Sunday, February 16, 2014

மூன்று மந்திரங்கள்8.2.14 சனிக்கிழமை.

தமிழ் பாடசாலைக்குப் போகும் இறுதி நாள் என்று அதை நான் அறிந்திருக்கவில்லை.சுமார் 15 மாணவ,மானவிகள் இவ்வருடம்! கற்பிக்கத் தயாராக எடுத்துக் கொண்டு போன பாடம் செம்மொழிகள் எட்டும் அவைகள் என்ன காரணத்துக்காக அப்படி தெரிவுசெய்யப்பட்டன, அம்மொழிகளின் சிறப்புகள் எவை என்பது பற்றியவையாக இருந்தன.

ஒரு கட்டத்தில் ஜென் கதைகள் பற்றிய விடயம் சொல்லப்படவேண்டி வந்தது. அதில் நான் படித்த ஜென் கதை ஒன்று நினைவுக்கு வர அந்தக்கதையைப் பகிர்ந்து கொண்டேன். கதைச் சுருக்கம் இது தான். ஒரு பெளத்த துறவி கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்துக்குப் போக வேண்டி இருந்தது. மிக இருண்டு போனதால் தங்கிச் செல்ல குடியானவர்களிடம் படுக்க இடம் கேட்கிறார். எல்லோரும் மறுத்து விட்டார்கள். அவர் அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குப் போய் மர அடிவாரத்தில் துண்டை விரித்து விட்டுப் படுக்கிறார். கரடு முரடான நிலம் என்பதால் அவருக்கு உறக்கம் வரவில்லை. விழித்திருக்கிறார். அப்போது தான் அவர் இருளில் கானகத்தில் அழகைக் காணும் பேறு பெறுகிறார். இருள் சூழ்ந்த கானகத்தைக் காண்கிறார். பெரு நிலவு மரங்களிடையே ஒளிர்கிறது. காட்டுப்பூக்களின் வாசத்தினைத் தென்றல் ஏந்தி வருகிறது. சில் வண்டுகள் ரீங்காரமிடுகின்றன....அவர் மிக ரசித்து இரவு நேரக்கானகத்தைக் கண்டு களிக்கிறார். என்ன அருமையான அழகிய இரவு நேரக்காடு என வியப்பதோடு அந்தக் கதை முடிகிறது.

இந்தக் கதை சொல்கிற செய்தி என்ன என்பதும்; எதிலும் நல்ல விடயத்தை அல்லது நேர்மறையான விடயத்தை நாம் காணப்பழகி விட்டால் நாம் வாழ்க்கையை சுலபமாக சுகமாக வாழ்ந்து முடிக்கலாம் என்ற செய்தியைப் பற்றியும் சொன்னேன்.”எல்லாம் நன்மைக்கே” என்பது இந்த ஜென்கதையின் சாரம். (குடியானவர்கள் இடம் கொடுத்திருந்தால் இப்படி ஒரு அழகிய காட்சியை அவர் கண்டிருக்க முடியாதே என்று அவர் குடியானவர்களுக்கு மறு நாள் போய் நன்றி சொன்னாராம்.)

(இந்தக் கதை எனக்கு நல்ல உதாரணமாக அமையும் என்று அப்போது நான் கருதி இருக்கவில்லை)

நேற்றய இரவு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இரவு நிகழ்ச்சி ஒன்று ‘சிந்தனைச் சிதறல்’ என் தோழி ஒருத்தி தான் அதை நடத்துகிறாள். அதில் பேசு பொருளாய் இருந்தது ’மன அழுத்தங்களும் அதனைத் தீர்க்கும் வழி முறைகளும்’ பலரும் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

உண்மையில் மனக்கோளாறுகளைக் கடந்து செல்ல தமிழில் சில மந்திரச் சொற்கள் இருக்கின்றன என்றே எனக்குப் பட்டது. மன இறுக்கம் வரக்காரணம் நம்மால் மாற்றங்களை (அது எதில் என்றாலும்- வேலை, வீடு, வாழ்க்கை, உறவுகள்...)எதிர்கொள்ள அல்லது அதனை  ஏற்றுக்கொள்ள இயலாமை தான். ஆனால் இந்த உலக வாழ்க்கையில் “மாற்றம் ஒன்றே மாறாதது” என்பது வாழ்க்கை நியதி. நமக்கு விருப்பமோ விருப்பமில்லையோ மாற்றங்கள் ஏற்பட்டே தீரும். அதனை யாராலும் மாற்ற முடியாது. இது முதலாவது மந்திரச் சொல்.

