Tuesday, July 28, 2020

நம்ம தமிழ் - 4 - மாலைமாற்று அணி - 30.4.2020


   SBS வானொலியில் மாலை மாற்று அணி        

சிலேடை கேட்டிருக்கிறோம்; எதுகை மோனை அறிந்திருக்கிறோம், சொற்சித்து விளையாட்டுக்களை தமிழில் ஆங்காங்கே கண்டிருக்கிறோம். விடுகதைகளோடும் தமிழ் விளையாடி இருக்கிறது. சித்திரக்கவி என்பது பற்றியும் சிலர் அறிந்திருக்கக் கூடும். அது என்ன மாலை மாற்று?

‘மாலை மாற்று’ என்பது தமிழில் இருக்கிற ஒரு வித விஷேஷமான கவிதை வடிவம். ஒரு செய்யுளின் சொல்லை இடமிருந்து வலமாகவோ வலமிருந்து இடமாகவோ படித்தாலும்; சொற்களோ, பொருளோ மாறாமல் அமையும் பா மாலைமாற்று எனப்படும். உதாரணமாக

தேரு வருதே மோரு வருமோ? மோரு வருமோ தேரு வருதே!
மாலா,போலாமா? மாமா ,மாறுமா,மாமா ?
போன்றவற்றைச் சொல்லலாம்.

ஒரு மாலையில் முத்துக்களைக் கோர்த்த பின்னர் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அந்த மாலை ஒரே மாதிரியாக இருப்பது போல பாடலைப் புனைந்த பின்னால் எங்கிருந்து பார்த்தாலும் அதாவது முதல் எழுத்திலிருந்து வலப்புறமாகவோ, கடைசி எழுத்தில் தொடங்கி இடப்புறமாகவோ படித்தாலோ ஒரேமாதிரி இருக்கும்.

12ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக அறியப்படும் ‘தண்டி அலங்காரம்’ என்ற அணி இலக்கண நூல் அதற்கு இப்படியாக 3 உதாரணங்கள் தந்து விளக்குகின்றது.
1.“நீ வாத மாதவா, தாமோக ராகமோ,தாவாத மாதவா நீ”
என்பது ஒன்று. அதாவது நீங்காத பெரும் தவம் உடையோனே!   வலிய மயக்க வேட்கையோ நீங்காது, (ஆதலால்) அழகிய பெண்ணினுடைய ஆசையினை நீக்கி அருள்வாயாக! அதாவது அவள் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக! என்பது அதன் பொருள்.

2அடுத்தது,  “வாயாயா நீகாவா யாதாமா தாமாதா யாவாகா நீயாயா வா”  அதாவது, எமக்கு வாயாதன  யாவை? நீ எம்மைக் காத்து அருள் புரிவாய்! (அவ்வாறு) இல்லாவிட்டால் என்னவாகும்? இம்மாது பெரும் வருத்தம் உறுவள். (நீ விரும்பினால்) எது தான் முடியாதன? அதனால் நான் கூறியவற்றை நன்கு ஆராய்ந்து நீ வருக என்பது அதன் பொருள்.
3. இறுதியாக அமைவது,

“பூவாளை நாறுநீ பூமேக லோகமே பூ நீறு நாளைவா பூ”
அதாவது, இயல்பாய் பூப்பு இல்லாதவளை மணந்து புலால் நாற்றம் வீசும் நீ, பூவையும் பொன்னையும் மழையாகச் சொரியும் மேகமோ! பூவும் திருநீறும் தரித்து நாளைய தினம் வருவாயாக, இவள் இப்பொழுது பூப்பினளாய் இருக்கின்றாள். என்று
பரத்தையர் சேரி சென்று மீண்ட தலைவனுக்கு தோழி வாயிலாக மறுத்து உரைத்ததாக அமைகிறது இந்தச் செய்யுள்.
இவ்வாறாக பரிதிமால் கலைஞர் தண்டியலங்கார உதாரணங்களுக்கு விளக்கம் தருகிறார்.

உதாரணமாக துவளுவது, தாளாதா, மேளதாளமே, தேருவருதே, மாவடுபோடுவமா, தோடு ஆடுதோ, மேக ராகமே, என சில சொற்கள் பின்புறம் இருந்து பார்த்தாலும் முன்புறம் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியான பொருள் வருகிறதே! அது மாதிரி. இத்தகைய சொற்களை வைத்துக் கொண்டு ஒரு பாடலையே பொருளும் விளங்க பாடி முடிப்பது மாலை மாற்று ஆகும்.
இதனை ஆங்கிலத்தில் Palindrome என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் Civic, Radar, Level, Madam, Malayalam, Pop, Noon, Refer போன்ற சொற்கள் ஆங்கில  மாலைமாற்றுச் சொற்களுக்கு உதாரணங்களாகும். இது ஆங்கில மொழியில் பென்ஜோன்ஸன் என்பவரால் 17ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. எனினும் மிகப்பழைய மாலைமாற்றுச் சொல் கி.மு 79இல் இலத்தீன் சொல்லான Sator Arepo Tenet Opera Rotas என்பதாகும் என நம்பப் படுகிறது.

வடமொழியில் கிபி 18ம் நூற்றாண்டில் கர்நாடகா மாநிலத்தில் வாழ்ந்த வேங்கடாத்வரி என்ற மகாகவி ஒருவர் 'ராகவ யாதவீயம்' என்ற ஒரு காவியத்தையே மாலைமாற்ரு வழியில் இயற்றி இருக்கிறாராம். அதில் சிறப்பென்னவென்றால் அதனை இடமிருந்து வலமாகப் படிக்கும் போது அது இராமபிரானின் வரலாற்றைக் கூறும் இராமாயணமாகவும்; அதனை வலமிருந்து இடப்புறமாகப் படித்தால் அது கண்ணபிரானின் கதையைக் கூறும் பாகவதமாகவும் விளங்குகிறதாம்.

