Tuesday, June 14, 2016

ஆழமான வேர்களும் அகலமான சிறகுகளும்; பொறியாகும் பொறிகள்...



பொறி என்பது மெய், வாய் கண், மூக்கு, செவி என ஐந்தாகும். பொறி என்பது சிறு துகள் என்ற ஒரு கருத்தும் உண்டு. நெருப்புப் பொறி என்பது நெருப்பின் ஒரு சிறு மூலக்கூறு.

இங்கு நான் கூற வருவது நம் ஐம் பொறியை தூண்டி விடும் ஒரு சிறு பொறி குறித்த கருத்தாகும்.

பொறிகளைத் தூண்டும் பொறிகள்....

கடந்த 8.5.16 அன்று அன்னையர் தினம். அன்று சிட்னியில் 5வது ஆண்டாகச் சித்திரைத் திருவிழா. இந்த ஆண்டு தான் எனக்குப் போகக் கிட்டியது.’தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்’ இந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. குறிப்பாக அனகன் பாபு அவர்கள் முன்நின்று இந் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி நிறைவு செய்திருந்தார். வெற்றி கரமாக என்று நான் சொல்லும் இந்தச் சொல்லின் பின்னால் ஒரு பெரு வேலைப் பொதி அடங்கி இருக்கிறது.

பிரமாண்டமாக ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்ச்சியில் அந்தந்த இடங்களுக்கு பொருத்தமான ஆட்களை நியமித்து வாசலில் நின்று கரம் கூப்பி அவ்வளவு பேரையும் பண்பாட்டு இயல்போடு வரவேற்று ஆளும் கட்சி எதிர்கட்சி என வேட்பாளர்களையும் அங்கத்தவர்களையும் ஒரே மேடையில் ஏற்றியது மாத்திரமல்லாமல் இந்தியாவில் இருந்து நாட்டுப் புறக் கலைஞர்களை வரவழைத்து உள்ளூர் கலைஞர்களோடும் மேடையேற்றி, விற்பனை அரங்கங்கள், தகவல் கூடாரங்கள், கண்காட்சிகள், உணவுக்கூடாரங்கள், பூமாலைகட்டுதல், கோலம் போடுதல், பாரம்பரிய விளையாட்டுகள், பாரம்பரிய உணவுவகைகள், தானியங்கள், மூலிகைகள், மசாலாப் பொருட்கள், பழ வர்க்கங்கள், காய்கறி வகைகள், இலைவகைகள், மிருகங்கள், பறவைகள் - அவற்றின் தமிழ் ஆங்கிலப் பெயர்கள், பாரம்பரிய பாவனைப் பொருட்கள், துணி வர்க்கங்கள்....என ஒரு சிறந்த கண்காட்சியையும் ஒழுங்கு செய்து நடத்தி முடித்திருந்தார்கள்.

ஒரு வித பெருமையையும் பெருமிதத்தையும் சந்தோஷத்தையும் அந்த ஒரு பெரும் பழம்பெரு பாரம்பரிய விருட்சத்தின் வேரடியின் கீழ் வளர்ந்த ஒரு சிறு புல் நான் என்ற எண்ணத்தையும் வரவளைத்த அந்த நிகழ்ச்சிக்கும் அதனை நடத்திய பெருமக்களுக்கும் என் நன்றி உரியதாகும்.

அந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது பழங்காலத்தில் பாவிக்கப்பட்டிருந்த ஒரு மினுக்குப் பெட்டி. அதைப் பார்த்த கணம் ஒரு பொறி. அது எழுப்பி விட்ட சிந்தனைகள் இந்தப் பதிவிற்கும் இதற்கு முன்னரான மினுக்குப் பெட்டி பதிவிற்கும் காரணமாயிற்று.

வீடு திரும்பி அந்தக் குறிப்பிட்ட பாடலில் திளைக்கவும் மினுக்குப் பெட்டியைத் தேடி கூகுளில் அலையவும் அது கொண்டு சென்று பழமொழி400 இலும் திரிகடுகத்திலும் கொண்டு சென்று விடவும் அந்தப் பார்வைப் பொறி ஒன்றே காரணம்.

எது நம்மை வாசிக்கத் தூண்டுகிறது என்ற கேள்விக்கு இந்தப் பொறி கிழப்பி விடும் தூண்டுதலும் அதனோடு இணைந்த ஓர் இயல்பான ஆர்வமும் காரணமாக இருக்குமோ?

