Friday, January 15, 2021

தமிழர் அறம் குறித்த சிந்தனைகள்

 தமிழர்; தமிழ்; அவற்றின் பெருமை; வாழ்வு எல்லாம் அதன் தொன்மையிலும் போற்றுதலிலும் இல்லை; மாறாக அது சொல்லிச் சென்ற பொருளிலேயும் அதனை நம் நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவதிலேயுமே  தங்கி உள்ளது என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது.

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி’ என்று சொல்வதெல்லாம்   எத்தனை பேதமை? - வீண் பெருமை!

அண்மையில் அறம் குறித்த சிந்தனை மேலெழுந்த போது தமிழ் அறம் குறித்து  இலக்கியங்களில் குறித்து வைத்த சிந்தனைகள் தமிழின் மேன்மையினை இன்னொரு தளத்துக்கு உயர்த்துவதாகப் பட்டது. இலக்கிய வழி நெடுகிலும்; கடந்து வந்த தமிழ் பாதை எங்கினும்; அது, வாசம் வீசும் வண்ணம் தமிழ் பாதையின் இரு மருங்கிலும் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்ததைக் காண வாய்த்தது.

அது உலகு தழுவிய எல்லோரையும் சமனாகப் பேணும் பாண்மையில் எல்லோரையும் சகோதர வாஞ்சையோடு அணைத்துக் கொண்ட பாவனையில் பூத்திருந்தது. அடடா அதன் வாசனையில் தான் எத்தனை, எத்தனை சுகந்தம்!  தமிழனின் அறிவின் விசாலத்துக்கும் சிறப்புக்கும் மன மேன்மைக்கும் அதுவல்லவோ எடுத்துக் காட்டு!.Hormony ஐ அனுபவம் செய்யும் ஒரு வாழ்வியலை தமிழ், இப் பூஉலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறது போலவும்.....

முதலாம் நூற்றாண்டுத் தமிழன் அதனை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றான். இப்படிச் சொல்ல எத்தனை பெரிய உயர்வான பண்பும் மேன்மையும் அறிவு விசாலமும் பக்குவமும் தேவைப்பட்டிருக்கும். அப்பாடல் மொத்தமுமே அழகு தான். ஒரு வாழ்க்கையைப் பக்குவமாய் வாழ வேண்டிய அத்தனை வாழ்க்கைச் செல்வங்களும் மொத்தமாய் அந்தப் பாடலில் அமைந்திருக்கிறது. அடக்கத்தையும் உண்மைச் செல்வத்தையும் வாழ்வின் இயல்பையும் வாழும் வழியையும் கூறும் அப்பாடல் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பைத் தருவதே இல்லை.

   யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
 ( கணியன் பூங்குன்றனார்.)

இதனைச் சொல்லும் இச் சந்தர்ப்பத்தில் பிசிராந்தையாரை மறந்து கடந்து போக முடியுமா? அவர் சொல்லும் நரை இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழும் வழியை எத்தனை தரம் வாசித்தாலும் மனம் கடந்து போகத் தயங்கவே செய்யும்.

     ‘’யாண்டு பலவாக நரையில ஆகுதல்
   யாங்காகியர் என வினவுதிராயின்
   மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
   யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
  அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
  ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
  சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’’

  ’ சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல’ (புறம் - 31) எனக் கோவூர்கிழார் அறத்தின் தலைமை கூறுவார். அவரவருக்கு உரித்தாக விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக ஆற்றுதலே அறம் என சங்க காலம் போற்றியதை புறம் 312 பட்டியலிட்டுள்ளது. கொடையறம் அரச இயல்பாக மலர்ந்திருந்ததைக் கடை 7 வள்ளல்களைப் பற்றிய பாடல்கள் விபரிக்கக் காண்பது ஒன்றும் தற்செயல் அல்லவே! ‘வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்; நடு நள் யாமத்து பகலும் துஞ்சாது கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும் உண்பது நாழி; உடுப்பவை இரண்டே அதனால் செல்வத்துப் பயனே ஈதல் தான்  என்று நக்கீரர் சொல்வது வாழ்வை முழுமையாக பார்த்து பிளிந்து தந்த அறச் சாரமல்லவா? 

