Thursday, March 5, 2020

உலகுக்கு வெளியே...


ஆங்காங்கே அலைந்துகொண்டிருக்கின்றன வயதானவர்களின் தனிமைகள்.

ஏக்கங்களும் கேட்கப்படாத கதைகளும் ஆதங்கங்கள் ஆச்சரியங்கள் என இன்ன பிறவுமாக அவை ஆங்காங்கே அலைந்து திரிகின்றன.

மேலும் அவை மனிதர் எறிந்த நூல் சிண்டுகளால் கால்களில் சிக்குண்டு தத்தித்திரிய முடியா புறாக்களின் தத்தளிப்பினைப் போல ஆங்காங்கே தத்தளித்த படியாகவும்.....

ஆஸ்பத்திரிகளில்.....

ரயில்களில்....

தரிப்பு நிலையங்களில்....

நம்மைப்பார்க்கும் அந்த ஏக்கக் கண்களில் இருந்து எம் கண்களுக்கு வந்து திரும்பும் அந்தச் செய்தி அந்தரத்தில் நமக்கும் வேண்டாமல் தொங்கித் திரிகிறது. அதைச் சுமந்தலைய எனக்கும் இஸ்டமே இல்லை....

எத்தனை ஏக்கங்களை என்னால் சுமந்தலைதல் கூடும்? எத்தனை பேருக்கு என் காதுகளை இரவல் கொடுக்க இயலும்?

புன்னகையின் பின்னே இருக்கும் அந்த வலியின் மின்னலை கண்ணில் இருந்து காதுக்குத் திருப்பும் வல்லமையை இந்த சமூகம் தனி ஒருவருக்கு அளிப்பதுமில்லை. அது குடும்ப உறவுகளுக்குள்  மட்டுமே பரிந்துரைக்கப்படத் தக்கது. அந்த உரிமை மறுப்புக்குப் பின்னே இருக்கக் கூடும் சொத்து மதிப்புக் குறித்த கணக்குவழக்குகள். உலகியல் குறித்த உன்னதக் குறிப்பேடுகள்.

குளிர்காலம் வரப்போகிறது என்று சட்டை பின்னுகிறாள் பாட்டி. அது  தன் பேத்திக்கோ அன்றேல் பூட்டிக்கோ....என்றேனும் ஒருநாள் பேத்திகளின் பூட்டிகளின் அம்மாக்கள் வரக்கூடும் பூச்செண்டுகளோடும்..... காதுகளைச் சற்று நேரம் இரவல் கொடுக்கவும் கூடும். பாட்டிக்குப் பின்னாலே இருக்கும் சொத்துமதிப்புகளை கண்களால் எடை போட்டபடி....

அவைகளின் போலிப்புன்னகைகள் விரைவில் வாடிவிடும் என்ற போதிலும் பாட்டிகளுக்கும் தாத்தாக்களுக்கும் பூக்கும் அந்த நாளொன்றின் புன்னகைப் பூக்களே போதுமானதாக இருக்கிறது இப்போதைக்கு. ஒன்றுமே இல்லாமல் இருப்பதை விடவும் அது போதும் தான்....

பின்னிய காலுறைகளும் தொப்பிகளும் சட்டைகளும் போர்வைகளும் அன்பு கொண்டு இழைக்கப்படுகின்றன. உன்னத சந்தோஷங்களை ஒவ்வொரு பின்னலும் உடுத்திக் கொண்டுள்ளன. அவைகள் கொடுக்கப்படும் போது தானே அதன் பெறுமதிகள் பெரு மதிப்புப் பெறுகின்றன.

காலம் கடந்த பின் போதிக்கின்றன அவைகள் அன்பின்; வாத்ஸல்யத்தின்; ஆதூரத்தின்; அந்தரங்கப் பெறுமதிகளை.....

அவைகள் போதிக்க கூடுமோ ’அன்பே சிவம்’ என்பதையும்...

பார்வைகளின் பின்னே தெரிகின்றன சொல்ல விரும்பும் பல கதைகள்.
புன்னகைகளின் பின்னே பிரகாசிக்கின்றன அனுபவ வெளிச்சம். பிரவகிக்கும் அந்த அனுபவ வெளிச்சம் கடலுக்குள் பெய்த மழையென... காட்டுக்குள் எறித்த நிலவென ஆகுதல் தகுமோ?

கொஞ்சம் சொன்னது கூறலும் மீண்டும் மீண்டும் தொனிக்கும் அதே பாணிப் பேச்சுக்களும் சொல்லுகின்றன எவ்வளவுகாலம் அவை சொல்லப்படாமல் தேங்கி இருந்திருக்கின்றன  என்ற செய்திகளை...

நமக்குத் தான் நேரமில்லை....எங்கே போகிறோம் என்று தெரியாமலே அலைந்த படியாகவும் அசையும் அசையாச் சொத்துக்களில் மனதைப் பறிகொடுத்த படியும் புகழ் அந்தஸ்து பணம் பதவி என விரட்டும் இவைகளின் வேகத்துக்கு ஈடு கொடுத்த படியும் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு தான் நேரமில்லை....

