Tuesday, November 24, 2020

தற்குறிப்பேற்ற அணி - 10 - ( 26.10.2020 )

   கடந்த மாதம் SBS வானொலியில் ஒலிபரப்பான ‘தற்குறிப்பேற்ற அணி’ குறித்த நிகழ்ச்சியினை இங்கு பதியத் தாமதமாயிற்று. மன்னிக்க.

SBS வானொலியில் தற்குறிப்பேற்ற அணி

    ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் அந் நிகழ்ச்சியில் எழுதியது முழுவதையும் இணைத்துக் கொள்ள முடியாத காரனத்தால் எழுதியதன் எழுத்துப் பிரதியினையும் இத்தோடு பிரசுரம் செய்கிறேன். 

சில நேரங்களில் இறுதி நேரங்களில் இடம்பெறும்    சமூக மாற்றங்கள்      நிகழ்ச்சியிலும் இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட வேண்டி   வரும். இதிலும் அப்படித்தான். இந் நிகழ்ச்சி நடந்த போது சிறந்த பின்னணிப்பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் காலமாகி இருந்தார். அவரால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டதாக அமையப்பெற்ற இந் நிகழ்ச்சியில் அவரை நினைவு கூர்ந்தது மிக்க மன நிறைவைத் தந்த ஓர் தற்செயல் நிகழ்ச்சி!    

.......................................

          தற்குறிப்பேற்ற அணி            

அணிகளின் வரிசையிலே இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது தற்குறிப்பேற்ற அணியாகும்.

தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன? 

கவிஞன் தான் கருதும் பொருளை இயல்பாக நடக்கும் பொருள் ஒன்றின் மேல் ஏற்றி பாடுவது தற்குறிப்பேற்ற அணியாகும். உதாரணமாக

https://www.youtube.com/watch?v=1eTFoIwr74w

இளையநிலா பொழிகிறதே..

இளைய நிலா பொழிகிறதே பாடல்

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ….

இப்பாடல் வரியில் முகில் அலைவதும் அது மழையாகப் பொழிவதும்  இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சி. அதற்கு கவிஞன் தான் கருதும் ஒரு காரணத்தை கற்பித்து இதனால் தான் இது என்று புது அர்த்தம் கற்பிப்பதை தற்குறிப்பேற்ற அணி என்று சொல்லலாம். 

“பெயர் பொருள் அல்பொருள் எனஇரு பொருளினும்

இயல்பின் விளை திறனன்றி அயலொன்று

தான் குறித்தேற்றுதல் தற்குறிப் பேற்றம்”(தண்டி-56 ) என்று தற்குறிப்பேற்ற அணிக்கு இலக்கணம் சொல்லும் தண்டியலங்காரம்.

அதாவது பெயரும் பொருள், பெயராத பொருள் என்னும் இருவகைப் பொருளிலும் இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒழித்து, கவிஞர் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை அவற்றின் மீது ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.

இந்த அணியைப் பயன் படுத்தி தமிழ் இலக்கியங்கள் பல இடங்களில் சிறப்புப் பெற்றிருக்கிறது. சங்க இலக்கியங்களில் இருந்து, சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம், நளவெண்பா, முத்தொள்ளாயிரம் என்று தமிழ் இலக்கியங்கள் இத் தற்குறிபேற்ற அணியினால் தம்மை அலங்காரம் செய்து கொண்டிருப்பது காணும் தோறும் களிப்பு தர வல்லது. நம் நவீன திரைக்கலைக் கவிஞர்களும்

https://www.youtube.com/watch?v=tOkFty1_Umk

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

பூவில் வண்டு கூடும் பாடல்

https://www.youtube.com/watch?v=-K178KOmy2k

நீதானே எந்தன் பொன் வசந்தம் ( 2.08 – 2.17)

நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடல்

https://www.youtube.com/watch?v=Nt-0Oj-vfbo

நதியில் ஆடும் பூவனம்

நதியில் ஆடும் பூவனம் பாடல்

https://www.youtube.com/watch?v=OOE8Ogxrqo4

இது ஒரு நிலாக்காலம்

இது ஒரு நிலாக் காலம் பாடல்

https://www.youtube.com/watch?v=yIPxZtuUb0k

பூவே இளைய பூவே

பூவே இளைய பூவே பாடல்

என்று இப்படிப் பலவாக இந்த அணியை நன்கு பயன்படுத்தி உள்ளனர். 

