Saturday, May 14, 2016

இலக்கியச் சந்திப்பு - 25


வணக்கம் இலக்கிய உள்ளங்களே!

எல்லோரும் நலம் தானா?


பல மாதங்கள் வெறுமனே கடந்து போயின...புலம்பெயர்ந்த நாடுகளில் வேலையும் வாழ்க்கையும் நம் எல்லோரையும் ஓடிக்கொண்டே இருக்கப் பண்ணியதில் பல மாதங்கள் நம் சந்திப்புக்களை நிகழ்த்த முடியாமல் போய் விட்டது.


இருந்த போதும் பல இலக்கிய நிகழ்ச்சிகளும் கலை பண்பாட்டு நிகழ்வுகளும் வாராந்த மாதாந்த கூட்டங்களும் சிறப்பாக இங்கு நடந்த வண்ணமே உள்ளன. அவைகள் நம்மை உயிர்ப்போடு வைத்திருப்பதிலும் புளகாங்கிதம் அடைய வைப்பதிலும் தம் பங்கினை செவ்வனே ஆற்றியும் வருகின்றன. அங்கு நாம் சந்திக்கிற அன்பர்கள் எப்போது அடுத்த சந்திப்பு எனக் கேட்ட வண்ணமாகவே இருந்தனர்.நீங்கள் எல்லோரும் நம்மோடு பக்க பலமாக இருக்கிறீர்கள் என்பதை அப்போதெல்லாம் அறிந்து மகிழ்ந்தோம்.


இத்தோடு அண்மையில் ஈழத்தில் இருந்து இங்கு விஜயம் செய்திருக்கும் கடந்த 16 வருடங்களாக மாதம் தவறாது “ஞானம்” என்றொரு சஞ்சிகையை நடாத்திக் கொண்டிருக்கும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ”போர்க்கால இலக்கியம்”,”புலம்பெயர்ந்தோர் இலக்கியம்” என்ற இரு பெரும் தொகுதிகளை வெளியிட்டவருமான திரு. ஞானம். ஞானசேகரன் அவர்கள் அவரது 75வது அகவையைக் கொண்டாடும் முகமாக இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.


அவரைச் சிறப்பிப்பதோடு அவரிடம் இருந்து பல அனுபவத் தகவல்களையும் அறிந்து கொள்ளும் முகமாக ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்திருக்கிறோம். “ஈழத்து இலக்கிய மரபின் இன்றய நிலை” என்பது சம்பந்தமாக அவரது பேச்சு அமைந்திருக்கும். அதனைத் தொடர்ந்து கருத்துக்களுக்கும் அனுபவப்பகிர்வுகளுக்கும் தக்க களமும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 


ஈழத்து இலக்கிய மரபும் அது காலா காலங்களில் எவ்வாறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது என்பதும் இன்றய கால கட்டத்தில் அது எவ்வாறான போக்குகளைக் கொண்டிருக்கிறது என்பதும் ஈழத்து இலக்கியம் சம்பந்தமாக ஒரு ஒரு சிறந்த பார்வையை அது நமக்குத் தரும் என்பது நமது நம்பிக்கை.

அதனைத் தொடர்ந்து தேநீர் சிற்றுண்டியோடு ஈழத்திற்கே தனித்துவமான கலை வடிவமாகக் காணப்படும் கூத்து மரபில் வெளிவந்த “இராவணேசன்” நாட்டுக் கூத்து ஒளிப்படக்காட்சி காண்பிக்கப் படும். அது ஈழத்தின் கிழக்கு மாகாணத்துப் நுண்கலைப் பீட பேராசிரியர் மெளனகுரு அவர்களால் நெறியாழ்கை செய்யப்பட்டு பலரின் பாராட்டைப் பெற்ற கூத்து வடிவமாகும்.


இந் நிகழ்வு சிறப்புற உங்கள் வரவை வேண்டி நிற்கிறோம்.


இந் நிகழ்வின் ஊடாக ஈழத்து இலக்கிய மரபு பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டமும் நமக்கே நமக்கான கலை வடிவமான கூத்தின் பாரம்பரிய சிறப்பினையும் கண்டு நம் பண்பாட்டின் வேர் பற்றிய தெளிவோடும் பயனோடும் நாம் இந் நிகழ்வினை நிறைவு செய்வோம் என்பது நம் நம்பிக்கை.