16 ஆண்டுகள் மாத்திரமே வாழ்ந்தவர் என்று நம்பப்படும் திராவிட சிசு என்று செளந்தர்யலகரி அழைக்கும்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் என்று சுந்தரரால் அழைக்கப்பட்ட சந்தத்தின் தந்தை என்றும் மதிக்கப்படும் கி.பி. 637இல் வாழ்ந்த திருஞான சம்பந்தர், ஒன்றல்ல; 11 திருப்பதிகங்களை மாலை மாற்றுப் பதிகமாகப் பாடி இருக்கிறார் என்பது சமயத்துக்கப்பால் வியந்து இன்புறத்தக்க அவரது தமிழ் புலமையாகும்.
அவர் பாடிய மாலைமாற்றுப் பாடலின் பொருள் என்னவெனில்,

நாங்கள் கடவுள்களா? இல்லை. நீமட்டும்தான் கடவுள், ஆமாம்! பெரிய யாழை ஏந்தியவனே, எல்லோராலும் விரும்பப்படுகிறவனே, நாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே, காமனை / மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே, சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே, பெரிய மாயைகளை / திருவிளையாடல்களைச் செய்பவனே, எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று!
என்ற பொருள் தொனிக்கும் இந்தப் பாடல் மாலைமாற்றாக இப்படியாக வருகிறது.


> http://www.youtube.com/watch?v=JxLWNmZ2b_4

பொதுவாக இவற்றில் நிறுத்தற்குறியீடுகள் மற்றும் குறில் நெடில் எழுத்துவேறுபாடுகள் அதிக கண்டிப்போடு பார்க்கப் படுவதில்லையாயினும் இப் பாடல்கள் படித்துப் பொருள் அறிவது சற்றே சிரமம்தான்.
இருந்தபோதும், பின்நாளில் காஞ்சிபுராணம் மற்றும்  திருநாகைக் காரோணப் புராணம் போன்ற தமிழ் இலக்கியங்களிலும் மாலைமாற்றுப் பதிகங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவை எல்லாம் தமிழோடு கவிஞர்கள் விளையாடிய விளையாட்டுக்கள்.
படிக்கவும் படித்துப் பொருள் அறியவும் சற்றே சிரமமான இந்தப் பாடலைப் கேட்கும் போது அண்மையில் ’வினோதன்’ என்ற தமிழ் திரைப்படத்தில் மதன் கார்க்கி இயற்றி டி. இமான் அவர்கள் இசையமைத்த இந்தப் பாடல் உடனடியாக உங்களுக்கு நினைவு வரக் கூடும்
.
இது தான் தமிழ் சினிமாவில் வெளிவந்த முதலாவது மாலைமாற்றுப் பாடலாகும்.


https://www.youtube.com/watch?v=jYywAB24i7I

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா

கால பாலகா
வாத மாதவா
ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா
மாயமா நீ நீ நீ மாயமா

தோணாதோ
கான கனகா

வான கனவா
வாச நெசவா
மோகமோ
மோனமோ

பூ தந்த பூ
தீ தித்தி தீ
வா கற்க வா

போ சீ சீ போ
தேயாதே
வேல நிலவே

மேக ராகமே
மேள தாளமே
ராமா மாரா

சேர அரசே
வேத கதவே
நேசனே வாழவா

நீ நானா நீ
மா மர்மமா
வைர இரவை
தைத்த விதத்தை
தேடாதே
மேக முகமே

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா

கால பாலகா
வாத மாதவா
ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா
மாயமா நீ நீ நீ மாயமா

தோணாதோ
கான கனகா

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா


யசோதா.பத்மநாதன்
22.12.2019.

Sunday, July 26, 2020

நம்ம தமிழ் - 3 - சிலேடை அணி. 22.3.2020



சிலேடை அமைப்பில் வந்த சினிமா பாடல் இது!



 கி.வா.ஜெகன்நாதன் சிலேடைப் பேச்சுக்குப் பிரபலமானவர். அவர் ஒரு தடவை ஈழத்தின் வடபால் உள்ள பருத்தித் துறை என்ற ஊருக்குப் பேசப் போயிருந்தார். அங்கு கூட்டத்துக்கு வந்திருந்த புலவர் ஒருவர். தாம் இயற்றிய நூல் ஒன்றை இவரிடம் அளிக்க இவர் உடனே, ’இடத்திற்கேற்ற கொடை என்றாராம். எப்படி என்று புலவர் கேட்க, பருத்தித் துறையில் நூல் கிடைப்பது பொருத்தம் தானே என்றாராம்.

சிலேடை என்பது என்னவென்றால், ’ஒருவகைச் சொற்தொடர் பல பொருள் பெற்றி தெரிதர வருவது சிலேடை’ என்று தண்டியலங்காரம் என்ற அணி இலக்கண நூல் வரைவிலக்கணம் சொல்கிறது.

அத்திக்காய் காய் காய் என்ற சினிமாப்பாடலில் வரும் காயும்  பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் என்பதில் வரும் தேனும் இன்றும் எல்லோருக்கும் தெரியக் கூடிய - சொல்லக்கூடிய சினிமாச் சிலேடைகள்.
இந்த சிலேடை உத்தியை முதலில் பயன்படுத்தியதில் கம்பன் முன்நிற்கிறார். ‘அஞ்சிலே’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு ஐம்பெரும் பூதங்களை ஒரு பாட்டுக்குளேயே பொதித்து வைத்த வல்லாள கவிஞன் அவன். பாலகாண்டம் ஆற்றுப் படலத்தில் வரும், அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான் -  என்ற பாடலிலே அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவையாய் அமைந்திருக்கக் காணலாம்.

முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும். அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரை அதாவது கடலைத் தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும். அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- (ஐம்பூதங்களிலே ஒன்றாகிய ஆகாய மார்க்கமாக இலங்கைக்குப் பறந்து, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டுஅதாவது ஐம்பூதங்களில் ஒன்றாகிய பூமி தேவியின் மகளான சீதையை கண்டு என அர்த்தப்படுகிறது. கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது. இப்பேற்பட்ட ராமபக்தனான அனுமன் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பான் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருளாகும். இதிலே ஐம்பூதங்களாகிய நீர் நெருப்பு பூமி, காற்று ஆகாயம் ஆகிய ஐந்தும் வருமாறு பாடல் அமைந்திருப்பது விஷேஷம்.
இந்த 'அணி'யில் 'புகுந்து விளையாடிய' புலவன்;  சிலேடை மன்னன் காளமேகப் புலவரைப் பற்றி எல்லோரும் கேள்விபட்டிருக்கிறோம். கடவுளையே நையாண்டியும் கேலியும் செய்து அவன் பாடிய பாடல்கள் இலக்கிய உலகில் பெரும் பிரபலம் பெற்வை. அவை பற்றிப் பின்னர் காண்போம். அவர் சிலேடையிலும் வலு விண்ணன்.

