Monday, May 11, 2015

பொய்யாயினவெல்லாம் போயகல.....



அண்மையில் கைக்கு கிட்டியது ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ். இப்போது தான் பிறந்த ஒரு புதுக்குழந்தையைத் தூக்குவதைப் போல ஒரு வித பரவசம்.

பொருளடக்கத்தில் ஓடியது கண்கள். பேராசிரியர் சண்முகதாஸ் என்ற பெயரைக் கண்டதும் தலைப்பில் நிலைகுத்திற்றுக் கண்கள். தலைப்பு
‘ புலம்பெயர் இலக்கிய ஆய்வுகளும் அவ்விலக்கியங்களின் எதிர்காலமும்’

இந்த பெயரில் மனம் தரித்து நின்றதற்கு பலகாரணங்கள். ஒன்று, அவரிடம் ஒருவருடம் தமிழ் இலக்கியம் கற்கும் பாக்கியத்தை நான் பெற்றுக் கொண்டது. மற்றயது, அவரிடம் இருக்கும் பணிவும் அமைதியும் அறிவுப் பேரொளிப்பெருக்கும் சலசலப்புகள் புகழ் பாதைகளை விட்டு விலகி நிற்கும் அவரது மானுடகுணமும். இன்னொன்று அவரின் கற்பிக்கும் கலை.தேன்சுவை சொட்டச் சொட்ட இலக்கியம் கற்கும் போது நாம் மெய்மறந்து தேன் குடித்த வண்டுகளாய் மாறிப் போனது அவரிடம் தான்.

வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியக் கடல்! மானுடத்தின் அசல் பிரதி. தமிழ் பண்பாட்டின் பள்ளிக் கூடம்.

அதனால் மேற்கொண்டு மேலே போகாமல் நேரடியாக அவரின் கட்டுரைக்குள் நுழைந்து கொண்டேன். முற்பகுதி முழுக்க முழுக்க புலம்பெயர் இலக்கியம் பற்றி ஆய்வு செய்வோருக்கான தகவல் களஞ்சியமாகக் காணப்பட்டது. பிற்பகுதி தான் எங்கள் “உண்மை நிலையை” நமக்கு உணர்த்த வல்லதாக; நித்திரையில் இருந்து விழிப்பு நிலைக்கு நம்மை கொண்டு வர வல்லதாக; நீங்கள் நிற்கிற இடம் இது தான் என எமக்கு காட்ட வல்லதாக இருந்தது. அதனை அப்படியே நான் உங்களுக்கு தருவது தரவுச் சிறப்பு வாய்ந்தது.

“...புலம் பெயர்ந்து சென்ற தமிழரது அடுத்த தலைமுறை வாழிட மொழிகளிலே பெற்ற புலைமைத்துவத்தை இன்னும் தமிழ் மொழியிலே பெறவில்லை. அதற்கான தமிழ் மொழிப்பயிற்றலும், சில நாடுகளைத் தவிர, சரியாக நடை பெறவில்லை. தமிழ் மொழியின் தரத்தை குறைத்துப் பயிற்றுகின்ற கற்கை மரபு ஒன்றும் ஒரு நாட்டிலே உருவாக்கப் பட்டுத் தொடர்கிறது. இது எதிர்காலத்தில் தமிழ் மொழியிலே இலக்கியம் தோன்ற முடியாத சூழலையே ஏற்படுத்தும்......ஒரு மொழியின் பேணலுக்கு அம்மொழிப் பயில்கை தொடர வேண்டும். பண்டைய இலக்கியங்கள் கற்பிக்கப் பட வேண்டும்.

(எனக்குடனே பிஜி, தென்னாபிரிக்கா, மொறிசியஸ் நாடுகளுக்குப் போன தமிழர்கள் அந் நாட்டு விழுமியங்களுக்குள் தொலைந்து போனது ஒரு வரலாற்று எச்சரிக்கையாய் நினைவுக்கு வந்து திகில் கூட்டியது.)

... செம்மொழிகளுள் சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம் என்னும் மூன்று மொழிகளும் தற்போது பேச்சு வழக்கில் இல்லை. எனவே அம்மொழிகள் எதிர்காலத் தலை முறையினரால் பேசப்பட மாட்டா. அதே போன்று தமிழ் மொழியும் புலம் பெயர் நாடுகளில் பேசப்படாத ஒரு நிலையிலே  இளைய தலைமுறையினரால் பயிலப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் புலம் பெயர் தமிழ் இலக்கியங்கள் தோன்றக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே தென்படுகின்றன. புலம் பெயர் நாடுகள் பலவற்றுக்கு நேரடியாகச் சென்று கண்டு கொண்ட அனுபவமே இக்கருத்தை முன் வைப்பதற்குச் சான்றாக உள்ளது......

