ஆதிக்குடி நான்.
என் நிறமூர்த்தத்தில் பதிந்திருக்கிறது
பிரபஞ்சத்தின் இரகசியக் கோடுகள்
கிளைபரப்பும் இலைகளில்
மண்ணின் சாறு கலந்திருக்க
ஆகாயம் நோக்கி நிமிர்ந்து
காற்றுக்குக் கையசைக்கும்
விரல்களில் விழித்திருக்கிறது
அந்த விசித்திர உண்மை.
பூவின் வாசத்தை
குப்பிப் பூக்களில் அடைத்து வைத்து
தேனீக்களை விருந்துக்கழைக்கிறேன்
மனிதர்க்கு ஒழித்து தேனை
குருவிகளுக்கும் பகிர்ந்தளிக்கிறேன்.
பூப்பூத்து காய்காய்த்து
பழங்களைத் தின்னக் கொடுக்கையில்
பறவைகளுக்குத் தாயாகிறேன்.
அவைகள் விசிறிச் செல்லும் எச்சங்களில்
என் விருட்சங்களாகும் சூட்சுமம் ஒளிந்திருக்க
திமிர்த்து நிமிர்கிறேன்.
இதுவே நானெனெ நிமிர்ந்து நிற்கிறேன்.
வேறென்ன? யாதொன்றும் நானறியேன்
வேறொன்றும் யானறியேன்.
எனினும் ஏன்
வெட்டி வீழ்த்தினாய் என்னை?
முள்ளிவாய்க்காலில்
முடிந்து போன என் தேசமே......
பொறுத்திரு
சூட்சுமத்தின் இரகசியமென
நீருக்கும் விதைக்கும் நேரத்துக்கும்
நேரப்பட்டிருக்கிறது ஒரு சந்திப்பு.
பறவை சுமந்த என் விருட்சம்
வீழ்ந்து பெருகும் அந் நாளில்
நான் ஒரு பெரும்
வினையெனவே எழுவேன்.
பெரும் வினையெனவே எழுவேன்
அப்போது என் மண்ணில் வேரூன்றி
சாறுறிஞ்சி மேலேறி
ஆகாயம் நோக்கி நிமிர்ந்து
பிரபஞ்சத்தின் இரகசியக் கோடுகள்
கலந்திருக்கும் அந்த
ஆதி வண்ணத்தின் சாயலில்
கையசைக்கும் இலை மீது
காற்றைப் பிடித்து எழுதுவேன்
வினையெனவே எழுந்தேனென்ற
அந்த ரகசிய பாடல் ஒன்றை
அதன் பிறகு
பூத்துக் குலுங்குமென் வாழ்வு
மகரந்தங்கள் பிரிந்து பெருக.....
- யசோதா.பத்மநாதன் -
22.5.20.
( பதினொரு வருடங்களுக்கு முன் இம்மாதம் முள்ளிவாய்க்காலில் பெருகி ஓடிய மரணங்களுக்கும் இழப்புகளுக்கும் இரத்தத்திற்கும் கண்ணீருக்கும் ஓங்கி ஒலித்த ஒப்பாரிகளுக்கும் பெருமூச்சுக்களுக்குமாக......
அவற்றை நினைவுகளில் ஏந்தி...
ஒரு ஆபிரிக்க அமெரிக்கனுக்கு உலகம் பூராவும் கொந்தளிப்பு
ReplyDeleteபல ஆயிரம் முள்ளிவாய்க்கால் உயிர்களுக்கு அவர்கள் இனம் மட்டுமே கொந்தளித்தது.....
சக உயிரினங்களின் / சொந்தக் குடிமக்களின் வாழ்வையே இப்படி சூறையாடும் சக மனிதர்கள்.......
Deleteநேற்றய இரவு ரொம்.குறூஸ் நடித்த ‘The Last Samurai' திரைப்படம் பார்த்தேன். துப்பாக்கிக்கு முன்னால் அவர்கள் தோற்றுப் போனால் என்ன யப்பானிய சமுராய் வீரர்களும் வீரமும் தீரமும் அவர்கள் வாழ்வும் போல இந்தக் கறுப்பின மக்களும் நம் மக்களும் என்றும் உலகத்தால் நினைவு கூரப்படும்.
வரலாற்றின் கறைபடிந்த அந்த ஏடுகள் ஆதிக்கவாதிகளின் இராட்சதாம்சத்தை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும்.
தெய்வம் நின்று கொல்லும்.
கொரோனா அதற்கொரு சாட்சி. அத்தாட்சி.
முள்ளிவாய்க்காலில் சிக்கியவர்களில் நானுமொருவர்.
ReplyDeleteசிறப்பான வரிகள்
தொடருங்கள்
ஓ... அப்படியா?
Deleteஉங்களிடமும் இரத்தக் கறை கண்ட பல கதைகள் இருக்கக் கூடும்...
வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காய்த்துக் கிடந்த மரங்கள் கனிதரக்காத்திருக்க
ReplyDeleteபெருங் காற்றடித்து வீழ்ந்தது போல் வந்த ஏற்கமுடியாத இழப்பிலும் மறுபடியும் பூத்துக்குலுங்குமென்ற நம்பிக்கையில் வாழ்வு நகர்கிறது சிட்டுக்குருவியின் அதிகமாய் வருடும் வரிகள்
ஓ... வணக்கம் தோழி.
ReplyDeleteஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இலங்கையில் அறியப்படும் எழுத்தாளராகவும் கல்வியாளராகவும் இருக்கும் உங்கள் பின்னூட்டம் எனக்கு மிக்க மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.
மீண்டும் உங்கள் வரவுக்கும் சிரத்தையான இந்த பின்னூட்டத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
தமிழால் இணைந்திருப்போம்.