Saturday, January 12, 2013

மனித விலங்கு



புது வருடம் தொடங்கி முதல் பதிவு!

எழுத மனமற்ற மனநிலை! இந்தச் சுய புலம்பலுக்கு என்னைச் சற்றே மன்னிக்க. மனப்பாரம் இறக்கி வைக்க இது ஒரு வழியாகப் புலப்படுகிறது எனக்கு.உங்களிடம் இருந்து ஏதேனும் மார்க்கமும் புலப்படலாம்.

ஈழத்து வடபகுதியில் அமைந்திருக்கின்ற மண்டைதீவில் நான்கு வயதுப் பாலகியை திடீரெணக் காணவில்லை. தேடியலைந்த போது அக் குழந்தையை வன்புணர்ந்து, கொன்று, கிணற்றுக்குள் போட்டிருக்கிறது ஒரு மனித விலங்கு!

நாலுவயசுக் குழந்தை!!

டெல்லியில் ஒரு இளம் பெண்ணை ஓடும் பஸ்சிற்குள் குழுவாகச் சேர்ந்து அப்பெண்ணின் நண்பனிற்கு முன்னாலேயே கற்பழித்து சின்னாபின்னமாக்கிக் கொன்றிருக்கிறது சில மனித விலங்குகள்!!

எந்தப் பாவமும் அறியாத இளம் பெண்!!

அவுதி அரேபியாவில் 12 வயதில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணை, அவள் பராமரித்த குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்றாள் என்ற கொலைக் குற்றச் சாட்டின் பேரில் கழுத்தை வெட்டிக் கொன்றிருக்கின்றது அங்கத்தைய அரசு! அப் புத்திளம் பருவத்து பெண்ணை இறுதியாக அவள் தாயோடு கூட பேச அனுமதிக்கவில்லை அவ் அரசு!

அந்தக் குழந்தையைக் கொன்று இந்தப் பிள்ளைக்கு என்ன காரியம் ஆகவேண்டும்? புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போது பால் புரக்கேறி குழந்தை இறந்திருக்கலாம் என நம்பப் படுகிறது.அது ஒரு துர்அதிஷ்டவசமாக நடந்து விட்ட விபத்துமரணம் என்ற போதும், இப்பணிப்பெண்ணை அடித்துத் துன்புறுத்தி போதிய சட்ட வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமலே தீர்ப்பினை எழுதி கொன்று போட்டுவிட்டது அரபிய அரசு. கழுத்தை வெட்டுவதற்கு முன்பான அவ் இளம் பெண்ணின் நாட்கள் என்னவிதமானதாக இருந்திருக்கும்?

BBC யில் இஸ்லாமியர் ஒருவர் அதற்குக் குரல் கொடுத்தார். இஸ்லாமிய மதச் சட்டத்தில் கொலைக்கு கொலையே தண்டனையாம். அன்பும் கருணையும் இரக்கமும் இல்லாத இஸ்லாமியம் உண்மையில் மக்களுக்கு என்னத்தைப் போதிக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை.

இன்றுவாசித்த இலங்கைப் புதினப்பத்திரிகையில் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் நடந்த வாய் தகராறில் தன் ஒன்றரை வயசுக் குழந்தையை அடித்துக் கொன்றிருக்கிறது அக்குழந்தையின் தந்தையான மனிதன் ஒன்று. கூடவே அதே பத்திரிகையில் அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏற்பட்ட மண்சரிவைப் பார்க்கப் போன மலையக இளந்தமிழன் ஒருவன் பெரும்பான்மை இனத்தவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான். இதனை 6 பேர் சேர்ந்த ஒரு குழு செய்ய, சுமார் 30 பேர் கொண்ட குழு பார்த்தவாறிருந்திருக்கிறது.

