இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தத்தம் சமூகத்துக்கு அரும்பணியாற்றியவர்கள் வரிசையில் பெளத்தத்திற்கு அநாரிக தர்மபாலாவும்,சைவத்துக்கு ஆறுமுகநாவலரும், இஸ்லாத்திற்கு சித்திலெப்பையும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். சித்திலெப்பைக்குப் பிறகு இலங்கையின் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அருளும் புலமையும் கீர்த்தியும் பெற்றவராக திகழ்பவர் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர். ஈழத்து கவிதை வளர்ச்சியில் இஸ்லாமியப் புலவர்களினதும், கவிஞர்களினதும் வரிசையில் மிகுந்த செல்வாக்குச் செலுத்தியவராக அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் இருக்கிறார்.
தமிழகத்தின் திருப்பத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் பெற்றோர் மலையகக் கோப்பிப் பயிர்செய்கைக்காக ஆங்கிலேயர் ஆட்சியில் கண்டிக்குப் புலம் பெயர்ந்தனர் என்று சொல்லப்படுகிறது.
அப்துல் காதிர் கண்டி மாவட்டத்தில் உள்ள முன்னர் பட்டியகாமம் என அழைக்கப்பட்டு தற்போது போப்பிட்டி என்று அழைக்கப்படும் சிற்றூரில் 30.6.1866 இல் பிறந்தார். தந்தையின் பெயர் அல்லாப் பிள்ளை ராவுத்தர். தாயாரின் பெயர் கவ்யா உம்மா. இளமையில் அரபுப் பள்ளியில் திருக்குர்ரானும் தமிழ் பள்ளிக்கூடத்தில் தமிழும் திரினிற்றிக் கல்லூரியில் ஆங்கிலமும் பயின்றார்.
இவர் தன் 11வது வயதில் கண்டிக்கருகில் உள்ள குன்றுமலைப்பூங்காவில் உலாவி வரும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டதாகவும்; அம் மயக்க நிலையில் பல அற்புத வியத்தகு காட்சிகளைத் தான் கண்டதாகவும் அது முதல் தன் நாவில் கவியூற்று பெருக்கெடுத்து ஓடுவதாகவும் இவரே தன் நண்பர்களிடம் கூறியதாக ஒரு செய்தி சொல்கிறது.
இவரது புலமையைக் கண்டு இவர் தந்தை இவரை தமிழகம் அனுப்பி மதுரகவி நாவலர். வித்துவ சிரோன்மணி மஹ்மூது முத்துவாப்பா புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்க வழி செய்தார். அங்கிருந்து இவர் திரும்பும் போது மன வலிமையும் நினைவாற்றலும் அகத்தெளிவும் கொண்டவராகவும் ‘அட்டவதானி’ என்ற பெயர் பெற்றவராகவும் வீடு திரும்பினார்.
யாழ்ப்பாணத்தில் பாவலர்கள் கூடி இருந்த கவியரங்கச் சபையில் தன் 15 வது வயதில் கவி பாடப் போன போது அவர்கள் ஏளனச் சிரிப்போடு வாரும்; இரும்; படியும். அதாவது ’வாரும், இரும்படியும்’ என்றும் பொருள் கொள்ளத் தக்க சிலேடை வாக்கியத்தைச் சொல்லி ஏளனம் செய்த போது ‘நீர் தூர விருந்தே! துருத்தியை ஊதும். அதாவது தூர இருந்தே துருத்தியை ஊதும் என்றும் பொருள் கொள்ளத் தக்கதாக பதில் சொல்லி அருகமர்ந்தார் என்றும் இறுதியில் அவர்களே ’அருள்வாக்கி’ என்ற பட்டத்தை வழங்கி அவரைக் கெளரவித்தார்கள் என்றும் சொல்கிறது ஒரு வரலாற்றுச் செய்தி.
முப்பதுக்கு மேற்பட்ட அவரது ஆக்க இலக்கியப் படைப்புகள் அனைத்திலும் அடிப்படையாக இருப்பது இஸ்லாமிய ஞான மார்க்கமே. பாராயணம் செய்வதிலும் தெளிவுரைகளைச் சுவை பட சொல்வதிலும் வல்லவராக இருந்த அவருக்கு 11க்கு மேற்பட்ட பட்டங்கள் கிட்டின. இவருடய பாராயணங்களும் பேருரைகளும் பாடல்களும் அருளும் இவரை தமிழகம் மட்டுமன்றி இலங்கையில் பல பாகங்களுக்கும் பயணங்களை ஏற்படுத்திக் கொடுத்தன. அவற்றின் மூலம் கெளரவங்களும் பொற்கிளியும் விருதுகளும் அவரை வந்தடைந்தன.
