அறிவு என்றவுடன் இரண்டு பேர் நினைவுக்கு வருகிறார்கள்.
ஒருவர் தமிழர்; வள்ளுவர். ’மெய்பொருளைக் காண்பது தான் அறிவு’ என்றவர். கீழைத்தேய தமிழ் சிந்தனை மரபின் முதல் பிரதிநிதியென அவரை நாம் அழைக்கலாம்.
மற்றவர் சோக்கிரட்டீஸ். கிரேக்கச் சிந்தனை திறனின் ஊற்றுக்கண். ‘எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள்’ என்று சொல்லித் தந்த மேற்கத்திய ஞானி.
இருவரும் இரு வேறு நாடுகளில் இருந்து இருவேறு பண்பாட்டு சிந்தனைப்புலத்தின் வழி சிந்தித்த தத்துவப் பிரதிநிதிகள்.
இதனை எழுதும் இந்தத் தருணத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் அடையாளச் சின்னம் நினைவுக்கு வருகிறது. 64 கலைகளையும் பிரதிதிநித்துவப்படுத்தும் 64 அடையாளங்கள் வட்டமாய் சுற்றி இருக்க மேலே ‘மெய்பொருள் காண்பது அறிவு’ என்ற வாசகமும் கீழே யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் என்ற வாசகமும் அதில் பொறிக்கப்பட்டிருந்த ஞாபகம்...
அண்மையில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் பிரசங்கம் ஒன்றைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. ( எங்கே என்பது மறந்து போயிற்று.) அதில் அறிவு குறித்து ஒரு எளிய விளக்கத்தைத் தந்திருந்தார். நீர் இறைக்கும் இயந்திரத்தினை இயக்குவதற்கு முன்னர் கிணற்றுக்குள் இருந்து ஒரு குளாய் இயந்திரத்தோடு இணைக்கப்படும். அது போல இயந்திரத்தின் மறு வாயிலில் இருந்து இணைக்கப்படும் குளாய் நீரினை வெளியேற்றும்.
இவ்வாறான ஓர் அடிப்படை அமைப்போடு இருக்கும் இயந்திரத்தில் கிணற்றுக்குள் இருந்து வரும் குளாயை இணைக்கு முன்னர் கிணற்றில் இருந்து நீரை அள்ளி அந்தக் குளாயினுள் நீரை விட வேண்டியது அவசியம். அது நிறைந்ததன் பின்னர் அதனை இயந்திரத்தோடு இணைத்து தேவையான அளவு எரிபொருளைச் சேர்த்து இயந்திரத்தை இயக்கினால் முதலில் குளாய்க்குள் விட்ட நீர் ‘பொக்’ என்று முதலில் தள்ளும். பின்னர் இயந்திரம் கிணற்று நீரை வாரி வழங்க ஆரம்பிக்கும்.
கல்வி முறையும் கற்பித்தலும் கூட அவ்வாறு தான் இருக்க வேண்டும். ஆசிரியர்களோ வழிகாட்டிகளோ பெற்றோரோ ’குளாய்க்குள் விடும் நீரைப்போல’ இருக்க வேண்டும் என்றார்.
எத்தனை அழகான ஒரு எளிய விளக்கம் இல்லையா?
அது தாகமுள்ள ஒருவரை நன்நீர் நிலைக்கு கொண்டு சென்று விடுதல் மாதிரி.... இங்கே இதனைப் பெறலாம் என்று சொல்லும் ஒரு வழிகாட்டி. பெற்றோர், ஆசிரியர், பாதுகாவலர், பாடசாலை, கல்லூரி எல்லாவற்றின் பணியும் கடமையும் அதுவே.அதுவாகவே இருக்க வேண்டும் என்பது என் ஆசையும்.
தற்காலங்களில் நாம் பரீட்சைக்குத் தயார் படுத்தும் வாழ்வியலை மாணவர்களுக்குப் புகுத்துகிறோமே தவிர, தம் சொந்த வாழ்க்கைக்கும் சமூகத்துக்கும் தயார்படுத்தும் விதமான கற்பித்தலை மாணவர்களுக்கு வழங்குகிறோமா என்று தெரியவில்லை.
பரிபாடலில் ஒரு பாடல் வரும். வடபுலத்தாரின் சிந்தனைகளும் தென்புலத்தாரின் சிந்தனைகளும் ஒன்றுகலந்து விளங்கப்பெற்ற காலம் பரிபாடற்காலம். சங்ககாலத்தின் பிற்பகுதிக்குரியதும். அப்பாடல்களை முழுவதுமாகப்படிக்கும் போது அதில் இரண்டு பண்பாட்டுச் சிந்தனை மரபுகளும் சேருதலையும் ஒன்றுகலத்தலையும் சீர்தூக்கிப் பார்த்தலையும் தெளிவாகக் காணலாம்.
இந்தப்பாடல் (9) அந்த வகை சார்ந்த ஒன்றுதான். இரண்டுவிதமான காதல் நிலைகளை அது ஒப்பிட்டு தென்னகத்துக்குரிய தொல் காதலே சிறந்தது என்று கூறுகிறது. அந்தப் பாடல் இப்படியாகத் தொடரும்.
‘நான்மறை விரித்து நல்லிசை விளங்கும்
வாய்மொழிப் புலவீர்யீ! கேண்மின்சிறந்தது;
காதற்காமம் காமத்துச் சிறந்தது;
விருப்போர் ஒத்தது மெய்யுறு புணர்ச்சி;
புலத்தலில் சிறந்தது கற்பே; அதுதான்
இரத்தலும் ஈதலும் இவையுள் ளீடாப்;
..........’
