Thursday, December 26, 2019

ஸ்ரீ காந்த லக்ஷ்மி - 25.12.2019


ஸ்ரீ காந்த லக்ஷ்மி

இவரை நான் சந்திக்க முடிந்தது இரு வருடங்களுக்கு முன்னர் தான். அதுவும் மிகவும் தற்செயலான ஒரு நிகழ்ச்சி. 

என் தம்பி முறையான ஒருவன் - கோபி - என்னைப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துப் போயிருந்தான். 1995 இற்குப் பின்னர் நான் கண்ட பல்கலைக் கழகம் அது! 

அப்போதெல்லாம் வெளிச்சமும் வெளியுமாக இருந்த இடமெல்லாம் இப்போது இருளையும் நிழலையும் கொண்டிருந்தது.

அந்தக் காலங்களில் எனக்கு மிகவும் பிடித்தமாய் போயிருந்ததும் அதிக நேரத்தைச் செலவளித்ததுமான நூலகத்தை பார்க்காமல் வர முடியுமா? அங்கே போன போது தான் ஸ்ரீ அக்கா அங்கு நூலகராக இருப்பதை அறிய முடிந்தது. 

படித்த காலத்தில் அவரை நான் கண்டதுண்டு. - அப்போது அவர் உதவி நூலகராகக் கடமையாற்றி இருந்தார். அவரோடு நேரடியாக எனக்குப் பழக்கமோ தொடர்போ இல்லாது போயினும்; போகும் போதும் வரும் போதும் முன்னால் அமைந்திருந்த சிறு சிறு பெட்டிக்குள் அப்படி என்ன தான் தேடுகிறார் என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கும்.

கூடவே, அவர் கம்பீரமாக அணிந்து வரும் பருத்திச் சேலைகளிலும் கொஞ்சம் கவனம் சென்று திரும்பும்! அத்தனை நேர்த்தியோடும் தனித்துவத்தோடும் அதை அவர் அணிந்திருப்பார். நகைகள் அதிகம் இல்லாத; கடும் நிறங்கள் எதையும் கொண்டிராத; அந்தப் பருத்திச் சேலைகள், அவருக்கு மிகுந்த கம்பீரத்தைக் கொடுப்பதாகவும்; தனித்துவம் மிளிர்வதாகவும் அப்போதெல்லாம் தோன்றும். அதுவே அவரை தனியாக நினைவில் வைத்திருக்கவும் இப்போது உதவியது.

பல்கலைக்கழக நூலகம் நிறைய மாற்றங்களைக் கொண்டிருந்தது. நாம் அங்கிருந்த போது ஒரு தளத்தில் மட்டுமாக இருந்த நூலகம் இப்போது பெருத்திருந்தது. உள்ளக அமைப்புகளிலும் நிறைய மாற்றங்கள். பாதுகாப்புகள்...தெரிந்த முகங்கள் என்று எதுவும் இல்லை. 

சரி வந்தது தான் வந்தேன். நூலகரையும் பார்த்துப் போகலாமே என அவரது அறைக்குச் சென்றேன். கம்பீர லக்ஷ்மியாக அவர் அதே தோற்றத்தோடு அமர்ந்திருந்தார். அவரது தோற்றத்தை விட அந்த அறை இன்னும் வசீகரமாக இருந்தது. அவருக்கு முன்னால் இருந்த நீண்ட மேசைக்கு முன்னால் ஒரு சுவர் நிறைந்த கண்ணாடி அலுமாரி. அதற்குள்ளே பாரம்பரியமானதும் இப்போது வழக்கொழிந்து போய் விட்டதுமான பொருட்கள் நெருக்கடி இல்லாமல் வசதியாக உட்கார்த்தி வைக்கப் பட்டிருந்தன. அவருக்கருகே வலது புறமாக ஒரு கருங்காலி மேசை. நிறைந்த கலை வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த அது, சேர். பொன் இராமநாதன் பாவித்ததாம். என் கண் போன போக்கை பார்த்து விட்டு, அவர் உடனே அதைச் சொன்னார். 

பெற்றோலில் நெருப்பு பத்தி விடுவதைப் போல நாங்கள் பத்திக் கொண்டோம்.

வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு அவரிடம் இருந்த வழக்கொழிந்து போன பாரம்பரிய பொருட்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறை என்னைச் சிலிர்க்கச் செய்தது. தன்னுடய திட்டங்கள் ; தன்னுடய ஆசைகள்; தன்னுடய எதிர்கால இலட்சியங்கள்; - அவற்றுக்கு போதாமையோடு இருக்கும் ஆர்வமற்றோர் அல்லது அது குறித்த விழிப்புணர்வோ தேடலோ இல்லாதோர் - தன்னிடம் இருக்கிற சேகரிப்புகள் - அவற்றுக்கு செய்யப்பட வேண்டி இருக்கும் பெரும் பணி - இவைகளைப் பற்றி எல்லாம் பேசப்பேச என் ஆதர்ச கனவு அவர் வாய் மூலம் வெளிவருவதாகவே எனக்குத் தோன்றியது.

