Friday, June 3, 2016

நினைவுகளின் / நிகழ்வுகளின் ஈரம்

சில மாதங்களுக்கு முன்னால் எழுத்தாளர் முருக பூபதி அவர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

ஒரு தடவை -  2009ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கு கலை இலக்கிய சங்கத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களோடும் இலங்கையில் இருந்து அதே சங்கத்தின் அழைப்பின் பேரில் வந்திருந்த மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்களோடும் அவர்களின் சிட்னி வருகையின் போது எடுத்த புகைப்படங்கள் உங்களிடம் உள்ளனவா? இருந்தால் தயவு செய்து எனக்கு அனுப்பி உதவுங்கள். நான் இக் கலைச் சங்கத்தின் வளர்ச்சியை புகைப்படங்களாக பதிவு செய்து வருகிறேன் என்பது அம் மின்னஞ்சலின் உள்ளார்ந்த சாரமாக இருந்தது.

டிஜிட்டல் உலகம் தகவல் குப்பைகளால் நிரம்பிக் கிடக்கிறது. இலவசமாகவும் வேண்டாதனவுமாக எக்கச்சக்கமான குப்பைகள் கணனிகளுக்குள்ளும் குவிந்து கிடப்பதாலும் டிஜிட்டல் சாதனங்களை அதன் புதிய போக்குக்கேற்ப அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டி இருப்பதாலும் ஏதோ ஒரு வித மாய ஓட்டத்தில் புதியன நோக்கி ஓட நிர்ப்பந்திக்கிறது டிஜிட்டல் உலகம்.

இந்த சாதனங்கள் ஒதுக்கப்படும் போது அல்லது ஏதோ ஒரு வைரஸ் தாக்கம் அதற்கு ஏற்படும் போது அவற்றோடு அழிந்து போகின்றனவாக சில சேர்த்து வைத்த பொருட்களும் காணாமலும் காலாவதியாகியும் போய் விடுகின்றன.

அவ்வாறு இந்தப் புகைப்படங்களும் போய் விட்டன என அவருக்கு தகவல் அனுப்பி இருந்தேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. நவீன சாதனங்களின் ஆயுள் காலமும் நவீன வாழ்க்கை முறைகளும் அவருக்கும் புரிந்திருக்கும் தானே!

சில வாரங்களின் முன் ஒரு யூ.எஸ்.பி யைக் வீட்டில் சேர்த்து வைத்திருக்கிற இன்னொரு வகையான தகவல் குப்பைக்குள் எதையோ தேடப் போன போது கண்டு பிடித்தேன். சரி இதற்குள் என்னதான் இருக்கிறது பார்ப்போம் என எடுத்து வைத்து விட்டு வேறு சில வேலைகளில் தொலைந்து, பின்னொரு நாளில் மீண்டு வந்து போட்டுப் பார்த்தால் அவை புகைப்படங்கள்!

அவற்றுக்குள் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் கேட்ட படங்களும் சில! சந்தோஷத்திற்குக் கேட்பானேன்?

இந்த மனிதர் சிரத்தையோடு ஒரு விடயத்தைச் சேர்த்து வைக்கின்ற போது நம் பங்களிப்பாக இவை இருக்கட்டும் என அவர் கேட்ட புகைப்படங்களை அவருக்கு அனுப்பி வைத்து விட்டேன். உடனே அவரிடம் இருந்து பதில் வந்தது.

’உமது பக்கத்திலும் போட்டு விடுமன், பாத்தால் சந்தோஷமாக இருக்கும்’ -
‘ஓம், ஓம் போடுறன் போடுறன். - இது என் பதில்.

ஓம் என்று சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

மேலும் சில புகைப்படங்களைப் பார்த்த போது இன்று அந்த எழுத்தாளர்கள் உயிரோடு இல்லை என்பதும்; அதனை பின்னணியாகக் கொண்ட நிகழ்வுகளும் மனதில் எழ இந்த யூ.எஸ்.பி யும் காணாமல் போய் விட முன்னால் எங்கேனும் எப்போதும் பார்க்கக் கூடிய இடத்தில் சேமித்து விட வேண்டும் என்ற எண்ணம் மிக இங்கு வந்துள்ளேன்.

உங்களோடு இவற்றைப் பகிர்ந்து கொள்வதாகவும் அது இருக்கும் தானே?