இப்படியாக நீளும் திரை இசையின் வரிசையில் வரும் இந்தப்பாடல் முழுக்க முழுக்க தற்குறிப்பேற்ற அணியை கையாண்டு புனையப்பட்டிருப்பது மேலும் இவ்வணிக்கு அழகு சேர்ப்பது.

https://www.youtube.com/watch?v=GmYlUUNn6fw

வானமெங்கும் தங்க விண்மீன்கள் 

வானமெங்கும் தங்க விண்மீன்கள் பாடல்

கவிஞருடய கற்பனை உள்ளமும் அவர் தம் ஆற்றலும் வெளிப்பட இவ்வணி பலவாறாக துணை செய்திருக்கிறது இப்பாடல்கள் வழி நாம் அறிந்திருப்போம். அதனை இலக்கியங்கள் தோறும் கூட கண்டு கண்டு களிப்புறலாம்.

முத்தொள்ளாயிரத்துக் காட்சி ஒன்று இது.

யானைகள் போர்க்களத்தில் பகைவர்களின் மார்புகளைக் குத்துதல் என்பது இயற்கையாக நடைபெறும் ஒன்று தானே?. ஆனால் இந்த யானைகளோ பகைவர்களின் மார்பினை ஓலையாக்கித் தங்கள் தந்தங்களை எழுத்தாணிகளாகக் கொண்டு, இந்நிலம் எம்மன்னனனுக்கே சொந்தம் என்று எழுதுவதாகக் கவிஞர் தன் குறிப்பினை அச் சம்பவத்தில் ஏற்றி,

“மருப்பூசியாக மறங் கலைவேல் மன்னர்

உருத்தகு மார்பு ஓலையாகத் திருத்தக 

வையகம் எல்லாம் எமதென்று எழுதுமே

மொய்யிலைவேல் மாறன் களிறு” (முத்தொள்ளாயிரம் - பா.எண்-60)

என்று தற்குறிப்பேற்ற அணிக்கு அழகு செய்துள்ளார். அவ்வாறு  கவிஞர்கள் தற்குறிப்பேற்ற அணியை எழுத்தாணியாகவும் தம்கற்பனை வளத்தை கொண்டு தமிழ் இலக்கிய ஏடுகளை அழகாக்கிய தருணங்களை இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

இது முத்தொள்ளாயிரத்தில் வரும் இன்னொரு காட்சி.

சேரனின் நாட்டில் உள்ள வீடுகளின் வாசல் கதவுகளில் இருக்கிற கதவுக் குமிழ்கள் தேய்ந்து போய் கிடக்கின்றன. அது இயற்கையாக திறந்து திறந்து பூட்டுவதால் தேய்ந்து போன குமிழ்கள். ஆனால் கவிஞரின் கண்களுக்கோ அது வேறுவிதமாகப் புலப்படுகிறது.  அது ஒரு காட்சியாக கவிஞனுக்குத் தெரிகிறது. சேரமன்னன் தேரேறி பவனி வரும் போது மகள் கண்டால் அவளுக்கு காதல் நோய் வந்துவிடுமென தாய் கதவை தாழ் போடுகிறாளாம். மகளோ தாய் சென்றவுடன் தாள்பாழைத் திறக்கிறாள். அன்னை தாழ் போட மகள் தாழ் திறக்க காதல் பயிர் வளர குமிழ் தேய்கிறதாகத் தெரிகிறது கவிஞனின் கற்பனைக் கண்களுக்கு. தற்குறிப்பேற்ற அணியில் அது ‘தாயார் அடைப்ப, மகளிர் திறந்திட தேயத் திறந்த குடுமியவே’ என்று வருகிறது அவ்வரி.(முத்தொள்ளாயிரம் 10)

இனி நாம் நளவெண்பாவுக்கு போவோமா?. அங்கே ஒரு கடற்கரைக்காட்சி. நளன் கடற்கரை ஓரமாக நடந்து செல்கிறான். அரவம் கேட்டு நண்டுகள் கரையில் இருந்து கடலுக்குள் ஓடி மறைகின்றன. இது இயல்பாக நடைபெறும் காட்சி தான். ஆனால் கவிஞனுக்கோ அது வேறொரு விதமாகத் தெரிகிறது. தன் குறிப்பினை – தான் சொல்ல வந்த கருத்தினை அந் நிகழ்ச்சியில் ஏற்றி இவ்விதமாகச் சொல்கிறான்.

காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட

பாதகனை பார்க்கப் படாதேன்றோ – நாதம்

அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி

ஒளிக்கின்ற தென்னோ உரை. 

அதாவது, மனைவியை கானகத்தே தனியாக விட்டு விட்டு செல்லும் பாதகனைப் பார்க்கக் கூடாது என்று நண்டுகள் ஓடி ஒழிகின்றனவாம். என்பது கவிஞர் கையாண்ட சொல்லோவியம்.

இப்போது இராமாயணத்திலே ஓருகாட்சி காணப் போவோம். இராமன் வில் வளைத்துச் சீதையை மணக்க வேண்டி, விசுவாமித்திர முனிவருடனும், தம்பி இலக்குவனுடனும் மிதிலை மாநகரம் செல்கின்றான். அந்நகரத்து அருகில் செல்லும்போது, நகர் மதில் மேல் உள்ள கொடிகள் காற்றில் அசைந்தாடுகின்றன. கொடிகள் காற்றில் அசைந்தாடுவது இயல்பாக நிகழும் நிகழ்ச்சி தானே? ஆனால் கம்பருக்கோ, மதில் மேல் உள்ள கொடிகள் அசைந்தாடுவது, சீதையை விரைவில் வந்து மணம் புரியுமாறு இராமனைக் கை காட்டி அழைப்பது போல உள்ளது என்று தம் குறிப்பை கொடியில் மீதேற்றி கூறுகிறார். இதனை,

............ செழுமணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச்

செங்கண் ஐயனை ஒல்லை வா 

என்று அழைப்பது போன்றது என்கிறார்.

இது போல ஒரு காட்சியினை நாம் சிலப்பதிகாரத்திலும் காணலாம். ’போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட’என்கிறார் அங்கு இளங்கோ. 

அதாவது, அங்கு கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருகிறார்கள். வருகிற போது மதுரையின் மதில்கள் மேல் கொடிகள் இயல்பாக அசைகின்றன. அதனை  இளங்கோ அடிகள் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் அதனால் வராதே வராதே என சொல்வதைப் போல அசைகின்றன என்று தன் குறிப்பினை கொடி அசையும் இயல்பின் மீது ஏற்றிக் கூறுவது அறிந்து கொள்ளத்தக்கது. 

வானவில்லின் எழில் கோலம் ஒன்று முத்தொள்ளாயிரம் தந்த புலவனுக்கு இப்படியாக தெரிகிறது. அண்ணாந்து பார்க்கின்றான் புலவன். வானில் வர்ணங்களின் ஜாலமாக வானவில் தெரிகிறது. அதனைக் கண்ட புலவனின் கற்பனை வேறுவிதமாக ஓடுகிறது. சேரனுக்கு அஞ்சித் தான் விண்ணவர் சேரனின் கொடியான விற்கொடியினை  அங்கு அழகாக வரைந்து வைத்துள்ளனர் என்று, 

“வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் 

வில் எழுதி வாழ்வார் விசும்பு”(முத்தொள்ளாயிரம் - பா.எண்-5)

