Sunday, September 2, 2018

வைஷ்ணவக் கப்பல்

அண்மையில் பக்தி இலக்கியத்தில் தமிழழகு குறித்த ஒரு தேடல் ஆரம்பமாகி சம்பந்தர் தந்த தேவாரத் தமிழில் முக்குளித்து மேலெழுந்த போது சில சுவாரிசமான விஷயங்கள் தட்டுப்பட்டன. 

கண்டு கொண்ட சில சுவாரிசங்களில் ஒன்று சம்பந்தர் எவ்வாறு திட்டமிட்டு பெளத்த சமணக் கொள்கைகளை எதிர்த்து வந்திருக்கிறார் என்பதும்; அதனை திட்டமிட்டு தன் பதிக வைப்பு முறைகளில் 10வது பதிக வைப்பை அதற்கெனவே ஒதுக்கி வைத்திருக்கிறார் என்பதும்; ஒன்று. அதனை  தமிழன்பர் திரு. தனபாலசிங்கம் ஐயா அவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அவர் வைஷ்ணவ பாசுரங்களில் இத்தகைய எதிர்ப்புணர்வு  குறித்த இயல்பு இருக்கவில்லை என்று கூறினார்.

ஞானசம்பந்தரின் முதலாவது திருமுறையே 1000 மேற்பட்ட (1256 என்று நம்புகிறேன்.) தேவாரங்களால் ஆனது. இந்த மனிதரின் இன்னும் இரு திருமுறைகள் உள்ளன; படிக்க. போதாதென்று சேக்கிழார் வேறு இவரைப்பற்றி 1000 மேற்பட்ட பாடல்களால் பேசி இருக்கிறார். சம்பந்தர் குறித்தே இன்னும் பார்க்க எத்தனையோ இருக்க வைஷ்ணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்குள் இப்போது போவதென்பது இயலாத காரியம்.

இருந்த போதும் வட்ஸப்பில் வந்த இப்பாடல் இசையும் நடனமுமாய் ‘வைஷ்ணவக் கப்பலின்’ வருகையை பாடும் இந்த அழகினை என்னவென்பது!!



அகிலமெல்லாம் மிக விளங்கும் ஆதி
அரவணைமேல் பள்ளி கொள்ளும்
இரகு குலத்தோன் குல தெய்வம்
எங்கள் ரங்கருடய சந்திதிக்கு

தருமங்களானதொரு பலகைகள் சேர்த்து
தத்துவமானதொரு பாய்மமரம் நட்டு
நான்கு வேதங்களும் நங்கூரமாக்கி
நலமுள்ள திருமந்ர கொடி தன்னை நாட்டி

அறுபத்து நான்கு கலை ஆணியாய் தைத்து
ஆகம புராணமெனும் அருங் கயிற்றில் கட்டி
அழகியதோர் துவயம் தனை பீரங்கியாக்கி
அணிகுருகை மாறன் அதற்கு அதிகாரி

நாலாயிரம் என்னும் நல்லதோர் பொருளை
ஞானமென்னும் கப்பலில் நன்றாக ஏற்றி
கப்பலில் வருகின்ற கணவான்கள் பெயரை
களிப்புடனே சொல்லுகிறேன் கவனமாய் கேளீர்

மகிழ்மாறன், மதுரகவி, மழிசையர், பாணன்
மன்னன் மங்கை, பொய்கை, பூதம், பேயாழ்வார்
பார்புகழ் சேரருடன், தொண்டரடி பொடியார்
பட்டர் பிரான் மகிழ் பாகவதருடனே

ஆண்டாளுடன் ரங்க மன்னாரும் ஏறி
அந்தணர் கூடி ஜயஜய என்று
கருணை என்னும் பெரிய கடலினைத் தாண்டி
களிப்புடன் திருவரங்கம் வந்ததையா கப்பல்

ஏலேலோ ஏலேலோ ஏலேலோ கோவிந்தா


- கல்யாணபுரம். ஸ்ரீ.ஆர்.ஆரவமுதன்.

No comments:

Post a Comment