பாளி, வடமொழி சமூகங்களில் சமயம் சார்ந்து கல்வி அமைந்திருக்க, தமிழ் சமூகத்தில், சங்க காலத்து தொகை நூல்களில் செய்யுள்களை இயற்றியவர்கள் ஒரு குலத்தார் அல்லர்; ஒரு இடத்தார் அல்லர்; ஓர் இனத்தார் அல்லர்; அந்தணர் சிலர், அரசர் பலர், வணிகர் பலர், வேளாளர் பலர், இரவலரும் உளர், புரவலரும் உளர், ஆண்பாலரும் உளர், பெண் பாலரும் உளர், ஐந்திணைத்தலை மக்களும் உளர், நிலை மக்களும் உளர், வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டவர் உளர், வெவ்வேறு வாழ்க்கை நிலை கொண்டவர் உளர், கூடல் உறையூர் கருவூர் முதலான பேரூர்களில் பிறங்கியவர் உளர், அரிசில் ஆலங்குடி முதலாக வெள்ளூர் வேப்பத்தூர் ஈறாக சிற்றூர்களில் திகழ்ந்தவரும் உளர்.” என்பார் தனிநாயகம் அடிகள் (தமிழ்தூது பக் 32)

அதே நேரம் மன்னர், மருத்துவர், கணியர், பாணர், தச்சர், கொல்லர், குயவர் என பல நிலை மக்களும் புலவர்களாக விளங்கியதையும்; தொகை நூலில் காணப்படும் 459 புலவர்களில் 22 பெண்பாற் புலவர்களும் சமூகத்தில் கல்விப்புலமையோடு திகழ்ந்திருக்கிறார்கள்.

எத்தகைய சமத்துவ சமூகமாக; கல்வி அறிவு பெற்ற, பெரும் சமூக வாழ்வை இந்த சங்க மக்கள் வாழ்ந்திருத்தல் கூடும்!  ’யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல; நின் பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்” என்று சொல்லும் பரிபாடல் வாழ்க்கையின் மான்பு அத்தனையையும் அப்பாடலுக்குள் அடக்கி அறவழியினை அறைகூவி விட்டது.

மேலும், ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றும்  ’பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி’ என்றும் வாழும் வழியை அறத்தோடு வாழ்ந்து காட்ட தமிழ் வள்ளுவன் தந்த வாய்ப்பாடு திருக்குறளாகும். சமகாலத்தில் நாகரிகத்தில் மிக உயர்ந்த நிலையில் வைத்து எண்ணப்படும் கிரேக்க, ரோம நாகரிகங்களில் தனி மனித; தம் நாட்டுப் பெருமை குறித்து பெருமிதப்பட்டுக் கொண்ட சமுதாய வாழ்வு நிலவிய போது; இங்கோ வள்ளுவன் தமிழ், தமிழ் நாடு என்று கருதாமல் முழு உலகுக்குமான சிந்தனையோடு அவன் சிந்தனை மிளிரக் காணலாம். இங்கு மனித சமுதாயத்தை - உலக மனித குலத்தை மட்டுமன்றி சகல ஜீவராசிகளையும் தன்னுடய உயிரைப்போன்ற சமத்துவத்தோடு மதித்து வாழ வழி காட்டியதாக தமிழ் சிந்தனை மரபு ஊற்றெடுக்கிறது. உலகு, உலகம்,  வையகம்,  உயிர்கள், உயிர்க்கு, மன்னுயிர், பல்லுயிர்  போன்றனவே வள்ளுவன் பாவித்த மேலும் சில சொற்பதங்களாகும்.

 அறம் என்றால் நல்வினை என்பது பொருளாகும். நல்லவற்றைச் செய்வதும் தீயவற்றைக் களைவதும் என அதற்கு மேலும் பொருள் விரிக்கலாம். உயிர்கள் மீதான இரக்கம் என்பதை அதன் மையப் பொருளெனவும் கொள்ளலாம்.