ஏன் நாம் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியும் அதைத் தொடர்ந்து எழவே செய்கிறது. தேடலோடு சம்பந்தப்பட்ட வாசிப்பு நம் நிலைப்பாட்டைச் சரிசெய்கிறது என்று சொல்லலாமா? எம்முடய தடுமாற்றங்களைச் சீர் செய்கிறது என்று சொல்லலாமா? வாழ்க்கையை வழிப்படுத்துகிறது என்று சொல்லலாமா? அரசியல் எதுவும் இல்லாத ஒரு நண்பனாய் அது நம்மோடு  இருக்கிறது; ஒரு நிறைவைத் தருகிறது; ஒரு திருப்தியைத் தருகிறது என்று சொல்லலாமா?

ஓம் என்பதே என் தனிப்பட்ட பதிலாக இருக்கிறது.

அப்படி என்றால் சமூக வலைத்தளங்கள் அவற்றைச் செய்கின்றனவா என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை.

அது நிற்க,

அதற்கு முதல் வாரம் 1.5.16 அன்று படைப்பளர் விழா நடந்தது. அங்கு நடைபெற்ற காலைக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய கலாநிதி.சந்திரலேகா. வாமதேவா அவர்கள் எதற்காக நமக்கு ஆழமான நம்முடய வேர்கள் பற்றிய அறிவு அவசியம் என்பது பற்றியும் அகலமாகச் சிறகு விரிக்க வேண்டிய இன்றய யுகத் தேவை பற்றியும் குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் நவீன யுகப் பிள்ளைகளுக்கு அதன் தெளிவான தார்ப்பரியங்களை ஊட்டி வளர்க்க வேண்டியதன் அவசியம் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்திருந்தார். நல்லதொரு பாதையை காட்டுவதைப் போல அது அமைந்திருந்தது. அத் தெளிவான கருத்துக்கள் குழப்பங்கள் பல நிறைந்த மேலைத் தேயக் கலாசார பாதைகளில் தடுமாறி வரும் பருவ வயதினரை தம் பிள்ளைகளாகக் கொண்டிருக்கும் தமிழ் பெற்றோருக்கு மிகப் பயனுடயதாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

அக்கருத்தரங்கில் கேட்ட கருத்து மனதில் அசை போட்ட படி இருக்க இன்று இந் நிகழ்வுக்கு போனது நாம் எத்தகைய ஒரு பாரம்பரிய வேரில் இருந்து வந்திருக்கிறோம் என்பதைச் சொல்ல போதுமானதாக இருந்தது. அது  நம் வேர்களை பண்பாட்டின் பெருமைகளை அதன் ஆழ அகலங்களை உணர உதவியதோடு பெருமையும் பெருமிதமும் கொள்ள வைத்தது.

அங்கு ஆடலோடு  இடம் பெற்ற இரண்டு பாடல்கள் என்னைக் கொள்ளை கொண்டன. அதனை அமைப்பாளர்களிடம் இருந்து பெற்று இங்கு பதிவேற்றுகிறேன்.

எத்தனை அழகு பாருங்கள்?!
துன்பக்குடத்திலிட்டு என்னை....



பகுத்தறிவு வாதங்கள் மற்றும் மேலைத்தேய கலாசாரம் கொண்டு வந்து சேர்க்கும் குழப்பங்கள் எல்லாவற்றிலிருந்தும் எங்களை முற்றிலுமாக விடுவித்துக் கொண்டு ஒரு பெருமித எல்லைக்குள் நமக்கே நமக்காக விளங்கும் சுகானுபவத்தை தரும் வல்லமை இப்பாடல் இசை குரல் அபிநயம் எல்லாவற்றுக்கும் இருக்கிறதென்பதை என்னைப் போலவே நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறேன்.

பொறிகளைத் தூண்டி விடும் இத்தகைய பொறிகள் நம்மை வேறொரு எல்லைக்கு கொண்டு சென்று விடுகின்றன. அங்கிருப்பது சொர்க்கத்தின் கூறுகள்! அறமும் அகிம்சையும் அன்பும் சாந்தமும் நிறைந்த ஓர் சங்கமம்.

மரபின் மகத்தான மானுட நேசம்!! நமக்கான வரப் பிரசாதம்!!

அது ஓர் ஆத்மானுபவம்!

ஆடைக்குப் பின்னே தானே அணிகள் எல்லாம்?....

