இரண்டு வாரத்துக்கு முன்னாலான ஒரு வேலை நாள்.
ஞாயிற்றுக் கிழமை காலை.
நம் மத்திய தபாலகம் அமைந்திருக்கும் முன்புறக் கூடல்.
வழக்கமாய் இங்கு செல்லப்பிராணிகளாய் நாம் வளர்க்கும் பிராணிகளை (நாய், பூனை.. இன்ன பிற...) தெருவோரங்களில் விட்டேந்தியாக திரிவதைக் காண முடியாது. அப்படி ஏதேனும் அபூர்வமாகத் அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருந்தால் பாத சாரிகளோ அன்றேல் வாகனதாரிகளோ அதனை பிடித்து அவர்களுக்கான பராமரிப்பு காப்பகங்களில் கொண்டு சென்று கொடுத்து விடுவார்கள்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஒரு நடுத்தரவயது மதிக்கத் தக்க கறுப்பும் வெள்ளையும் நிறம் கொண்ட அகன்ற பச்சைக் கண்களைக் கொண்ட ஒரு பூனை அண்மைக்காலமாக என் வேலைத்தலத்தில் நிற்கிறது. அது வாலை ஒடுக்கி உட்கார்ந்திருப்பதிலும்; படுத்திருப்பதிலும் ஒரு வித ஒழுக்கம் தெரியும். ’மேட்டுக்குடி பூனை போலும்’ என எனக்குள் எண்ணிக் கொள்வேன். சத்தம் போடுவதில்லை. யாரையும் தொந்தரவு பண்ணுவதில்லை. எப்போதும் தென்படுவதும் இல்லை. அதனால் யாருடயதோ வளர்ப்புப் பூனையோ என ஒரு சந்தேகம் எனக்கு அதனைக் காணும் போது எழும். ஏனென்றால் அவள் அத்தனை சுத்தம். கறுப்பும் வெள்ளையுமான அவளில் உடல் அத்தனை துல்லியமாய் தெரியும். வழக்கமாக வாசலில் இருக்கும் முன்புறக் கூடலில் போடப்பட்டிருக்கிற மர இருக்கைகளுக்கு அருகில் அவ்வப்போது தென்படும்.
அநேகமாக ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வாலை ஒடுக்கி தன் காலோரம் வைத்துக்கொண்டு உட்கார்ந்த படிக்கு வேலைக்கு போவோரையும் வருவோரையும் பார்த்துக் கொண்டிருப்பாள்.
இது சிலவேளை கைவிடப்பட்ட பூனையாக இருக்குமோ என்றொரு சந்தேகமும் என் மனமூலையில் இருப்பதால் அதனைக்கண்டால் என்னிடம் இருக்கும் உணவில் அதுக்குக் கொஞ்சம் கொடுப்பேன். அது சிட்னிப் பூனை. ஸ்பைஸ் அதுக்கு ஒத்துக் கொள்ளாதோ என்னவோ.... என்னையும் பார்த்து சாப்பாட்டையும் முகர்ந்து பார்த்து விட்டு நான் மறையும் வரை அந்த இடத்திலேயே நிற்கும். சாப்பிடாது. நானும் சப்பிடுதா சாப்பிடுதா என திரும்பித்திரும்பிப் பார்த்துக் கொண்டு போய் விடுவேன். என்றாலும் சாப்பாட்டைப் போட்டு விட்டுப் போவதை நிறுத்துவதில்லை. அவள் சாப்பிடுவதில்லை என்றொரு ஐயம் எனக்கு இருந்தாலும் போட்டு விட்டுப் போவதற்குக் காரணம் ஒன்றும் கிடைக்காவிட்டால் அவளுக்கு சாப்பிட ஏதேனும் வேண்டும் என்ற ஒரு காரணம் தான். (தண்ணி குடிக்க என்ன செய்வாள் என்பது எனக்கு இப்போதும் இந்ருந்து கொண்டிருக்கும் சந்தேகம்)
சுமார் 3 மாத காலமாய் நான் அவளைக் காணவில்லை. அவ்வப்போது அந்த இடத்தைக் கடக்கும் போது அவள் என்ன ஆனாள் என்றொரு நினைவு எழுந்து மறையும். அவ்வளவு தான்.
அந்த ஞாயிற்றுக் கிழமை.
அந்தப் பென்னாம் பெரிய தபால் நிலையத்தின் மறுபக்க வாசல் வழியாக வேலைக்குப் போனேன்.
தற்செயலாய் அவளைக் கண்டேன்.