அறம் என்பது பிறப்போடும் குடிப் பண்போடும் சேர்ந்தே வருவது என்பதை ஒளவை ’கொடையும் தயையும் பிறவிக்குணம்' என்று சொல்வதில் இருந்து அறிகிறோம். ஒரு தடவை நற்பண்பு மிக்க செல்வர் ஒருவர் இல்லத்திற்கு புலவர் ஒருவர் சென்றாராம். அவர்களது குழந்தை நடைவண்டியில் நடைபயின்று கொண்டிருக்கும் பருவம் அது. புலவரைக் கண்டதும் குழந்தை நடைவண்டியை தள்ளியபடி மெதுவாக நடந்து வந்து, தன் நடை வண்டியை மகிழ்ச்சியோடு புலவருக்கும் கொடுத்ததாம். உடனே புலவர் மனம் நெகிழ்ந்து,’ நடை கற்கு முன் கொடை கற்றாயே’ என்று பாடி உருகினார். கொடையும் தயையும் பிறவிக்குணம் என்பது இத்தால் அறியப் படுகிறதல்லவா? பிறப்பில் இருந்தே அறவாழ்வு தொடங்கி விடுகிறது என்பது தெரிகிறதல்லவா?

தமிழர் தம் வாழ்வின் சகல துறைகளிலும்  அறமே மையமாக நின்று செயற்பட்டுக்கொண்டிருந்தது.. இல்லறம், துறவறம், காதலறம், போரறம், அரசியலறம் என அறம் என்பது எல்லாச் செயல்களிலும் நீக்கமற நிறைந்து நின்றது. எல்லாவற்றிலும் அறம் விளங்க வேண்டும் என விரும்பியவன் தமிழன். வள்ளுவனின் காலம் அறநெறிக்காலம் எனவே வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு அறம் தமிழன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மேலோங்கி இருந்தது. அறத்தின் வழி பொருளும் பொருளின் வழி இன்பமும் ஈட்டற்பாலன என்பதால் அறம் பொருள் இன்பம் மூன்றையும் உள்ளே வைத்து எக்காலத்துக்கும் எல்லோருக்கும் - உலகத்தில் வாழும் சகலருக்கும் பொருந்தும் வண்ணம் வாழ்க்கை நெறியை படைத்தார் வள்ளுவன்.

அறம் என்பது சிந்தனை, பேச்சு, செயல்பாடு ஆகிய  மூன்றினாலும்  செய்யப்படுவதாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பினும் மனம் என்ற ஒன்றைக் கொண்டிருப்பதால் மனிதன் என அழைக்கப்படும் மனிதனின் மனமே - அது கொண்டிருக்கும் நினைவும் சிந்தனையுமே  அறத்தின் மிக இன்றியமையாத அடிப்படை  எனப் புரிந்து கொண்டிருந்தது தமிழ் சிந்தனை மரபின் ஆரம்ப காலம். அதனால் தான் வள்ளுவர் அதனை   ‘மனத்துக்கண் மாசில னாதல்’  (குறள் 34) மனதிலே முதலில் குற்றமற்ற சிந்தனைகள் உள்ளவனாக இரு என அறத்தை வலியுறுத்துகிறார்.

இளங்கோ அடிகள் அரச குலத்தில் பிறந்து, தனக்கு அரசுரிமை கிடைக்கும் என்று சோதிடன் சொன்ன சொல்லினை ஏற்க மறுத்து, அதனை தம்பியாகிய நான் தரியேன் அது அண்ணனுக்கே உரியது என தனக்கான தர்மத்தின் - மனசாட்சியின் - அறத்தின் வழி நின்று, உறுதி கூறி, அதற்கான தகுதியை தன் அண்ணனுக்குரியதென கொடுத்து, எழுது கோலைத் தூக்கி, தமிழ் இலக்கியத்தை தூக்கி நிறுத்திய துறவியாக இலக்கியத்தில் நிலைத்திருப்பவர். அவர் அறத்தை வாழ்ந்து காட்டிய செம்மல்.  அவர் சொல்லும் சிலப்பதிகார காவியத்தில் அவர் அரசியல் அறம் பற்றி உரைக்கிறார்.’அறம் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும்’ என்பது சிலப்பதிகாரத்தின் சுருக்க தர்க்க  வசனமாகும்.

பின் வந்த மணிமேகலை பசித்துயர் போக்குவதைத் தன் தலையாய அறமாகப் போற்றியது. (மணி 13) ஆதரவற்றோரைப் பேணுவது அதன் அறச் சாரமாகும். சமணமும் கிறீஸ்தவமும் அறமென எழுத்தறிவித்தலை கையிலெடுத்த காரணத்தால் இத்தனை கல்விச் செழுமையை தமிழ் இன்றைக்குக் கொண்டிருக்கிறது. இவர்கள் மொழி அறிவித்தலையும் அவற்றைப் பேணிக் கொடுத்தலையும் தலையாய அறமாக போற்றினர்.