மனதின் - உள்ளத்தின் - ஆத்மாவின் - மனசாட்சியின் - சுகத்திற்குப் பின் தானே காசு, வீடு, பதவி, புகழ், பட்டாடோபம் எல்லாம்.....

இந்தப் பழமொழி கூட நமக்கே நமக்கான நம் மூதாதையர் சேர்த்து நமக்கு எழுதி வைத்து விட்டுப் போன சொத்து தான்.

சங்கமருவிய காலமான 3 - 6 ம் நூற்றாண்டிற்குள் எழுந்த பதினெண் கீழ்கணக்கு நூலான பழமொழி 400 என்ற அற நூலில் இருந்து வரும் வேர் அது.....

நான் உட்பட எத்தனை பேர் இதனை அறிந்திருக்கக் கூடும்? அவற்றில் பொதிந்து கிடக்கும் அனுபவ உண்மைகளை அவற்றை பின் வரும் தமிழனுக்காய் எழுத்தில் வைத்து விட்டுப் போன அவர் தம் சமூக சிந்தனையை அறிந்திருக்கக் கூடும்.

இதே காலத்திற்குரியதாக இருக்கிறது திரிகடுகம் என்றொரு நூல். சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்று மூலிகைகள் அடங்கிய மருத்துவ குணம் கொண்ட மூலிகையைத் திரிகடுகம் என்கிறார்கள். அது உடலுக்கு நலம் செய்கிறது.  அதனைப்போல மனதிற்கு நலம் பயக்கும் மூன்று கருத்துக்களைக் கூறி உயிருக்கு  நலம் பயக்கிறது  திரிகடுகம்.

அதிலே ஒரு பாடல், எது செல்வம் என்று இவ்வாறு கூறுகிறது,

“  பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும் - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு” - பாடல் 6 -

பொருள் என்னவெனில், ’பிறர் தன்னை உயர்த்திப் பேசும் போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும் போது பொறுத்துக் கொள்ளலும், பிறருக்குக் கைமாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வங்களாகும்.’

இன்றைக்கும் இச் செல்வம் எத்தனை தேவைக்குரியதாக இருக்கிறது?

வேரின் ஆழ அகலம் தெரியாமல் அகலச் சிறகு விரித்தலில் காட்டும் அவசரம் என்பது அத்திவாரம் பலம் இல்லாமல் வீடு கட்டுவதற்கு ஒப்பானது.

ஆபத்தானதும் கூட!

அறத்தையும் தர்மத்தையும் மண்ணின் சத்தென உறிஞ்சி அதற்குள்ளே மருத்துவம், தத்துவம், அறிவியல், கலைகள், மொழி,ஆத்மீகம் , யோகம்.... என அவற்றின் கூறுகளை உள்வாங்கி பெரு விருட்சமென தழைத்து நிற்கும் தமிழின் நிழலில்,

தமிழனாய் பிறந்ததற்காய்,
பெருமை கொள்வீர் மானிடர்காள்.....

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-கணியன் பூங்குன்றனார்.

‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
- பிசிராந்தையார்.

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்,
பயனில் மூப்பின், பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது ; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.
- நரிவெரூஉத் தலையார்.
(புறநானூற்றுப் பாடல்கள்)

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி-பூக் கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.
(நற்றிணை 10)

6 comments:

  1. [quote]தேடலோடு சம்பந்தப்பட்ட வாசிப்பு நம் நிலைப்பாட்டைச் சரிசெய்கிறது என்று சொல்லலாமா? [quote]

    என்று சொல்லலாம் .....நீண்ட இலக்கிய பகிர்வு போல இருக்கு...எனக்கும் இலக்கியத்திற்கும் வெகு தூரம்...என்றாலும் ஒரு மாதிரி வாசித்து அரைவாசியை புரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. :) எது புரியேல்ல புத்தன்?

    பாட்டுகளோ?

    ReplyDelete
  3. ஓம் பாட்டுக்கள்... புரியவில்லை...

    ReplyDelete
  4. எனக்கு மிகவும் பிடித்தமான இந்தப் பாடல்களை முதலாம் நூற்றாண்டுத் தமிழன் பாடி இருக்கிறான் புத்தன். பொருளை சுருக்கமாய் இடங்களை விட்டு விட்டுச் சொல்லுகிறேன்.
    எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;
    தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;
    துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.வாழ்தல்
    செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.
    வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.
    மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;
    வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,
    கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,
    அதன் தடத்திலே போகும் சிறு படகு போல, இந்த அரிய உயிரியக்கம் ஆனது
    நியதி வழி போகத் தான் செய்யும் என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
    அந்த காட்சியில் நாங்கள் தெளிந்த காரணத்தால் பெரியோரை வியத்தலும் இலமே!
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!என்கிறார் அவர்.

