில் பல முன்னேற்றங்கள் உண்டு என்றே சொல்ல வேண்டும் வீட்டில் பல ஆண்கள் சமையல் வேலைக்கு உதவி செய்கிறார்கள்....நான் ஒரு 10% உதவி செய்வேன்

  ReplyDelete
 4. நல்ல ஒரு பகிர்வு நன்றிகள்....இன்று புல‌ம் பெயர் தேசத்தில் வாழும் எம் ஆண்களில் பல முன்னேற்றங்கள் உண்டு என்றே சொல்ல வேண்டும் வீட்டில் பல ஆண்கள் சமையல் வேலைக்கு உதவி செய்கிறார்கள்....நான் ஒரு 10% உதவி செய்வேன்

  ReplyDelete
 5. மிக்க மகிழ்ச்சி புத்தன். உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும்.

  முன்னேற்றம் உண்டு என்பதில் சந்தேகமில்லை.அன்றய நிகழ்வும் அதனை நிரூபித்தது. அந்த மாற்றங்கள் ஒவ்வொரு ஆணின் மனதில் இருந்தும் மனையில் இருந்தும் ஆரம்பித்தால் அது எத்தனை அழகாக இருக்கும்!

  எனக்கொரு சின்ன ஆசை. நீங்கள் நம் உள்ளூர் காரர் தானே! உங்கள் வலைப்பூவில் அழகழகான விடயங்களை எழுதுகிறீர்கள்.நம் இலக்கிய சந்திப்பிலும் கலந்து கொள்ளலாமே!எழுதுகிற எல்லோரும் ஒரு குடும்பம் இல்லையா?

  ReplyDelete
 6. கல‌ந்து கொள்ளவேணும் என்ற ஆசை உண்டு...அடுத்தமுறை கல‌ந்து கொள்வேன்.என்னை அழைத்தமைக்கு நன்றிகள்...நான் ஒரு எழுத்தாளனா என்று எனக்கே சந்தேகம் .....

  ReplyDelete
 7. :) மிக்க மகிழ்ச்சி புத்தன்.எழுத்தினை நேசிக்கின்ற; எழுத்தினை ஆளுகின்ற எல்லோரும் எழுத்தாளர்கள் தானே! நீங்கள் எழுத்தாளர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

  வருக!

  ReplyDelete
 8. இலக்கிய சந்திப்பு பற்றிய பதிவு அபாரம். மேம்போக்காக இல்லாமல் இம்முறை ஆழ இறங்கி பதிவிட்டிருக்கிறீர்கள். சந்திப்பு பற்றிய காலதாமதங்கள் போன்ற தகவல்கள் இணைய வாசகர்களுக்கு அவசியமில்லை என்று தோன்றியது. அப்பாலே பெண்கள் பற்றிய கருப்பொருள் அலாதியானது. அமுதா பற்றி நான் சொன்னதை குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரே ஒரு தகவல் பிழை. அமுதா இளம்பெண் அல்ல, அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கலாம். அவர் இளம் பெண் என்று குறிப்பிடுவது நீங்கள் சொல்ல வந்த கருத்துக்கு வலு சேர்க்கும் என்பதால் குறிப்பிட்டீர்கள் என்று நினைக்கிறேன் :) . அருமையான பதிவு அக்கா.

  ஜே.கே.

  ReplyDelete
 9. 40 வயது இளம் வயது தான் ஜே.கே.:) நீங்கள் அந்த வயதுக்கு வரும் போது அதனை உணர்ந்து கொள்வீர்கள்!

  உண்மையான வாழ்க்கை என்பது ஆரம்பிக்கிற பருவம் அது என்பது என் அபிப்பிராயம்.
  (உண்மையில் அவவின் வயது எனக்குத் தெரிந்திருக்கவில்லை)

  இது ஒரு நிகழ்ச்சி பற்றிய பதிவாக இல்லாமல் ஒரு நிகழ்வு பற்றிய பதிவாக அமைந்தமையால் தான் காலதாமதம் பற்றிய குறிப்புகளையும் சேர்க்க வேண்டி வந்தது.

  ஒரு புத்தகத்தைப் பற்றிச் சொல்லும் போது அட்டைப்படத்தை, பின்னட்டையின் ஆசிரியர் பற்றிய தகவல்களை, முகவுரை, அறிமுகவுரைகளை,பிரசுர ஆண்டு விபரங்களை விட்டு விட்டு போகலாமா?

  உங்கள் பின்னூட்டம் பதிவுக்கு வலுச் சேர்த்திருக்கிறது ஜே.கே. மிக்க நன்றி.அடிக்கடி வாங்கோ.

  ReplyDelete