மேலுள்ள இரு புகைப்படங்களும் 2009ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த எழுத்தாளர் விழாவின் போது எடுத்தது. அதில் எழுத்தாளர்கள் ஜெயமோகன் தெளிவத்தை ஜோசெப் டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் ஜீவ குமாரன் மற்ரும் கலாநிதிகளான் நடேசன், ஆசி கந்தராஜா, பிரவீனன் ஆகியோடோடு அண்மையில் காலமான எழுத்தாளர் அருண். விஜயராணி அவர்களும் (அமர்ந்திருப்பவர்களில் வலம் இருந்து இரண்டாவதாக இருப்பவர்) இருக்கிறார்கள். அவர்களோடு கூடவே நானும்!






மேலே கானப்படும் 5 புகைப்படங்களும் அவர்கள் சிட்னிக்கு வந்திருந்த போது கடல்சூழ்ந்த நகர்புறத்தைப் பார்க்கப் போன பொழுதுகள்.


மேலே இருப்பவர் காவலூர்.ராஜதுரை அவர்கள். இன்று அவர் இல்லை. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த போது நான் அவர் வீட்டுக்கு (என் தேவை நிமித்தமாகத்தான் போயிருக்கிறேனே ஒழிய அவரைப் பார்க்கவென்று அல்ல என்பது இப்போது நினைத்துப் பார்க்கும் போது கஸ்ரமாக இருக்கிறது) போகும் போதெல்லாம் அவர் முகத்தில் மந்தகாசமான ஒரு புன்னகை மலரக் காண்பேன். அது எப்போதும் ஒரு அகமலர்வான புன்னகையாகவே இருக்கும். பேச்சும் ஒரு பக்கச் செயலும் இல்லாது போய் விட்ட போதும் எடுத்துத் தரும் புத்தகங்கள்; அவற்றினைப் பற்றி சொல்ல முயற்சிக்கும் அவர் எத்தனங்கள் மனதை உருக்க வல்லன.

விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் இருக்கிறது.

”தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானகத்து இடை இருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே!”

பொருள்;

மண்டூகம் - தவளை. தாமரைத் தடாகத்துக்குள் தாமரையோடு உடன் தவளை வசித்திருந்தாலும் தாமரையின் சிறப்பை அது அறிவதில்லை.ஆனால் வண்டானது காடுகளுக்குள் இருந்த போதும் தாமரையின் சிறப்பை அறிந்து வந்து மது உண்ணும்.அது போல பல காலங்கள் பழகி வந்தாலும் அறியாமையில் உள்ளவர்கள் அதனை கண்டு கொள்ள மாட்டார்கள்.ஆனால் அறிவுடைய கற்றவர்களோ எனில் (தூர இருந்த போதும்) சிறப்பினைக் கண்டு நாடி வந்து உறவாடி மகிழ்வர்.

இன்று இப்பாடல் எனக்கு மிகப் பொருந்திப் போகக் காண்கிறேன். வருத்தமாக இருக்கிறது. இப்படி எதனை விடயங்களை வாழ்க்கையில் நாம் என்றென்றைக்குமாகத் தவற விட்டிருக்கிறோம். 



மேலே இருக்கிற புகைப்படத்தில் காணப்படுபவர்  நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்.அவரோடு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புச் சேவை நிலயத்திற்குச் சென்ற போது எடுத்த புகைப்படம் இது.


மேலே இருக்கிற இந்தப் புகைப்படம் இலங்கையின் சாகித்திய விருது பெற்ற நாவலின் சொந்தக் காரி தாமரைச் செல்வி நம் உயர்திணை ஏற்பாடு செய்திருந்த இலக்கிய சந்திப்பொன்றுக்கு விஜயம் செய்திருந்த போது எடுத்தது.

 கடந்த மாதத்தில் ஓர் நாள் மெல்போர்னில் இருந்து எழுத்தாளர் முருக பூபதி அவர்களிடம் இருந்து மேலும் ஒரு தொலைபேசி அழைப்பு. நான் சிட்னி வருகிறேன். கூட்டம் ஒன்று ஒழுங்கு படுத்த வேண்டும். ஓர் இடம் ஒன்று ஒழுங்கு படுத்தித் தர முடியுமா என்ற கேள்வியை அது கொண்டிருந்தது. நானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் அது ஒரு ஞாயிறு மாலையாக இருக்க வேண்டும் அத்தோடு அது ஒரு தேநீர் சிற்றுண்டிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அந்த உரையாடல் கொண்டிருந்தது.