ஒருநாள் இவைகள் எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடும் காலத்தை நோக்கி நகர்ந்தபடி இருக்கும் நமக்குத் தான் நேரமில்லை......

நின்று நிதானித்து வாழ்க்கையை; அதன் இயற்கையின் நியதிகளை புரிந்து, நம்மை மீள்பரிசோதனை செய்து, வாழ்க்கையைச் சரி செய்து, நிதானித்து கொள்ள; நமக்கான தனி வழியை தன்னம்பிக்கையோடு நிர்ணயித்துக் கொள்ள நமக்குத் தான் நேரமில்லை.....

எல்லோரின் பின்னே ஓடுவது சுகமும் தானே....

ஆனால் வாழ்க்கை கற்றுத்தருகிறது காதுகளின் தேவைகளை... இன்றியமையாமைகளை....

வாழ்க்கைக் காலம் மிக சொற்பமே என்பதனையும்....

உண்மையான சம்பாத்தியங்கள் என்பது காதுகளும், கண்களும், வருடும் கரங்களும், புன்னகைகளும், பரிவான சொற்களும் தான் என்பதை சொல்லுகின்றன முதியவர்களின் வாழ்க்கை எச்சங்களும் ‘முடிவுகள்’ நிர்ணயிக்கப்பட்டு  கட்டில்களில் மரணத்திற்காகக் காத்திருக்கும் மனித உயிரினங்களும்...

 4 வயது குழந்தையும், 26 வயது இளைஞனும், படித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவியும், இளம் குடும்பஸ்தனும், தேவதையை ஒத்த ஓரழகியும், கோடீஸ்வரர்களும், 3 சிறு குழந்தைகளின் தாயும், வயதான மூதாட்டியும் மூன்றாம் நபரைப் பார்த்தும் புன்னகைக்கும் ஓர் ‘சித்தம் அழகியனும்’ இன்னபிறருமாக...வயது, பால், இன, மொழி, மத வேறுபாடின்றி ஆக்களைச் சுமந்திருக்கிறது ஆஸ்பத்திரிகளின் பின்புறமாக அமைந்திருக்கும்  palliative care unit......

உண்மைகளைச் சுமந்த படியாகவும் உலகில் இருந்து ஒதுங்கிய படியாகவும்....

உலகில் இருந்து ஒதுங்கி நிற்கும் ஓர் உண்மைத் துறவி போல...

பரிநிர்வாணம் அடைந்து விட்ட புத்தனைப் போல.....

இங்கு சொல்லப்படாமல் அலைந்து திரிகின்றன பல செய்திகள்; காதுகளைத் தேடிய படி...

அநாதைகளாகத் திரிகின்றன அனுபவங்கள்....

சுவரில் மோதுண்டு மீளும் அந்த சொற் தொகுதிகள் அன்பில் தோய்ந்து போயுள்ளன. வாத்சல்யத்திலும் ஆதூரத்திலும் தோய்ந்தெழுந்த சொற்கள் விம்மித் திரிகின்றன. சில மன்னிப்புக் கோரல்கள் உரியவரிடம் போய் சேராமல் அலைவுறுகின்றன...சில காலம் கடந்தவையாகவும்....வாடிய பூக்களைப் போலவும் சருகானவையாகவும் கூட...

அவைகள் அத்தனையையும் பரிவோடு பொறுக்கி எடுத்து; அன்பாலே பின்னி எடுத்து; பத்திரப்படுத்த மாட்டேனோ? பக்குவமாய் அதை தேர்ந்தெடுத் துடுத்தி நான் மகிழ மாட்டேனோ; அந்த பரிவின் இதத்தாலே நான் நனைந்து போகேனோ........

இறுதியில் அத்தனையையும் கரைத்து, குடிக்கத் தக்கதோர் பாணமாக்கி, ஓர் அரக்கதாகமென சொட்டு விடாமல் குடித்து, இறுதியில் நானே அதுவாக ஆகி, கரைந்து, காணாமல் போகேனோ?

2 comments:

 1. எனது நண்பர் ஒருவரும் இரு வ‌ருடங்களுக்கு முன்பு Mount Druitt உள்ளpalliative care unit...... இருந்து இறையடி சேர்ந்தார்.. இர‌ண்டு நாள் முகாரி ராகம் அடுத்த நாள் மீண்டும் தோடி ராகம்

  ReplyDelete
 2. :) உங்கள் எழுத்துக்கள் எப்பொழுதும் ஒரு குமிண் சிரிப்பை உதடுகளுக்குள் வைத்திருக்கும்.

  அது திடீரென வாசிப்பவர்களின் மனப்பாரங்களை இலகுவாக்கி விடும். நன்றி புத்தன்.அந்தக் குமிண் சிரிப்பை எனக்குள்ளும் வர வைத்தமைக்கு.....

  இலகுவாக இருக்கக் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேணும் நான்...

  ஆனால் இந்த உண்மைகள் என்னை விட்டு இலகுவாகப் போய் விடுவதில்லை....

  ‘மாயா... மாயா... எல்லாம் மாயா...’ என்ற பாடலை ஒருமுறை கேட்டபோது அர்த்தபுஷ்டி நிறைந்ததாகத் தோன்றுகிறது....

  ReplyDelete