    2வது பாட்டு, இவர் சந்தோஷ மனிதர்.அயலூருக்குப் போகிறார்.அவர்கள் என்ன நல்ல மகிழ்ச்சியாய் இருக்கிறாயே தலையிலே கூட ஒரு நரை மயிரைக் காணோமே என்று கேட்கிறார்கள். அதற்குப் பதில் சொல்கிறார் இவர்; வீட்டில் மனைவி நல்லவள்; மக்கள் அறிவு நிரம்பியவர். ஏவலர்களோ எதுவும் சொல்லாமலே விசுவாசமாகக் குறிப்பறிந்து நடக்கிறார்கள். எனவே வீட்டில் சிக்கல் இல்லை. அகத்திலே அமைதி; புறத்தேயும் அரசன் நல்லவன்,அல்லன செய்யாதவன். ஊரார் சான்றோர்.ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்சான்றோர் பலர் என்னைச் சுற்றிலும்.அதனால் புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கை எனது.அதனால் நரை உண்டாகவில்லை என்பது பாட்டின் தொனிப் பொருள்.

    3வது பாட்டு,
    மீன் முள்ளைப்போல் வெள்ளை நிற நரை முடியையும் அலை அலையாய் சுருக்கங்கள் விழுந்த கன்னங்களையும் உடைய சான்றோர்களே!உங்களால் நல்லது செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை; கெடுதல் செய்யாமல் இருக்கும் குணத்தையாவது பாதுகாத்திடுங்கள். அது தான் யமன் உங்களைக் கொண்டு செல்லும் போது வருந்தாமல் இருக்கச் செய்யத் தக்கது. அந்தச் செயல்தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவது. அதுமட்டுமல்ல, உங்களை நல்வழிப்படுத்துவதும் அதுவாகவே இருக்கும் என்று அறிவுரை கூறுகிறார்.

    கடைசிப்பாடல் ஒரு தோழியின் அறம்சார்ந்த அன்பைச் சொல்கிறது.தோழியைத் திருமணம் செய்யப் போகிறான் தலைவன். அவனுக்கு பெண்ணின் தோழி சொல்வதைப் போல அமைந்து இருக்கிறது இப்பாடல். இவளுடய மார்புவனப்பும் கூந்தலும் இன்று இருப்பது போல எப்போதும் இருக்கப் போவதில்லை.அவள் வனப்பு குலைந்து விடும் நல் நெடுங்கூந்தல் நரை விழுந்து விடும்.அப்போது அவள் உன் தேவைக்குகந்தவளாக இருக்கப் போவதில்லை. ஆனால் அக்காலத்திகும் நீ இவளைக் கைவிடாது பாதுகாக்க வேண்டும் என்று தலைவனுக்கு கோரிக்கை விடுக்கிறாள்.

    இத்தகைய ஒரு அறம் சார்ந்த வாழ்வை இன்றய உலகில் காணும் சாத்தியம் நேருமா?

    ReplyDelete
  5. //ஏன் நாம் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியும் அதைத் தொடர்ந்து எழவே செய்கிறது. தேடலோடு சம்பந்தப்பட்ட வாசிப்பு நம் நிலைப்பாட்டைச் சரிசெய்கிறது என்று சொல்லலாமா? எம்முடய தடுமாற்றங்களைச் சீர் செய்கிறது என்று சொல்லலாமா? வாழ்க்கையை வழிப்படுத்துகிறது என்று சொல்லலாமா? அரசியல் எதுவும் இல்லாத ஒரு நண்பனாய் அது நம்மோடு இருக்கிறது; ஒரு நிறைவைத் தருகிறது; ஒரு திருப்தியைத் தருகிறது என்று சொல்லலாமா?//

    நன்றாக சொல்லி இருக்கீங்க தோழி. இலக்கியச் சுவை செறிந்த உங்க பதிவுகள் போன்று பலவும் நான் சமூக வலைத் தளத்தில் கண்டு வருகிறேன்.

    இவ்வுலகம் அழியும் மட்டும் தமிழ் நிலைத்திருக்கும் அருகு துளிர்ப்பாய்.

    ReplyDelete