Saturday, May 2, 2020

கொரோனாவை நினைத்த படி...



கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்

பாதை எங்கனும்
சத்தமில்லா நிசப்தம்..

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையை
பார்த்த சலிப்பு....

குர் குர் சத்தங்கள்...
பகிர்ந்தமரும் மாடங்களில்
சல்லாப உரையாடல்கள்...
இளமையின் வழுவழுப்பில்
வழுக்கி விழும் அழகுகள்...
குறு குறு பார்வைகள்...
எதிர்க்கத் தெரியாத
அவைகளின் குணாம்சம்...
மனிதரோடு உறவாடி
பயமற்றுப் போன அன்னியோன்யம்...

கணவன் மனைவியென
பகிர்ந்துண்ட வாழ்வு...
முட்டையிட்டு குஞ்சு பொரித்து
பேறாக்கிய பெருமை...
தாயாகும் தந்தைமை...
தந்தையாகும் தாய்மை..

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு....

எனினும்,
எச்சம் எஞ்சும் மாடங்களை
சுத்தம் செய்யப் பஞ்சிப்பட்டு
அவைகளைக் கொல்லுமொரு
நஞ்சுக்கிண்ணம்!

தந்திரமாய் நஞ்சு வைத்து
கொல்லும் அந்தக் கைகளுக்கு
தெரிந்திருக்கக் கூடுமோ?
குஞ்சுகள் இன்னும்
இரைகளுக்குக் காத்திருப்பது குறித்து....
மாலை தேடி வரப் போகும்
ஜோடிப்புறா பெறப்போகும்
ஏமாற்றம் குறித்து....
மனித சகவாசத்தை
அவைகள் எவ்வளவு உண்மையென
நம்பின என்பது குறித்து...
அவைகளுக்கென்றும்
ஒரு வாழ்வு இருந்தது குறித்து
இன்னும் இன்னும்....
....................

இப்போதெல்லாம் மாடங்களில்
சத்தமே இல்லாத நிசப்தம்.
பாதை எங்கனும் காணும்
சத்தமில்லா நிசப்தம் போல....

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு....

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையைப்
பார்த்த சலிப்பு...

கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்.

யசோதா.பத்மநாதன்
2.5.2020.

4 comments:

  1. {சகலதுக்கும் சகலருக்கும்
    உரியதாகுமன்றோ
    இந்த உலகு...}.
    ஆனால் தக்கன மற்றுமே தப்பிபிழைக்கின்றன மனிதனின் சுயநலபோக்கினால்..
    ப‌கிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. 'தக்கன பிழைக்கும்’ என்பது உண்மை தான் புத்தரே!
    ஆனால் அவைகளின் வாழ்வினால் நம் உயிருக்கு என்ன தீங்கு நேர்ந்து விட்டதென்று...

    ReplyDelete
  3. அவற்றினால் மனிதனுக்கு உயிர்சேதம் இல்லை என்றாலும் ...அவனின் பகட்டு வாழ்க்கையை அசிங்கப்படுத்துகின்றன(எச்சங்கள்,சிறகுகள் .....சத்தம்..) என அவன் எண்ணுகின்றான் போலும்...

    ReplyDelete
  4. ஓம் புத்தன். அது தான்.
    பாருங்கோ என்ன ஒரு அற்ப விஷயத்துக்காக அவைகளின் வாழ்க்கையையே இலகுவாக இல்லாததாக ஆக்கி விட முடிகிறது மனிதனால்...
    அதற்கும் இருக்கிறது ஒரு வாழ்க்கை; அன்பு பாசம் குதூகலம் கொண்டாட்டம் எல்லாம்....
    நாங்கள் எவ்வலவு அசால்ட்டாக அவைகளை உயிராகவே எண்ணாமல் தூக்கி எறிந்து விடுகிறோம்...
    இது தான்; இந்த மனநிலைதான் மனிதன் களைய வேண்டிய முக்கிய முரண்.
    அது வரை நான் கொரோனா வரட்டும் என்றே வேண்டிக் கொள்வேன்; எல்லாவற்றையும் படைத்து யாரேனும் ஆண்டுகொண்டிருந்தால், அதன் சன்னிதானத்தில்....

    மனிதனே உலகத்தில் அதி பயங்கர மிருகம் புத்தன்!

    ReplyDelete