Monday, April 19, 2021

அன்றாட பாடங்கள்

 


தண்ணீர் சொல்லித் தருகிறது

நழுவிச் செல்வதெவ்வாறென


நெருப்பு அறிவுறுத்துகிறது

சுட்டெரித்தல் பற்றி


நிலம் தோண்டியும் பொறுமை காக்கும் பூமி

போதிக்கும் பாடம் 

நெருப்புக்கு எதிர்மாறு


காற்றோ, ஊதிப்பெருப்பித்தும்

வருடிக்கொடுத்தும்

நோகாமல் நகர்கிறது.


இறுதியாக,

எல்லாவற்றையும் 

பார்த்துக் கொண்டிருக்கும் 

ஆகாயத்தின் மீது தான்

கோபமாக சூரியனும்

குளிர்ச்சியாக சந்திரனும்

பவனி வருகிறது.


அன்றாட வாழ்வில்

படிக்கும் பாடங்கள் அநேகம்..


Sunday, April 18, 2021

மர்மங்கள்....



பாலில் இருந்து நீரைப் பிரிக்கவும்

கடல் நீரில் இருந்து உப்பை பிரிக்கவும்

அறிந்தே பிறக்கின்றன

அன்னமும் பென்குவினும்.


பிறந்தவுடன் கடல் நோக்கி வரவும் 

பை நோக்கி நகரவும் 

சொல்லித் தரவில்லை யாரும் என்ற போதும்,

அறிந்து கொண்டுள்ளன

ஆமை, கங்காரு குட்டிகள்


ஐந்தறிவுக் குழந்தைகளுக்குச்

 சொல்லிக் கொடுத்தது யார்?

பிறந்தவுடன் எழும்பவும் 

தாய்மடி தேடி பால்பெறவும்?


ஆதாம் ஏவாள் காதலுக்கும் 

சேய் கொண்ட தாய்மைக்கும் 

பாடம் சொல்லிக் கொடுத்ததில்லை யாரும்.


பழம் தந்து விதைபோட்டு வளரும் மரங்கள்

சொல்லித் தருகின்றன வாழ்வின் பாடல்களை!

பழம் தந்து வீழும் வாழையும்

விழுது விட்டு வாழும் விருட்சங்களும்

மெளன மொழியில் சொல்கின்றன

பூமியின் ரகசியங்களை!


முள்ளுள்ள றோஜா; வெள்ளைநிற பாரிஜாதம்

தண்ணீரோடு ஒட்டாமலே தண்ணீரில் வாழும் தாமரை

சொல்லும் பாடங்களும் படிக்க உகந்தன.


குழந்தை உயிரினங்கள் தவழும்

மடியிலெல்லாம்

உயிர்ப்பின்  புன்னகை நிறைந்து கிடக்கிறது.


கொன்று தின்னப் பணிக்கும் இங்கே தான்

தாய்மையின் உயிர்ப்பிலும் குழந்தைகள் பிறப்பிலும்

மறுபடி மறுபடி உயிர்க்கிறது உலகு.


சிப்பிக்குள் இருக்கிறது முத்து.

மண்ணுக்குள் இருக்கிறது வைரம்.

பெறத் தெரிந்த மனிதனுக்கு புரியவில்லை 

பிறப்பின் முன் பின்  மர்மங்கள் மட்டும்.


எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் இலைகளை எல்லாம்

கூட்டிப் பெருக்குகிறாள் சிறுமி.

எனினும்,

மீண்டும் மீண்டும் உதிர்கின்றன இலைகள்.


உலகப் பள்ளியில் அறிய உள்ளன

எண்ணற்ற இரகசியங்கள்....

Friday, April 16, 2021

பிரபஞ்சமும் மற்றும் ஓர் உண்மையும்

 

அண்மைக் காலமாக வாழ்க்கை குறித்த தத்துவார்த்த சிந்தனைகள் மனதில் உதித்த வண்ணமாக இருக்கின்றன.

மனம், அதில் உதிக்கும் எண்ணங்கள், அவை வாழ்க்கையை வழிநடத்தும் வலிமை - மற்றும் அதன் பின்னால் ஏதேனும் ஓர் சக்தி உண்டா என்பது குறித்தவையாக அவை இருக்கின்றன.