அந்தச் சிறு குழந்தை - தத்தித் தத்தி நடந்து,மழலை மொழி பேசி இருக்கும் அந்த மழலை இந்தத்தந்தைக்கு அடித்துக் கொல்லும் படியாக என்ன பிழை செய்தது? இந்த அப்பாவி இளைஞன் என்ன தவறிழைத்தான்?

நத்தார் விடுமுறைக்குப் பின்னான ஒரு நாளில் மிக ஆர்ப்பாட்டமாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்த Life Of Pi படம் பார்க்கப் போயிருந்தோம் குடும்பமாக! Hollywood style இல் 3D யில் எடுக்கப்பட்ட பிரமாண்டமான படம். இந்திய, சீன, அமெரிக்கக் கலப்பு!

தமிழில் ஆரம்பம் சிலிர்க்கவே செய்தது. அதில் கூட்டுக்குள் இருக்கும் புலிக்கு குருத்துப் பருவத்தில் இருந்த  ஒரு ஆட்டுக் குட்டியைத் தின்னக் கொடுத்தார்கள். அதனை நாம் பார்க்க விதிக்கப் பட்டிருந்தோம். புலி ஒரு அழகான வரிக்குதிரையைக் கொன்று தின்பதை, மனிதக் குரங்கொன்றை அடித்துக் கொல்வதை படத்துக்காகக் இம் மிருகங்களை, கோழியை கொடுத்துப் படமாக்கி இருந்தார்கள்! இறுதிக் காட்சிகளின் போது கொழுகொழு என்றிருந்த புலி எலும்பும் தோலுமாய் ஆக்கப் பட்டு படமாக்கப் பட்டிருந்தது. அது மாத்திரமன்றி நடுக்கடலுக்குள் அப்புலியை விட்டு அது தப்பத் தவிப்பதை துல்லியமாகப் படம் பிடித்திருந்தார்கள். உயிரோடு துடிக்கின்ற வாளிப்பான கடல்மீனை சிறு கோடரியால் கழுத்துப் புறத்தில் வெட்டுவதை, வால் பகுதி தனியாகத் துடிப்பதை close up ல் காட்டுகிறார்கள்.

இந்த மனித வக்கிரம் எல்லாம் ஏனைய மனித விலங்குகளான நாம் பார்த்து ரசிப்பற்காகவாம்!! என் அக்காள் பூமியின் இயற்கை நியதி அது தானே, மெலியதை வலியது பிடித்துச் சாப்பிடுவது தானே இயற்கை நியதி என வாதாடினாள்.

ஆம். ஆனால் அது பசிக்காக மாத்திரம். எந்த ஒரு காட்டு விலங்குகளும் பசிக்காக அன்றி வேறெதற்காகவும் எந்த உயிரினத்தையும் கொன்றதில்லை. இது நாம் மகிழ்ச்சியாக ரசிப்பதற்காக! என்ன ஒரு வக்கிரம்! என்ன ஒரு நம்பிக்கை இதைப்பார்க்க வரும் ரசிகர்கள் மீது!! இது ஒரு entertainment ஆம்.

ஒரு தடவை எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள் தன் நாட்குறிப்புகளில், சிறுகதைகளில் ஈழத்தவர் உடும்பினை எப்படி உயிரோடு தோலுரித்தார்கள் என்பது பற்றி, வளர்த்த நாய்க்குட்டியை விசர் பிடித்து விட்டது என்பதற்காக உலக்கையால் அடித்துக் கொன்றது பற்றி எல்லாம் தான் கண்ட அனுபவத்தில் இருந்து எழுதி இருந்தார்.

இந்த மனித விலங்குகள் இந்த பூமியை ஆக்கிரமித்துக் கொண்டு ஏன் ஏனைய விலங்குகளோடு இந்த உலகத்தைப் பகிர்ந்து கொள்வதில்லை என்று கூட யாரோ எங்கோ எழுதியதை வாசித்த ஞாபகம்.

உண்மையில் இதற்கெல்லாம் நாம் எதுவுமே செய்ய முடியாதா?