அதனை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.வல்லது வாழும் என்பது இந்தப்பிரபஞ்சத்தின் இயற்கை விதித்த சட்டம். நாம் இயக்கம் உள்ளவர்களாகவும் நல்ல வல்லவர்களாகவும் ( இந்தச் சொல் மிக்க கவனமாகக் கையாளப்பட வேண்டியது. மனசாட்சியை விற்று என்று அதற்கு அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. கடசியாக இந்த நாடகவேசம் எல்லாம் கலைந்த பின் நாம் நின்மதியாக உறங்கச் செல்ல வேண்டும். இந்த நிம்மதியான உறக்கத்தை எதன் பொருட்டும் குறிப்பாக இந்த வல்லமை என்ற சொல்லின் பொருட்டு விட்டுக்கொடுத்து விடக்கூடாது. அவரவர் பாதை அவரவர் பயணம் இ ல்லையா?  நன்றும் தீதும் பிறர் தர வருவதில்லை.’போகின்ற’ போது நம் நல்வினையும் தீவினையுமான நமக்கேயான  ‘பயணப்பொதியோடு’ தான் நாம் ஒவ்வொருவரும் பயணப்படப் போகிறோம். அதனைக் கனமில்லாது பார்த்துக் கொள்ள நாம் பார்த்தியதைப் பட்டிருக்கிறோம். அந்தரங்கத்தில் இந்த உண்மையும் தெளிவும் ஒரு பிரார்த்தனை போல எப்போதும் நம்மோடு கூட இருக்கவேண்டும். என் வாழ்நாளில் என்னால் எவ்வுயிர்க்கும் ஒரு கெடுதலும் நேரவில்லை என்று ஒருவனின் அந்தராத்மா சொல்லுமாக இருந்தால் அவன் கையில் பாரப்பொதி எதுவும் இல்லாமல் இவ் உலகப் பயணத்தைக் கடப்பான் மற்றும் ஒவ்வொரு நாளும் நின்மதியாக உறங்கச் செல்வான் என எனக்குத் தோன்றுகிறது. ) வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் நம்மை எப்போதும் புதுப்பித்துக் கொண்டு / வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். கல்வியால்; அறிவால்; பொது உளச்சார்ப்பால்; அதே நேரம் உயிர்களின் பால் அன்போடும்.

’மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது நியதி என நாம்  நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று நியதி இருந்தால் அந்த மாற்றத்தில் நமக்கு எங்கோ ஒரு கதவு திறக்கிறது என்று அர்த்தம். எல்லாம் நன்மைக்கே என்ற சாவியால் அந்தக் கதவை நாம் தேடித்திறக்க வேண்டும். உண்மையாகவே ‘எல்லாம் நன்மைக்கே’ என்பதை நான் மனசார நம்புகிறேன். உடனடியாக அதன் சாரம் நமக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் காலப்போக்கில் அதில் ஒரு நன்மை உண்டு என்பதை நாம் நிச்சயம் காண்போம்.

நம்மில் அநேகர் மூடிய கதைப்பார்த்து துயர் கொள்வதிலேயே பலகாலங்களைச் செலவளித்து விடுவதால் திறக்கப்பட வேண்டி இருக்கிற மற்றய கதவைக் காண மறந்து போய் விடுகிறார்கள். சுய பச்சாதாபத்திலும் மனப்போராட்டங்களிலும் தேவையற்ற கற்பனக் கொடூரங்களாலும் தம்மைதாமே சீரழித்துக் கொள்கிறார்கள்.

