Wednesday, March 1, 2017

சிரித்திரன் சுந்தர் – 3.3.1924 - 3.3.1996

       

”சமாதான காலத்திற்கும் யுத்தகாலத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
சமாதான காலத்தில் பிரம்மன் செய்த விவசாயத்தை யுத்தகாலத்தில் யமன் அறுவடை செய்கிறான்.”

 இது சிரித்திரன் மகுடி பதில்கள் பகுதியில் வந்த கேள்வி பதில்.

ஆம். 3.3.1924 இல் பிறந்து அதே மாதம் அதே திகதியில் 1996ம் ஆண்டு தன் 72வது வயதில் மறைந்த சிவஞான சுந்தரம் என்ற இயற்பெயரைக் கொண்ட சிரித்திரன் சுந்தரும் சமாதான காலத்தின் யாழ்ப்பாணத்து விளைச்சலாய் பிறந்து யுத்தகால இடப்பெயர்வில் யமனால் அறுவடை செய்யப்பட்ட குறிப்பிட்ட காலகட்டத்து வட தமிழ் கலாசாரத்தின் வரலாற்றுத் துண்டு.’

இலங்கையின் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் நகைச்சுவை என்ற தனித்துவ ஆயுதத்தின் மூலம் தான் வாழ்ந்த சமூகத்தைச் நாசுக்காய் செழுமைப்படுத்தி வரலாற்றிற்கு ’சிரிச்ச தமிழை’ தந்து போன இந்த இலக்கிய ஆழுமை  பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்ட காரணத்தால் , 1995ம் ஆண்டு வலிகாம இடப்பெயர்வோடு விடைபெற்றுக் கொண்டது.

”செய்தொழில் தெய்வம்; சிரிப்பே சீவியம்” என்ற கொள்கையோடு சுமார் 28 ஆண்டுகள் வெளிவந்த சிரித்திரன் என்ற நகைச்சுவைப் பத்திரிகையின் ஆசிரியர் அவர். அன்றய சமூகத்துக்கு  தேவைப்பட்ட சமூக ஒழுங்கமைவை நகைச்சுவையில் தோய்த்து சுவைபடச் சொல்ல வல்ல பத்திரிகையாக அதனை அவர் நடத்திச் சென்றார். னையாண்டி, நக்கல், கிண்டல், பகிடி, கேலி, நகைச்சுவை போன்ற ஊடக வழியே அவர் கொண்டு சென்ற கருத்துக்கள் அன்றய தமிழ் சமூக நிலையை வித்தியாசமான கோணத்தில் உரியவரை நோகாமல் தாக்கும் தனித்துவ வல்லமையைக் கொண்டிருந்தது.

சிரிப்பென்ற ஆயுதத்தைக் கையிலெடுத்த பின் அவர் செய்த கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்களூடாக அவர் வெளியிட்ட கருத்துருவாக்கங்கள் அன்றய யாழ்ப்பாண சமூகத்தின் வாழ்வியலை நாசுக்காக சொன்ன வரலாற்று வடிவங்களாகும். அந்த மொழியில்லா கலைக்கோலங்கள் தான் அவர் சமூக விழுமிய நகர்வுக்காக தேர்ந்தெடுத்த போர் கருவிகள்.

கேலிச்சித்திரம், மகுடி பதில்கள், அகராதி, மிஸ்டர் & மிஸ்ஸிஸ் டாமோடிரன், மைனர் மச்சான், சவாரித் தம்பர், சின்னக்குட்டி, மெயில் வாகனத்தார் போன்ற குணச்சித்திரங்கள் ஒவ்வொரு சமூகப் பிரழ்வு குறித்தும் பிரக்ஞை கொண்ட அவர் ஞானக் கண்கள் பிறப்பித்த சமூகப் பாத்திரங்கள். அவர் பிறந்து வளர்ந்த சொந்தக் கிராமமான கரவெட்டியில்  சாதாரணமாகச் சந்திக்கும் உண்மைப்பாத்திரங்களே அவைகள் என அவர் ஒரு தடவை குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் அப் பாத்திரங்களுக்குக் கொடுத்த உருவங்களும் கருத்துருவாக்கங்களும் அவற்றூடே கலந்திருக்கும் ஹைக்கூ போன்ற நறுக்குத் தன்மை, வித்துவத்தனம், கருத்தாழம், கிண்டல்,முகத்தில் அறையும் கருத்து வேகம், சொல்வன்மை என்பன இன்றளவும் பேசப்படுவன.