அவரின் புலமையையும் திறமையையும் அறிந்த அபிமானிகள் அவரை அணுகி அட்டவதானம் செய்து காட்டக் கோரிய போது இது என்ன சிறுபிள்ளைத்தனமான வேலை! நான் உங்களுக்கு ‘தீப சித்தி’ செய்து காட்டுகிறேன் என்று சொல்லி கண்டியில் உள்ள பகிரங்க மேடை ஒன்றில் 7 திரிகள் கூடிய குத்து விளக்கொன்றில் வெண்பா பாடி விளக்கெரியச் செய்தார் என்றும்; அது போல மேலுமொரு வெண்பா பாடி 7 தீபத்தையும் அணையச் செய்தார் என்றும் சொல்லப்படுகின்றது. உண்மையிலேயே அவர் அருள்வாக்கியாகவே திகழ்ந்தார் என்றும்; பல நோய்களை குணமாக்கும் ஆற்றலையும் அருளையும் அவர் பெற்றிருந்தார் என்றும் ’பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள்’ என்ற நூல் குறிப்பிடுகிறது.
அவருடய படைப்புகளில் மிகவும் விதந்து பேசப்படுவது சந்தத் திருப்புகழ் ஆகும். அதனை ஒரு பிரார்த்தனைப் பேழை எனவும் அழைக்கலாம். அதில் இடம் பெறும் 100 கண்ணிகளில் ஒவ்வொன்றின் இறுதியிலும் பிரார்த்தனைச் சீர்கள் இடம்பெறுகின்றன. அதே நேரம் அவை அவருடய மார்க்கப் பற்றையும் இலக்கண மரபறிந்த திறமையையும் தமிழின் ஆழத்தையும் பறைசாற்றுவனவாகவும் அமைந்துள்ளன.
அதே நேரம் சித்தி லெப்பை அவர்களால் எழுதப்பட்ட ‘அஸ்றாருல் ஆலம்’ என்ற தத்துவ நூல் பெரும் கண்டனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளான போது 1911 இல் ‘தீட்சை பெறுபவன் தெரிய வேண்டியவை’ என்ற ஞான நூலினை வெளியிட்டு சித்திலெப்பையின் தத்துவ நூல் சரியே என நிறுவி சமூகத்தின் மத்தியில் அமைதியை ஏற்படுத்தி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் இலக்கிய உலகில் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்கள் செய்த இலக்கியச் சித்து இது வரை வேறு யாராலும் செய்து காட்டப் படவில்லை. இஸ்லாமிய இலக்கிய உலகில் இருந்து ஏனைய சமூகத்தவரின் முன்பு நெஞ்சு நிமிர்த்தி நின்ற அருள் பெற்ற ஞானி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்.
இது அவரது சந்தத் திருப்புகழ் விருத்தம்
” திருவளர் ஞானம் மேவும்; செழும்பர கதியிற் சேர்க்கும்
குருபரன் அருளை ஊட்டும்; கோதிலா நிதி உண்டாக்கும்
கருவலர் முஹம்மதென்னக் கோன் கருணை உண்டாம் எந் நாளும்
தெருளமைந்து உயர்ந்த சந்தத் திருப்புகழ் படிப்போர்க்கன்றே”
SBS இற்காக எழுத்துருவாக்கம்: யசோதா.பத்மநாதன். 19.11.16
இது அவருடய பிரார்த்தனைப் பாடல் ஒன்று.
உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் செய்கின்ற பிழைகளைச் சொல்லி அதனோடு குருவின் வழியில் இருந்து புரளாமல் தான் பேசுகின்ற மொழியாகிய தமிழ் மீது ஏதும் பிழைகள் ஏற்பட்டிருப்பின் அவைகளையும் பொருத்தருள வேண்டும் என்று கூறி அருள் வேண்டி இப்படி இறைஞ்சுகின்றது.
” இரு கணுறும் பிழை; இரு கைகளின் பிழை
இருதயவும் பிழை; இருங் காலால்
இனிது நடந்து செய் பிழைகள்
அருந் தவ மிடறு பெரும்பிழை உடன் வாயால்
வரு பொய் மறம் பகர் பிழை; பிற மங்கையர்
மயலுருகும் பிழை; அன்னை தாதை
மனமுழையும் படி வசை பகரும் பிழை
மதி பகரும் பெருமையரான
குருவும் மதின் சற கதவினை விடும் பிழை
குழகமுறுந்துணை; அவர் போல
கொடிது பகர்ந்திடு பிழைகள்; மறந்து செய்
குடிலணி வன் பகர் – தமிழ் மீது
சுரகி வரும் பிழை அற இனி இன்பக
துணை அருள் ஒன்றிட அருள்வீரே!”
(நன்றி: ‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு , கொழும்பு 22,23,24, ஒக். 2002, சிறப்பு மலர்.'இறைவாக்குப் பெற்ற அருள் வாக்கி’; பாவலர் சாந்தி. முகைதீனின் கட்டுரையைத் தழுவியது.), மற்றும் இணையத்தளங்கள்.
விசேட நன்றி: noolaham.org
இந்தக் கட்டுரையில் சுருக்க வடிவம் SBS வானொலியில் 5.3.2017 அன்று ஒலிபரப்பானது. அதன் இணைப்பு கீழே;
http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?language=ta