Monday, March 17, 2014

நகைகள்சிட்னி முருகன் கோயில் திருவிழா. இன்று தீர்த்தமாம்.

தென்னகத்தில் இருந்து பிரபலமான புடைவைக் கடைகள் வந்து வியாபாரம் முடித்துப் போய் விட்டன.

லொக்கர்களில் கிடந்த நகைகள் யாவும் வெளியே மறுபடி வந்து மீண்டும் லொக்கர்களுக்குள் போகும். சில பல வீடுகளில் களவுகளும் போகும்.

இது தான் நகைகள் பற்றி பதிவெழுதக் காரணமா என்றால் இல்லை.

அண்மையில் திரு. தனபாலசிங்கம் ஐயா அவர்கள் தந்த ‘சிலப்பதிகாரச்  சிந்தனைகள்’ CD முதல்பாகத்தை ஒரு பாட்டம் கேட்டேன். அதில் ஒரு இடம் வந்தது. அது மாதவி அணிந்த நகைகள் பற்றிய பட்டியல் பாட்டு. அவள் சுமார் 30க்கு மேற்பட்ட நகைகளை அணிந்து தன்னை அழகு படுத்தி இருக்கிறாள்.அந்தப் பாடல் வரிகள் இவைதான்.

”நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து, 85

குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து, 90

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம் 95

கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து, 100

கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து, 105

தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள், 110

இதைப்பார்த்ததும் ஈழத்தின் வடபுலத்தைச் சேர்ந்த பேராசிரியர். க. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய காதலியாற்றுப்படை என்ற புத்தகத்தில் - (1903 - 1968 ) நாட்டார் வாழ்வியலைப் பதிவு செய்த அந்தக் கவிதை இலக்கியத்தில் - வந்த அணியப்பட்ட நகைகள் பற்றிய பட்டியல் பாட்டு நினைவுக்கு வந்தது. அந்தப் பாடல் இது தான்.” நன்னாள் பார்த்து பொன்னை உருக்கி
மணவினைக்கென்றே வரைந்திடு தாலியும்
அட்டியல், பதக்கம், பிலாக்கு, மூக்குத்தி,
பூரானட்டியல்,கீச்சிக் கல்லட்டியல்,
கடுகுமணிக்கொலுசு, கவுத்தோர் காதுப்பூ,
வாளி, சிமிக்கி, வளையல், தோடு,
பட்டணக்காப்பு, பீலிக்காப்பு,
பாதசரமொடு சங்கிலிச் சிலம்பு
தூங்கு கடுக்கண், நட்டுவக்காலி,
அரும்புமணிமுரு கொன்றப்பூவும்,
ஒட்டியாணம், மொழிபெறு நுதலணி
அரைஞாண் கயிறொடு அரைமூடிச் சலங்கை
சித்திர வேலை செய்திடும் போது........”

எனப் பட்டியல் இட்டபடி தொடர்கிறது இப்பாடல்.

பண்டய தமிழர் வாழ்வில் அணியப்பட்ட நகைகளின் பட்டியலைப் பார்க்கும் போது மலைப்பே மிஞ்சுகிறது.

1. அழகியலில் தமிழருக்கு இருந்த புலமை, நாட்டம் மற்றும் செய்நுட்பத் திறமை என்பது ஒன்று.

2. பெண்கள் எவ்வளவு தூரத்துக்கு புறத்தே தம்மை அழகுபடுத்திக் கொள்வதில் நாட்டமுடன் இருந்திருக்கிறார்கள் என்பது இன்னொன்று.

இந்தப் புற அழகு இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று பொன்னகை. இரண்டு புன்னகை. முன்னதை விட பின்னது கொஞ்சம் செளகரிகம் என்ற போதும் இன்றும் அது மட்டும் போதும் என்று சொல்லும் பெண்ணோ ஆணோ இல்லை.

இவை இரண்டையும் விட அழகு படுத்தும் சாதனம் ஒன்று உண்டு. உண்மையான அழகை நாம் அங்கு தான் காண இயலும். அது குணத்தினால் நிகழ்வது. தன்னை அகத்திலே / உள்ளத்திலே குணங்கள் என்ற அணிகலனால் தன்னை அழகு படுத்திக் கொள்வது.

