Thursday, December 17, 2020

season's Greetings

 


செட்டைகளை உதிர்த்தபடி

உயரப்பறக்கின்றன பறவைகள்.

இலைகளை உதிர்த்தபடி

உயர்கின்றன மரங்கள்.


மலர்ந்தும் மறைந்தும் போகின்றன பூக்கள்.

கனிந்தும் பிறகு கரைந்தும் உதிர்கின்றன கனிகள்.


காலம் காய்த்த காட்சியென

உதிக்கின்றனர் சூரிய சந்திரர்.

நாட்களை உதிர்த்து 

நகர்கின்றன காலங்கள்.


பாலில் இருந்து நீரைப் பிரிக்கவும்

கடல்நீரில் இருந்து உப்பைப் பிரிக்கவும் 

அறிந்தே பிறக்கின்றன

அன்னமும் பென்குவினும்.


மழை,கார் இருட்டிலும்

கொப்பிழக்கப் பாய்வதில்லை மந்திகள்.


சூரியனை நோக்கி விழித்திருக்கும் புற்கள்

முறைப்பாடுகள் செய்வதில்லை.


சேவலின் கம்பீரம் பேட்டிடத்து இல்லை.

பசுவின் சாந்தம் காளையிடத்து இல்லை.

விரையும் குதிரைக்கு கொம்பு இல்லை

பாடும் குயிலுக்கு அழகில்லை

யானைக்குத் தன் பலம் தெரிவதில்லை

புறா தன் இணை பிரிவதில்லை.


சுயாதீனமாய் திரியும் உயிரினங்கள்

பருமனே இல்லை.


பாருங்கள்,

காலத்தால் அன்றி கனிவதே இல்லை 

பழங்கள் மரத்தில்.


சங்கு என்னவோ சுட்டாலும்

வெண்மையையே தருகிறது.


உலகப் பண்பாட்டையே

உருட்டி விளையாடுகிறது

கண்ணுக்கே தெரியாத 

நுண்ணுயிர் ஒன்று.


இலவசக் காட்சியென

வாழ்க்கைக் கோலங்களை

 விரித்து வைக்கிறது பிரபஞ்சம்.


பின்புறமாக பறக்கவல்ல

ஹம்மிங் பறவை,

மூன்று விழிமடல்கள் கொண்ட ஒட்டகம்,

விழி திறந்த படி தூங்கும் டொல்பின்,

கால்களால் சுவை அறியும்

வண்ணாத்திப்பூச்சி,

இரண்டு கண்களாலும் இரண்டு காட்சிகள்

காணும் ஓணான்,

பிறந்த நிமிடமே பறக்கும் தேனீ,

வெட்டும் துண்டுகளில் இருந்தெல்லாம் 

உயிர்க்கும் நட்சத்திரமீனெனெ

இவைகளெல்லாம் 

கற்றுக் கொடுக்கிறன 

வாழ்க்கை வினோதங்களை


அவரவர்க்கான வல்லமைகளையும் 

புதிர்மிக்க இரகசியங்களையும்

இதற்குள் எங்கோ தான்

ஒழித்து வைத்துள்ளது இயற்கை....


கற்றபடியும் பெற்றபடியும்

தொடர்கிறது வாழ்க்கை.


இன்னும்,

குழந்தை உயிரினங்கள்

தவழும் மடியிலெல்லாம்

 நிறைந்தே கிடக்கிறது

கடவுளின் புன்னகை.


நீரூற்றி, கவனித்து நட்ட விதைகள்

நலிவின்றித் தருகின்றன கனிகள்.

அவைகளின் விதைகளில்

துளிர்க்கின்றன விருட்சங்கள்.


கவனிப்பிலும் அன்பிலும் 

உயிர்க்கிறது உலகு.


season சிரிக்க 

சிந்துகிறது வாழ்க்கை!


Season's Greetings!



யசோதா.பத்மநாதன்

13.12.2020.

Sunday, December 6, 2020

ஆறு....

 அகம் நகுதல் - உள்ளம் உவகை கொள்ளுதல் - உள்ளம் புன்னகைத்தல் - இப்படி ஒரு சம்பவத்தை ஏதேனும் ஒரு முறையேனும் நிச்சயம் நாம் அனுபவம் செய்திருப்போம்.

உவகை கொண்ட தருணங்கள், அகம் நகை செய்த தருணங்கள் பல இன்றைக்கும் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. கடந்த வெள்ளிக் கிழமை நடந்த அகம் உவகை கொண்டு ஆறாக பெருகி ஓடிய தருணம் ஒன்று இது.



                      ஆறு

சில நாட்கள் உன் வகுப்புக்கு நான் வரவில்லை.

அடுத்த வகுப்புக்குள் நுழைந்த தருணம் ஒன்றில்

நீ ஓடி வந்து வழி மறித்தாய்.

விழியெல்லாம் ஆர்வத்தைக் கோலி

பதினெட்டுப் பற்களிலும் புன்னகை தேக்கி

'ஒன்றைத் தொடு' என்றாய்.

நீலம் என்றேன்.

மேலுமொன்றைத் தொடு என்றாய்

பூ ஒன்றைத் தொட்டேன்.

மேலும் ஒன்றைத் தொடப் பணித்தாய்.

இரண்டைத் தொட்டேன்.

ஆறைத் தொடு; ஆறைத் தொடு என்று துள்ளினாய்.

ஆறைத் தொட்டேன்.

அதை விரித்து,’யூ ஆர் த குயின்’

என்றதைச் சொல்லி விட்டு

பரட்டை மயிர் துள்ளித் துள்ளி விழ

குதித்தோடிச் சென்றாய்.


உன்பின்னால் பெருகி ஓடியது

ஆறு....