இத்தனையும் பேசிய பிறகு பின் புறம் திரும்பி தான் வெளியிட்ட ஒரு புத்தகத்தையும் தந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

அன்று இரவு விருந்தினர் போக்கு வரவுகள் எல்லாம் இருந்த போதும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆசை எப்போது தனிமை கிட்டும் என்று எண்ண வைத்தது. ஒருபடியாக எல்லோரும் போன பிறகு, நடு இரவில் இருந்து பார்க்க ஆரம்பித்து  ஓரளவு மேலால் வாசித்துப் முடித்து, காலை 7.30 மணிக்கு என் மற்றய தம்பி மகிரன் வேலைக்குப் புறப்படும் போது ( அவர் பல்கலைக் கழக நூலகத்தில் தான் வேலை செய்கிறார்.) என்னை ஒரு தடவை பல்கலைக்கழக நூலகத்தில் இறக்கி விடக் கேட்டேன். 

இந்தப் பெண்மணியை நேரே மீண்டும் கண்டு, இந்த இலட்சியக் கனவுகள் குறித்து பேச கொண்டிருந்த ஆசை அது! ஒரு காதலன் காதலியைக் காணக் கொண்டிருக்கும் ஆவலுக்கு சற்றும் குறைந்ததல்ல அந்த ஆசை!

’ஓமக்கா வாங்கோ’ என்றவன், காங்கேசந்துறை வீதியைத் தாண்டி இணுவில் பக்கமாக விரைந்தான். ’எங்கேயடா போகிறாய்’ என்றேன். ‘உங்களுக்கு இன்னொரு இடம் காட்டுகிறேன்; பிறகு உங்களை நூலகம் அழைத்துச் செல்கிறேன்’ என்றான்.

அவன் என்னை இறக்கிய இடம் ஸ்ரீ அக்காவின் மாடி வீடு. இறங்கிய நேரம் அவர் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது இதை எழுதினால் உங்களுக்கு நம்பமுடியுமோ என்னவோ! வீடு முழுக்க கால்வைக்க இடமில்லாமல் அவர் சமூகத்துக்குத் சேர்த்து வைத்த சொத்துக்கள்!! ஓரமாக ஒரு அறையும் குசினியும் மட்டும் தமக்கென!

நான் அப்படி ஒரு ஆச்சரியத்தை அதற்கு முன் - ஓரளவு வாழ்க்கையைப் புரிந்துகொண்டதன் பின்பான - என் வாழ்நாளில் அடைந்ததில்லை; பூரிப்பும் பூரண மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்ட அந்த தருணம் கொண்ட அந்நாள் 
( 16.10.2017) என் வாழ்நாளில் மறக்கவொண்ணாதது!


அவர் வீட்டில் பார்த்த பொருட்கள் மீதான அதீத ஆசையினாலும்; அவர் சொன்ன இவ்வாறான பொருட்களை இப்போதெல்லாம் உருக்கு பட்டறைகளில் உருக்குவதற்கு முன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்; தென்பகுதி வியாபாரிகள் அறா விலைக்கு இவைகளை வாங்கிக் கொண்டு போகிறார்கள் என்றும்; எங்கு இவைகளைத் தேடி வாங்கலாம் என்று விபரங்களும் சொல்ல, நானும் அடுத்து வந்த ஓரு நாளில் ஆர்வக் கோளாறினால் அந்த உருக்கு பட்டறைகளுக்குச் சென்று, பழய பொருட்கள் எல்லாம் கிண்டிக் கிளறி, சில பொருட்களை - என் அதீத அவா தெரிந்தே அறாவிலை சொல்லியும் கேளாமல் - அவைகளை கொள்வனவு செய்ததோடு மட்டுமல்லாமல், அவைகளை பொலிஷ் செய்யும் இடத்தில் கொடுத்து அதனை புதிது போலாக்கி ( இங்கு குடிவரவதிகாரிகள் விடவேண்டுமே) அந்த மகிழ்ச்சியை அவரோடு மிக்க குதூகலத்தோடும் ஒரு வித பெருமை கலந்த மகிழ்ச்சியோடும்  சொல்ல, அவர் சொன்ன ஒரு வசனம் எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. 

‘யசோ, பழைய பொருட்கள் பழசா இருக்கேக்க தான் அதுக்கு மதிப்பு; புதுசாக்கிறதில இல்ல:’

எத்தனை பெரிய உண்மை அது! அவர் அதனால் அதன் பழசு ஆகிய மெருகு கெடாமல் அதன் அத்தனை தார்ப்பரியங்களோடும் அவைகளைப் பாதுகாத்தார்! அதில் தெரிந்தது அவரின் மரபு குறித்ததான உண்மையான கரிசனம்!

அந்தப் பொருட்கள் மாத்திரமல்ல அந்த பெண்மணியும் சமூகத்தின் சொத்து தான்! அவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் சமூகத்துக்கான எதிர்காலச் சொத்தினைச் சேர்ப்பதில் தன் முழு வாழ்நாளையும் தன் முழுப்பணத்தையும் செலவு செய்திருந்தார்.