....காலப்போக்கில், புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்ற கருத்து நிலை மாறி அந்தந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவரது இலக்கியமாக அந்தந்த நாட்டுத் தமிழிலக்கியம் என்ற மரபு நிலையும் தோன்றக்கூடும். நாம் அறிந்த வரையில் யேர்மனி தேசத்திலே அங்கு பிறந்து குடியுரிமை பெற்ற தமிழ் கற்ற பிள்ளைகள் தமிழ் இலக்கிய ஆக்கங்கள் செய்கின்றனர். அவை புலம் பெயர் இலக்கியங்கள் எனக் கூறப்பட மாட்டா. அவை ஜேர்மனியத் தமிழ் இலக்கியம் எனப்படும். ஐரோப்பிய நாடான யேர்மனியின் வாழிட மொழியிலும் தமிழ் மொழியிலும் முறையான தகைமை பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட இளையவர்கள்  (அங்கு பிறந்தவர்கள்)  தமிழ் ஆசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர். இவர்கள் மொழிபெயர்ப்புப் பணியிலும் விரைவில் தம் திறமையை காட்டுவதற்கு அங்குள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் வழிகாட்டுவார்கள் என நம்பலாம்.

சிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் சென்ற தமிழ் நாட்டு புலம்பெயர்தமிழர்களின் வாரிசுகள் இலக்கியங்கள் படைத்து சிங்கப்பூர் மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றை உருவாக்கி உள்ளார்கள். தமிழகத்தில் இருந்து இலங்கை வந்து மலைநாட்டில் குடியேறிய தமிழகத்து மக்களின் வாரிசுகள் இலங்கை மலையக இலக்கியம் படைத்துள்ளார்கள். இது போல அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியம், அமெரிக்கத் தமிழ் இலக்கியம், ஜேர்மனியத் தமிழ் இலக்கியம்,  பிரித்தானித் தமிழ் இலக்கியம்.... என்றெல்லாம் உருவாகலாம்.

இப்படியெல்லாம் தனித்துவமான இலக்கியங்கள் எழுந்தாலும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்’ என்னும் ஒரு பகுதி இடம்பெற்றே இருக்க வேண்டும். புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழரின் அலைவையும் உலைவையும் நாம் மறந்து விட முடியாது. அவற்றை நமக்கு எடுத்துக் கூறப்போவனவாக இந்த இலக்கியங்களே நின்று நிலைக்கப் போகின்றன.”

இந்த கருத்துக்களின் சாரப்படி நாம் (புலம்பெயர்ந்தோர்) இனிமேலும் ஈழத்து தமிழ் இலக்கியத்தைச் சார்ந்து நிற்க முடியாது. அவர்களுடனான நம் தொப்புள் கொடி உறவு தொப்புள் கொடி வெட்டுப் பட்டதோடு பிரிக்கப் பட்டு விட்டது. பிறந்த குழந்தை இனி தனக்கென தனக்கான அடையாளத்தைப் பெற்றுக் கொண்டு தான் வாழும் மண்ணின் சூழலுக்கேற்ப தன்னை தனித்துவமான ஜீவனாக தன் காலில் இனி எழுந்து நடக்க ஆரம்பிக்க வேண்டும்.

எத்தனை நாளைக்கு நாம் உணர்வு பூர்வமாக அரசியலிலும் இலக்கிய உலகிலும் சமூக உணர்விலும் இணைந்து நின்றாலும் யதார்த்தம் என்பது இது தான்.

விழித்துக் கொள் அவுத்திரேலியா! நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கும் நடைமுறையில் மீள் நோக்குச் செய்து, நம்மை நிலைப்படுத்த வேண்டிய நேரம் இது!!

இதனையே அண்மையில் பார்க்கக் கிட்டிய ஈழத்து கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் “கடிதம்’ ஒன்றும் மெய்ப்பிக்கிறது. அதன் சில  வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

1. தங்கள் பாதுகாப்பை மட்டும் கருதி இந்த நாட்டை விட்டு ஓடிச் சென்று தங்கள் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் உறுதி செய்து கொண்டு வேறொரு தேசத்தில் குடியுரிமை பெற்றவர்கள் சிறிதும் நாணம் இல்லாமல் எங்கள் பிரச்சினைகளில் தலையிடுவதும் பிரச்சினைத் தீர்வுகளுக்கு வழிகாட்டி எங்களை மேய்க்க நினைப்பதும் சற்றும் பொருத்தமில்லாத விடயம்.

2.என்னைப் பொறுத்தவரை மூன்றாம் தலைமுறையுடன்  இனம் மாறப்போகிற புலம்பெயர் தமிழர்கள் எம் தாய் நாட்டைப் பொறுத்தவரை வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. அவர்களை எங்கள் பங்குதாரரைய் கருத நாங்கள் தயாராய் இல்லை.