இந்த இடம் தான் மனம் நோய் கொள்ளக் காரணமாய் அமைந்து விடுகிறது. பலவீனம் இருக்கிற இடத்தில் நோய்க்கிருமிகள் இலகுவாகத் தொற்றிக் கொள்ளுகின்றன. மனம் தேங்கிப் போகிறது. ஓட வழி இல்லாது தேவையற்ற சிந்தனைகள் சந்தேகங்கள், மன குரோதங்கள் தேங்கித்தேங்கி அது காலப்போக்கில் நாற்றமெடுக்க ஆரம்பித்து விடுகிறது. நோயாக அது பின்னர் உருமாறுகிறது.

ஒரு தேடல் நம்மை உந்தித் தள்ள, நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பல வருடங்களின் முன் ஒரு வசனம் பார்த்தேன். உனக்கு என்ன நேர்ந்திருந்தாலும் சரி; படுக்கையை விட்டெழு; உடைகளை மாற்று; உன்னை அலங்கரி; வெளியே செல். இது மனதுக்கும் கூடப் பொருந்தும் என்றே எனக்குத் தோன்றுகிறது. Just get out!

மூன்றாவது மந்திரச் சொல் ஒன்று இருக்கிறது. அது ‘இயற்கை வெற்றிடங்களை விடுவதில்லை'. காலம் ஆற்றும் சகல காயங்களையும். இதுவும் கடந்து போகும். நாம் நினைத்தாலும் நினைக்கா விட்டாலும் இவை நிச்சயம் நடக்கும்.

ஆகவே காயப்பட்ட உள்ளங்கள் எதுவும் இருப்பின் குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாமே. :)

இது எனக்கு நான் சொல்லிக் கொள்ளுகிற ஒரு பதிவும் தான்.

அவுஸ்திரேலியப்பொருளாதாரம் கொடுக்கிற பயம் அது.

Ford car company மூடப்பட்டு விட்டது. Holden car company மூடப்பட்டு விட்டது. இப்போது Toyota car company 2017ல் மூடப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. அவுஸ்திரேலிய பழக்கொம்பனி SPC  மூடப்பட வேண்டிய ஆபத்து வந்து விட்டது என்று ரொனி அபேர்ட்டிடம் நிதி உதவி கேட்டும் அவரின் நிர்வாகம் கொடுக்கத் தயாராக இல்லாத நிலைமை. இந்த தொழில்சாலையை நம்பி ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. பெரும் பழத் தோட்டங்கள் அதில் வேலைபார்க்கிற தொழிலாளர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பெற்ற பல தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கூடவே வேலை இல்லாது போகப்போகிறது. மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த Bonds company  யும் இங்குள்ள தொழில் சாலையை மூடி விட்டு சீனாவுக்கு இடம் பெயர்ந்து விட்டது. தொலைபேசிக்கொம்பனிகள் தம் வாடிக்கையாளர் பிரச்சினைகளைப் பேசுவதற்கான அனுமதியை இந்திய, பாகிஸ்தானிய, பிலிப்பைன்ஸ் நாடுகளின் முகவர்களிடம் ஒப்படைத்து விட்டன.

கடைகளில் பொருள்களை வாங்குவோர் தொகை வெகுவாகக் குறைந்து விட்டது. கடைகள் பலவும் குறிப்பாக ஆடை அலங்கார கடைகள், தளபாடக்கடைகள்  ஈ விரட்டிக் கொண்டிருக்கின்றன. கவர்ச்சியான சலுகைகளைக் காட்டியும் வாங்குவார் இல்லை. பணப்புளக்கம் போதுமான அளவாக இல்லை. கண் முன்னாலேயே மூடப்படுக்கொண்டு போகிற கடைகளைப் பார்க்கும் போது எதிர்காலப்பயம் மக்களைச் சிக்கனமாக இருக்கவும் சேமிக்கவும் பழக்குகிறது.