எனக்கோ ஞாயிறு வேலை நாள். நம் இலக்கிய சந்திப்புகளையே செய்ய முடியாமல் பிற்போடப்பட்டுக் கொண்டு போவதற்கும் அது ஒரு பிரதான காரணம் என்பதை எப்படிச் சொல்வேன்? இடம் தேடும் இடர் பாட்டை எப்படிப் புரிய வைப்பேன்?  அதிலும் ஆர்வலர்கள் தொடரூந்து நிலையத்திற்கு அருகிலா? கார் பார்க் நிறுத்த வசதிகள் உண்டா என்று கோரும் நிபந்தனைகளையும் திருப்தி செய்தாக வேண்டுமே!

என்றாலும் அயல் மாநிலம் ஒன்றில் இருந்து வரும் ஒரு இலக்கிய உறவினனுக்கு இது கூட செய்ய இயலாவிடின் எப்படி? 

ஒரு இந்தியத்தமிழர் நடாத்தும் உணவு விடுதியில் ஒரு மாலை நேர சந்திப்புக்குச் சிற்றுண்டி தேநீர் வசதியோடு இடம் ஒதுக்கித் தரமுடியுமா என்று கேட்ட போது அவர் தாம் கடைமூடும் நேரமான 1.30 இலிருந்து 3.30 வரையான நேரத்தை மனமுவந்து தரத் தயாராக இருந்தார். அது எனக்கு வேலை நேரம். பறவாயில்லை என்று நேரத்தைப் பதிவு செய்து முற்பணம் கொடுத்து அதை அவருக்குத் தெரியப்படுத்தி விட்டு நான் பங்கு பற்ற முடியாத நிலைமையை எடுத்துக் கூறி உதவிக்காக ஒருவரை ஒழுங்கு படுத்திய செய்தியையும் தெரிவித்திருந்தேன்.

அவருடய கூட்டம் சரியாக 3.30க்கு முடிந்திருந்தது. நான் வேலை முடித்து அவசர அவசரமாக ஓடி 3.20க்கு வந்திருந்தேன். அந்தப் படம் கீழே வருகிறது.


இனி வரப் போவது ஒரு கலைப்பொழுது!

இயற்கையும் இலக்கியமும் இலக்கிய ஆர்வலர்களும் சந்தித்த ஒரு சங்கமம். அது மிகத் தற்செயலாகத் திட்டமிடாமல் நிகழ்ந்த ஒரு சந்திப்பென்றே சொல்லலாம். முருகபூபதி அவர்களுடய கூட்டம் நடந்ததைத் தொடர்ந்த ஒரு செவ்வாய் மாலை. தொலைபேசியில் அழைத்து எப்போது புறப்படுகிறீர்கள் என்று கேட்டேன். மறுநாள் மாலை 6.00 மணி தொடரூந்துப் பயணம் என விடை கிடைத்தது.

வழக்கம் போல வேலையில் ஈடுபட்டபடி  ஐம்பூதங்களால் ஆன உடல். மனம் வழக்கம் போல ஒரு சஞ்சார வெளியில். ஒரு விதமான குடைச்சல் குணாம்சத்தை  அது அன்று கொண்டிருந்தது. அயல் மாநிலத்தில் இருந்து ஒரு எழுத்தாளன் -  அன்போடும் மகிழ்ச்சியோடும் சொந்தம் கொண்டாடும் ஓர் இயல்பினன் - இந்த மனிதரை நான் சரியாகக் கவனிக்கவில்லையோ என்றொரு மனக்குரங்கின் கேள்வி. 

ஏதவது செய் ஏதாவது செய் என்றொரு ஓயாத குடைச்சல் உள்ளே! வேலையிலோ லீவு எடுக்க முடியாத நிலை. வருட விடுமுறையில் இருந்து ஒன்றைக் காரணம் சொல்லிக் கேட்டுப் பார்த்தால் என்ன? திடீரென ஒரு விடை புலப்பட்டாற்போல ஒரு வெளிச்சம். சாத்தியப்பாடுகளை தேடி ஓடியதன் நிமித்தம் நாள் ஒன்று அடுத்த நாளே சத்தியப்பட்டது.