எல்லோரும் வாருங்கள்.

நடை பெறும் இடம்:Mayura Function and Event Center,

54 - 47, Boomereng Place, SEVEN HILLS - 2147
( புகையிரத நிலையத்திற்கு முன்பாக)

காலம்: மாதாந்த இறுதி ஞாயிறான 29.05.2016

நேரம்: 3.00 - 6.00 (நிகழ்வு சரியான நேரத்திற்கு ஆரம்பமாகி சரியான நேரத்திற்கு நிறைவு பெறும்)

உங்கள் எல்லோரது வரவையும் ஆவலோடு எதிர் பார்த்திருக்கிறோம்.
நன்றி.

Tuesday, May 10, 2016

கண்டறியாத கதைகள் - 5 - மினுக்குப் பெட்டி

மினுக்குப் பெட்டி என்ற சொல்லே தமிழர் பாவனையில் இருந்து மறைந்து விட்டது. க்ரியாவின் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) மற்றும் திருமகள் தமிழ் அகராதியிலும் கூட இந்தச் சொல் பதியப்படவில்லை. அந்த  இடத்தை ஆங்கிலச் சொல்லான  iron box  என்ற சொல் பிடித்துக் கொண்டதே இந்தப் பொருளும் இந்தச் சொல்லும் நம்மை விட்டு மறைந்து போனதைச் சொல்ல போதுமானதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

இப்பொருள் எப்போது எங்கு யார் உள்ளத்தில் முதன் முதல் தோன்றியது. எவ்வாறு பரவியது என்றும் அறிய முடியவில்லை.

மினுக்குப் பெட்டி என்பது ஆடைகளை அதன் சலவைக்குப் பின்பாக அதாவது தோய்த்து உலர்ந்த ஆடையில் காணப்படும் சுருக்கங்களை நீக்கி அதன் தையல் நுட்பத்தையும் துணியின் இயல்பான தன்மையினையும் அழகினையும்  தெளிவாக மேம்படுத்திக்  காட்டும் விதமாக ஆடையினை நேர்த்திப் படுத்தும் உபகரணமாகும்.

இந்தத் தொழில்பாடு ஒரு கலையும் ஆகும்.

தமிழரின் சமூகக் கட்டமைப்பில் ஒவ்வொரு தொழிலைச் செய்வதற்கு ஒவ்வொரு பிரிவினர் இருந்தமையும் அவர்களில் அநேகருடய தொழில்கள் கலைத்துவம் சார்ந்ததாக இருந்ததும் ஆனால் அதற்குரிய சமூக அங்கீகாரமோ அதற்குரிய ஜீவனோபாய பணப்பெறுமதியோ அக் காலங்களில் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதும் சமூகத்தில் அவர்கள் சிறப்பான முறையில் அததற்குரிய வகையில் மதிக்கப்படவோ இல்லை என்பதும் நம் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு கறை படிந்த கண்ணீர் துளி. அவர்களுக்குச் சமூகம் பெயர் சுட்டி இடம் காட்டி தூரமாய் நிற்க வைத்திருந்தது.

நகைகளை உருவாக்கிய கலைஞர்கள், சிகை அலங்காரம் செய்த கைகள், திருமண வீடுகளிலும் அமங்கல வீடுகளிலும் ஆலயங்களிலும் இசையால் அந்த இடங்களை நிறைத்தவர்கள், கடலில் போகும் நுட்பம் கண்டு  மரக்கலங்களில் ஏறி கடலில் மீன் பிடிக்கப் போன திண்ணிய தோள்கள், மரங்களில் ஏறும் வித்தையை லாவகமாகச் செய்தவர்களுமாக இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மேற்சொன்ன  வகைப்பாட்டுக்குள் இதனைத் தொழிலாகச் செய்தவர்களும் அகப்பட்டுக் கொண்டார்கள் என்பதை சொல்வதற்காகவே சற்றே சொல்லையும் சொல்ல வந்த குறிப்பையும் விட்டு சற்று நீங்கிச் செல்ல வேண்டியதாயிற்று.

இந்தத் துணியை நேர்த்திப் படுத்தும்  கலையைத் தொழிலாகச் செய்தவர்கள் இந்தியாவில் தள்ளு வட்டிகளிலும் இலங்கையில் அவர்கள் துவிச் சக்கர வண்டிகளிலும் (உந்துருளி) தம் தொழில்களை ஆற்றி வந்தார்கள்.