சமூக நலத்துறை எதிர்கொள்கிற ஒரு பிரச்சினை வயதானவர்கள் தொகை அதிகரிப்பும் பிறப்பு வீதம் குறைந்து போவதுமாகும். நாட்டின் சிறந்த சுகாதார மருத்துவ வசதிகள் மக்களை நீண்டகாலம் வாழ வைக்கிறது. ஆனால் அவர்கள் வேலைக்குப் போக முடியாத வயதானவர்கள் என்பதால் அரச ஓய்வூதியத்தில் காலம் கழிக்க வேண்டி இருக்கிறது. இதற்கும் அரசு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்க வேண்டி இருக்கிறது. மேலும், அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டி இருக்கிற மருத்துவ, பராமரிப்பு வசதிகள் அரசாங்கத்துக்கு மேலதிக செலவாக அமைகிறது. அதனால் இப்போது ஓய்வூதியம் பெறும் வயதெல்லை 55 இல் இருந்து 60 ஆகி பின்னர் 65 ஆகி இப்போது 67இ வந்து நிற்கிறது. நாம் எல்லாம் 67 வயது வரை வேலைக்குப் போகவேண்டும். அதற்குப் பிறகு தான் ஓய்வூதியம் பற்றி யோசிக்கலாம்.

அத்தோடு இளம் சந்ததியினர் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை; குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமில்லை. கடந்த அரசாங்கம் குழந்தை பெற்றுக் கொள்வோருக்கென பெரிய பணத்தொகை ஒன்றையும் அறிவித்திருந்தது. அதற்குப் பலன் கிட்டியதா என்று தெரியவில்லை. பெரும்பாலும் இளம் சந்ததியினரை அது கவர்ந்திழுத்திருக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் வெகு தெளிவாக இருக்கிறார்கள். சுதந்திரத்திற்கும் தாமாக உழைக்கிற பணத்திற்கும், தம் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வேலைக்கும்  சுற்றுலாக்களுக்கும் அவர்கள் முதலுரிமை கொடுக்கிறார்கள். ஆண் துணையோ பெண் துணையோ வேண்டுமிடத்து ‘Living together" பாணி அவர்களுடய வாழ்க்கை முறைக்கு பொருத்தமாக அமைகிறது. அங்கு பொறுப்புகள் இல்லை; சட்டங்களின் அழுத்தங்கள் இல்லை என்பது அங்கு அவர்களுக்கு இருக்கும் மேலதிக அனுகூலம்.

மத்திய நிலப்பகுதியில் வாழ்ந்த விவாசயக் குடிகள் மிகுந்த வரட்சி காரணமாகத் தற்கொலை செய்வது இன்னும் ஒரு சமூக அழுத்தமாக உருமாறி வருகிறது. புகைத்தல், போதைவஸ்து, குடிபோதை போன்றன  இளையோரை நாசம் செய்யும் ஒரு உளவியல் பிரச்சினையாக உருமாறி வருவது ஒரு பக்கமாக நிகழ்கிறது. மென்மையாகவும் கவனமாகவும் கையாளப்பட வேண்டிய நிலைமையில் அது இருக்கிறது. இதற்கிடையே அரசு எதிர் கொள்ளுகிற அகதிகள் பிரச்சினை; அவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டி இருக்கிற பெரு நிதி; ... அதன் காரணமாக  அயல்நாடான இந்தோனேஷியாவோடு ஏற்பட்டிருக்கின்ற முறுகல் நிலைமை....  இப்படியாக நாட்டு  நிலைமை.