சாத்தியப்பட்ட நேரம் மாலை 6.30 இருக்கலாம். அடடா எதிர்பாராமல் கிட்டிய இந்த நாளை அழகாக்க கீதாவும் கார்த்திகா அக்காவும் இருந்தால் இன்னும்  நல்லாக இருக்குமே என்று எண்ணமோட  அழைப்பெடுத்த போது அதுவும் இலகுவாகச் சாத்தியமாயிற்று. மனம் ஒரு வித துள்ளல் மனநிலையில். எங்களுக்கு மிகப்பிடித்தமான அருகிலேயே இருக்கும் ஓர் உயிரியல் பூங்காவில் சந்திப்பதாகத் தீர்மானமாயிற்று. 

அப்போது திடீரென இன்னொரு சிந்தனை உதயமாயிற்று. இலங்கையில் இருந்து ஓர் இதழியல் ஆசிரியரும் அவர் தம் துணைவியாரும் வந்திருக்கிறார்களே! அவர்களையும் அழைத்தால் என்ன? அவர்களுக்கும் ஓரிடத்தைப் பார்த்தாற்போலிருக்கும். நமக்கும் ஒரு இலக்கிய மாலையாக அது இருக்குமே என்ற சிந்தனை ஓடிய அக்கணம் கார்த்திகா அக்காவிற்கு அழைப்பு போயிற்று. மறுநாள் 11.00 மணியளவில் உணவுத்தயார் படுத்தல்களோடு தாம் தயாராக இருப்பதாக உடனடியாகப் பதில் வந்தது. எதிர் பாராமலே சுமார் 30 நிமிடத்துக்குள் தயாரான சந்திப்பு அது.

மே.18. 2016. உண்மையில் அது ஒரு அழகிய இலக்கிய மாலை. அரசியல் எதுவும் இல்லாத, அமைதியானதோர் வெளியில், இயற்கையோடும் உணவோடும் பானங்களோடும் சுடாத சூரிய வெளிச்சத்தில் நேர்மையான இலக்கிய உரையாடல்கள் இணைந்து கொண்ட நாள் அது. 

அங்கு எடுத்த படங்களையே கீழே காண்கிறீர்கள். அது ஒரு அற்புதமான மறக்க முடியாத நாள் என்றே சொல்வேன்.  பூபதி அண்ணாவை இறக்கி விடும் போது, இவைகள் தான் நாம் வாழும் கணங்கள் என்றேன் நான். என் மகள் பிரியா தந்த விருந்தைப் போலிருந்தது இன்று என்றார் அவர்.









கீழே வரும் இந்தப் படம் எதிர்பாரா தருணம் ஒன்றைக் கீதா.மதிவாணன் பதிவாக்கிய கணம்.


கீழே வரும் இப்படம் நான் பதிவாக்கிய ஒரு இலக்கிய தருணம்.


இது ஒரு நினைவுப் பதிவு! பகிர்வும்!

2 comments:

  1. அழகான படங்கள். ஜெயமோகன் இங்கு வரும்போது நான் சிங்கப்பூரில் வாசித்தேன். ஜெயமொகனைத்தொடர்ந்து வாசித்து வந்ததால் அவருடைய புல்வேளிதேசப் பயணம் பற்றிய முழுவிவரங்களையும் அறிய முடிந்தது. முருகபூபதி அங்கிளை ஜெயமோகன் தளம்மூலமே எனக்குத்தெரியவந்தது.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஓ... ஜேகே!
    மிக்க மகிழ்ச்சி.
    அவர்களோடு பேசுவது அவர்களை வாசிப்பதை விட அழகானது ஜேகே. நீங்களும் அதை அனுபவம் செய்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    நாம் சிட்னி நகருக்குச் சென்ற அன்றய தினம் ஆடுகின்ற பல் ஒன்று படுத்துகிற பாடுகள் பற்றிய தெளிவத்தை ஜோசெப் அவர்கள் எழுதிய சிறுகதை ஒன்று பற்றிய கருத்தாடல் எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது.

    அவைகளை எல்லாம் நாம் புத்தகங்களூடாகப் பெற முடிவதில்லை. அதனால் தான் இப்படியானவர்கள் வருகின்ற போது இலக்கிய சந்திப்புகள் மிக அவசியமாக இருக்கின்றன தோழா.

    எனக்கு எழுத்தாளர் ராமகிருஸ்னனோடு இப்படி ஒரு சந்திப்புக்கான தேடல் நிறைய உண்டு. அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால் நீங்களும் எல்லோரும் வரவேண்டும்.

    மிக்க நன்றி ஜேகே. வரவுக்கும் பகிர்வுக்கும்.

    ReplyDelete