தீப்பெட்டி என்ற சொல்லுக்கு அவர் ‘அகராதி’ தரும் விளக்கம்; நெருப்பு நித்திரை செய்யும் அறை என்பதாகும்.

அவரது மிஸ்டர் & மிஸிஸ் டாமோடிரன் ஆங்கில மோகத்தை; நாகரிக மேதாவித்தனத்தை; பணக்காரப் பகட்டை; தமிழின் மறக்கடிப்பை;  தேவையற்ற பாந்தாவைக் கிண்டல் செய்யும் காட்டூன் சித்திரங்களாகும். அவர்கள் தமக்குள் ஒருவரை ஒருவர் ‘டாலிங்’ என்றே அழைத்துக் கொள்வர்.அதற்கு ஒரு மாதிரி இது.

மிஸ்ஸிஸ் டாமோடிரன்: நான் இம்முறை டமில்ல டீபாலிவாழ்ல்த்து கூறுகிறேன்.
மிஸ்டர் டாமோடிரன்: மிச்சங் நல்லது.
மிஸ்ஸீஸ் டாமோடிரன்: உங்கலுக்கு டீபாலிகல் வால்த்துக்களை தெரிவித்துக் கொல்லுகிறேன்.

ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் அழகில் குறைந்த 'மைனர் மச்சான்' என்ற பாத்திரம் அங்கத அழகியலை தன்னுள் அடக்கிச் சிறந்த நகைச்சுவையை ஊடாக சமூக யதார்த்தத்தைச் சித்திரித்தது. முதலில் மித்திரனிலும், பின்பு சிரித்திரனிலும் வெளிவந்த இந்தக் கார்ட்டூன் சித்திரம் 20ஆம் நூற்றாண்டு வாலிப உலகத்தை அதன் சிந்தனைப் புலங்களைப் படம் பிடித்துக் காட்டியது. சிறிமாவோ அம்மையார் காலத்தில் மக்கள் சீனிக்கு வரிசையில் நின்ற காலத்தில்  எறும்பு அணியொன்றுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த மைனர் மச்சான் சொல்கிறான், "எறும்புகளுக்குத்தான் சீனி இருக்குமிடம் தெரியும்."

அங்கதச் சுவையைத்  தன் வாகனமாக எடுத்தாண்டு சமூகத்தைத் அவர் தனித்துவமாகப் படம் பிடித்துக் காட்டிய போதும் தன் காட்டூன்களை அவர் காட்டூண்கள் என அழைப்பதை விரும்பவில்லை. அவற்றைக்’கருத்தூண்கள்’ என்றே அழைக்க விரும்புவதாக ஒரு தடவை கூறினார்.

இந்தக் கருத்தூண்கள் மூலம் ஈழத்தமிழ் சமூக இலக்கிய வளர்ச்சியில் தனக்கென தனியிடம் பதித்துக் கொண்ட சுந்தர், தன் மானசீகக் குருவாக தமிழகத்தின் பிரபல கேலிச்சித்திர ஓவியர் மாலியையே குறிப்பிடுகிறார். ஒரு தடவை மாலி – கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் இலங்கை வந்த காலத்தில் சுந்தர் எனப் பின்நாளில் அறியப்பட்ட சிவஞானசுந்தரத்திற்கு வயது பத்து. பருத்தித்துறையில் சித்திவிநாயகர் பாடசாலையில் நடந்த கல்கி – மாலி வரவேற்புக்கூட்டத்தில்தான் அவர்களை முதன் முதலில் பார்த்ததாகவும்;  மாலி கையிலே ஒரு வெண்கட்டியை எடுத்துக்கொண்டு மேடையிலிருந்த கரும்பலகையில் அன்றைய அரசியல் தலைவர்களின் உருவங்களை கேலிச்சித்திரமாக வரைந்த காட்சி சிறுவன் சிவஞானசுந்தரத்தின் மனதில் ஆழப்பதிந்ததன் விளைவே இந்த விளையும் பயிருக்கு விழுந்த முதல் மழைத்துளி.