கடந்த வியாழனன்று எதிர்பார பிரகாரமாக ஒரு பெண்கள் தினக் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. பரமற்ராவில் அமைந்திருக்கின்ற புலம்பெயர்ந்தோர் வள நிலையம் அந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அங்கு அகதியாக வந்து தம்மை வெற்றிகரமான பெண்களாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட பெண்கள் தம் தாம் வாழ்வில் பெற்ற அனுபவப் படிப்பினைகளை பார்வையாளர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.

நான் அதில் 3 விடயங்களைப் பொறுக்கிக் கொண்டேன்.

1.BUILD YOURSELF - உங்களைக் கட்டி எழுப்புங்கள். உங்களுக்குள் இருக்கும் பலம் என்ன என்பதை அடையாளம் காணுங்கள், பலவீனங்களை உங்களுக்கு நீங்களே சரியான நீதிபதியாக இருந்து கண்டு பிடியுங்கள். உங்களைச் சரியாக விளங்கிக் கொண்ட பின் பாதையை தீர்மானியுங்கள். முன்னால் பாதை இல்லையா? நீங்கள் போடுங்கள். முன்னேறுங்கள். உங்கள் வலப்புறம் திரும்பி “Happy women's day" சொல்லுங்கள். நாம் எல்லாம் ஓரினம் என்று உறுதி கொள்ளுங்கள். பெருமைப் படுங்கள்.

2. ACCEPT THE SITUATION THAT YOU ARE  IN.- நீங்கள் இப்போது இருக்கும் நிலையை ஏற்றுக் கொள்ளுங்கள்.அது நல்லதோ கெட்டதோ, கூடாதோ நல்லதோ அது தான் நீங்கள் இப்போது இருக்கும் நிலைமை. அதனை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு ஏற்க மறுத்தால் நீங்கள் இந்த இடத்தை விட்டு எங்கும் போக முடியாது. நீங்கள் இப்போது இருக்கும் நிலையை ஏற்றுக் கொண்ட பின், இனி இந்த இடத்தில் இருந்து எங்கு போகலாம் என்பதை சுதந்திரமாக உங்கள் திறமை கொள்ளளவு ( Capacity )என்பவற்றுக்கேற்ப தீர்மானியுங்கள்

3. AT T I T U D E - இதனைச் சொன்னவர் ஒரு இந்தியப்பெண். 70களின் ஆரம்பத்தில் தன் 18வது வயதில் தனியாக ரஷ்யாவுக்குச் சென்று பட்டம் பெற்றுவந்த முதல் இந்தியப்பெண்.Open to new situation என்பது வாழ்க்கை அவளுக்கு கற்றுக் கொடுத்த பாடம். அது மதமோ, பண்பாடோ, பழக்கவழக்கமோ, வாழ்க்கை முறையோ... எதுவாக இருந்தாலும் மனதை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.  படிக்கும் / கற்றுக் கொள்ளும், புதிய விடயங்களை அறிந்து கொள்ளும் ஆவலுடன் மனதைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குண இயல்பை அதிலிருந்து வரையறுத்துக் கொள்ளுங்கள்.அது தான் நீங்கள்.“ நீ என்பது உடலா, உயிரா, பெயரா?
  மூன்றும் இல்லை - செயல்”  

    - வைரமுத்து. கோச்சடையானில்.

இப்போது எது நமக்கு நகை? பொன்னகையா? புன்னகையா? குண இயல்பா?

9 comments:

 1. நீங்கள் ஆண்களைப் பற்றிச் சொல்கிறீர்களா தனபால்?

  ஆம். அவர்களுக்கும் அது நிச்சயம் தேவை. நன்றி தனபால். உடனடியாக வந்து கருத்திட்டமைக்கும்.

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. மனமார்ந்த நன்றி கீதா. தேவையானதைப் பெற்றுக் கொண்டேன். மிகுதியை அழிக்க மனம் வரவில்லை.

   என் ஆசைக்காக அதனை பிரசுரிக்கிறேன்.

   தமிழால் இணைந்திரு[ப்போம்.

   அன்பு மணிமேகலா,

   என் வலைப்பூவில் உங்கள் பின்னூட்டம் கண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மணிமேகலா. உங்களிடமிருந்து கிடைக்கும் உற்சாக வார்த்தைகள் புது உத்வேகம் அளிக்கின்றன என்றால் மிகையில்லை.