வாலாட்டிக் கொண்டு வரும் மனித நண்பனான, நன்றிக்கு உதாரணமான, நாயைக் கொன்று தின்பதை, நிறைமாத தாய் பசுவைக் கொன்று அதன் கன்றை வயிற்றில் இருந்து எடுத்து சமைத்துக் கொடுக்கும் ஆசிய கொடுமைகளில் இருந்தெல்லாம் நாம் மீளவே முடியாதா? இப்படி எல்லாம் செய்யலாம் என்று அவர்களுக்குச் சிந்திக்கத் தோன்றி இருக்கிறதே!

இவற்றுக்கெல்லாம் ஒரு சிறு விழிப்புணர்வைத்தானும் நாம் செய்ய முடியாதா?

உலகப் பந்து இப்போது வெப்பப் பந்தாகி மனித விலங்குகள் உட்பட எந்த விதமான உயிரினங்களும் வசிக்க முடியாத கிரகமாக இப் பூமியை ஆக்கி வைத்ததற்கு இம் மனித விலங்குகளுக்கு முழுப் பங்கும் இருக்கிறது!

எப்படியான உலகில் நாம் வாழ்கிறோம்? எப்படியான ஒரு உலகத்தை நாம் நம் எதிர்கால சந்ததிக்காக விட்டுச் செல்ல இருக்கிறோம்?

மனிதனிடம் மனித இயல்பு எங்கே?

இந்த உலகத்திடம் இருந்தும்; இவ்வாறான செய்திகளின் கொடூரங்களிலும் இருந்தும் தப்பி, எங்கேனும் இமயமலைக் காடுகளில் உலகைத் துறந்து உலவித் திரியும் சித்தர்களிடம் போய் சரன் புகுந்து கொண்டு, இந்த உலகம் பற்றி, இந்த உலகத்தின் பின்பான வாழ்வு பற்றி, பிரபஞ்ச ரகசியங்கள் பற்றி, அவர்களுடய சித்தாந்தங்கள் பற்றி எல்லாம் அறிந்து கொண்டு, மீண்டும் இந்த உலகத்தில் பிறக்காத ஒரு வரத்துக்காகத் தவமிருக்கத் தோன்றுகிறது.

சத்தியமாக!!

12 comments:

  1. மீண்டும் பிறவா வரம் தான் தீர்வு ...

    ReplyDelete
  2. உண்மைதான் செந்தாமரைத்தோழி.

    புது வருடத்தில் முதல் ஆளாய் வந்தீர்கள். மகிழ்வான பதிவொன்றைத் தர இயலவில்லை.

    வரவுக்கு நன்றி அம்மா.



    ReplyDelete

  3. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    ReplyDelete
  4. அக்கா .. Life of Pi படத்து மிருகவதை காட்சிகள் எல்லாமே motion captured animations. அத்தோடு படம் சொல்லவரும் கருத்து மிக மிக ஆழமானது என்பது என் தாழ்மையான எண்ணம். கொஞ்சம் என் புரிதலை பதிவு செய்திருக்கிறேன் இங்கே.

    http://www.padalay.com/2013/01/life-of-pi.html

    ReplyDelete
  5. [quote]எங்கேனும் இமயமலைக் காடுகளில் உலகைத் துறந்து உலவித் திரியும் சித்தர்களிடம் போய் சரன் புகுந்து கொண்டு, இந்த உலகம் பற்றி, இந்த உலகத்தின் பின்பான வாழ்வு பற்றி, பிரபஞ்ச ரகசியங்கள் பற்றி, அவர்களுடய சித்தாந்தங்கள் பற்றி எல்லாம் அறிந்து கொண்டு, மீண்டும் இந்த உலகத்தில் பிறக்காத ஒரு வரத்துக்காகத் தவமிருக்கத் தோன்றுகிறது.