மீடியாக்களில் இப்போது Hot topic எதுவெனில் குவான்ரஸ் விமானநிறுவனம், போஸ்ட் மற்றும் மெடிபாங்க் பிறைவேற் இவைகள் தான். இரண்டு அவுஸ்திரேலியர் சந்தித்துக் கொண்டால் கதைக்கிற அடுத்த சூடான கதைக்களம் இவைகளையும் விற்று விட்ட பின்னர் அரசிடம் பிறகு கைவசம் இருக்கிற தொலைக்காட்சி நிறுவனங்களும் (abc,sbs) போக்கு வரத்து பணியகமும் தான் (வீதி, தொடரூந்து) அதனுடய அடுத்த இலக்காக இருக்கும் என்பது தான். இப்போது தொழிலாளர்களுக்காகப் பேசி வந்த நிறுவனங்களின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள். அது இவர்களுடய குரலை இல்லாது செய்து விடுமானால் சமான்ய தொழிலாளர்களுக்காக / மக்களுக்காகப் பேச யாருமில்லாது போய் விடும் அபாயம்.

அதே நேரம் வேலை இல்லாதோர் தொகை ஏற்கனவே  5 % இல் இருந்து 6 % மாக அதிகரித்துள்ள நிலைமையும் பெற்றோல் விலை உயர்வைத்தொடர்ந்து ஏறி இருக்கிற மின்சார எரிவாயு உயர்வும் அன்றாட உணவுப் பொருள்களுக்கான விலை உயர்வும்......

இயற்கையின் அனர்த்தங்கள்! அது கையைத் தாண்டிப்போன விடயம்! விக்ரோரியா மாநிலத்தில் தீ இன்னமும்! ( எங்கள் அன்பு எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இடம்பெயர்ந்து நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்திருப்பதாக இன்று தகவல் அனுப்பி இருந்தார்.)

எனக்கென்னவோ இப்போதில் இருந்து இன்னமும் 3 - 5 வருடத்துக்குள்ளாக நாமும் இந்த நாடும் ஒரு பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்திக்கப் போகிறோம் போலவே உள்ளூர ஒரு பல்லி சொல்கிறது.

இருந்த போதும் சாமான்யர்களான நாம் என்ன செய்ய முடியும்? வெள்ளப்பெருக்கில் இருந்து அல்லது காட்டுத்தீ அபாயத்தில் இருந்து நம்மை நம் உடமைகளை எப்படிக் காப்பாற்றிக் கொள்லலாம் என்பது பற்றி ..... அல்லது பிள்ளைகளின் எதிர்காலம் அல்லது அவர்கள் ஏன் தமிழராய் வாழவேண்டும் என்பது பற்றி அல்லது ஓர் இரவுநேரக்களியாட்டத்துக்கு என்ன மாதிரியான உடைகளை உடுக்கலாம் என்பது பற்றி, குடும்பவாழ்க்கையில் ஏற்படுகின்ற உறவுச்சிக்கல்கள் பற்றி, குடும்பம் என்ற கட்டமைப்பு ஏற்புடயதா இல்லையா என்பது பற்றி எல்லாம் பேசலாம்.

ஆனாலும்  எல்லாவற்றையும் எதிர்கொள்ள நமக்கு மூன்று மந்திரங்கள் மாத்திரம்  கைவசம் இருக்கின்றன.

1. மாற்றம் ஒன்றே மாறாதது.
2.எல்லாம் நன்மைக்கே
3. இயற்கை வெற்றிடங்களை விடுவதில்லை.

இந்த மந்திரத் துடுப்புகளைக்  கொண்டு இடர்பாடு என்ற கடலை கடப்போமாக!

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா!

18 comments:

 1. அங்குள்ள நிலைமைகளைப் பார்த்தால், நிறைய மந்திரங்கள் தேவைப்படும் போல...

  ReplyDelete
  Replies
  1. :) இல்லை இல்லை இந்த மூன்றும் போதும்! சமாளிக்கலாம்.

   Delete
 2. நேரம் கிடைப்பின் : உங்களின் மந்திரச் சொல் என்ன...?

  Link : http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_23.html

  ReplyDelete
 3. ஆஸ்திரேலிய பொருளாதார நிலமை படிக்கும் போது அங்கு வாழ்பவர்களின் நிலை குறித்து வருத்தப்படத்தான் முடிகிறது.

  மூன்று மந்திரங்கள் இடர்பாடுகளை களைய உந்து சக்தியாக இருக்கட்டும்.