காலா காலமாக சமயங்களும் தத்துவவாதிகளும் பேசி வருபவை தான் அவை என்ற போதும்,  அந்த முன்னோரின் சித்தனைகள் எல்லாவற்றையும் சற்றே நகர்த்தி வைத்து விட்டு, சொந்த அனுபவத்தின் வழியே சில விஷயங்களை புரிந்து கொள்ள விரும்பும் முயற்சி இது.

 கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், விஹாரங்கள், காவல் தெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகியன  வழி நடத்தும் சடங்குகள் ஆசாரங்கள் சமர்ப்பனங்கள், பூசைகளுக்கு அப்பால் உலகப் பண்பாடு; சான்றோரின் தத்துவ சிந்தனைகள், விஞ்ஞான தத்துவங்கள், கலைஞர்களின் எண்ண ஓட்டங்கள் ஆகியன  நம்முடய அனுபவங்களோடு ஒத்துழைக்கிறதா என்று பார்க்கும் முயற்சியின் ஒரு சிறு பகுதியாகவும் இதை கொள்ளலாம்.

 தினமும் காரோடிச் சலித்து, செய்த வேலையையே நாள்தோறும் திருப்பி திருப்பி செய்து சலித்து, பணத்தேவைகளும் அதிகமில்லாத போது, எதற்கிந்த வேலையும்  அநாவசிய பணமும்? எதற்கிந்த அநாவசிய சிரமங்கள்? அதிலும் வயதான பெற்றோர் எனக்காகக் காத்திருக்கும் போது...என்று நினைத்த சில மாதங்களில்  என் மனதுக்குகந்த; வேலை ஒன்று என் இரு கைகளுள்ளும் தானாக வந்து வீழ்ந்தது! முயற்சி எதுவும் செய்யாமலே.... 

இது போல மேலும் பல எண்ணங்கள் எனக்கு அவ்வாறே ஈடேறுகின்றன.

 உங்களுக்கும் இவ்வாறான அனுபவங்கள் சித்தித்திருக்கலாம்...

இது இவ்வாறிருக்க,

இந்த அநாவசியப் பணம் என்பது எம்மை தவறான பாதையில் வழிநடத்த வல்லதாகவும் இருக்கிறது. அது எம்மை ஆடம்பரம் நோக்கி நகர்த்துகிறது. காரணமில்லாமல் பொருட்களையும் வாங்கிக் குவிக்கிறோம்; ஒரு ’ரொயோட்டா’ கொண்டு சென்று விடும் தூரத்தைத் தான் ஒரு ’ஓடி’ காரும் கொண்டு சென்று விடுகிறது என்பதை மறந்து விட்டு, அந்த போலிப் பாத்திரத்தை அன்னாந்து வியந்து  பார்க்க நிப்பந்திக்கப் படுகிறோம். இரண்டு பேர் கூடும் போது பேசப்படும் உபயோகமற்ற பேசுபொருளாக அது ஆகி விடுகிறது என்பது ஒரு வேடிக்கையான விஷயமாக இருக்கிறது; வீடு பொருட்களால் நிறைகிறது. உதாசீனமும் கவனமின்மையும் வளர்கின்றன. ஒரு மமதை தன் ஆரவாரமின்றி பிறக்கிறது....தவறான பாதை ஒன்று நமக்கு செங்கம்பள வரவேற்பளிக்கிறது...

அளவுக்கதிகமான பணம் ஒரு சாபம். 

அதனை பாத்திரமறிந்து இட்டு விட வேண்டும்.

அது அங்கு உபயோகமாகுவதை காணும் போது மேலான மகிழ்ச்சியை தருகிறது என்பது அதிசயமான உண்மை.

கடனில்லா பெருவாழ்வும்; மனதுக்குகந்த சிறு தொழிலும்; நோய்கள் குடியேறா உடலும்; பூமிக்கு பாரமில்லா வாழ்வும்; கூட்டிப் பெருக்கி சுத்தமாக இருக்கும் ‘அகமும்’, பிடித்ததைச் செய்ய போதுமான நேரமும்; உண்மை அன்பினை; அக்கறையினை பகிரும் குடும்பமும் நட்பும் போதாதா என்ன? 

ஒரு கட்டத்தில் பணத்தை விட நேரமும் நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாக செலவு செய்கிறோம் என்பதும் தான் முக்கியமானதாகப் போகிறது....