3.கடைசியாய் ஒரு கேள்வி.என்றும் எமது போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாட்டில், அவலப்பட்டு அகதியாய் வருவோரை தீவுகளில் அடைத்து வைத்து திக்குமுக்காடச் செய்யும் ஒரு நாட்டில், கெஞ்சிக் கூத்தாடி பெறற்கரிய வரமாய் குடியுரிமை பெற்றவர்கள் நீங்கள். அங்கு பொருள் தேடி அப்பொருளால் இங்கு வந்து மனைவியில் இருந்து மற்ற அனைத்திலும் முதன்மைத் தேர்வுகளைக் கொத்திச் சென்று குதூகலிப்பர்கள் நீங்கள். அங்ஙனமாய் இங்குள்ள பாமரர்களை பரிதவிக்க விடுகையில் நாகர்கோயில் பாடசாலையில் இறந்த குழந்தையின் தாயும்  போரால் உறவும் உடமையும் உறுப்பும் இழந்து இன்றுவரை நல்லவை ஏதும் கிட்டாமல் நிற்கும் உடன் பிறப்புகளின் எண்ணம் உங்களுக்கு வருவதே இல்லையா? அப்படி போரால் அபலைகள் ஆனோர்க்கு உங்களில் எத்தனை பேர் வாழ்வு கொடுக்க முன் வந்தீர்கள்?

பார்வைகளும் கேள்விகளும் நியாயம் தானே?

பொய்யாயினவெல்லாம் போயகல.....

வந்தருளி,

மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே!..........

ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், போக்குவாய், எம்மைப் புகுவிப்பாய்...

இதன் பின்னர் என்ன செய்யப் போகிறாய்?







7 comments:

  1. வலிக்குதுதான்

    ReplyDelete
  2. தேற்றனே தேற்ற தெளிவு நம் சிந்தையுள் வரட்டும் எட்வின்.
    உண்மைகள் எப்போதும் வலிக்கவே செய்கின்றன.

    ReplyDelete
  3. அப்படி பார்க்கப்போனால், கம்பன்கழகத்தினரும் அவுஸ்ரேலியா தமிழ்சிறுவர்களுக்கு கம்பராமாயணம் கற்பிக்கமுயல்வதும் தப்பு.......உங்களுடை கட்டுரைக்கு நன்றிகள்...

    ReplyDelete
  4. [quote]என்னைப் பொறுத்தவரை மூன்றாம் தலைமுறையுடன் இனம் மாறப்போகிற புலம்பெயர் தமிழர்கள் எம் தாய் நாட்டைப் பொறுத்தவரை வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. அவர்களை எங்கள் பங்குதாரரைய் கருத நாங்கள் தயாராய் இல்லை.[/quote]

    புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறை வெறும் பார்வையாளர்கள் என்றால் ஏன் அவர்களுக்கு ராமாயணம் ?ஏன் அந்த தலைமுறைக்கு ராமாயணம் என்ற கருத்தாதிக்கம் .....

    ReplyDelete
  5. இரண்டாம் தலைமுறை ( நாங்கள்) நல்ல ரசிகர்கள், பார்வையாளர்கள். அம்மட்டே.

    கீழே வருவதும் அவர் சொன்ன கருத்து தான்.
    ” புலம்பெயர் காகிதப் புலிகள் சில இவரை இனி இங்கு கூப்பிடக் கூடாது என்பதாய் குரல் கொடுக்கத் தொடங்கியதாய் அறிந்தேன். உங்களூடு அவர்களுக்கு ஒரு செய்தி.அங்கு வருவதால் என் பிறப்பு ஜன்ம சாபல்யம் அடையும் எனும் எண்ணம் என் புத்தியில் சிஞ்சித்தும் இல்லை. என் வருகையால் நன்மை உங்களுக்கே அன்றி எனக்கில்லை! என் வருகைக்காய் நீங்கள் தவமிருக்க வேண்டுமேயன்றி நான் தவம் இருக்கப் போவதில்லை. என் வருகை நீங்கள் எனக்குத் தரும் வாய்ப்பல்ல. நான் உங்களுக்குத் தரும் வாய்ப்பு. அன்றும் இன்றும் என்றும் என் கருத்து இதுவே.”

    நம்மை மூன்றாம் நபராய் தள்ளி வைத்து அதிலிருக்கிற உண்மையை மட்டும் காண்போமா?
    ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு’ என்பது தெரியாததா நண்பனே!

    ReplyDelete
  6. முழுமையாய் கடிதத்தைக் காண இங்கே செல்க.

    http://www.padalay.com/2015/05/blog-post_61.html

    ReplyDelete