காணுகின்ற அத்தனையிலும் கடவுளைக் கண்டு கொண்டவன் தமிழன். இயற்கையில் இருக்கிற எல்லாமே கடவுளின் அம்சம் எனக் கொண்டதனால் இயற்கையினையும் சகல உயிர்களையும் கடவுளாகக் காணவும் மதிக்கவும் போற்றவும் செய்தான்.

‘தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மைநீ!
அறத்தினுள் அன்பு நீ! மறத்தினுள் மைந்த நீ!
வேதத்துமறை நீ! பூதத்து முதலும் நீ!
வெஞ்சுடர் ஒளியும் நீ! திங்களுள் அளியும் நீ!
அனைத்தும் நீ! அனைத்தின் உட்பொருளும் நீ!
உறையும் உறைவதும் இலையே உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை!
முதல்முறை இடைமுறை கடைமுறை தொழிலில்
பிறவாப் பிறப்பிலை! பிறப்பித்தோர் இலையே!

என்று சொல்லும் பரி பாடல் அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. மேலும், கடவுள் அம்சம் எங்கெங்கெல்லாம் சார்ந்திருக்கிறதென்பதை கீழ்வரும் பரிபாடல் புலப்படுத்துவது சங்ககாலத்தமிழனின் உலகை இறை சார்ந்து பார்க்கும் சினேகபாவத்துக்கு மற்றுமோர் எடுத்துக் காட்டு.

‘ நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள;
நின், தண்மையும் சாயலும் திங்களுள;
நின், சுரத்தலும் வண்மையும் மாரியுள;
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவையுள;
நின் தோற்றமும் அகலமும் நீரிலுள;
நின், உடுவமும் ஒலியும் ஆகாயத்துள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்திலுள;
அதனால், இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏம மார்ந்த நிற் பிரிந்து
மேவல் சான்றன எல்லாம்’

இயற்கையின் அம்சங்கள் யாவையும் இறையின் அம்சமாகக் காணும் மனிதன் அவைகளை எத்தனை பவித்திரத்தோடும் மரியாதையோடும் பேணி இருப்பான் என்பதையும் கூடவே உணரமுடிகிறதல்லவா? அதனால் தான் ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்றது திருமந்திரம். 

வீடுகள் திண்ணைகளோடு பொலிய, படலைகளில் ஆவுரோஞ்சிக் கற்கள் முளைத்திருக்க, முற்றங்கள் கோலங்களால் வடிவு பெற்றதும் கூட இந்த அறச் சிந்தனையின் விளைவு தானே? சூரியனுக்கு நன்றி சொல்லவும் மாடுகளை தெய்வமென போற்றவும் தெரிந்து கொண்டது கூட அதன் விளைவு தானே? இதே நேரம் மேலைத்தேயம் கேற்றினைப் பூட்டி நாயை காவலுக்கு வைத்திருந்தது என்பது எத்தனை பெரிய சிந்தனை முரண் இல்லையா?

பெண்ணின் நிலை குறித்து ‘அன்னாந்து ஏந்தியவனமுலை தளரினும்’ என்று தோழி தலைவனைக் கண்டு என் தோழியை நீ எப்படிப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று பாடியபோதிலும் சரி; பின்நாளில் பாரதி தாசன் தன் ’குடும்பவிளக்கு’ பகுதியில் முதியோர் காதல் பற்றிப் பேசும் போது சொன்ன

‘ புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்;
தள்ளாடி விழும்மூ தாட்டி
மதியல்ல முகம வட்கு
வறள் நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
இருக்கிறாள் என்பதொன்றே”

இங்கெல்லாம் அன்பும் அறமுமே மேலோங்கி இருக்கக் காண்கிறோம்.

அதன் பின் வந்த இந்து சமயக் கோட்பாடுகளிலும் ‘தென்னாடுடய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றே பாடக் காண்கிறோம். ’உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்றே அவர்கள் இறைவனைத் துதிக்கிறார்கள். ’அன்பே சிவம்’ என்பதே இந்து சமயத்தின் சாரம். பாடல் வழியான பிரார்த்தனைகள் முடிந்த பின் உலக முழுமையும் வளம் பெற வேண்டி பாடும் புராணத்திலும்’ வான்முகில் வளாது பெய்க! மலிவளம் சுரக்க! மன்னன் கோல் முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க! என்றே சொல்லச் கேட்கிறோம்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று வையகம் என்று மேன்மை பெற பாடும் வண்ணங்கள் யாவும் தமிழுக்கும் அதன் சிந்தனை மரபுக்கும் செழுமை சேர்ப்பன. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுவும், ’வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் இரங்கும் போதும், தமிழ் மானுடமே உயிர்க்கிறதல்லவா? உயிர் மேல் கொண்ட அன்பின் செழுமையை அறத்தின் அழகை சொல்லாமல் இருக்க முடியுமா?

