Wednesday, July 24, 2019

peer pressure / சமூக அழுத்தங்கள்

கடந்த வார இறுதியில் அண்மைக்காலத்தில் இந் நாடுக்கு குடிபுகுந்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள் வேலை செய்வதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

ஒரு ஓடையில் அமைதியோடும் தெளிவோடும் ஓடும் ஒரு குளிர்ந்த நீரோடையை பார்ப்பது போல இருந்தது அவர்கள் தம்மோடு உறவாடுவதையும் வேலைகளைப் பகிர்ந்து செய்ததையும் மற்றவருக்கு கடினமாக இருக்கும் ஒன்றை ஒருவித தயக்கமும் இல்லாமல் தன் வேலையை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் கை கொடுத்ததையும் பார்த்த போது....

அதற்குள்ளும் இருந்தது குணாதிசயங்களின் வேறுபாடுகள். அவற்றை அவர்கள் புரிந்து கொண்ட விதமும் அதற்கேற்ப தம்மை அஜஸ்ட் பண்ணிக் கொண்ட பாங்கும் வேலையையும் உணவையும் பகிர்ந்துண்ட விதமும்.....

இலங்கையில் நம் இளமைக்காலத்தையும் நம் வாழ்க்கையையும் மீண்டும் ஒருமுறை நினைத்து ஏங்க வைத்தது அந்த அவர்களைப் பார்க்கக் கிடைத்த அனுபவம்!

முன்னர் ஒரு தடவை என் வேலைத்தலத்தில் fork lift இல் வேலை செய்யும் ஒரு வேலையாள் என்னிடம், அதெப்படி சொல்லி வைத்தாற் போல் எல்லா இலங்கையர்களும் யாரைப் பார்த்தாலும் - அவர்கள் அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் கூட -சினேகிதத்தோடு ஒரு புன்னகையைச் சிந்தி விட்டுப் போகிறீர்கள்? என்று கேட்டான்.

மனம் சுத்தமாகவும் அமைதியாகவும் இருக்கும் போது அது சாத்தியப்படுதல் கூடும் போல...

ஊரில் நாம் பிறந்து வளர்ந்து ஆளாகி வேலைக்கு பொகும் பொழுதுகளிலும் இங்குள்ள stress என்ற வார்த்தையை நாம் கேட்டதோ உணர்ந்ததோ இல்லை. அதன் அர்த்தங்கள் தார்ப்பரியங்கள் குறித்து நாம் அனுபவம் செய்ததும் இல்லை.

ஆனால் இங்கு வந்த பிறகு நாம் சந்திக்கும் மனிதர்களும் வேலைகளில் இருக்கும் அழுத்தங்களும் முன்னுக்கு செல்ல உந்தித்தள்ளும் போட்டிகளும் பல்வேறு சிந்தனை மாறுபாடு உள்ளவர்களோடு பரிபாஷிக்கும் போது ஏற்படும் மன உளைச்சல்களும் என இந்த வாழ்க்கை ஒரு வித வேறுபட்ட உலகை நமக்கு விரித்து வைத்திருக்கிறது.

நமது அடிப்படை விழுமியங்கள், நம்பிக்கைகள் என சில இங்கு சுக்கு நூறாக உடையக் காண்கையில் வாழ்க்கை போட்டி நிறைந்ததாகவும் ஒப்பீடுகள் கொண்டதாகவும் போலி முகங்கள் கொண்டதாகவும் மாறுகிறது.

இன்றய காலங்களில் வீதிகளில் போகும் மனிதர்களிடம் புன்னகைகளைக் காண முடிவதில்லை. அது பள்ளிக்குப் போகும் பிள்ளைகளிடமும் தொற்றிக் கொண்டுள்ளது. ஒருவித அழுத்தம் அவர்கள் எல்லோரையும் ஆட்கொண்டு விட்டது.