அசுத்தமாய் கண்சோர்ந்து தென்பட்டாள். வண்டி பெரியதாய் கீழ் புறமாக பருத்திருந்தது. புழுதி படிந்து காணப்பட்டாள். எப்போது எப்படி இந்தப் பக்கம் வந்து சேர்ந்தாள் என்று தெரியவில்லை. அந்தப் பென்னாம் பெரிய கட்டிடத்தில் இந்தப் பக்கம் வருவதற்கு வேறு பாதையும் பெரு நெடுஞ்சாலையும் தாண்டி ஆகவேண்டும். உள்பக்கமாய் அவள் வருவதற்கு எந்த வழியும் இல்லை. எல்லாரும் அடையாள அட்டைகளை வாசல் வழி காட்டி தானியங்கி கண்ணாடிக் கதவுகள் வழியாக உள்ளே வரவேண்டிய நிலையில் ஒரு ஈ, காக்காய் கூட உள்ளே அனுமதி இல்லை. 24 மணி நேர கமராக்கள் வேறு எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் கடும் பாதுகாப்பு கண்காணிப்பு நிலைமையில் அவள் அந்தப்பக்கம் வந்திருந்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம்.
ஒரு இனம்புரியா ஆறுதல் நிரம்பிய சந்தோஷமும் கூட. கூடவே இவள் எப்படி இப்படிச் சீர்குலைந்து போனாள் என்று ஒரு கவலையும்......
வழமை போல கொண்டு போன சாப்பாடில் கொஞ்சத்தை எடுத்து அவளுக்கும் எனக்கும் இடையில் வைத்து விட்டு அவள் வந்து சாப்பிடுவாளா எனக் காத்திருந்தேன்.
என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் நேராக தன் சாப்பாட்டைக் கடந்து என்னிடம் வந்தாள். என் கால்களைச் சுற்றி வாலை நேரே உயரத் தூக்கியபடி; கால்களை உரஞ்சிய படி ஒரு சுற்றுச் சுற்றினாள். என் முகத்துக்கு நேரே வந்தபின் தன் தலையை நிமிர்த்தி வாஞ்சையோடு என்னை பார்த்தாள். அவள் முகத்தில் இருந்து முதுகோரமாகத் வால் வரை ஒரு வித மனநிறைவோடு தடவி விட்டேன்.
போய் சாப்பிடத் தொடங்கினாள்.
அது அவள் சொன்ன உன்னை அடையாளம் கண்டு கொண்டேன் என்பதும் உன்சாப்பாட்டுக்கு நன்றி என்பதாகவும் நான் மொழிபெயர்த்துக் கொண்டேன்.
கூடவே அன்பைப் பரிமாற மொழி தேவை இல்லை என்பதையும்.....
அடையாளம் கண்டு கொள்ளவும் தன் பாஷையில் நன்றி சொல்லவும் தெரிந்தவள். அழகிய நடுத்தர வயதைத் தாண்டிய அழகி அவள்.
இப்படிப்பட்ட ஒருத்தியை எப்படி தனியே வெளியே தள்ளி விட முடிந்தது ஒருவரால்.....?
எனக்கு விளங்கவில்லை. மனித குரூரங்கள்.....
அன்றய நாள் வேலை நேரம் முழுக்க அவளே என்னை ஆக்கிரமித்திருந்தாள்.
இந்த உலகத்தில் உள்ள சகல மதங்களையும் பண்பாடுகளையும் நம் வாழ்வில் இருந்து முற்றிலுமாக அகற்றி விட்டு உலகம் முழுதிலும் உள்ள குழந்தைகளின் 5 வயதில் இருந்து பள்ளிக் கூடங்களில் மனிதனாய் வாழ்தல் எப்படி என்று சமய பாட வேளைகளில் பாடம் சொல்லிக் கொடுத்தால் இந்த உலகம் எத்தனை ரம்யமாக இருக்கும்!
சாதி இருக்காது...
மதம் இருக்காது...
நிறபேதம் இருக்காது....
குரூரங்கள் இருக்காது.
.............................
அந்த இடம் முழுவதும் மனித நேயத்தால் பரஸ்பர அன்பால் ஒருவர் பால் ஒருவர் காட்டும் மதிப்பால் மரியாதையால் விளங்கிக் கொள்ளலால் இந்த உலகம் தெய்வீகம் உள்ளதாய் ஆகி விடாதா?......
ஓராபிரிக்க இளைஞனை இந்த எந்தத் தளையும் இல்லாத ஒரு மனிதனாய் கற்பனை பண்ணிப் பாருங்கள்....
அவனால் ஓரு அராபிய அழகியை சிநேகிக்க ஒரு தடையும் இருக்காது.
நம்மால் இயல்பாக அன்பு செலுத்துவது எத்தனை இயல்பாகி விடும்?
அது போல மிருகங்களை; பிராணிகளை; பறவைகளை; இயற்கையை ... எத்தனை நேசிப்போடு இவற்றை எம்மால் அணுகக் கூடியதாய் இருக்கும்?.....
