Saturday, November 14, 2020

நேர்ஸிங் ஹோம்

 இப்படி ஒரு வார்த்தைப் பிரயோகம் தமிழ் பண்பாட்டுக்குள் அண்மையில் புகுந்த ஒன்றுதான். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் வெளிநாட்டு வாழ்க்கையும் பணத்தை மையமாகக் கொண்ட நுகர்வுக்கலாசாரமும் புகுந்துவிட்டபின் தமிழ் பண்பாடு சார்ந்த வாழ்வு என்பது சின்னாபின்னப்படுத்தப்பட்டு விட்டது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் நகர் புறங்களில்...

அதனால் 70, 80 களில் இருக்கின்ற வயதானவர்களுக்குத் தான் இந்தத் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் இத்தகைய கலாசார மாறுதல்களுக்குப் பழக்கப்படாது வாழ்ந்துவிட்டவர்கள். பிள்ளைகள் தம்மைக் கடசிவரை கைவிடாது காப்பாற்றுவார்கள் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். வயோதிபமும் அந்த நம்பிக்கையும் அவர்களைக் கைவிடும் போது அவர்கள் துவண்டு போவது வருத்தம் தருவது.

இந்த வாழ்க்கை முறை நம்மை வந்தடைந்து பலவருடங்கள் ஆயிற்று. எனினும், நாம் இன்னும் அதனை ஒரு சொல்லத் தகாத வார்த்தையாக; பிரயோகிக்க தயங்கும் ஒரு வார்த்தையாக; கேட்க விரும்பாத ஒரு சொல்லாக அதனை நாம் பரிபாலித்து வருகிறோம். 

குறிப்பாக 50களில் இருக்கிறவர்கள் இவை குறித்து இனி வெளிப்படையாகப் பேச முன்வரவேண்டும். நடைமுறை வாழ்க்கையினையும் அதில் இருக்கும் நன்மை தீமைகளையும் அலசி ஆராய்ந்து இன்னொருவரில் - அது தன் சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் கூட அவர்களுக்கு வயோதிபத்தில் பாரமாக இல்லாது தமக்கான பாதையை முதலிலே தீர்மானித்து அதற்கேற்ப தம் மனதை அதில் எழும் எண்ணங்களை மறுபரிசீலனை செய்து தம்மைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிள்ளைக்கு நான் என்ன எல்லாம் செய்தேன்! அவர்கள் என்னைப் பார்க்க வேண்டியது அவர்களது கடமை என்ற விதமான எண்ணப்பாங்கையும் தங்கியிருத்தல் போன்ற இன்னொருவருக்கு பாரமாக இருக்கும் காரியத்தைப் பற்றியும் நாம் இனி சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

மேலும் ஒரு வயோதிபர் ஒருவர் நேர்ஸிங் ஹோமில் இருக்கிறார் என்றால் அவரை ‘பாவமாய்’ பார்க்கும் தன்மையையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

நேர்ஸிங் ஹோம் கள் நன்றாகவே செயற்படுகின்றன. உயர்தர சேவைகளை சொந்தப் பிள்ளைகளை விட தரமானதாக வழங்குகிறார்கள். துறைசார்ந்த வல்லுனர்கள் அங்கு 24 மணி நேரமும் செயற்படுகிறார்கள். இதனை நாம் ஏன் இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறோம்? ஏற்றுக்கொள்ள இயலா மன முரண்களோடு அல்லாடுகிறோம்?

பார்க்க ஒருவர் இல்லாத போது, பாதுகாப்பும் சிறந்த  24 மணி நேர சேவையும் வழங்கும் இத்தகைய இடங்களில் பெற்றோரை பிள்ளைகள் விடுவதென்பது பிள்ளை மீதான ஒரு  குற்றப்பார்வையாக பார்க்கப்படுவது ஏன்?

இன்னும் ஒரு 10 வருடத்தில் நான் சென்று தங்க ஏற்ற ஒரு நேர்ஸிங் ஹோமை நான் இப்போதே தெரிவு செய்து விட்டேன். அது தனி அறையாக; தனியான குளியலறை வசதிகளோடும் தமிழ் ஒலி/ஒளிபரப்புச் சேவை; தமிழ் உணவு வசதிகளோடும் 24 மணி நேரமும் தமிழில் உரையாடி வைத்திய வசதியைப் பெறத்தக்க தமிழ் வைத்தியர்கள் கொண்ட இடமாகவும், சொந்தமாகவே நகம் வெட்டுவோர், தலைமுடி திருத்துவோர், மருந்தகம் போன்ற வசதிகளை  தன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிறது அந்த மையம். உடற்பயிற்சி மையங்கள், நேர்ஸிங் வசதி மற்றும் ஒவ்வொரு நாளும் படுக்கை விரிப்புகள் மாற்றி தோய்த்து உலர்த்தி ஆடைகளை தரும் வசதிகளோடும் வேளைக்கு வேளை தமிழ் கலாசார நிகழ்வுகள் நடக்கும் இடமாகவும், பல தமிழ் வயோதிபர்கள் வாழும் மையமாகவும் அது இருக்கிறது. பொத்தானை அழுத்தியவுடன் பராமரிப்பாளர்கள் பெளவியமாக புன்னகையோடு வந்து என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள். தகுந்த செளகரிகங்களை அக்கறையோடு செய்து விட்டுப் போகிறார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக படு சுத்தமாக அளவான பொருட்களோடு பெரு நிலப்பரப்பில் கம்பீரமாக அது அமைந்திருக்கிறது.