குழந்தைகள் குழந்தைகளாக இல்லை. விளையாட்டை அவர்கள் விளையாட்டாக விளையாடுவதில்லை. அதனை அவர்கள் ஒரு task ஆக வைத்துக் கொண்டுள்ளனர். அதனால் அதிலிருக்கிற சந்தோஷ அனுபவம் காணாமல் போய் விடுகிறது. வார இறுதி சமூகப் பாடசாலைகளுக்கு பிந்தி வருகிற பிள்ளைகளிடம் தாமதத்திற்குக் காரணம் கேட்டால் விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டுக்கு போய் குளித்து சாப்பிட்டுவிட்டு வர தாமதமாகி விட்டது என்று சொல்லும் போது ஐயோ என்றிருக்கிறது. வார இறுதியில் கூட அவர்கள் மணி நேரங்களை இவ்வாறாகவே பங்கிட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது. வகுப்பறையில் வீட்டுப்பாடம் கொடுத்தால் ஐயோ தராதைங்கோ எங்களுக்கு வேற பாடங்களின்ர வீட்டுப்பாடம் செய்யவே நேரமில்லை என்று புலம்புகிறார்கள். அதில் ஓர் உண்மையும் இருப்பதால் அவர்களை எண்ணி கலங்கவே நேர்கிறது.

எதனை நோக்கி பிள்ளைகளை நாம் வழி நடத்துகிறோம்?

என்னிடம் பாடசாலை விடுமுறைக்காலங்களில் 3 சிறு பிள்ளைகள் விளையாட வருவார்கள். எல்லோரும் 8 வயதிற்கும் கீழ் பட்டவர்கள். கடந்த வருடத்தில் இருந்து அவர்களுக்கு விளையாட வர நேரமில்லை. அந்த வகுப்பு இந்த வகுப்பு என பெற்றோரும் பிள்ளைகளுமாக விடுமுறைக்காலங்களிலும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

குழந்தைகளின் குழந்தைமை இவ்வாறாக பறி போகிறது....

கல்வியும்; அதனால் வரும் பதவியும்; பதவி தரும் அங்கீகாரமும்; பணமுமே வாழ்க்கை என்ற கற்பிதங்களோடு ஓடும் சமூகம் எதைச் சென்றடையப் போகிறது?

அண்மையில் ஒரு cardiologist இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு விட்டாள். என்ன காரணம்? தொழில் ரீதியான அழுத்தம், சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது பெற்றோர் திணித்த அழுத்தம், படித்துக் கொண்டே இருந்ததால்  வந்த திருமண வாய்ப்புகள் பறி போனமை, பெண் திருமணத்திற்குத் தயாரான போது மாப்பிள்ளைமார் இவரின் தகுதிக்கு ஏற்ப வராதிருந்தது, வயது 20களின் இறுதியை நெருங்கியமை, பெற்றோரின் இழப்பு மற்றும் சுகவீனம், இங்கு வளரும் பிள்ளைகளுக்கு கஸ்ரம் தெரியாது வளர்ந்ததால் பாதியில் வருகிற இடைஞ்சல்களை மேவிச் செல்ல இயலாதிருக்கிற அனுபவமின்மை.... என இவைகள் அவ் இளம் பெண்ணை தற்கொலைவரை துரத்திக் கொண்டு சென்று விட்டது. அவள் இலகுவாக இறந்து போனாள்.

எங்கே நாங்கள் பிழை விடுகிறோம்? எங்கே தவறிழைக்கிறோம்?

எது நமக்குத் தேவை என்பது தெளிவாக தெரியாதவிடத்து இத்தகைய தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன போலும்.

அதனால் அடுத்தவரைப் பார்த்து அது மாதிரி நாமும் செய்ய முற்படுகிறோம். ஒப்பீடுகள் போட்டிகள் இதிலிருந்து ஆரம்பமாகின்றன. இது சரியா அது சரியா எனத் தெரியாதவிடத்து எல்லாவற்றுக்கும் பிள்ளைகளை அனுப்புகிறோம். அதனால் அவர்கள் இலக்கற்று போகிறார்கள். நேர முகாமைத்துவம் பிழைத்து குழந்தைமையும் தொலைந்து விரைவில் களைப்படைந்து போகிறார்கள். அவைகளை; இலக்குகளை அடைய முடியாத போது போலி முகமூடிகளைப் போட்டுக் கொள்ளுகிறோம். அது ஒரு இறுக்கமான வாழ்க்கையை நோக்கி மனிதர்களை நகர்த்துகிறது.

எப்படி இருந்தோம் ஊரில் அன்று....