அவருடய சிலேடைப் பாடல்கள்  பல உள்ளன. அதில் இது ஒன்று.
சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை
ஐங்கரர்க்கு மாறுதலை யானதேசங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம்
பிடித்தோர்க்கு மாறுதலை பார் . (99)

சங்கரன் தலையில் கங்கை ஆறு உள்ளது. சண்முகனுக்கு ஆறு தலைகள் உள்ளன. ஐந்து கை கொண்ட பிள்ளையார்க்கு மாறுபட்ட யானைத்தலை உள்ளது. சங்கைப் பிடித்த திருமாலுக்கும் பத்துப் பிறவிகளிலும் மாறுபட்ட தலை இருந்தது. பித்தா! (சிவனே) உன் திருவடிகளைப் பற்றிய அடியவர்களுக்கும் ஆறுதல் இருப்பதை நீயே பார். என்பது இப்பாடலின் பொருள்.

இவ்வாறு எக்கச் சக்கமான பாடல்கள் இலக்கியத்திலே உள்ளன. தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் சிலேடைகள் அவ்வப்போது இயல்பாக வந்து விழும். அப்படி வந்த ஒரு சம்பவம் இது.
ஒரு மடாதிபதி தமிழ்ப் புலவர்களை எல்லாம் அழைத்து விருந்து ஒன்று வைத்தாராம். எல்லா ஊர்களில் இருந்தும் புலவர்கள் வந்து விருந்தில் அமர்ந்தனர். ஸ்ரீவைகுண்டம் என்ற ஊருக்குப் பக்கத்தில் கடைமடை என்ற ஊர் இன்றைக்கும் இருக்கிறது. அவ்வூரைச் சேர்ந்த புலவர் ஒருவர் விருந்திற்கு மிகத் தாமதமாக வந்து சேர்ந்தார்.

மடாதிபதி அவரை  வரவேற்கும் விதமாக, “வாரும் கடைமடையரே!’ என இருபொருள்பட அழைத்தாராம். கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவரே என்பது ஒரு பொருள். கடைசியாக வந்த மடையரே என்பது மறைந்திருந்த மற்றொரு பொருள். வந்த புலவர் என்ன லேசுப்பட்டவரா? அவரும் பதிலுக்கு, “வந்தேன் மடத்தலைவரே...” என்றாராம். இதற்கு மடத்திற்குத் தலைவரே என்பது ஒரு பொருள். மடையர்களுக்கெல்லாம் தலைவரே என்பது மற்றொரு பொருள்.
இனி இக்காலத்தில் வந்த ஒரு சிலேடைப் பாடலைப் பார்ப்போமா? இது பிள்ளையாரையும் கனனியையும் வைத்துப் பாடிய சிலேடை. எங்கே எப்படி புரிகிறதா பாருங்கள்?

தட்டில் மெதுபண்டம் ஏற்பதால் தரணியைச்
சட்டென்(று) எலியோடு சுற்றுவதால் - மட்டில்லாப்
பாரதத்தில் மேன்மையுற்றுப் பாரோர் வினைக்குதவும்
வாரண மாம்கணினி காண்.

இங்குள்ள பல சொற்கள் விநாயகருக்கும் கணினிக்கும் ஒருங்கே பொருந்துமாறு அமைக்கப்பட்டுள்ளன.

முதலில், கணபதியைக் கூறும் விதத்தைப் பார்ப்போம். அவர், அன்பர்கள் தட்டில் படைக்கும் மிருதுவான கொழுக்கட்டைப் பண்டத்தை விரும்பி ஏற்பார்; தம் வாகனமான எலியில் (மூஞ்சூறு) ஏறி உலகெலாம் விரைவில் சுற்றுவார்; அளவிட இயலாத பெரிய நூலான மகாபாரதத்தை (வியாசர் சொல்லிவர, தாம் தம் கொம்பை எழுத்தாணியாகக் கொண்டு) எழுதிப் புகழ் பெற்றவர்; உலகத்தோர் வினைகள் இடையூறின்றி நடக்க உதவிபுரிபவர் என்பது ஒரு பொருள்.

இப்போது பாடலைக் கணினியின் பெருமையைக் கூறுவதாகப் பார்த்தால் அது, குறுந்தகட்டில் உள்ள மென்பண்டத்தை ஏற்கும்; `மவுஸ்` என்னும் எலிப் பொறியோடு இணையம் வழியாக உலகைச் சுற்றிவரும்; கணினித்துறையில் அளவிட இயலா ஆற்றலுடையவர்களைக் கொண்ட இந்தியாவில் அது மேல்நிலை எய்தும்; வீட்டிலும், அலுவலிலும் நாம் செய்யும் பணிகளுக்கு உதவும்.

இன்றும் சிலேடைகள் தமிழின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகவே விளங்குகின்றனபெண்ணையும் நதியையும் ஒப்பிட்டுப் பாடும் இந்த வைரமுத்துவின் பாடலும் ஒருவகை சிலேடை தான் இல்லையா?

அந்த - மானை /அந்தமானைப் பாருங்கள் அழகு என்று ஒரு சொல்லில் இரண்டு அர்த்தத்தை தந்த 1978இல் வெளிவந்த அந்தமான்காதலி திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் இயற்றி ஜேசுதாசும் வாணிஜெயராமும் பாடிய பாடலைப் போல சலங்கை ஒலியில் வரும் ’தகிட ததிமி தகிட ததிமி தந்தானா; இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா; இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா; நினைத்ததை எழுதிட மறக்குது என் பேனா என்ற இந்தப்பாடலும் சிலேடை வழி வந்ததே
. தகிட ததிமி….


.....................................................................................

யசோதா.பத்மநாதன்.
27.12.19.

Monday, July 20, 2020

நம்ம தமிழ் - 2 - அணிகள் அறிமுகம் - 22.2.2020.

  SBS அரச வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியைக் கேட்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.
       
   நம்ம தமிழ் - அணிகள் அறிமுகம் - 22.2.2020

கடந்த மாதம் உலகமொழிகளில் தமிழினுடய இடத்தைத் தெரிந்து கொண்டது போல; இம்மாத ’நம்மதமிழில்’ கலைப் புலவோன் மொழி கொண்டு புனையும் அணிநலன்கள் பற்றிக் காண்போமா?

கவிஞன் ஒருவன் புலமைக் கலைஞனாக உருவாகும் அந்த நுட்பமான இலக்கிய இலட்சணம் உருவாக உதவும் உத்திகளின் உறைவிடம் அணிகள் ஆகும்.