அதாவது, காதலித்துத் திருமணம் செய்யும் அன்பும் காதலும் காமமுமே காம இன்பத்துக்குள் சிறந்தது; கற்புக்காமம் என்பது தலைவன் பரத்தையிடம் போய் வருவதன் காரணமான ஊடலினால் பெறப்படுகிற இன்பத்தின் பாற்பட்டது. அது அத்தனை உயர்வுடையதல்ல என்று விளக்குகிறது அப்பாடல்.
அறிவு என்பதற்கும் அதனை ஒப்பிட்டு பார்க்கலாம். மனதிற்கு பிடித்த ஒன்றைச் செய்வதற்கும் ‘விதிக்கப்பட்டு விட்ட ஒன்று’ என்பதற்காக ஒன்றைச் செய்வதற்குமான வேறு பாடு அது!
விருப்பமான ஒன்றைக் கற்பதற்கும்; இதனால் எனக்கு நல்ல வருவாய் வரும் என்று ஒன்றை தெரிவு செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடு போலாதானதாக அதைக் கொள்ளினும் தவறில்லை.
உயர்புள்ளி, உயர்பதவி, நல்ல பணவருவாய், வசதி வாய்ப்புகள், சமூக அந்தஸ்து - இவைகளை ஈட்டித்தரும் கல்வி - மாணவர்களின் மகிழ்ச்சியை - வாழ்வை அனுபவித்தலை - வாழ்க்கையைக் கொண்டாடுதலை - வாழுதலை - இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளி விடுகிறது. பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்ற தவறான புரிதலை அது வழங்குகிறது. பணம் வசதியை மட்டுமே வழங்கும் என்பதும் மகிழ்ச்சி என்பது ஆத்மாவுக்குப் பிடித்தமான ஒன்றைச் செய்யும் போது உள்ளிருந்து ஊற்றெடுக்கும் ஒரு வஸ்து என்பதையும் நாம் கருத்தில் கொள்வதில்லை.
கூடவே ஒவ்வொரு குழந்தையும் தனக்குரிய தனித்துவம், குணஇயல்புகள், திறமைகள், ஆசைகள், அபிலாஷைகள், விருப்பங்கள், நோக்கங்கள் ஆகியனவோடு பிறக்கின்றன என்பதையும்; அவைகள் என்ன என்பதையும் கண்டறிய நாம் நேரம் ஒதுக்குவதில்லை. அவர்களின் தனித்துவம் என்ன என்பதே தெரியாத பெற்றோரும் நம் மத்தியில் இல்லாமல் இல்லை.
வீட்டில் குழந்தைக் காப்பகம் ஒன்றை நடாத்தி வரும் என் மரியாதைக்குரிய மாது ஒருவருடனான சாதாரண ஓர் உரையாடலின் போது ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். மாலையில் பிள்ளைகளைப் பொறுபேற்க வரும் பெற்றோரில் ஆங்கிலேயப் பெற்றோர்கள் ‘என்பிள்ளை இன்று மகிழ்ச்சியாக இருந்தானா’ என்று தவிப்போடு கேட்பார்களாம். தமிழ் பெற்றோரோ எனில்’ என் பிள்ளை இன்று உணவு சரியாகச் சாப்பிட்டானா’ என்று கேட்பார்களாம்.
இது போதும் நம் சிந்தனையின் மாறுபாட்டை - எது நம் வாழ்க்கைக்கு தேவை என எதை நாம் நினைக்கிறோம் என்பதை - எடுத்துச் சொல்ல....
லெபனான் நாட்டுக் கவிஞன் கலில் ஜிப்ரான் அதனைத்தான் ’பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் உண்மையில் உங்கள் குழந்தைகள் அல்லர்; அவர்கள் உங்களால் வரவில்லை; மாறாக உங்கள் வழியாக வருகிறார்கள்’ என்றார்.
உலகின் எந்த மூலையில் எந்தப்பண்பாட்டில் எந்தக் காலப்பகுதியில் இருந்து வந்திருந்தாலும் என்ன! அறிவென்பதற்கான வரைவிலக்கணம் ’மெய்பொருளைக் காண்’ என்பதாகத் தானே இருக்கிறது!
எது மெய்பொருள் என்பதை உணர்வதும், அந்த மெய்பொருளைக் காண்பதற்கான பாதையைக் காட்டுவதும், இப்போதைக்குப் போதுமானது.
முதலில் அதற்கு நாம் அதனை அறியத் தயாராக வேண்டும்.
பெருமானே அருளாளா!
நீள நினைந்தடியேன் உனை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
அட்டித் தரப்பணியே!
“ மற்றவர் சோக்கிரட்டீஸ். ரோமசாம்ராஜ்யத்தின் சிந்தனை திறனின் ஊற்றுக்கண்.”
ReplyDeleteசோக்கிரட்டீஸ் கிரேக்கம் அல்லவா?
ஆமாம் ஆமாம்! தவறினைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஇப்போதே பதிவில் அதைத் திருத்தி விடுகிறேன்.
எத்தனையோ பேர் பதிவுகளைப் பார்க்கிறார்கள். மேலோட்டமான பார்வையோடு அதனைக் கடந்தும் விடுகிறார்கள்.
ReplyDeleteசிரத்தையோடு வாசிப்பதும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும்; சரியெனில் ஆமோதிப்பதும் ஒரு சிலராலே மட்டும் தான் முடிகிறது.
வாசித்து உங்கள் ஆக்கபூர்வமான கருத்தைத் தந்து சென்ற உங்கள் நேரத்திற்கும் அக்கரைக்கும் என் விஷேச நன்றிகள்.