சமூகம் அதனைக் கண்டு கொள்ளவில்லை.

என் தம்பிக்கு என் பைத்தியமும் அவவின் பைத்தியமும் பற்றி நன்கு தெரிந்திருந்த படியால் அவன், ’இனி அவவும் வேலைக்கு வர மாட்டா; நீங்களும் இனி நூலகத்துக்கு வர மாட்டீங்கள்; இரண்டு பேருமா இருந்து கதையுங்கோ; வரேக்க வந்து கூட்டிப் போகிறேன் எனக்கு நேரமாயிட்டுது வேலைக்கு’ என்று சொல்லி விட்டு, அவன் போய் விட்டான்.

இருந்து கதைத்தோம்; எங்கள் கனவுகள்; எதிர்பார்ப்புகள்; போதாமைகள்; சிக்கல்கள்; செய்யவேண்டியன; செய்யக் கூடியன ...எல்லாம் பேசினோம்; நிறைய திட்டங்கள் தீட்டினோம்.

இருவருக்குமே நிறையக் கனவுகளும் அவற்றை வென்றெடுப்பதற்கான சாத்தியங்களும் இருந்தன.

இன்று அவர் மாரடைப்பால் காலமானார்!

விடைபெற்றுச் சென்ற போது அவருக்கு வயது 58. போகிற வயதா இது?

தன் சமூகத்தை; அதன் எதிர்காலத்தை  கனவு கண்ட அந்த முகத்தைக் 
கடசி முறையாகவேனும் காணவேணும்!

அது என்னுடய கனவுக்குமான இறுதி ஊர்வலம் ஸ்ரீ அக்கா!

4 comments:

 1. அதீத ஆர்வத்துடன் படித்துக் கொண்டே வந்த எனக்கு, கடைசியில் கிடைத்த செய்தி வருத்தம் தந்தது. இத்தனை சிறப்பான ஒரு மனுஷி காலமானார் எனத் தெரிந்த போது அவர் விட்டுச் சென்ற பொக்கிஷங்கள் என்னவாகப் போகின்றனவோ என ஒரு படபடப்பு நெஞ்சில்.

  ReplyDelete
 2. ஓம் வெங்கட். சுமார் நான்கு மாடியில் பார்வைக்கு வைக்கத் தக்க பொருட்களை அவர் ஒரு மாடி வீடு, முற்றம், பின் வளவு என எல்லா இடங்களிலும் வைத்திருந்தார்.

  எனக்கு அவற்றை ஒரு மியூசியமாக ஆக்கஆசை இருந்தது. அவருக்கு அதனை நூலகம் மாதிரி மாணவர்கள் வந்து பார்த்து தொட்டுணர்ந்து கற்றுப் போக வேண்டும்; பழைய வாழ்வியலை; நம் மரபை இருந்து படித்து தொட்டு உணர்ந்து வாழ்ந்து போக வேண்டும் என்று ஆசை இருந்தது.

  மேலும் அவர் தேர்ச்சி பெற்ற நூலகராக இருந்ததாலும் எனக்கு வரலாற்று ஆராய்ச்சி வழியில் அனுபவமும் ஆர்வமும் இருந்ததாலும் இரண்டு பேருமாக இந்த வழக்கொழிந்து போன நம் மரபுகள் குறித்து படங்களோடு சேர்ந்த ஒரு கலைக்களஞ்சியம் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம்.

  ஒரு ஐந்து வருட அவகாசம் கேட்டிருந்தேன். பிறகு நிரந்தரமாக வந்திருந்து அதனை நடைமுறைப்படுத்துவது எங்கள் கனவாக இருந்தது.....

  ஒரு பல்கலைக்கழக நூலகமும்; மரபுகளின் பெறுமதி தெரிந்த நூலகரும்; பொருட்களும்; பொருட்களின் பெறுமதி தெரிந்த நாமும் இருந்தோம். என்ன பிரயோசனம்?

  ‘நன்றே செய்; அதையும் இன்றே செய்’ என்ற தார்ப்பரியத்தை மறந்து போனோமே....

  ReplyDelete
 3. ஊருக்குப் போய்வந்த பிறகான நாட்களில் நீங்கள் ஸ்ரீ அக்காவைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு கனவுகளும் எதிர்காலத் திட்டங்களும் வகுத்திருந்தீர்கள் என்பதை நான் அறிவேன். அவருடைய பழமை ஈடுபாட்டின் உந்துதலால் நீங்கள் வாங்கி வந்த பழங்காலப் பொருட்களைப் பார்த்தபோது என்னாலும் அவ்வுணர்வைப் புரிந்துகொள்ள முடிந்தது. அத்தனை அற்புதமானதொரு பெண்மணி குறுகிய வாழ்நாளில் மறைந்துபோனது நம் சமூகத்துக்கேற்பட்ட, ஆறுதல்களால் தேற்றவியலாத பெரும் இழப்பு.

  ReplyDelete