அணி என்றால் அழகு என்று பொருள். ஒரு பாடலில் அமைந்து இருக்கும் சொல்லழகு பொருளழகு இவற்றை மேம்படுத்தவும்; அவற்றை மேலும் அழகுபடுத்தி, தான் சொல்ல வரும் கருத்தை படிப்போர் மனதில் தெளிவாகவும் அழகுணர்வோடும் பதியவைப்பதற்காகவும் கவிஞன் கையாளும் உத்தியினை அணி எனலாம்.

மாடக்குச் சித்திரமும் மாநகர்க்கு கோபுரமும் ஆடமைத்தோ நல்லார் கணியும் போல...என்னும் நன்னூல் சூத்திரம் பெரிய மாளிகைக்கு அதன் முன்புறத்தில் அமையும் ஓவியமும், பெரிய நகரத்திற்கு அதன் பகுதியில் அமையும் கோபுரமும் அழகு சேர்ப்பதுபோல் செய்யுளுக்கு அழகு சேர்ப்பது அணி ஆகும் என்று உரைக்கிறது.

அழகுக்கு அணிகள் எவ்வாறு உதவுகின்றன? அது அழகுக்கு அணிகலன்கள் அணிவித்து மேலும் அழகாக்கும் முயற்சி போன்றது.


(0:40 – 1:04 / 3:57 – 4:21. / 4:28 – 4:47) (optional)

( தமிழணங்கை, காதிலங்கு குண்டமாகக் குண்டலகே               சியுமிடையே கலையாச் சாத்தன் ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை                 யாவளையா பதியும் மார்பின் மீதணிசிந் தாமணியாச் சிந்தாம                 ணியுங்காலில் வியன்சி லம்பாத் திதில்சிலப் பதிகார மும்புனைந்த                 தமிழணங்கைச் சிந்தை செய்வோம்! என்பார் சங்குப் புலவர். )

( கண்ணுக்கு மையழகு….) சிற்பக்கலைஞனும் ஓவியக்கலைஞனும் தன் எண்ணங்களில் உதிக்கும் இயற்கை உருவங்களையும் கற்பனை எண்ணங்களையும் தன் சிற்ப ஓவியங்களில் அமைத்துக் காட்டுவது போல ஓர் இலக்கியப் புலவோன் தன் எண்னக்கருத்துக்களை அழகுறச் சொற்களால் ஓவியமாக்கிக் காட்டுவதற்கு ஒப்பானது.

‘ஆங்கொரு கல்லை வாயிற்படியென்றமைத்தனன் சிற்பி; மற்றொன்றை ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்றுயர்த்தினன்; உலகினோர் தாய் நீ! யாங்கனே எவரை எங்ஙனம் சமைத்தற்கெண்னமோ அங்ஙனம் சமைப்பாய்; ஈங்குனைச் சரணென்றெய்தினேன். என்னை இருங்கலைப் புலவனாக்குதியே’ – என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி பராசக்தியை வணங்குவது தன்னை, ‘கலைப்புலவன்’ ஆக்குமாறு!

இவ்வாறு ஒருவன் கலைப் புலவனாக ஆகுவதற்கு உதவுவது அணிகள் என்றால் அதற்கான இலக்கணம் தான் என்ன?

இலக்கணம் என்று வருகிறபோது அது செம்மொழியான தமிழின் இன்னொரு பக்கத்தை விரித்துச் செல்லும்.

‘இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள்ளின் றாகில் எண்ணையும் இன்றே
எள்ளினின் றெண்ணை எடுப்பது போல
இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்’

எள்ளில் இருந்து எண்ணை எடுப்பது போல இலக்கியத்தில் இருந்து இலக்கணம் உருவாகும் என்றுரைக்கிறது இந்தப் பேரகத்தியச் சூத்திரம்.
தமிழ்மொழியில் உள்ள இலக்கணங்கள்  ஐந்து வகைப்படுவன. அவை எழுத்து, , சொல், பொருள், யாப்பு, அணி என்பன வாகும். இவ்வைந்தும் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய வடிவமைப்பிற்கும் உரியன.

தமிழிலே முதன் முதலிலே தோன்றிய இலக்கண நூல் சங்க இலக்கியத்திற்கு முற்பட்ட தொல்காப்பியமாகும். அது மொழி எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருள்அதிகாரம் என 3 ஆக வகுத்துரைக்கிறது. பொருள்களை அறிந்து கொள்ளவும், கருத்துகளைப் புரிந்து கொள்ளவும், எழுப்புகின்ற ஒலிவடிவம் பற்றியும், எழுதுகின்ற வரிவடிவம் பற்றியும் எடுத்துரைப்பது எழுத்திலக்கணம்ஆகும். எழுத்து சொல்லாகும் முறைமை பற்றியும், சொல்லின் வகைகளைப் பற்றியும் விளக்குவது சொல் இலக்கணம். வாழ்க்கை பற்றிய இலக்கணம் பொருள் இலக்கணமாகும். பொருள் இலக்கணத்திற்குள் காணப்படும் செய்யுளியல், யாப்பிலக்கணம் பற்றிய கருத்துகளை எடுத்துரைக்கின்றது. பொருளிலக்கண உவமையியல் அணி இலக்கணம் பற்றி விளக்குகின்றது. யாப்பும் அணியும் பெரிதும் வளர்ந்து, தனித்துப் பிரிவதற்கு முன் அவை பொருளதிகாரத்திற்குள்ளேயே தொல்காப்பியத்துக்குள் அடங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் காவியங்களிலும் புலவோர் பாடிய பாடல்களிலும் பல அணிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். உதாரனமாக சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்டத்தில் கோவலனும் கண்ணகியும் மதுரைநகருக்குச் செல்லும் போது அங்கு கோவலன் கொலையுண்ணப் போகிறான் என்பதனால் வரவேண்டாம் வரவேண்டாம் என்று கையசைத்து மதுரை நகரின் மதில் மேல் இருந்த கொடிகள் அசைந்தன’ என்ற தற்குறுப்பேற்ற அணியை இளங்கோ கையாண்டிருந்ததைக் குறிப்பிடலாம்.