என்ற பாடல் வரிகளில் பதிந்து வைத்துள்ளார். மழைபெய்து முடித்தவுடன் வானில் வானவில் தோன்றுவது இயற்கை. ஆனால் சேரனின் வீரச்சிறப்பைப் பறை சாற்ற புலவர் வலிமையிற் சிறந்த வானோர் கூட சேரனுக்கு அஞ்சி, அவனுக்குப் பணிந்து திறை செலுத்தி அவன் சின்னமாம் விற்கொடியினை வரைந்து அவனை மகிழ்விக்கின்றனர் என்று உலகில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிப் பாடியுள்ளார்

https://www.youtube.com/watch?v=Ux0LERGc1cc

இது ஒரு பொன்மாலைப்பொழுது

இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல்

இப்படி ஒரு வானவில்லைக் கண்ட நாம் இடிமுழங்கி மழைபொழியும் காட்சி ஒன்று ஒரு பக்தனுக்கு எப்படி தெரிகிறது என்று பார்க்காமல் போக முடியுமா? இது ஓர் தமிழ் பக்தி இலக்கியக் காட்சி.

முன் இக் கடலைச் சுருக்கி, எழுந்து, உடையாள்

என்னத் திகழ்ந்து, எம்மை ஆள் உடையாள் இட்டு இடையின்

மின்னிப் பொலிந்து, எம் பிராட்டி திரு அடிமேல்

பொன்னம் சிலம்பில் சிலம்பி, திருப் புருவம்

என்னச் சிலை குலவி, நம் தம்மை ஆள் உடையாள்

தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு

முன்னி, அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே

என்னப் பொழியாய், மழை ஏல் ஓர் எம்பாவாய்!

மாணிக்க வாசகருக்கு  வானத்திலே ஒரு காட்சி தெரிகிறது. அது மழை வரப்போகிற காட்சி. வானில் கருமேகம் சூழ்ந்து மின்னல் வெட்டுகிறது, இடி இடிக்கிறது, மழை பொழிகிறது, வானவில் தோன்றுகிறது, அது அவருக்கு 

மேகமே, நீ முதலில் இந்தக் கடலைக் குடித்துச் சுருக்கினாய், பிறகு மேலே எழுந்தாய், உமையின் கருமேக  நிறத்தைப் பெற்றுத் திகழ்ந்தாய். பிறகு எங்களை ஆளும் உமையின் சின்ன இடையைப்போல் அழகிய மின்னல்களை வெட்டினாய். உமையின் பாதங்களில் உள்ள தங்கச் சிலம்பைப்போல் இடிச் சத்தம் செய்தாய். நீ வரையும்  வண்ண வானவில்லோ உமையின் அழகிய புருவத்தைப்போல் தோன்றுகிறது. எங்களை ஆட்கொள்ளும் அந்த உமையவளை எப்போதும் பிரியாதவன் சிவபெருமான். அந்தச் சிவனுடைய அன்பர்கள் கேட்பதற்கு முன்பாகவே உமை அள்ளி அள்ளித் தருகின்ற அருளைப்போல, நீயும் மழையாகப் பொழிகிறாய்!

என்பதாகத் தோன்றுகிறது. 

இப்படி ஒரு மழைக்காட்சி இன்றய கவிஞர் உள்ளத்தில் அந்திமழையாக தற்குறிப்பேற்ற அணியில் ஏறி இப்படி ஒலிக்கிறது.

https://www.youtube.com/watch?v=iNi4SNm2RIo

அந்திமழை பொழிகிறது

அந்திமழை பொழிகிறது பாடல்

இப்போது பெய்த இந்த இலக்கிய மழையில் நனைந்த படியே சிலப்பதிகார காட்சி ஒன்றுக்கு வருவோமா?. இங்கு வைகைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கண்ணகி, கோவலன், கவுந்தியடிகள் மூவரும் ஒரு படகொன்றில் ஏறி வையை ஆற்றைக் கடந்து மதுரை மாநகர் செல்கின்றனர். இரு மருங்கிலும் சோலைகளில் உள்ள மரங்கள் உதிர்த்த மலர்களைச் சுமந்து கொண்டு வையை பெருகி ஓடுகிறது.அது இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி. ஆனால் அதனை இளங்கோவடிகளோ அது கண்ணகிக்கு வரப் போகும் துன்பத்தை அவ் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி முன்பே அறிந்தவள் போல வருந்தி அழுத கண்ணீரே ஆறாக ஓடுகிறது என்றும்; அதனைப் பிறர்க்குத் தெரியாமல் மறைக்க வேண்டி மலர் ஆடை போர்த்துக் கொண்டு செல்கிறாள் என்றும் கற்பனை நயம் தோன்ற வேறு ஒரு குறிப்பை ஏற்றிக் கூறுகிறார். இதனை,