நான் குறிப்பாக இங்கு குறிப்பிட விரும்புவது தொழிலாக அன்றி வீடுகளில் பாவனையில் இருந்த இந்த மினுக்குப் பெட்டியும் அதன் பாவனையும் பற்றிய குறிப்பாகும். வீடுகளில் பாவனையில் இருந்த இந்த மினுக்குப் பெட்டி பாரம் குறைந்த மின்சார அழுத்தி வரு முன்னர் பாவனையில் இருந்த ஒன்று.









உலர்வலய நாடுகளான குறிப்பாக  இந்தியா இலங்கை போன்ற தேசங்களில் பருத்தி பட்டு ஆடைகளே அநேகமாக பாவனையில் இருந்து வந்தன. பருத்தி ஆடைகள் நாளாந்த பாவனைகளுக்கும் பட்டு ஆடைகள் கொண்டாட்டங்களின் போதும் அநேகரால் பயன் படுத்தப்பட்டு வந்தன. இந்த ஆடைகள் குறிப்பாகப் பருத்தி ஆடைகள் வெய்யிலுக்குள் செல்லும் போது வியர்வையினை உறிஞ்சக்கூடியனவாகவும் காற்றினை உள்ளேயும் வெளியேயும் விடக்கூடியனவாகவும் இலகுவாக உலரும் தன்மை கொண்டனவாகவும் மென்மையான இலேசான தன்மையையும் கொண்டு விளங்கியவை. பருத்திப் பஞ்சினால் ஆக்கப்பட்ட இரசாயணக் கலவைகள் அதிகம் சேர்க்கப்படாத ஆடை வகைகளாக சேலைகள், வேட்டிகள், சால்வைகள், பிள்ளைகளின் சட்டைகள், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளின் சீருடைகள், வீடுகளில் அணியப்படும் வீட்டு உடுப்புகள் என ஒரு வகை சார்ந்தனவாக இருந்தன.

இந்த மினுக்குப் பெட்டியில் மினுக்குவதற்கு முன்னர் சலவையின் போது துணிகளுக்குச் செய்யும் ஏற்பாடுகள் மிக விசித்திரமானவை. குறிப்பாக பருத்தி ஆடைகளுக்கு கஞ்சி போடுதல் என்றொரு நிகழ்வு நடைபெறும். வெள்ளை பருத்தி ஆடை எனில் அதன் வெண்மை நிறத்தைச் சீர் தூக்கிக் காட்டுவதற்காக நீலம் போடுதல் என்றொரு நிகழ்வும் இடம் பெறும். கிணற்றடியில் இது ஒரு கோலாகல நிகழ்வு.

ஆடையினை சவர்காரம் போட்டு தோய்க்கும் கல்லில் இட்டு நன்றாகக் கசக்கி தோய்த்த பின்னால் மூன்று தரம் நல்ல தண்ணீரில் சவர்காரத்தின் தன்மை போக நன்றாக அலசுவார்கள். அதன் பின்னர் சவ்வரிசியில் அல்லது கோதுமை மாவில் மிக மெல்லியதாக கட்டிகள் எதுவுமில்லாமல் அடுப்பில் காச்சிய கஞ்சியை ஒரு துணியில் வடித்து ஒரு வாளியில் வைத்துக் கொள்ளுவார்கள்.

துவைத்து பிளிந்து வைத்திருக்கும் ஆடையினை இறுதியாக இதற்குள் இட்டு துணியின் சகல இடத்திலும் கஞ்சி சீராகப் பரவும் வகையில் அலசி கொடியில் நன்றாக விரித்து உலர்த்துவார்கள். இத் துணி உலர்ந்த பின் கஞ்சியின் தன்மையால் மட மட என்றிருக்கும். துணியின் நீண்ட காலப் பாவனைக்கும் அதன் மினுக்கலுக்குப் பின்பான அழகுக்காகவும் மக்கள் இத்தகைய சிரத்தையை எடுத்துக் கொண்டார்கள்.