இவ்வாறு பல அணிகள் ஆங்காங்கே தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இன்றைக்கு தமிழ் மொழியிலே எப்படி ஆங்கில காலணித்துவத்தின் செல்வாக்கால் தமிழ் மொழியிலே ஆங்கிலமொழிச் சொற்கள் பல கலந்து போயுள்ளனவோ; எப்படி ஆங்கில மொழியின் செல்வாக்கினால் தமிழிற்கு இலக்கணக் குறியீடுகள் மற்றும் உரைநடை, சிறுகதை, நாவல், திறனாய்வு, அறிவியல், அகராதி வடிவங்கள், தமிழ் எண்களுக்குப் பதிலான அராபிய இலக்கங்கள் போன்ற இலக்கிய வடிவங்கள் கிடைத்து தமிழ் இன்னொரு படி உயர்ந்ததோ; அது மாதிரி கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட பகுதியில் இந்தியாவின் இன்னொரு செம்மொழியான வடமொழி என்றழைக்கப்படும் சமஸ்கிருதத்தின் செல்வாக்கும் ஆரிய ஆதிக்கமும் இந்து சமயமும் தமிழர் மத்தியிலும் தமிழிலும் ஊடுருவத்தொடங்கி விட்டதனாலும் மற்றும் சமூக; நாகரிக வளர்ச்சி போன்ற இன்னோரன்ன காரணங்களாலும்’ இறையனார் அகப்பொருள், புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கலம், யாப்பருங்காலக் காரிகை, போன்ற இலக்கண நூல்களோடு வடமொழியின் இலக்கிய இன்பத்தில் மனதைப் பறி கொடுத்த தமிழ் வல்லாளர்கள் வடமொழி அணி இலக்கணத்திலும் ஈடுப்பாடு காட்டத் தொடங்கியதன் விளவாக தமிழில் வடமொழி அணி இலக்கணத்தை ஒட்டியதான அணி இலக்கண நூல் ஒன்று எழுந்தது.

அது சமண புலவரான தண்டி என்ற ஆசிரியரால் எழுதப்பட்ட ‘தண்டி அலங்காரம்’ (12ம் நூற்றாண்டு) என்ற அணி இலக்கண நூலாகும். தொல்காப்பியம் மற்றும் ’காவ்ய தர்ஷம்’ என்ற அலங்கார இலக்கண நூலின் சாரமாக அமைந்த இவ் அணி இலக்கண நூலில் 35 வகையான அணிகள் பேசப்படுகின்றன.

இன்று தமிழில் வழக்கிலுள்ள அணி இலக்கண நூல்களுள் காலத்தால் முந்தியது தண்டி அலங்காரமாகும். தொல்காப்பியர் உவமை இயலில் உவமை உருவகம் ஆகிய அணிகளின் இலக்கணத்தைக் கூறியுள்ளார். தொல்காப்பியத்திற்குப் பின் வீரசோழியம் அணிகளின் இலக்கணம் கூறும் ஐந்திலக்கண நூலாகத் திகழ்கிறது. இவ் இரு  நூல்களிற்குப் பின்னர் அணி இலக்கணத்திற்கென எழுந்த நூலாகத் தண்டி என்பார் எழுதிய தண்டி அலங்காரம் திகழ்கிறது. இதனை இன்னும் விரிவு படுத்தியதாக அமைந்த அணி இலக்கண நூல்’மாறனலங்காரமாகும்’.

இந்த அணி இலக்கணத்திற்கு ஒரு சிறப்பான கூறு ஒன்றுண்டு.
எழுத்து, சொல், பொருள், யாப்பு ஆகிய நான்கு இலக்கணங்களும் மொழிக்கு மொழி வேறுபடுவன ; மாறுபடுவன. ஆனால் அணி இலக்கணம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானது ஆகும். எடுத்துக்கூற விரும்பும் கருத்தை எந்த நடையில் எந்தெந்த முறையில் எடுத்துரைப்பது எனக் கூறுவது எல்லா மொழிகளிலும் உள்ள நூல்களுக்கும் பொதுவானதாக உள்ளது. இது, பிற இலக்கணங்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு ஆகும்.

இனி வரும் நாட்களில் இவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த 10 வகையான அணிகள் பற்றியும் அவற்றின் அழகுகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
இன்று விடைபெறும் முன்னர் கவிஞர் வாலி எழுதி எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்து 1969ம் ஆண்டு வெளிவந்த பூவா தலையா என்ற திரைப்படத்தில் டி.எம்.செளந்தர்ராஜன் பாடிய இப்பாடலை கேட்போமா? அணிகளுக்கோர் அணிகலனைப் போல அமையும் இந்தப்பாடல் தமிழ் நாட்டினை அதன் வரலாற்றின் வடிவினூடு ஒரு பெண்ணாக உருவகித்து நடைபோட வைக்கிறது.



படம் : பூவா தலையா
வரிகள் : வாலி

மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே ...

தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
உன் பெண்மையில் கண்டேனே...
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும்
உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த...

காஞ்சித்தலைவன் கோவில் சிலைதான்
கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலைதான்
காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ
தூத்துக்குடியின் முத்துக் குவியல்
திருமகளே உன் புன்னகையோ
திருமகளே உன் புன்னகையோ

மதுரையில் பறந்த...

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ ...
புதுவை நகரில் புரட்சி கவியின்
குயிலோசை உன் வாய்மொழியோ
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ
குமரியில் காணும் கதிரவன் உதயம்
குலமகளே உன் வடிவழகோ
இவை யாவும் ஒன்றாய் தோன்றும்
உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே
………………………………………………………………………………………………………………….
யசோதா.பத்மநாதன்.
11.2.2020.

தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை

தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு
நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …

Sunday, July 12, 2020

நம்ம தமிழ் - 1 - SBS வானொலிக்காக.26.1.2020

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து SBS என்ற அரச வானொலி ஊடகத்தின் தமிழ் சேவையில் மாதம் ஒரு தடவை வரும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில்  ’தமிழ் அணிகள்’ குறித்து சில நிமிடங்கள் சொல்லி வருகிறேன்.

அதனை அவ்வப்போது இங்கு பதிந்து வைக்க விருப்பம் கொண்டிருந்த போதும் இப்போது சுமார் 6 மாதங்கள் கடந்த பின்னர் தான் சாத்தியப் பட்டிருக்கிறது.

ஒலிபரப்புக் குறித்தும் அதில் ஏதேனும் மாற்றங்களோ அல்லது திருத்தங்களோ செய்யவேண்டி இருந்தால் அவை குறித்தும் எனக்கு எடுத்துச் சொன்னால் அது என் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றும்.