    எங்கேனும் இமயமலைக் காடுகளில் உலகைத் துறந்து உலவித் திரியும் சித்தர்களிடம் போய் சரன் புகுந்து கொண்டு, இந்த உலகம் பற்றி, இந்த உலகத்தின் பின்பான வாழ்வு பற்றி, பிரபஞ்ச ரகசியங்கள் பற்றி, அவர்களுடய சித்தாந்தங்கள் பற்றி எல்லாம் அறிந்து கொண்டு, மீண்டும் இந்த உலகத்தில் பிறக்காத ஒரு வரத்துக்காகத் தவமிருக்கத் தோன்றுகிறது.[quote]
    ஒரு தடவை "நான் கடவுள்"திரைப்படதை பாருங்கள் அதன் பின்பு உங்களுக்கு அந்த யோசனையும் வராது....இப்படியான கொடுரங்கள் தொடரத்தான் போகுது.....பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  6. புதிதாக வந்திருக்கின்ற கவிஞருக்கு நல்வரவு!

    தமிழ் சுவை மனிதத்தோடும் கலந்து மலர்வதாக!

    தொடர்ந்து வருக!

    ReplyDelete
  7. அன்பு ஜேகே, அது என்ன விதமாக வேனும் படமாக்கப் பட்டிருக்கட்டும். தத்துரூபமான மிருக சித்திரவதை படம் எங்கும் விரவி இருக்கிறது! அதுவும் 3D யில்.

    இந்த மிருகவதையினூடாகக் கடவுளின் இருப்பைச் சொல்ல வந்தார்களே! கடவுள் மீதான அன்பை மிருகபலியிட்டு புலப்படுத்திய ஆதிகால இந்தியம் தான் நினைவுக்கு வந்து போகிறது.

    இந்தப் படம் முடிந்து வெளியே வருகின்ற போது உங்களுக்கு கடவுளின் இருப்பு புலப்பட்டிருக்கிறது. எனக்கு மனித குரூரம் புலப்பட்டிருக்கிறது.

    மன்னியுங்கள் குமரன். மிகக் கொதித்துப் போய் இருக்கிறேன்!

    ReplyDelete
  8. புத்தன், இருக்கிற கடசி நம்பிக்கையையும் சிதைக்காதைங்கோ.

    நான் அந்தப் படம் பார்க்கவில்லை. படம் பார்த்து முடிவுக்கு வரும் நிலையில் நான் இல்லை.அது வியாபாரம். பணம் புரட்டும் மார்க்கம். பண நோக்கமற்ற சில கலைப்படங்கள் சில உண்மைகளை அமைதியாக சொல்லக் கூடும்.அவை பரவலான கவனிப்பைப் பெறுவதில்ல.

    இது வாழ்க்கை புத்தன்.இரண்டுக்கும் இடையில் பாரிய இடைவெளி.

    ReplyDelete
  9. நன்றி செந்தாமரை தோழி.

    இந்தப் புதுவருடம் எல்லோர் மனதிற்கும் ஒரு எள்ளளவேனும் மனிதத்தை எடுத்து வரட்டும் என்றே எனக்கு வாழ்த்தத் தோன்றுகிறது.!

    இன்றய உடனடித்தேவை அது தான்!!

    வந்து கருத்துரைத்த எல்லோருக்கும் நன்றி!உங்கள் நாட்கள் இனியவையாகுக!தொடர்ந்து வருக!

    ReplyDelete
  10. முதல் வாசிப்பில் கனத்துப் போன மனது கருத்திட இயலாமல் கடந்து போனது. இனியேனும் மனிதம் கூடட்டும் ஒவ்வொருவருக்கும்... வாழ்த்து பரிமாறிக் கொள்வதே கேலிக்கு உரியதாய் செய்துவிடுகிறது இப்படியான நிகழ்வுகள்...

    ReplyDelete
  11. /மனிதம் கூடட்டும் / ஆமென்!

    ReplyDelete
  12. மனிதம் மரிக்காமல் இருக்கட்டும்...

    ReplyDelete