புழுதி பறக்க பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு அடித்துப் பிடித்து விளையாட்டு. சிக்கன வாழ்வு சொல்லித் தந்த பொருள்களை கவனமாகப் பாவிக்கும் தன்மை, வேலியிலே கம்பியை துணியாலே அணைபோட்டு சற்றே கீழிறக்கி அதனூடாக தோசை சுட்டு அடுத்த வீட்டுக்கும் கொடுத்தனுப்பும் அன்னியோன்னியம்,  வீட்டுக்கு வரும் தபால்காரனிடமும் சுகநலம் விசாரிக்கும் மனப்பாங்கு, தேவாரம் பாடியபடி வீதியோரம் பூப்பறித்துச் செல்லும் பழசுகள் வந்து குந்தி செல்ல அனுமதித்த வீட்டுத் திண்ணைகள், வீடு முத்தம் கூட்டி சமயலுக்கும் உதவி செய்து குளித்து பொட்டும் திருநீறும் வைத்து எண்ணை வைத்து படிய வாரி பின்னலிட்டு சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவ மணிகள்.... என வாழ்க்கையின் அர்த்தங்களையும் பாடுகளையும் இயல்பாக ஏற்றுக் கொள்ள வைத்த வாழ்வியல். இயல்பாகவே அனுபவங்களை வாழ்க்கையில் இருந்தே கற்றுக் கொண்ட;  பாடுகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட பால்யம்.....

அவைகள் எல்லாம் அவர்கள் முகங்களில் புன்னகைகளாக பரிமளித்தன. மனம் சுத்தமாகவும் அமைதியாகவும் பளிச்சென்றும் இருக்கும் போது புன்னகையாக அது பளிச்சிடுவதில் ஆச்சரியம் என்ன? இந்த வாழ்க்கை பிள்ளைகளுக்கு கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் விழுமியங்களையும் அன்றாட வாழ்க்கையினூடாகவே கற்பித்தது.

ஏன் இங்கு தமிழர்களே தமிழர்களைப் பார்த்தாலும் சிரிக்கிறார்கள் இல்லை? இது தான் அன்று வேலையில் இருந்த தமிழ் இளைஞன் என்னிடம் கேட்ட கேள்வி.

இவைகளுக்கு பல காரணங்கள். அதில் அடிப்படையானது எது நம் வாழ்க்கைக்கு தேவை என்பதில் தெளிவில்லாமல் இருப்பது என்றே எனக்குத் தெரிகிறது. எங்கு ஏன் ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடுகிறவர்களுக்கு பின்னால் நாமும் ஓடுவதே இந்த இறுக்க நிலைக்கு காரணம் என்பது என் அபிப்பிராயம்.

கல்வி
பதவி
பணம்
அந்தஸ்து ( வீடு கார் என இன்ன பிற..)

இவைகள் தான் வாழ்க்கையின் வெற்றியின் அடையாளம் என நாம் நம்பவைக்கப்பட்டு விட்டோம். ஆனால் இவை அல்ல வாழ்வின் மதிப்பீடுகள்.

நாம் சந்தோஷமாக இருக்கிறோமா இல்லையா? எது நமக்கு சந்தோஷத்தைத் தரும்? இவைகள் ஆள் ஆளுக்கு வேறுபடும் என்ற போதும் இந்தக் கேள்விகளுக்கு நம்மிடம் தெளிவான, கலக்கமில்லாத விடை இருக்க வேண்டும்.

பிள்ளைகளுக்கு எந்த வழியை நாம் காட்ட போகிறோம்? இதற்கான சரியான விடையை நமக்குள் நாம் தேடி அதை அடையாளம் காண்பதும் அந்தப் பாதையில் எம்மை நாம் நடத்திச் செல்வதும் ஒப்பீடுகள் அற்றிருப்பதும் நம் முகத்தில் புன்னகையை இயல்பாக மலரவிடும் என்பது என் அபிப்பிராயம்.

நாட்டுப்புறத்திற்கு நகர்ந்து விட்ட என் சினேகிதி ஒருத்தி சொல்லுவதும் அதைத்தான். எனக்கு ஒரு திருப்தி என் இரு பெண் பிள்ளைகளும் தம் குழந்தைக்காலத்தை அழுத்தங்கள் இன்றி சந்தோஷமாக அனுபவித்தார்கள் என்று சொன்ன போதும் அவர்கள் தமிழ் படிக்க முடியவில்லை; மற்றும் பல்கலைக்கழத்துக்கு தெரிவாகும் போது அவர்கள் நகர்புற மாணவர்களிடம் இருந்து வேறுபட்டு தெரியப்போகிறார்கள் என்று சற்றே கவலைப்பட்டார்.