கீழே உள்ள இனைப்பை அழுத்தி ஒலிபரப்பைக் கேட்கலாம். வாசிப்பது தான் வசதி என்பவர்கள் வாசித்தும் அறிந்து கொள்ளலாம். எனினும் வானொலிக்காக நிகழ்ச்சியினைத் தயாரிக்கும் போது அதில் பல மாற்றங்களைச் செய்யவேண்டி இருப்பதோடு பல பாடல் வசீகரங்களை இணைக்கும் வசதி இருப்பது கேட்க இதமளிக்கும். ஆகையால் அதில் சில மாற்றங்கள் உண்டு என்பதியும் உங்கள் கவனத்துக்கு வைத்து விடைபெறுகிறேன்.
நன்றி.

                    
SBS வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்தவும்

தமிழ்!

அதீத கற்பிதங்களாலும் உணர்வுக் குவியல்களாலும் அபரீதமான உணர்ச்சிப் பெருக்காலும் இன மொழிப் பற்றினாலும் கட்டமைக்கப்பட்டு கருத்துருவாக்கம் பெற்ற மொழி அல்ல;

மாறாக அது தன் அறிவின் கொள்ளளவால் அறத்தின் சாரத்தால் வாழ்வியல் நெறிகளால் பண்பாட்டின் விழுமியங்களால் அதன் தொன்மையால் உலக ஒப்புரவால் இலக்கிய வளமைகளால் நிலைத்து வாழும் தன்மையால் ஒரு பண்பாட்டின் அக்ஷ்யபாத்திரமாய் விளங்கும் தன்மையால் மேன்மை பெற்றது.
காலவெள்ளத்தால் காலாவதியாகாது இன்று உலகெங்கும் பரந்து பரவி வியாபித்து விளங்கி நிற்பது.

2003ம் ஆண்டு ஐக்கியநாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டுப் பிரிவு – யுனெஸ்கோ - ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சுமார் 6700 மொழிகள் பேசப்படும் இந்த உலகில், ஒரு மொழி செம்மொழியாகிய அந்தஸ்தைப் பெற வேண்டுமென்றால் அது தொன்மை, தனித்தன்மை பொதுமைப்பண்பு நடுவுநிலைமை, தாய்மைப்பண்பு, பண்பாடு, கலை, பட்டறிவு அனுபவ வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லாத் தன்மை, இலக்கிய வளம், உயர்வான சிந்தனை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி இன்று உலகில் 8 மொழிகள் செம்மொழி அந்தஸ்தினைப் பெற்றுள்ளன.

அவை, கிரேக்கம், இலத்தீன், ஹிப்ரூ, அரபு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம், தமிழ், என்பனவாகும்.

கிரேக்க மொழி சோக்கிரட்டீஸ், அரிஸ்டோட்டல், பிளேட்டோ போன்ற அறிஞரின் சிந்தனைக் கருத்துக்களால் வளம் பெற்றது.

இலத்தீன் மொழி கி.மு. 100 – கி.பி. 100க்குமிடையிலேயே வளம்பெற்ற செம்மொழியாகி விட்டது. ரோமானியப் பேரரசின் காலத்தில், ஆட்சி மொழியாகவும், கிறிஸ்தவ மத வழிபாடுகளில், முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில், கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்ததோடு இன்று, கத்தோலிக மதத்தின் குருவாகிய போப்பாண்டவர் வாழும் வத்திகான் நகரத்தின் ஆட்சி மொழியாகவும் திகழ்ந்து செழிப்புற்றது.

அராபிய மொழி உலகுக்கு சிறந்த வாழ்க்கைக் கருவூலமான குர்ரானைத் தந்த வகையில் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது.

சீன மொழி இலக்கியம் 5000 ஆண்டுப் பாரம்பரியம் மிக்கது. அதில் கி.மு.600 காலப் பகுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் கன்ஃபூசியஸ் (Confucious) மற்றும் லாவுட்சு (Laotse) என்போரின் இலக்கியத் தொகுப்புகளும் வாழ்க்கை நெறிமுறைகளும் சீன இலக்கியம் செம்மொழி அந்தஸ்தைப் பெற உதவின.

ஹீப்ரு மொழிக்கு கி.மு.12-ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரையிலான இலக்கியப் பாரம்பரியம் உண்டு. பைபிளின் பழைய ஏற்பாடு ஹீப்ரூ மொழியினாலானது. அதில் செம்மொழிக்காலம் அல்லது விவிலிய காலம் என்பது கி.மு.3-ஆம் நூற்றாண்டு வரையானது. பைபிளின் பழைய ஏற்பாட்டை தந்து பெருமை பெற்றது ஹிப்ரூ.

பாரசீகம்,என்றழைக்கப்படும் பேர்ஸியன் மொழி ஈரான் நாட்டின் ஆட்சிமொழி ஆகும். இன்றைய உலக நாகரிகங்கள், அறிவியல் முதலிவற்றிற்குத் தக்க கொடைகளை வழங்கிய நாடு பண்டைய பாரசீகம். இன்று உலகம் முழுவதிலும் வழக்கத்தில் உள்ள எண்களை உலகிற்கு கொடையாக வழங்கியதும் இம்மொழிதான்.

சமஸ்கிருதம் என்றழைக்கப்படும் வடமொழி இலக்கியத்தை இரு பிரிவுகளாக காணலாம் இருக்கு யசுர் சாமம் அதர்வனம்,உபநிடதங்கள் முதலாய வேதகால இலக்கியம் கி.மு.1500 முதல் கி.மு.200 வரையானது. மகாபாரதம் இராமாயணம் போன்ற செம்மொழி கால இலக்கியம் கி.மு.500 முதல் கி.பி.1000. வரையானதாகும்.இந்த தத்துவார்த்த வாழ்வியல் இலக்கிய செல்வங்கள் வடமொழியை செம்மொழியாக்கியது.

தமிழ்
எப்படி ஆரியம் சார்ந்த இந்தியப் பண்பாட்டிற்கு வடமொழி கொள்கலனாக (Container) விளங்குகிறதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் மூத்ததும், ஏறத்தாழ 2500 ஆண்டு இலக்கிய பாரம்பரியம் கொண்டதுமான தமிழ் மொழி கொள்கலன் ஆகும். தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் திருக்குறளும் காப்பியங்களும் அவை சொல்லும் வாழ்க்கை விழுமியங்களும் தமிழ் செம்மொழியாக பெரும் பங்காற்றின.