  ReplyDelete
 4. வணக்கம்
  ஒவ்வொரு வாசகனையும் சிந்திக்க வைக்கும் பதிவு.... கதையும் நன்றாக உள்ளது. அதில் கூறிய கருத்தாடல் கற்பனைகள் சிறப்பு... வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன். உங்கள் அன்பார்ந்த வரவுக்கும் கருத்துக்கும்.

   Delete
 5. [quote]தமிழ் பாடசாலைக்குப் போகும் இறுதி நாள் என்று அதை நான் அறிந்திருக்கவில்லை[/quote]

  என்ன நடந்தது ....இனி நீங்கள் தமிழ் பாடசாலைக்கு சமுகமளிக்கமாட்டிங்களா?

  ReplyDelete
  Replies
  1. புதிய நிர்வாகம், புதிய நடைமுறைகள், புதிய பாணிகள் எனக்கு ஏற்புடயனவாக இல்லை.

   நம்புங்கள்! ‘இயற்கை வெற்றிடங்களை விடுவதில்லை’

   இந்த ஞாயிறு இலக்கிய சந்திப்பு இருக்கிறது. புத்த பகவான் சமூகமளிப்பாரா? :)

   Delete
 6. அன்பின் தோழி...

  படத்துப் பெண்ணின் கண்களில் தெரியும் பீதி பதிவின் பகிர்வில் எம்மையும் ஆட்கொள்கிறது.:(

  மூன்று மந்திரங்களும் அவற்றின் வீரியமும் சாத்தியம்.

  தோழி கீத மஞ்சரி பதிவுகள் மூலம் ஆஸ்திரேலியாவின் அரிய உயிரினங்கள் பற்றி அறிந்த போது வியந்து வியந்து பிரம்மித்த மனசு, அதன் இன்னொரு முகம் பார்த்து, தவிக்கும் மனித மனங்களை எண்ணிக் கலங்குகிறது.

  மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானாக!

  ReplyDelete
 7. அன்பின் மணிமேகலை, உங்கள் மனம் நொந்து போயிருப்பதாக தெரிகிறது. ஆறுதல் சொல்ல சொற்களைத் தேடினேன். அந்நேரம் நான் அறிந்த நொர்ஷ்க் கவிதையின் சில வரிகள் ஞாவகம் வந்தது. அதை தொடப் போய் முழுக் கவிதையையுமே மொழிமாற்றம் செய்ய முடிந்தது. ஈழத்து முற்றத்தில் போய்ப் பார்த்து வாருங்கள். சிறிதளவேனும் உங்கள் மனசைத் தாடாற்றிட என்னால் இயன்றதை தெண்டித்துள்ளேன்.
  அன்புடன்
  ந.குணபாலன்

  ReplyDelete
  Replies
  1. மிக்க அன்போடும் கருணையோடும் வந்து, வாசிக்கச் சாத்தியப்பட்டிருக்க முடியாத ஒரு நோவீஜியக் கவிதையால் துயர் துடைக்க வந்த அந்தப் பாசக் கரங்களுக்கு; எனக்காக எடுத்துக் கொண்ட அந்த அக்கறைக்கு; அதற்காகச் செலவு செய்த அந்த பொன்னான நேரத்துக்கு முதற்கண் என் ஆத்மாவின் பவ்வியநன்றிகள்.

   சென்று பார்ப்பேன்.

   அன்பும் நன்றியும் குணபாலரே!

   Delete
 8. மந்திரத் துடுப்புகளைக் கொண்டு இடர்பாடு என்ற கடலை கடப்போமாக!

  குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா!


  நல்லதே நடக்கட்டும்..!

  ReplyDelete
 9. நன்றி. செந்தாமரைத்தோழி. நலமா நீங்கள்?

  நல்லது. அவ்வண்ணமே ஆகுக! :)

  ReplyDelete
 10. இடர் கடக்கத் துணைசெய்யும் மூன்று மந்திரங்களைத் தந்துள்ளீர்கள் மணிமேகலா. மிக்க நன்றி.