வெள்ளை துணி எனில் குறிப்பாகப் பாடசாலைப் பிள்ளைகளின் சீருடைகளுக்கு நீலம் போடுதல் என்றொரு நிகழ்வு நடைபெறும். இதுவும் மேற் சொன்னவாறு தோய்த்து உலர்த்துவதற்கு முன்னராக வாளியினுள் நீலத்தூளாக இருக்கும் நீலத்தை ( றோயல் நீலம் அப்போது இலங்கையில் பிரபலமாக இருந்த ஒன்று) ஒரு பருத்தித் துணியில் பொட்டலமாகக் கட்டி அதனை தண்ணீரில் வைத்துக் கலக்க அதன் நீல நிறம் தண்ணீரில் ஒரு சீராகக் கரையும். அதற்குள் இறுதியாக ஆடையை உலர்த்துவதற்கு முன்னர் ஆடையை அதன் சகல இடங்களிலும் சீராக அந்த இளநீல நிறம் பரவும் வகையில் நன்றாக மூழ்க வைத்து அலசி எடுத்து உலர்த்துவார்கள். உலர்ந்த பின்னர் அது நீலத்தின் சாயலால் தூய வெண்நிறத்தை அவ் ஆடை பெற்றிருக்கும்.

பட்டாடைகளுக்கு இந்த வேலைகள் இருக்காது. அவை தனியாகவும் சிறப்பாகவும் கவனிக்கப் பட்டு சாதுவாக நிழலில் உலர்த்தப் பெறும்.

இனித்தான் இந்த மினுக்குப் பெட்டிக்கு வேலை வரும். காலை 10.00 மணியளவில் ஆடைகளைத் தோய்த்து உலர்த்தினால் மதிய வெய்யிலில் அது காய்ந்து மாலையில் மினுக்கலுக்கு அவை தயார் நிலையில் இருக்கும்.

3 அல்லது 4 தடித்த துணிகளை - பெரும்பாலும் சுத்தமான கட்டில் விரிப்புகள் அவற்றுக்குப் பயன் பட்டன - மேசையில் விரித்து சமப்படுத்தி மினுக்குவதற்கு முதலில் இடத்தைத் தயார் படுத்துவார்கள். பின்னர் 4 அல்லது 5 உலர்ந்த தேங்காய் சிரட்டைகளை எரித்தால் கிட்டும் வட்ட வட்டமாய் சுருங்கிப் போன சிரட்டைத் தணல்கள் இந்த மினுக்குப் பிட்டிக்கு மிகத் தோதானவை. அவை நீண்ட நேரம் சூட்டை வைத்திருக்கத் தக்கனவுமாகும். அத் தணல்களை மினுக்குப் பெட்டிக்குள் போட்டு கொழுவியினால் பூட்டிய பின் மினுக்கலுக்குத் தயார் படுத்தப்பட்ட இடத்திற்கு எடுத்து வருவார்கள். கஞ்சி போட்டு உலர்த்தப்பட்ட உடுப்பெனில் அருகில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் வைத்துக் கொள்ளுவார்கள்.

இனி என்ன? மினுக்கல் தான். முதலில் தண்ணீரை இந்த மினுக்கல் பெட்டியில் தெளித்து சற்றே சூடு பார்த்த பின்னர் இரண்டாவது தடவையாக கீழே விரிக்கப்பட்டிருக்கும் துணியில் அழுத்தி மீண்டும் அதைச் சரி பார்த்த பின் ஆடையினை விரித்து - அது கஞ்சி போட்ட உடுப்பு எனில் அதற்கு சற்றே மெல்லியதாகக் கிண்னத்தில் இருக்கும் தண்ணீரையும் தெளித்து அதன் இயல்புத் தன்மைக்கேற்ப நீவி  மினுக்குப் பெட்டியினை  சீரான வேகத்தில் துணியின் மேல் அழுத்த உஷ்... என்ற ஒரு சத்தத்தோடு நீர் ஆவியாக துணியின் சுருக்கத் தன்மைகள் நீங்கி துணியின் இயல்பான அழகு மிளிரத் தொடங்கும். அழகு மின்னத் தொடங்கும். அதனால் இதற்கு மினுக்குப் பெட்டி எனப் பெயராயிற்று.