வையை என்ற பொய்யாக் குலக்கொடி

தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்

புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்

கண் நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி

(புறஞ்சேரி இறுத்த காதை,170-173)

என்ற அடிகளால் அறியலாம்

இப்படியாக மலர்களால் தம்மை மறைத்துக் கொண்டு ஓடும் வைகையைக் கண்டதும் முத்தொள்ளாயிரத்தில் இருக்கும் ஒரு மலர்காட்சி நினைவுக்கு வருகிறது. தற்குறிப்பேற்ற அணியினால் அலங்காரம் செய்யப்பட்ட அந்தப் பாடல் இது தான்.

கார்நறு நீலம் கடிக்கயத்து வைகலும்

நீர்நிலை நின்ற தவம்கொலோ – கூர்நுனைவேல்

வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்

கொண்டிருக்கப் பெற்ற குணம்.(75)

கார் காலம். நல்ல மணம் கொண்ட நீல நிறக் குவளைப் பூ தினந்தோறும் நீர்நிலையின் மத்தியில் நின்றபடி தவம் செய்கிறது. எதற்காக? கூரான நுனி கொண்ட வேலை ஏந்தியவன், வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்தவன், விரைந்து செல்லும் குதிரையைக் கொண்டவன், பாண்டியன் வழுதியின் மார்பைச் சேரும் பெருமைக்காகதான் அந்தக் குவளை மலர் தவம் இருக்கிறதோ?

சாதாரணமாகக் குளத்தில் நிற்கிறது குவளை மலர். அதன்மீது ‘பாண்டியன் மார்பைச் சேர்வதற்காகத் தவம் செய்கிறாயோ’ என்று புலவர் தன்னுடைய குறிப்பை / கற்பனையை ஏற்றிச் சொல்வதால் இந்தப் பாடல் தற்குறிப்பேற்ற அணியில் அமைந்துள்ளது. இந்தப் பாடலின் மையக் கருத்தைச் சற்றே நீட்டி இன்றய கவிஞர் வைரமுத்து இப்படியாகச் சொல்வார்.

https://www.youtube.com/watch?v=CTkKDJNOUjI 

வெள்ளிமலரே, ( 1.11 – 2.00 )

வெள்ளி மலரே பாடல்

யசோதா.பத்மநாதன். 20.06.2020.


Saturday, November 14, 2020

நேர்ஸிங் ஹோம்

 இப்படி ஒரு வார்த்தைப் பிரயோகம் தமிழ் பண்பாட்டுக்குள் அண்மையில் புகுந்த ஒன்றுதான். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் வெளிநாட்டு வாழ்க்கையும் பணத்தை மையமாகக் கொண்ட நுகர்வுக்கலாசாரமும் புகுந்துவிட்டபின் தமிழ் பண்பாடு சார்ந்த வாழ்வு என்பது சின்னாபின்னப்படுத்தப்பட்டு விட்டது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் நகர் புறங்களில்...

அதனால் 70, 80 களில் இருக்கின்ற வயதானவர்களுக்குத் தான் இந்தத் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் இத்தகைய கலாசார மாறுதல்களுக்குப் பழக்கப்படாது வாழ்ந்துவிட்டவர்கள். பிள்ளைகள் தம்மைக் கடசிவரை கைவிடாது காப்பாற்றுவார்கள் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். வயோதிபமும் அந்த நம்பிக்கையும் அவர்களைக் கைவிடும் போது அவர்கள் துவண்டு போவது வருத்தம் தருவது.

இந்த வாழ்க்கை முறை நம்மை வந்தடைந்து பலவருடங்கள் ஆயிற்று. எனினும், நாம் இன்னும் அதனை ஒரு சொல்லத் தகாத வார்த்தையாக; பிரயோகிக்க தயங்கும் ஒரு வார்த்தையாக; கேட்க விரும்பாத ஒரு சொல்லாக அதனை நாம் பரிபாலித்து வருகிறோம். 