எல்லோரும் எல்லாவற்றையும் பெற்று விட முடியாது தானே.

அவரது கவலை நியாயமானதாக இருந்த போதும் எனக்குள் ஏற்பட்ட அபிப்பிராயம் என்னவெனில் நாட்டுப்புற பிள்ளைகளிடம் இருக்கும் அன்பு, பணிவு, இரக்கம், உதவும் மனப்பாண்மை, அமைதியான இயல்பு, நேர்மையான சிந்தை இவைகள் அன்றோ ஒரு மனித உயிரினத்தை அலங்கரிக்கும் உயர்ந்த ஆபரணங்கள்!

பொதுவாக, நகர்புறத்தில் இருக்கும் புன்னகையற்ற முகம், இறுக்கமான சிந்தை, எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பது போன்ற ஒரு உசார் மனநிலை, நாகரிகத்தின் உச்சமென அவர்களிடம் இருக்கும் நடை உடை பாவனைகள், அங்கு நுழைந்து இங்கு நுழைந்து காரியமாற்றிவிடும் சமர்த்தியம்... என இவைகளா மனித குணத்திற்கு ஆபரணங்கள்?

நம் குடும்பத்துக்கும் நம் பிள்ளைகளுக்கும் எது சந்தோஷத்தைத் தரும்! எது நம் வாழ்க்கைக்குத் தேவை என நாம் தெளிவு கண்டு விட்டு அதன் வழியில் ‘என் வழி தனி வழி’ என்று போனால் முகத்தில் ஒரு புன்னகைக் கீற்று தெரியக் கூடும்.

இறுதியாக நிறைவு செய்யும் முன் இந்த இளம்பெண்ணின் கூற்றையும் சொல்லி நிறைவு செய்ய ஆசை.

என் இன்னொரு பிரிய சினேகிதியின் மகள். அவள் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டபடி உச்ச பட்ச சம்பளத்தோடு காரியமாற்றக்கூடிய தகுதியும் வாய்ப்புகளும் நிரம்பப் பெற்றவள். எனினும் அவள் தான் ஒரு ஆசிரியராக வரப் போகிறாளாம். காரணம் கேட்டவிடத்து, ‘எனக்கு ஊர் சுற்றிப் பார்க்க ஆசை. விரிவுரையாளர் போன்ற பதவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர் போன்ற தொழில் துறைகள் எனக்கு அதிகளவு விடுமுறைகளைத் தராது. ஓய்வும் கிட்டுவது கடினம். எனக்கு ஒரு ஆசிரியர் பதவி போதுமான அளவு சம்பளத்தையும் போதுமான அளவு விடுமுறைகளையும் மனதுக்கு நிறைவையும் தரும். இது தான் என் தேவை மற்றும் என் விருப்பு என்றாள்.

இதுவல்லவோ தெளிவு! இதுவல்லவோ அறிவு! அறிவைத் தன் வாழ்க்கைக்கு பிரயோகிக்கும் வல்லமை அது எனில் அது மிகையோ?

சிவசக்தி,
வல்லமை தாராயோ இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கே.......


2 comments:

  1. போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் இளைய தலைமுறைக்கு சமூகம் தரும் அழுத்தம் அதீதம். அவசரமாய் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நின்று நிதானித்து பரஸ்பர குசலம் விசாரிக்கவோ, இறைந்துகிடக்கும் இயற்கையழகை ரசிக்கவோ, விழுந்துகிடக்கும் மனிதனுக்கு ஒரு கைகொடுக்கவோ இங்கு யாருக்கும் நேரமும் மனமும் இருப்பதில்லை.

    நிர்வாண உலகில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பது போல ஓடிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் நிதான நடை போடுபவர்களை ஏளனமாய்ப் பார்த்தல் உலக யதார்த்தம்.

    ஆதங்கத்துடன் பதிவை வாசித்து முடிக்கையில் துளி நம்பிக்கையும் பிறக்கிறது.

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீங்க கீதா.
    அந்தத் துளி நம்பிக்கையின் விகிதாசாரம் தான் மிகக் குறைவு. வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி தோழி.

    ReplyDelete