 மாலை நேரங்களில் விளையாட, உரையாட வசதிகள் உள்ளன. தனியாகவோ கூட்டாகவோ முதியவர்கள் விளையாடத்தக்க விளையாட்டுகளாக அவை இருக்கின்றன. வேளா வேளைக்கு வண்டிலை உருட்டிக் கொண்டு தேனீர் வேண்டுமா பிஸ்கட் வேண்டுமா என்று கேட்கும் பணியாளர்களின் தமிழ் கேட்க மிக இனிமையாக இருக்கிறது.

அது எனக்கு பெருத்த ஆறுதலைத் தருவதற்கு இன்னொரு காரணம் அது எம் ஓய்வூதிய வருவாயில் 85 % ஐ மட்டுமே இவற்றுக்காகப் பெற்றுக் கொள்ளுகிறது என்பதும் தான்.

இனி நேர்ஸிங் ஹோம் பற்றி புதிய ஓரு விழிப்புணர்வு வர வேண்டும். 

அது சென்று சேர ஏற்ற ஓர் இடம் தான்.

யார் யாரெல்லாம் வருகிறீர்கள்? :)

இனி ஒரு பின்னிணைப்பு:

அண்மையில் வாசிக்கக் கிடைத்த ’கனலி’ இதழ் இம்முறை யப்பானிய மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக பிரசுரமாகி இருக்கிறது. அருமையான அவர்களின் இந்தப் பிரயத்தனம் மிக்க நேர்த்தியோடும் சிறப்பாகவும் தமிழை வந்தடைந்திருக்கிறது. 

அதில், வெளிவந்துள்ள  யப்பானிய மொழிபெயர்ப்புக் கவிதைகள் சிலவற்றை இங்கே பகிரத்தோன்றியது. பகிரவும் சேகரிக்கவும் ஏற்றவையாக அவை இருக்கின்றன.

1.

இலட்சியத்துடன் இருப்பது 

களைப்பூட்டுவதாக இருக்கிறது.

தன்னைத்தானே பார்த்துக் கொள்ளட்டும் 

என்று விட்டு விட்டேன் இந்த உலகத்தை.

எனது சேமிப்பில் பத்து நாளுக்கான அரிசி

கணப்பு அடுப்புக்கருகே ஒரு கட்டுச் சுள்ளி இருக்கிறது.

இனி எதற்கு ஞானத்தையும் மாயையும் பற்றிப் புலம்ப வேண்டும்?

கூரையில் விழும் இரவு மழையை கவனித்தபடி

கால் இரண்டையும் நீட்டிக் கொண்டு

செளகரிகமாக அமர்ந்திருக்கிறேன்.

........................

2.

இந்தப் புதையலை மூங்கில் புதரில் இருந்து கண்டுபிடித்தேன்.

கிண்ணத்தை ஊற்று நீரில் கழுவி,

பின்பு அதனைச் சரி செய்தேன்.

காலைத் தியானத்திற்குப் பிறகு, எனது

கஞ்சியை அதில் எடுத்துக் கொள்கிறேன்.

இரவில் எனக்கு அது வடித்த சாற்றையோ சோற்றையோ தரும்.

கீறலுற்றது; உடைந்தது; வானிலையால் தாக்கப் பட்டது; நெளிந்தது.

இருந்த போதிலும் அது என்னுடய

மேன்மை மிக்க கையிருப்பு.

( Ryokan 1758 - 1821) 

.....................

அவ்வளவு நின்மதி இந்தப் புத்தாண்டில். 

மனம் காலியாயிருக்கிறது

ஏதோ என் ஒட்டுமொத்த கடந்த காலமும்

மறைந்து விட்டதைப் போல!

( Takuboku Ishikawa 1886 - 1912 )


1. 

காத்திருப்பது எதற்காக?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும்

குவிந்து கொண்டிருக்கின்றன

நிறைய உதிர்ந்த இலைகள்

.....

2.

மலையின் மெளனத்திற்கு மேலே

அமைதியான மழை!

(  taneda Santoka 1882 - 1940)


மொழிபெயர்ப்பு: வே.நி. சூர்யா. நன்றி கனலி)

 இணைப்புக்கு கனலி இங்கே அழுத்துங்கள்.


No comments:

Post a Comment