   ஆஸ்திரேலிய காடுறை கதையின் மொழிபெயர்ப்பை சிலாகித்திருக்கிறீர்கள். உங்கள் பாராட்டினை பெருங்கூச்சத்துடனேயே ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் மொழிபெயர்க்கும் அளவுக்கு எனக்கு ஆங்கிலப் புலமை கிடையாது. தமிழின்பாலிருக்கும் பெரும் ஈடுபாடுதான் என்னை இது போன்ற விபரீத முயற்சிகளில் இறங்கத் தூண்டுவதோடு வழிநடத்தவும் செய்கிறது என்று நினைக்கிறேன்.

   எந்த ஒரு விஷயத்தையும் மிகக் கோர்வையாகவும் தெளிந்த விஷயஞானத்துடனும் எழுதும் தங்கள் எழுத்தின் வல்லமைக்கு முன் என் எழுத்து வெகு சாதாரணம். இலக்கியம் சார்ந்த ரசனையுடனான பதிவுகளாகட்டும், வாழ்வியலைச் சொல்லும் அசாதாரணப் பதிவுகளாகட்டும், பெண்மனவியலைக் கோடிட்டுக் காட்டும் பதிவுகளாகட்டும்… எல்லாவற்றிலும் உச்சக் கருத்துக்களை முன்வைக்கும் தங்கள் எழுத்து என்னில் பல தருணங்களில் வரவேற்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

   உங்கள் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமானதில் பெருமகிழ்வும் பெருமையும் எனக்கு.

   Delete
 3. நல்ல விளக்கம்!
  பெரும் மாயையில் அல்லவா சிக்க வைக்கப் பட்டிருக்கிறோம்!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் புற அழகில் மயங்கும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் நிலா. பெரும்பாண்மையே அதுதான்.

   மிகச் சிறிய பங்கினர் தான் உள்ளார்ந்த அழகிலும் அறிவிலும் மனதை பறி கொடுக்கிறார்கள்.

   நன்றி நிலா. எங்கே கன நாளாய் காணோமே!

   Delete
  2. சிட்னி முருகன் கோவில் தொடர்பான எனது கருத்து.
   கோவிலில் தேர் அன்று நிறைய தாலிக்கொடிகள் காணாமல் போனதாகக் கேள்விப்பட்டேன்.அடிக்கடி அறிவிப்பு இப்படி நடந்ததாம் “ உங்கள் நகைகள் மீது ஒரு கண்ணை வைத்துக் கொள்ளுங்கள்”.
   அப்போ முருகனை எந்தக் கண்ணால் பார்ப்பது? ஒரு கண் நகையை பார்த்துக்கொண்டால் மற்றக் கண் தனியே திரும்பாது.மனம் நகையில் லயித்தால் எப்படி இறையில் லயிக்கும்?
   சந்திரிகா சுப்ரமண்யன்

   Delete
 4. சிட்னி முருகன் கோவில் தொடர்பான எனது கருத்து.
  கோவிலில் தேர் அன்று நிறைய தாலிக்கொடிகள் காணாமல் போனதாகக் கேள்விப்பட்டேன்.அடிக்கடி அறிவிப்பு இப்படி நடந்ததாம் “ உங்கள் நகைகள் மீது ஒரு கண்ணை வைத்துக் கொள்ளுங்கள்”.
  அப்போ முருகனை எந்தக் கண்ணால் பார்ப்பது? ஒரு கண் நகையை பார்த்துக்கொண்டால் மற்றக் கண் தனியே திரும்பாது.மனம் நகையில் லயித்தால் எப்படி இறையில் லயிக்கும்?
  சந்திரிகா சுப்ரமண்யன்

  ReplyDelete
 5. வணக்கம் சந்திரிக்கா அவர்களே!

  முதற்கண் இங்கு வந்து உங்களுடய கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றி.

  நல்லதொரு கருத்தைப் பகிர்ந்து கொண்டீர்கள். உண்மைதான்!

  பெண்கள் பக்கத்தில் இருந்து பெண்களாலும் நகைகள் திருடப்பட்டன என்பது இன்னொரு அதிர்ச்சியான தகவலாக இருந்தது. இது நகையைப் பறி கொடுத்த ஒருவர் தனக்கு நேர்ந்ததைப் பற்றிச் சொன்னது. அவர் நின்றது முழுக்க பெண்கள் பக்கம்.

  இது எப்படி இருக்கு?

  ReplyDelete