பின்னர் இலங்கையில் அஞ்சல் மாஅதிபராக அவரது தந்தை கடமையாற்றிய பொழுது இவரை இந்தியாவுக்கு கட்டிடக் கலை கற்பதற்கு அனுப்பி வைத்தார் என்றும் அவரோ தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார் என்றும்; அவ் ஆற்றலை தான் சார்ந்த சமூகத்துக்கு தன் கற்பனை வடிவங்களூடாக  தன் சமூகத்தைச் செழுமைப்படுத்த பயன் படுத்திக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

பம்பாயில் சேர்.ஜெ.ஜெ.ஸ்கூல் ஒப் ஆட்ஸ் இல் பயின்ற போது   றாஜாராம் என்பவரிடம் உருவ ஓவிய வரைபிலும் சார்க்கோல் வரைபிலும் பயிற்சி பெற்று ”லோக்சத்த” என்ற மராட்டிய பத்திரிகையிலும் ஆங்கில பத்திரிகைகளான “பிளிட்ஸ்” “கொஞ்ச்” என்பவற்றிலும் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில்  இந்து முஸ்லீம் கலவரங்களின் போதும் அரசியல் காட்டூண்களை வரைந்ள்ளார். பின் இலங்கையில் சுதந்திரன் – தினகரன் – வீரகேசரி – மித்திரன் மற்றும் சமசமாஜக்கட்சியின் சமசமாஜிஸ்ட் என்ற ஆங்கில இதழ் முதலானவற்றிலும் தமது கேலிச்சித்திரங்களின் மூலம் தமிழ் – ஆங்கில வாசகர்கள் மத்தியில் கவனிப்புக்குள்ளானார்.

ஒரு தடவை, ” எந்த இனத்தவரும் புரி்ந்து கொள்ளக் கூடிய கலைவடிவம் இது. பெரும்பான்மை இன ஆட்சி சிறுபான்மையின தமிழ்ப்பத்திரிகைகளில் வரும் கார்ட்டுன்களைப் புரிந்துவிடுமே என்ற அச்சத்தில் கார்ட்டுன் பிரசுரிப்பதை தமிழ்ப்பத்திரிகைகள் விரும்பவில்லை. முன்தோன்றிய மூத்த குடி – முத்தமிழ் உள்ள குடி என்று தமிழர்களாகிய நாம் எமக்கே புகழாரம் சூட்டி எம்மை நாமே வாயார வாழ்த்திப் பாடுகின்றோம். ஆனால் – இந்த மூத்த குடி சாதித்தது என்ன? ஓவிய உலகில் தமிழ் இனம் அனந்த சயனத்தில் இருக்கிறது. மலையாள மக்கள் ஒரு ரவிவர்மாவையும் வங்காள மக்கள் ஒரு நந்தலால் போஸையும் சிங்கள மக்கள் ஒரு ஜோர்ஜ் கீற்றையும் கலை உலகிற்கு ஈய்ந்தவர்களென்றால் தமிழர்களாகிய நாம் யாரை ஈய்ந்தோம். ஒருவரும் இல்லையென்றே நா கூசக் கூறும் நிலையில் இருக்கின்றோம்”. என்றார் அவர்.

சிவஞானசுந்தரம் நடத்திய சிரித்திரனின் முதலாவது இதழ் 1963 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் வெளியானது. பின்னர் 1971 முதல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. வடக்கில் 1995 இன் போர்க்கால மாபெரும் இடப்பெயர்வு வரையில் வெளிவந்த சிரித்திரனின் முழு ஆயுள் காலத்தை 28 ஆண்டுகள் எனக்கருதலாம் என்றும் மொத்தம் 318 இதழ்கள் வெளிவந்தன என்றும் கார்ட்டுன் ஓவிய உலகில் நான் – என்ற சிரித்திரன் சுந்தரின் சுயசரிதை நூலின் முன்னுரையில் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் குறிப்பிடுகிறார்.

கீழே சில சிரித்திரன் பக்கங்கள் ஒரு மாதிரிக்காக...