குறிப்பாக 50களில் இருக்கிறவர்கள் இவை குறித்து இனி வெளிப்படையாகப் பேச முன்வரவேண்டும். நடைமுறை வாழ்க்கையினையும் அதில் இருக்கும் நன்மை தீமைகளையும் அலசி ஆராய்ந்து இன்னொருவரில் - அது தன் சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் கூட அவர்களுக்கு வயோதிபத்தில் பாரமாக இல்லாது தமக்கான பாதையை முதலிலே தீர்மானித்து அதற்கேற்ப தம் மனதை அதில் எழும் எண்ணங்களை மறுபரிசீலனை செய்து தம்மைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிள்ளைக்கு நான் என்ன எல்லாம் செய்தேன்! அவர்கள் என்னைப் பார்க்க வேண்டியது அவர்களது கடமை என்ற விதமான எண்ணப்பாங்கையும் தங்கியிருத்தல் போன்ற இன்னொருவருக்கு பாரமாக இருக்கும் காரியத்தைப் பற்றியும் நாம் இனி சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

மேலும் ஒரு வயோதிபர் ஒருவர் நேர்ஸிங் ஹோமில் இருக்கிறார் என்றால் அவரை ‘பாவமாய்’ பார்க்கும் தன்மையையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

நேர்ஸிங் ஹோம் கள் நன்றாகவே செயற்படுகின்றன. உயர்தர சேவைகளை சொந்தப் பிள்ளைகளை விட தரமானதாக வழங்குகிறார்கள். துறைசார்ந்த வல்லுனர்கள் அங்கு 24 மணி நேரமும் செயற்படுகிறார்கள். இதனை நாம் ஏன் இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறோம்? ஏற்றுக்கொள்ள இயலா மன முரண்களோடு அல்லாடுகிறோம்?

பார்க்க ஒருவர் இல்லாத போது, பாதுகாப்பும் சிறந்த  24 மணி நேர சேவையும் வழங்கும் இத்தகைய இடங்களில் பெற்றோரை பிள்ளைகள் விடுவதென்பது பிள்ளை மீதான ஒரு  குற்றப்பார்வையாக பார்க்கப்படுவது ஏன்?

இன்னும் ஒரு 10 வருடத்தில் நான் சென்று தங்க ஏற்ற ஒரு நேர்ஸிங் ஹோமை நான் இப்போதே தெரிவு செய்து விட்டேன். அது தனி அறையாக; தனியான குளியலறை வசதிகளோடும் தமிழ் ஒலி/ஒளிபரப்புச் சேவை; தமிழ் உணவு வசதிகளோடும் 24 மணி நேரமும் தமிழில் உரையாடி வைத்திய வசதியைப் பெறத்தக்க தமிழ் வைத்தியர்கள் கொண்ட இடமாகவும், சொந்தமாகவே நகம் வெட்டுவோர், தலைமுடி திருத்துவோர், மருந்தகம் போன்ற வசதிகளை  தன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிறது அந்த மையம். உடற்பயிற்சி மையங்கள், நேர்ஸிங் வசதி மற்றும் ஒவ்வொரு நாளும் படுக்கை விரிப்புகள் மாற்றி தோய்த்து உலர்த்தி ஆடைகளை தரும் வசதிகளோடும் வேளைக்கு வேளை தமிழ் கலாசார நிகழ்வுகள் நடக்கும் இடமாகவும், பல தமிழ் வயோதிபர்கள் வாழும் மையமாகவும் அது இருக்கிறது. பொத்தானை அழுத்தியவுடன் பராமரிப்பாளர்கள் பெளவியமாக புன்னகையோடு வந்து என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள். தகுந்த செளகரிகங்களை அக்கறையோடு செய்து விட்டுப் போகிறார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக படு சுத்தமாக அளவான பொருட்களோடு பெரு நிலப்பரப்பில் கம்பீரமாக அது அமைந்திருக்கிறது.