  வெகுகாலமாகவே எல்லாம் நன்மைக்கே என்னும் ஒற்றை மந்திரத்திலேயே இறந்த காலத்தின் இடர்களைக் கடந்தபடி ஓட்டிக்கொண்டிருக்கிறேன் வாழ்க்கையை! சில சமயங்களில் பரிகாசத்துக்காளானாலும், பற்று விட்டுப்போவதில்லை அந்த ஒற்றை மந்திரத்தின்பால். இப்போது கூடுதலாய் இன்னுமிரண்டு.

  எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் எளிதில் கைவரப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

  வருவது வரட்டும். அதுவரை கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையைப் பயனுள்ளதாக்குவோம்.

  ReplyDelete
 11. ஆத்மபலம், சுயமரியாதை, தன்னம்பிக்கை இப்படியும் இருக்கின்றன சில சொற்கள் கீதா.

  பல வருடங்களின் முன் ஓர் கத்தோலிக்க மாதா சில ஆங்கிலக் குட்டிக் கதைகளைத் தந்து அவற்றைத் தமிழாக்கித் தரும் படி கேட்டா. நிறுவனமயப்படுத்தப்பட்ட தேவாலயங்கள் பிள்ளைகளுக்கு மறைக்கல்வியை தாய்மொழியோடு தேவாலயங்களில் சொல்லிக் கொடுக்கின்றன. அதில் ஒரு கதை என் மனதில் நன்றாகப் பதிந்து போயுள்ளது.

  ஒரு கன்னியாஸ்திரி – மென்மையான- எதிர்வார்த்தை பேசத்தெரியான கன்னி.ஓர் இடத்திற்குப் போக வேண்டும். மழை. குடையோடு ஒரு றிச்சோவை அழைப்பித்து போகிறாள். றிச்சோக்காரன் ஒரு கேடி. அவள் பணத்தையும் பறித்து அவளோடு தவறாக நடக்க முற்படுகிறான். அவள் பணத்தைப் பறி கொடுத்து விட்டு எப்படியோ தப்பி தேவாலயத்துக்கு வந்து சேர்கிறாள்.

  அவள் மழையில் நடுங்கியவாறும் அதிர்ச்சியோடும் அழுதவாறும் நடந்ததைச் சொல்கிறாள்.’ நீங்கள் சாத்வீகமாக இருக்குமாறு கூறினீர்கள்.இவ்வாறு நடக்கும் போது என்ன செய்வது எனக் கேட்டாள்.

  பாதிரி சொன்னார். ’குடைப்பிடியால் நீ ஏன் அவனுக்கு நாலு சாத்து சாத்தவில்லை’?

  வல்லது வாழும் கீதா. தன்னம்பிக்கையும் வல்லமையும் கூட வேண்டும்.

  ’எண்ணித் துணிக கருமம்’ தோழி! அதே நேரம் அடுத்த வரி தான் இதிலும் முக்கியம். அது, துணிந்த பின் எண்ணாதிருக்கவும்!

  ஜூலிய கில்லாட் பிரதம மந்திரி பதவியில் இருந்த போது HSC வகுப்பு மாணவி ஒருத்தி அவவிடம் ஒரு கேள்வி கேட்டாள்.ஒரு பெண் என்ற காரணத்தால் உன்னை பாராளுமன்றம் குட்டி இருத்தும் போது எவ்வாறு அதனை எதிர் கொள்கிறாய்?

  ‘நான் என்ன செய்யப்போகிறேன் என்பதில் எனக்கு தெளிவும் என்னில் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையும் இருக்கிறது. என்றார்.

  (இது அறிவுரைக்களஞ்சியமாக மாறிவிடும் ஆபத்து இருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.:)

  பெண் என்று பூமி தனில் பிறந்து விட்டால் பெரும் பீடு இருக்குதடி தங்கமே தங்கம்.

  ReplyDelete