இத்தகைய காலப்பகுதிகளில் மேலைத்தேயங்கள் குறிப்பாக கிரேக்க ரோம பேரரசுகள் தனிமனித பெருமை; தன் நாடு குறித்த பெருமிதம்; உடற்பலம்; சிற்றின்ப நுகர்ச்சி; தனிமனித சுதந்திரம் இவைகளை மேல் நிறுத்த தமிழ் பேசு நல்லுலகமோ தனக்கென வாழா பிறர்கென வாழும் தன்மை, ’யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல; நின் பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்” ( பரிபாடல்) என்று வலியுறுத்தல் காண்கிறோம்.ரோமர்கள் தம்மைப்பற்றிய பெருமையில் நிமிர்ந்து நிற்க, தமிழோ உலகு தழுவிய அறச் சிந்தனையில் உயர்ந்து நின்றது.

உலக மனப்பாண்மை, விருந்தோம்பல், பிறர்மீதான அன்பு, ஈகை, தனக்கென வாழா பிறர்கென வாழும் தன்மை, மானம் என்றால் உயிரையும் கொடுக்கும் மாண்பு, மனத்தூய்மை, விடாது முயலல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னும் மனப்பாண்மை, பொறை, தயை, நல்லொழுக்கம், சகிப்புத் தன்மை, உலகப்பொதுமை போன்றன தமிழின் பண்பு நலம் என்பார் தனிநாயகம் அடிகளார்

பின் நாளில் கூட வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்று பாரதி கேட்பது கூட தமிழுக்கோ தமிழனுக்கோ அல்ல. மாநிலத்துக்கே அல்லவா? காக்கை, குருவி எங்கள் ஜாதி என்றவன் அல்லவா அவன்?! ‘ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்’ ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ ஆகியவற்றை கனவு கண்டவன். அவற்றினை மேலான அறமாக வரிந்து கொண்டவன் பாரதி. அதர்மங்களுக்கெதிரான போர் கொடியை பெண்களுக்காகவும் நாட்டுக்காகவும் தூக்கிச் சொற்போர் செய்தவன்.அறம் குறித்த மேற்கோள்கள்கள்:


அறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர். மாரிஸ் மாட்டர்லிங்க்.

பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான். -ஸெனீக்கா.

குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும். -ஜான் டிரைடன்.

அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க. -லியோ டால்ஸ்டாய்.

அறத்திற்குத் தலைசிறந்த வெகுமதி அதனிடத்திலேயே கிடைக்கும்; மறத்திற்குத் தலைசிறந்த தண்டனையும் அதனிடத்திலேயே கிடைக்கும். -பழமொழி.

பேரின்ப வீட்டை அடையும் நெறி துறவறம் அன்று; அனவரதமும் அறச்செயல் ஆற்றுவதேயாகும்.-ஸ்வீடன் பர்க்.

ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது. -மாரிஸ் மாட்டர்லிங்க்.

எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு. -ஜான் ரஸ்கின்.

என்ன செய்யலாம் என்று வக்கீல் கூறுவது விஷயம் அன்று; என்ன செய்யவேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம். -பர்க்.

அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும்.-பாஸ்கல்.

விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும். -ஸெயின்ட் அகஸ்டைன்.

நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம் அதிகரிக்கா விட்டால், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி. -பென்தம்.

நமது உணர்ச்சியின் தன்மை, விசாலம் ஆகிய இரண்டின் அளவே நமது ஒழுக்கமாகும். -ஜார்ஜ் எலியட்.

நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன். -எமர்ஸன்.

நமது செயலின் விளைவுகளை நாம் ஏற்றுக்கொள்ளும் முறையே நமது ஆன்மாவின் உயர்வை அளக்குங் கோலாகும். - ஜான் மார்லி.


No comments:

Post a Comment