பட்டுத் துணிகளுக்கு இங்கும் தனியான கவனிப்பு இருக்கும். அவை சூடு பொறுக்க மாட்டாதவை. மென்மையான தன்மை கொண்டவையுமாதலால் இந்தப் பட்டாடைகளை மினுக்கு முன்னால் சூட்டினை சரி பார்த்துக் கொள்ளுதல் அவசியம். பெரும் பாலும் இந்தத் துணிகளை மினுக்குவதற்கு இப் பட்டின் மேல் மெல்லிய துணி ஒன்று விரித்து மினுக்குப் பெட்டியின் சூட்டினை அளவாகவும் பாதுகாப்பாகவும் பட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சாதனத்தின் கைப்பிடி சூட்டினைப் பொறுக்கத் தக்கதாக மரத்தினாலும் ஏனைய பாகங்கள் உலோகத்தினாலும் செய்யப்பட்டவை. இரும்பினால் செய்யப் பட்டவையே அனேகம்.  மூடிக்கும் கீழ்புறத்திற்கும் இடையில் காற்றுப் போய் வரத்தக்கதாக துவாரங்கள் இருக்கும். துவாரங்கள் இல்லாதவையும் உண்டு. அடிப்புறம் அழுத்த வாகாக முன்புறம் சற்றே கூராகவும் பின்புறம் அகலமாகவும் அதே நேரம் கனம் கொண்டதாகவும் இருக்கும். மேல் பக்க மூடியும் கீழ் பக்க பகுதியும் கொழுவியினால் இணைக்கப்பட்டிருக்கும்.

நெருப்புத் தணல் சில ஆடைகளை மினுக்கிய பின் சாம்பல் படர்ந்து அதன் சூட்டினைக் குறைத்து விடும். அத்தகைய சந்தர்ப்பத்தின் போது இம் மூடிக்கும் அடிப்புறத்திற்கும் இடையில் காணப்படும் துவாரங்கள் மூடியைத் திறக்காமலே வாயினால் ஊதி சாம்பல் படர்ச்சியை போக்க உதவின. அவ்வாறு இல்லாத மினுக்கிகளை வெளியே கொண்டு சென்று பாதுகாப்பாகத் திறந்து ஊதி சாம்பலை அகற்றிய பின் மூடி திரும்ப எடுத்து வரவேண்டியதாக இருக்கும்.

உடல் உழைப்பையும் நேரத்தையும் மிகவும் எடுத்துக் கொண்ட இந்த மினுக்குப் பெட்டியும் மினுக்குப் பெட்டிச் செயற்பாடும் அந்த ஆடையை போட்டுக் கொண்டு போகும் போது வெளிப்படும் மிடுக்கில் தொலைந்து போகும். அந்த மினுக்கப்பட்ட ஆடையின் பின்னால் அதனைக் காணும் ஒருவர் அறிந்து கொள்ளும் இம்மனிதர் பற்றிய பிம்பம் வசீகரமானதாகும்.

இன்று தான் எத்தனை விதமான சலவை முறைகள்....எத்தனை விதமான மினுக்கும் வகைகள்.... மினுக்குப் பெட்டிகள்.....

மின்சாரம் சகலருக்குமாக அன்றாட பாவனைக்கு வரக் கிட்டியதும்; மின்சார சாதனங்கள் மிக மலிவு விலையில் கிட்டியதும்; துணிகளின் தன்மைக்கேற்ப ஆழியினைத் திருப்பி விட்டு நீர் வேண்டுமெனில் அதற்கேற்ப நீர் தெளிக்கும் முடுக்கியை அழுத்தி மிக இலகுவாக ஒரே நேரத்திலும் குறைந்த நேரத்திலும் சீராக அதனைச் செய்கின்ற மாதிரியாக இப்போது பலவிதமான மினுக்கிகள் பாவனையில் உள்ளன.

என்றாலும் வெள்ளைச் சீருடைகளைக் கைகளால் தோய்த்து நீலத்தில் நனைத்து வெய்யிலில் உலர்த்தி இந்த அழுத்தியினால் அழுத்தி பாடசாலைக்குப் போட்டுக்கொண்டு போன காலங்கள் இந்த மினுக்குப் பெட்டியோடு  காலாவதி ஆகிப்போனது கொஞ்சம் கவலை தான்.

மீண்டு வர முடியாத பொருட்கள் மீண்டு வரமுடியாத காலங்களையும் காவிக் கொண்டு போய் விட்டன.

Wednesday, May 4, 2016