சைவரும், வைனவரும், பெளத்தரும், சமணரும், முகமதியரும், கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்தரும் இலக்கிய உரிமை பாராட்டக் கூடிய மொழியாக  தமிழ் அமைந்தது. அதனால் பரிபாடல், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருவாய்மொழி, திருப்புகழ்திருவருட்பா பனுவல்கள், பெரிய புராணம், கம்பராமாயணம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சீறாப்புரானம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரீகம் போன்ற காப்பியங்களுக்கு ஒப்பான காப்பியங்கள்; வாழ்வியல் செல்வங்க:ள் தமிழ் மொழியிலே பிறந்தன.

அதே நேரம், தமிழ்மொழி சகலமக்களுக்கும் உரிய மொழியாக விளங்கியது. பாளி, வடமொழி சமூகங்களில் சமயம் சார்ந்து கல்வி அமைந்திருக்க, தமிழ் சமூகத்தில் சங்க காலத்து தொகை நூல்களில் செய்யுள்களை இயற்றியவர்கள் ஒரு குலத்தார் அல்லர்; ஒரு இடத்தார் அல்லர்; ஓர் இனத்தார் அல்லர்; அந்தணர் சிலர், அரசர் பலர், வணிகர் பலர், வேளாளர் பலர், இரவலரும் உளர், புரவலரும் உளர், ஆண்பாலரும் உளர், பெண் பாலரும் உளர், ஐந்திணைத்தலை மக்களும் உளர், நிலை மக்களும் உளர், வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டவர் உளர், வெவ்வேறு வாழ்க்கை நிலை கொண்டவர் உளர், கூடல் உறையூர் கருவூர் முதலான பேரூர்களில் பிறங்கியவர் உளர், அரிசில் ஆலங்குடி முதலாக வெள்ளூர் வேப்பத்தூர் ஈறாக சிற்றூர்களில் திகழ்ந்தவரும் உளர்.” என்பார். ( தமிழ்தூது பக் 32)

தமிழரின் ’யாதும் ஊரே என்ற உலகளாவிய தத்துவம் இப்படித்தான் பின்நாளில்  பல்வேறு சமயம் சார்ந்த காவியங்களிலும் சமய அற நூல்களிலும்  காப்புச் செய்யுளில் ‘உலகெலாம்’ எனத் தொடங்கியது. அதனாலேயே தமிழ் பக்தியின் மொழியாகப் பரினமித்தது. தமிழினதும் தமிழனதும் உலகு தழுவிய சிந்தனை அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு என்றும்; தென்னாடுடய சிவனே போற்ரி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றும்; மேன்மைகொள் சைவ நீதீ விளங்குக உலகமெல்லாம் என்றும்; யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றும்; ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும்;(திருமந்திரம்),வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றும்; காக்கை குருவி எங்கள் ஜாதி என்றும்; வாசலில் அரிசிமாக்கோலம் போட்டு உயிகளுக்கு பகிர்ந்துண்டும்; உழவுக்கு வந்தனை செய்து மாட்டுக்கு பொங்கலிட்டும்; வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்றும்; பாடியும் பகிர்ந்துண்டும் பரந்தசிந்தனையோடு வாழ்வாங்கும் வாழ்ந்தவன் தமிழன்.’உலகம் யாவையும் தாமுழவாக்கலும்; ஆழிசூழ் உலகு என்றும் மானுடம் வென்றதம்மா என்றும் உலக நோக்கில் ஒப்புயர்வற்ரு விளங்கியவன் தமிழன்.

மேலைத்தேயத்தவர் வீட்டுக்கு காவலாக நாயைக் கட்டி வளர்த்த போது தமிழன் திண்ணை கட்டி வருவோரை வரவேற்று இருத்தியவன்.


சமூக நெறிமுறைகளை அறம், பொருள், இன்பம் என மூன்றாக பகுத்துக் கூறுவது பண்டைத் தமிழ் மரபு. இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் இன்பத்தை வேண்டுவன. இன்ப நுகர்ச்சிக்குத் தேவைப்படுவது பொருள். அப்பொருள் அறவழியில் வரவேண்டும் என்பதே பண்டைத் தமிழரின் வாழ்வியல் அறநெறியாகும்.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுடன் வீடு என்ற ஒன்றையும் சேர்த்து உறுதிப் பொருள்களை நான்கு என்றது பின்னை வழக்கு, இவ்விரிவாக்கம் பக்தி நெறிக் காலத்தில் உருவானது.

அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளில் வாய்மை, பொய்யாமை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறன் இல் விழையாமை, புறங்கூறாமை, பயன்இல சொல்லாமை, புலால் மறுத்தல், ஈகை, கள்ளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை பற்றிய சிறப்புக் குறிப்புகள் திருக்குறள் என்னும் நூலில் திருவள்ளுவர் சுட்டும் வாழ்வியல் அறநெறிகள் ஆகும்.

உலக மனப்பாண்மை, விருந்தோம்பல், பிறர்மீதான அன்பு, ஈகை, தனக்கென வாழா பிறர்கென வாழும் தன்மை, மானம் என்றால் உயிரையும் கொடுக்கும் மாண்பு, மனத்தூய்மை, விடாது முயலல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னும் மனப்பாண்மை, பொறை, தயை, நல்லொழுக்கம், சகிப்புத் தன்மை, உலகப்பொதுமை போன்றன தமிழ் சொல்லும் பண்புநலம்.
இவைகளை உள்ளடக்கி இருக்கும் தமிழ் மொழி அவற்றைச் சொல்லும் விதத்திலும் வசீகரத்தைக் கொண்டிருக்கிறது.

அழகியல் என்பது தமிழின் ஒவ்வொரு அம்சத்திலும் மிளிர்வது. அதற்கு அது எடுத்துக் கொண்ட ஓர் உத்தி அணி என்பதாகும். அணி என்றால் அழகு என்று பொருள். அணியின் இலக்கணம் கூறும் நூல் தண்டி அலங்காரம் ஆகும். மொழியை; அதன் உள்ளடக்கத்தை அழகுபடுத்தும் அணிகளைப் பற்றி அது பேசுகிறது.

நாம் கடற்கரையின் ஓரத்தில் நின்று சிப்பிகளைப் பொறுக்கும் ஒரு முயற்சியாக மாதம் ஒருதடவை மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அணிகளின் தமிழ் அழகுகளை காண்போம்.

Thursday, July 9, 2020

தமிழ் துமி(ளி) - அறிந்ததும் பகிர்வதும் -

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை - அன்பே
உன்மேல் பிழை.....

என்று கவிஞர் தாமரையின் கவி வரிகளுக்கு திரைக்கலையில் ஓர் இசைவடிவம் கிடைத்திருக்கிறது. இந்தப் பாடலில் நெஞ்சுக்குள் ஒரு மாமழை பெய்கிறது.