 மாலை நேரங்களில் விளையாட, உரையாட வசதிகள் உள்ளன. தனியாகவோ கூட்டாகவோ முதியவர்கள் விளையாடத்தக்க விளையாட்டுகளாக அவை இருக்கின்றன. வேளா வேளைக்கு வண்டிலை உருட்டிக் கொண்டு தேனீர் வேண்டுமா பிஸ்கட் வேண்டுமா என்று கேட்கும் பணியாளர்களின் தமிழ் கேட்க மிக இனிமையாக இருக்கிறது.

அது எனக்கு பெருத்த ஆறுதலைத் தருவதற்கு இன்னொரு காரணம் அது எம் ஓய்வூதிய வருவாயில் 85 % ஐ மட்டுமே இவற்றுக்காகப் பெற்றுக் கொள்ளுகிறது என்பதும் தான்.

இனி நேர்ஸிங் ஹோம் பற்றி புதிய ஓரு விழிப்புணர்வு வர வேண்டும். 

அது சென்று சேர ஏற்ற ஓர் இடம் தான்.

யார் யாரெல்லாம் வருகிறீர்கள்? :)

இனி ஒரு பின்னிணைப்பு:

அண்மையில் வாசிக்கக் கிடைத்த ’கனலி’ இதழ் இம்முறை யப்பானிய மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக பிரசுரமாகி இருக்கிறது. அருமையான அவர்களின் இந்தப் பிரயத்தனம் மிக்க நேர்த்தியோடும் சிறப்பாகவும் தமிழை வந்தடைந்திருக்கிறது. 

அதில், வெளிவந்துள்ள  யப்பானிய மொழிபெயர்ப்புக் கவிதைகள் சிலவற்றை இங்கே பகிரத்தோன்றியது. பகிரவும் சேகரிக்கவும் ஏற்றவையாக அவை இருக்கின்றன.

1.

இலட்சியத்துடன் இருப்பது 

களைப்பூட்டுவதாக இருக்கிறது.

தன்னைத்தானே பார்த்துக் கொள்ளட்டும் 

என்று விட்டு விட்டேன் இந்த உலகத்தை.

எனது சேமிப்பில் பத்து நாளுக்கான அரிசி

கணப்பு அடுப்புக்கருகே ஒரு கட்டுச் சுள்ளி இருக்கிறது.

இனி எதற்கு ஞானத்தையும் மாயையும் பற்றிப் புலம்ப வேண்டும்?

கூரையில் விழும் இரவு மழையை கவனித்தபடி

கால் இரண்டையும் நீட்டிக் கொண்டு

செளகரிகமாக அமர்ந்திருக்கிறேன்.

........................

2.

இந்தப் புதையலை மூங்கில் புதரில் இருந்து கண்டுபிடித்தேன்.

கிண்ணத்தை ஊற்று நீரில் கழுவி,

பின்பு அதனைச் சரி செய்தேன்.

காலைத் தியானத்திற்குப் பிறகு, எனது

கஞ்சியை அதில் எடுத்துக் கொள்கிறேன்.

இரவில் எனக்கு அது வடித்த சாற்றையோ சோற்றையோ தரும்.

கீறலுற்றது; உடைந்தது; வானிலையால் தாக்கப் பட்டது; நெளிந்தது.

இருந்த போதிலும் அது என்னுடய

மேன்மை மிக்க கையிருப்பு.

( Ryokan 1758 - 1821) 

.....................

அவ்வளவு நின்மதி இந்தப் புத்தாண்டில். 

மனம் காலியாயிருக்கிறது

ஏதோ என் ஒட்டுமொத்த கடந்த காலமும்

மறைந்து விட்டதைப் போல!

( Takuboku Ishikawa 1886 - 1912 )


1. 

காத்திருப்பது எதற்காக?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும்

குவிந்து கொண்டிருக்கின்றன

நிறைய உதிர்ந்த இலைகள்

.....

2.

மலையின் மெளனத்திற்கு மேலே

அமைதியான மழை!

(  taneda Santoka 1882 - 1940)


மொழிபெயர்ப்பு: வே.நி. சூர்யா. நன்றி கனலி)

 இணைப்புக்கு கனலி இங்கே அழுத்துங்கள்.