1965ஆம் ஆண்டுக்குரிய சித்திரன் இதழைக்கூடwww.noolaham.org என்ற நூலக நிறுவனம் சேகரித்து வைத்திருக்கிறது. அங்கிருந்து மாதிரிக்குச் சில பக்கங்கள்.( நன்றி நூலகம்)

மேலதிகமாக சிரித்திரன் இதழ்களை வாசிக்க கீழ் வரும் இந்த இணைப்புக்குச் செல்லலாம்.
http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_1965.11
போர் காலங்களில் தம் பாதுகாப்பு நிமித்தம் இராணுவ நிலைகளைத் தவிர்ப்பதற்காக வடபகுதி மக்கள் கிளாலி என்ற நீர் நிலையை கடந்து வன்னி நிலப்பரப்பை வந்தடைந்தார்கள். அது குறித்த கவிதை மேலே இருப்பது.


போர்க் காலங்களின் போது உலக நாடுகளுக்குச் சிதறி ஓடிய தமிழ் இளைஞர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் தமக்கான துணையினை ஈழத்திலிருந்து வருவிக்க ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக திருமண சடங்குகள் சம்பிருதாயங்கள், சீதனம் வழங்குதல் போன்ற சம்பிருதாயங்கள் ஈழத்தமிழர் மத்தியில் பெரு மாற்றத்தினைச் சந்தித்தன. 

வெளிநாட்டுத்தமிழ் மாப்பிள்ளைகள் அந் நாட்டு வாழ்வியல் தாக்கங்களுக்கு உட்பட்டதோடு பண ரீதியாக வசதிகள் வாய்ப்புகளையும் தேடிக் கொண்டதால் சீதனம் என்ற கருத்துரு பின் தள்ளப்பட்டு அவ் இடத்தினை பெண்ணின் அழகு மற்றும் கல்வி, குண இயல்பு போன்றன முன்னிறுத்தப் பட, இறுக்கமான சமூகக் கட்டமைப்பும் தளர்ந்து பெண் தாலிக் கொடியோடு விமானம் ஏற ஆரம்பித்தனர். அதனை வெளிப்படுத்திய சிரித்திரன் அட்டைப் படம் கீழே இருப்பது.1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படையினருடன் நிகழ்ந்த போரின் போது சிரித்திரன் அச்சகத்தின் சொத்துகள், அச்சகப் பொருட்கள் அனைத்தும் அழிந்து போயின. அத்துடன் அவரைப் பாரிசவாத நோய் பற்றிக் கொண்டது. வலது கரம் இயங்க மறுத்த நிலையில் இடது கரத்தால் எழுதி மீண்டும் சிரித்திரன் இதழை வெளியிட்டு வந்தார். 1995 மூன்றாம் ஈழப்போரின் போது இடம்பெற்ற வலிகாம இடப்பெயர்வின் போது மீண்டும் கடுமையான நோய்க்கு ஆளாகி வடமராட்சியிலேயே 1996 மார்ச் 3 ஆம் நாள் காலமானார்.

அவரது இதழியல் துறைச் சாதனைகளுக்கு அவரது மனைவியும் மிகுந்த பக்கத்துணையாக இருந்தார் என்றும்; அவரே சிரித்திரனின் முதல் வாசகியாகவும் ரசிகையாகவும் இருந்தார் என்றும்; பல இக்கட்டான காலங்களில் இவரின் மதியூகமான செயற்பாடுகள் பத்திரிகை தொடர்ந்து வர காரணமாக இருந்ததென்றும் கூறப்படுகிறது. இவரது கணவர் இறந்த மிகக் குறுகிய காலத்திலேயே அவரது மனைவியும் காலமானார் என்பதும் குறிப்பிட்த்தக்கது.