தமிழ் இலக்கியத்திலோ ஒரு மா அலை அடிக்கிறது; ஐங்குறு நூறு காதலன் ஒருவனுக்கு. சங்க காலத்து மனிதனின் காதல் இது.

ஒண் தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே!
வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல் ஒலித் திரை போல,
இரவினானும் துயில் அறியேனே!

இதன் சுருக்கமான; வரட்சியான விளக்கம் என்னவென்றால் கடலிலே அலைகள் ஓய்வில்லாமல் சத்தம் போட்டு இரைந்த படி இருக்கும். அது போல பெண்ணே, உன்னால் என் மனமும் இரவெல்லாம் நித்திரை இன்றி அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.

இதனை இப்படியே பார்த்து விட்டு எளிதாகக் கடந்து போய் விடலாம். அப்படி போய் விட்டால் அது சாதாரண கண். அதனுள்ளே ஒரு அழகியல், அருமை பெருமை ஒரு காட்சி எல்லாம் ஒளிந்து போயுள்ளது. அதனைக் காணும் போது தான் கவியுள்ளம் கவி இன்பத்தைப் பெறுகிறது. அந்த இன்பம் என்ன என்பதைச் சற்று பார்ப்போமா?

அது எல்லாம் சரி, பாடலுக்குள்ளே போகு முன், அது என்ன ஒண்தொடி? ஒண்தொடி என்பது ஒளிபொருந்திய வளையல் என்பதாகும். திருக்குறளிலே கூட அப்படி ஓர் இடம் வரும். காமத்துப் பாலில் 1101 வது குறள் அது!

’கண்டு,கேட்டு, உண்டு,உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள’

என்பார் வள்ளுவனார். கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாலாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன. என்று மு. வரதராசனார் அதற்கு உரை எழுதியுள்ளார்.

இங்கும் அதே ஒளிபொருந்திய வளையல் அணிந்த பெண் தான் இந்த ஐங்குறு நூற்றுப் பெண்ணும். இந்தப் பெண்ணை குறிப்பாக ‘அரிவை’ என்கிறான் காதலன். ஒரு குறிப்பான கூற்று அது. 

அது என்ன அரிவை வகைப்பாடு? அங்கு தான் தமிழின் இன்னொரு நுட்பமான அழகு வெளிப்படுகிறது. பெண், ஆண் அகிய பாலினங்களில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வளர்ச்சிப் பருவங்களை சங்கத் தமிழ் 7 பருவங்களாகப் பிரித்துள்ளது. பெண் வளர்ச்சிப் பருவம் 

‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’ ’’ 221

‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’ ’’ 222

‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத் திரண்ட பதினா லளவும் சாற்றும்.’ ’’ 223

‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத் திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’ ’’ 224

‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’ ’’ 225

‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’ ’’ 226

‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36) பேரிளம் பெண்டுக்கு இயல்பு என மொழிப.’ ’’ 227 என்கிறது பன்னிரு பாட்டியல். 

அதன் படி இந்த ஒளி பொருந்திய வளையல் அணிந்த பெண் 19 - 24 வயதுக்கிடைப்பட்ட இளம் பெண்ணாவாள். இப்போது நம்மால் ஒளி பொருந்திய வளயல்கள் அணிந்த ஓர் இளம் பெண் நம் மனக் கண்ணில் தெரிகிறாள் அல்லவா? இவள் தான் ஐங்குறு நூற்றுக் காதலனின் மனம் கவர்ந்தவள். இப்போது அவளை நாங்கள் கண்டு விட்டோம். இனி அவலைக் கண்டதனால் அவன் மனம் படும் பாடு என்னவென்று நாம் அறிய வேண்டாமோ? 

. இப்படியாக ஒண்தொடி அரிவை என்றவன்  மேலும் சொல்கிறான், ‘வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண் உரவுக் கடல் ஒலித் திரை போல,..’ என்கிறான். இங்கு தான் பாண்டி நாட்டுக் கடற்கரையின் இயல்பு சொல்லப்படுகிறது. தொண்டி நாடு என்பது பாண்டிய நாட்டுக் கடற்கரை பட்டிணங்களிலே ஒன்று. தற்போதய தமிழகத்து இராமநாதபுர மாவட்டத்தில் இந்த இடம் அமைந்துள்ளதாக ஒரு குறிப்புச் சொல்கிறது. 

இந்தக் கடற்கரை பட்டிணத்திலே வண்டுகளின் ரீங்காரம் எப்போதும் கேட்ட படியாக இருக்கிறது. அலைகளோ எந்த நேரமும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இரைந்து கொண்டே இருக்கிறது. இங்கு ஒரு காட்சி ஒன்று படிமமாக நம் மீது படிந்து விடுகிறது இல்லையா?. ஒரு விதமாக வண்டுகள் ரீங்காரம் செய்கிற;
அலைகள் ஓய்வு  இல்லாமல் இரைச்சல் இட்டபடியே இருக்கிற; கடற்கரை காட்சி ஒன்று நமக்கு மனக்கண்ணிலே தெரிகிறதல்லவா?. வண்டுகளுக்கும் ஓய்வு இல்லை; கடல் அலைகளுக்கும் ஓய்வு என்பது இல்லை. இடைவிடாத சத்தம் Disturbance. அது.
அது போல என் நெஞ்சமும் துயில் இல்லாமல் ஒரு விதமான Disturbance இல் இருக்கிறது என்கிறான் இந்தக் காதலன்.

அட, நம்ம ஊருப்பா; நம்மட ஆக்கள். தமிழர்! பல நூற்றாண்டுகளுக்கு முன் நம் நிலத்தில் வாழ்ந்தவர்கள். நம் இனத்தார். அந்தக் காலத்து தமிழ் இளைஞன் அவன். அவனுடய காதல் உள்ளம் இது!

அன்றிலிருந்து இன்றுவரை இந்தக் காதல் தானே உலகத்தையே இயக்கிக் கொண்டு இருக்கிறது? இன்றய நூற்றாண்டுக் காதலனுக்கும் அதே உணர்வு தான். திரைக்கலை ஒன்று அதனை இப்படி இசையோடு தருகிறது.

அடி ஆத்தாடி ஒரு மனசொன்று ரெக்கை கட்டி பறக்க,
 அடி அம்மாடி ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா? என்கிறது இந்தக் காதல்.