'சிட்னிப் பூனைக்கு ஸ்பைஸ் ஒத்துக்காதோ என்னவோ' நகைச்சுவையான வரிகள். மனிதம் குறித்த அருமையான பதிவு. என்னுடைய பதிவின் பின்னூட்டத்திலும் இதுகுறித்தான தங்களின் கருத்துக்களை வெளியிட்டிருந்தீர்கள். மனிதம் என்பது மனிதனை மட்டும் நேசிப்பது அல்லது இந்த உலகில் உள்ள சகல ஜீவராசிகளையும் நேசிப்பது என்பதை உங்கள் பதிவில் உணர்த்தியிருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி கவி.
Deleteஉங்கள் பதிவொன்றை வாசித்த போது தோன்றிய எண்னம் தான் அது. கூடவே இந்தச் சம்பவமும் நிகழ்ந்து விட்ட்தால் இரண்டையும் இணைக்க முடிந்தது.
இப்போது இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. என் தங்கை சுவிற்சிலாந்து நாட்டின் எல்லையோரக் கிராமம் ஒன்றில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறாள். அங்கு 2011இல் போனேன். அவளின் பிள்ளைகளிடம் பள்ளியில் சமய பாடத்தில் அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்று கேட்டேன். சகல மாணவர்களும் சகல சமயங்களையும் படிக்க வேண்டியது கட்டாயம். அவர்கள் விரும்பியதை பின்னர் பின்பற்றிக் கொள்ள ஒரு தடையும் இல்லை.
5ம் வகுப்பு வரை இருக்கும் அந்தப் பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர். ஒரு நாய். இவ்வளவும் தான் நடமாடும் சொத்து. 5ம் வகுப்பில் இருக்கும் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் கீழ் வகுப்பில் இருக்கும் 2 பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அவர்களிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பது, பள்ளிக்கு வராவிட்டால் ஏன் வரவில்லை என விசாரிப்பது... இந்த மாதிரி.
ஆசிரியர் வகுப்புக்கு வரும் போது நாயையும் தன்னோடு அழைத்து வருவார். அவர் எந்த வகுப்பில் இருக்கிறாரோ அந்த வகுப்புக்கு அந்த நாயைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு அமையும். விடுமுறை நாட்களில் பிள்ளைகள் தம் பெயரைப் பதிந்து நாயை தம் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம்.
மலைகளும் ஏரிகளும் பசும் புல்வெளிகளும் கொண்ட அந்த அழகிய சுத்தமான தேசத்தில் வீதிகள் தோறும் இயற்கையாகவே அப்பிள் மரங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. மாலைகளில் பிள்ளைகள் உலாப் போகிறார்கள். தென்படும் மூதாட்டிகளோடு நின்று நலம் விசாரிக்கிறார்கள். செல்லப்பிராணிகளுக்கு கொண்டு செல்லும் தின்பண்டங்களைக் கொடுக்கிறார்கள்....
மனிதனாய் இருத்தல் என்பதை நடைமுறை வாழ்வினூடாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்...
அந்த அழகிய தேசம் உங்கள் பின்னூட்டத்தால் மீண்டும் நினைவுக்கு வந்து போனது.
பதில் நீண்டு போனாலும்...நன்றி...நினைவு படுத்தியமைக்கு
வணக்கம்
ReplyDeleteபதிவு மனதை நெகிள வைத்து விட்டுது...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன். அவளை வருடி விட்ட தருணம் பரவசம் நிறைந்தது.
Deleteவரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
அன்பை பாரபட்சமின்றி செலுத்தினால் உலகத்தில் அமைதியும் நிம்மதியும் நிலவும்.. அதை சிறு ஜீவனிலிருந்தே துவங்கும் வழி சொல்லி வழிகாட்டியிருக்கிறீர்கள்.. அன்பு எவ்வளவு உள்ளகத்தில் கொண்டிருந்தாலும் தேவைப்படும்போதுகூட வெளிக்காட்டத் தெரியாத ஏராளமானோர் உண்டு என்னைப் போல்... ஆனால் அடக்கமாட்டாத அன்பை காட்டாறெனப் பிரவாகித்து வெளிக்காட்டும் தன்மை வெகுசிலருக்கே உண்டு உங்களைப் போல்.. உங்களைத் தோழமையாய்ப் பெற்றதற்காய் மனம் மகிழ்கிறேன் மணிமேகலா.
ReplyDeleteஎன் தோழியை எனக்குத் தெரியாதாக்கும்?
ReplyDeleteநாங்கள் தோழமையோடு இருப்பதன் முக்கிய காரணமே எங்கள் எண்னங்கள் எல்லாம் ஒன்று போல இருப்பதால் தானே?
இப்படி ஒரு சினேகிதம் அமைவது வெகு அபூர்வம். எனக்கு வாய்த்திருப்பதில் எனக்கொரு ஆத்ம ஆறுதல்.
வேறென்ன நான் சொல்ல...என் தோழிக்கு....