சிரித்திரன் பத்திரிகை நகைச்சுவை கேலிச்சித்திரம் முதலானவற்றினூடாக தன் சமூகத்தை சித்தரித்த அதே நேரம் பின்நாளில் பிரபலமடைந்த பல எழுத்தாளர்களுக்கான களத்தை அமைத்துக் கொடுத்ததிலும் தன் தனித்துவமான முத்திரையைப் பதித்திருந்தது. காசி ஆனந்தனால் எழுதப்பட்ட இலட்சிய தாகம் கொண்ட “மாத்திரைக் கதைகள்”, குடாரப்பூர் சிவா என்பவரால் தொடராக எழுதப்பட்ட ‘நடுநிசி’ என்ற மர்ம நாவல், மாஸ்டர். சிவலிங்கம் எழுதிய சிறுவர் கதைகள், மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி", செங்கை ஆழியானின் "ஆச்சி பயணம் போகிறாள்", "கொத்தியின் காதல்" போன்றவை இப்பத்திரிகையில் வெளி வந்து பின்னர் மிகப் பிரபலமாக விளங்கியவை பல் துறை களம் கொண்ட மொழிச் சித்திரங்களாகும்.

கூடவே தெளிவத்தை ஜோசெப்,அ. ந. கந்தசாமியின் கதைகள் ,அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், போன்றோரது கதைகளும் இங்கு பிரசுரமாகின. இலங்கையில் புதுக்கவிதையை அறிமுகப் படுத்தி ஜனரஞ்சகப் படுத்திய பெருமையும் சிரித்திரனுக்குண்டு.

1.2.92ம் ஆண்டு பத்திரிகைத் துண்டு ஒன்று விக்கிரமசிங்க என்ற பெயரிலோ/ புனைபெயரிலோ சுந்தரைப் பற்றி எழுதிய அறிமுகக் குறிப்பு ‘எதிர்ப்பரசியல் வாதிகள் சிரித்திரனையும் சுந்தரையும் எவ்வாறு பார்த்தார்கள் என்பதைச் சொல்கிறது.  அது, சுந்தர் இலங்கையின் சாகித்திய விருதை மறுத்ததையும் மாவீர்ர் விருதைப் பெற்றதையும் நையாண்டி செய்த அதே நேரம் அது, ‘சுந்தரால் படைக்கப்பட்ட அனைத்துப் பாத்திரங்களும் இலங்கை வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களை விமர்சனத்துடன் படம் பிடித்துள்ளன. இந்தப் படைப்புகள் அனைத்தும் சமூகவியல் ஆய்வுக்கான பெறுமானங்களைக் கொண்டுள்ளன. குறும்பினை நாகரிகமாகவும்; சிந்தனைக்குரியதாகவும் ஆக்கியவர் இவர். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மகுடி பதில்கள் சூசகமாக பல உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஒன்றாகும்.கேள்விப்பாம்புகளை ஆட்டிய இந்த மகுடி புதுப் புது சொற்களை உருவாகுவதிலும் வல்லாண்மையுடன் திகழ்ந்தது. சுவை மீட்டல், முரண்முறுவல், எண்ணத்தோகை, குறுமணி, செய்திச் சுண்டல், கதைத் தேன் ... என்பவை அவற்றுள் சில’ என கூறுகிறது.

இவ்வாறு மாற்றரசியல் விமர்சகராலும் பார்க்கப்பட்ட சிரித்திரன் சுந்தர் ஒரு தடவை மகுடி கேள்வியான
பாசத்துக்குரியவர் இறந்தால்... என்ற கேள்விக்கு,
 ‘காடாத்துவரை கண்ணீர் கொட்டும்
காடாத்தில் இருந்து 8 வரை கண்ணீர் சொட்டும்
8இலிருந்து அந்தியேட்டி வரை நினைவு தட்டும்
அம்மட்டும் தான் என்று பதில் தந்திருந்தார்.

அம்மட்டும் தானா சிரித்திரன் சுந்தர் என்று கேட்டால், இல்லை; அவர் ’குறிப்பிட்ட காலகட்டத்து நவீன ஈழத் தமிழ் இலக்கியத்தின் மீது நகைச்சுவை என்ற பேனாஆயுதத்தை கையிலேந்தியபடி ’சிரித்துக் கொண்டு நடந்த’  தனித்துவமான வரலாற்றுத் துண்டு’ என்பதே பொருந்தும்!

இத் தகவல்களின் சுருக்கமான வடிவம் மாசி மாதம் 5ம் திகதி SBS வானொலியில் ‘தமிழ் தடம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது. அதன் இணைப்பு கீழே;
http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D?language=ta


SBS இற்காக 11.11.16 அன்று எழுதியது. யசோதா.ப.

No comments:

Post a Comment