மனம் நிறைந்த பின்னால், வேண்டிய எல்லாம் கிடைத்த பின்னால், பிறப்பின் இரகசியங்கள் நோக்கியும் உன்னத கலைகள் வெளிப்படுத்தும் அக மலர்ச்சி குறித்தும் மனம் நாட்டம் கொள்கிறது. அமைதியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் நம்மை பூரணமாக ஆட்கொள்ளும் போது மனம் மேலான எண்ணங்களில் சஞ்சரிக்கிறது. மெளனம் பரிமளிக்கிறது. அது மண்ணோடும் விண்ணோடும் நம்மைப் பிணைக்கிறது. உலகமே உன்னதமான ஒன்றாகத் தோன்றுகிறது. பூக்களோடும் மரங்களோடும் காய் கனிகளோடும் கூட ஓர் உறவு சித்திக்கிறது. கால் தொடும் புல்லின் ஸ்பரிசம் அத்தனை உன்னதமாக இருக்கிறது.  பிரபஞ்சத்தின் மீதான அன்பு பெருகுகிறது. உலக உயிரினங்களே நமக்கு நம் உறவுகளாகத் தோன்றுகிறது......

இதன் வழியாக நான் சொல்ல வருவது என்னவென்றால்,

 நண்பர்களே! 

இந்த பிரபஞ்சத்துக்கு என்று ஒரு சக்தி உண்டு. மனதுக்கும் எண்ணங்களுக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் நெருக்கமான பிணைப்பு என்று ஒன்றும் அதற்குள் உண்டு.  அது நம் மனம் மற்றும் எண்ணங்களோடு நமக்கு தெரியாமலே தொடர்பு கொள்ளுகிறது; பரிபாஷிக்கிறது;  நட்புறவோடு இருக்கிறது; வேண்டியதை கருணையோடு  நல்குகிறது.

நம்புங்கள்!!

‘மனம் போல மாங்கல்யம்’ என்று சொல்கிறார்கள்.

மேலும்,

‘நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்’ என்று சொல்வதெல்லாம் பொய்யில்லை தோழர்களே! 

அது உண்மைதான். 

நாம் வெறும் ஆரவாரங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

உலகமோ புரிந்து கொள்ளப்பட வேண்டிய இரகசியங்களால் நிறைந்து போயுள்ளது.

......................................

ஒரு சிறு பின்னிணைப்பு;

அண்மைய பயணம் ஒன்றின் போது ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பித்த ’வேத மந்திரங்கள்’ என்ற புத்தகத்தை வாங்கி வந்தேன். 

வேதம், வேதம் என்று சொல்கிறார்களே; மந்திரம் என்று இன்றும் சன்னிதானத்தின் கர்ப்பக்கிருகத்தில், கடவுளால் ஆசீர்வாதிக்கப்பட்ட குருமார்களால்  உச்சரிக்கப்படும் மாண்பு பெற்றிருக்கிறதே; தொன்மைபெற்ற வாழ்வு பற்றிய தத்துவ சிந்தனையின் கருவூலமாக அமைந்திருக்கிறதே; தேவபாஷை என்றழைக்கப்படும் செம்மொழியில் உச்சரிக்கப்படுகிறதே; அதில்  அப்படி என்னதான் சொல்லி இருக்கிறது என்று  அறிய விரும்பியது தான் வாங்கக் காரணம். 

படித்தேன்; எனினும் வேதங்களும் மந்திரங்களும் என்னை அதிகம் ஆகர்ஷிக்கவில்லை. பொதுவாக அவை ’நான் உனக்கு இதை தருகிறேன்; நீ எனக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் மந்தைகளையும் தா’ என்று கேட்கும் பண்டமாற்று வியாபாரம் தான் அங்கு அதிகம் நிலவுகிறது. 

இதனை விட மேலானவையாக தமிழ் தேவாரங்களும் பாசுரங்களும் விளங்குகின்றன என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது. அவை கடவுள் என்ற ஓர் அம்சத்தை போற்றித் துதி பாடுகின்றன. தத்துவங்களை தள்ளி வைத்து விட்ட பின்னாலும் தமிழ்மொழி பக்தியின் மொழியாகப் பொங்கி பொங்கி வழிகிறதை படித்து படித்து பரவசிக்கலாம்.

இருந்த போதும், ரிக் வேதத்தில் 5;51;11ஆவதாக வரும் இந்த சற்று வித்தியாசமான பாடலை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ( வேத மந்திரங்கள், விளக்கம் ஆசுதோஷானந்தர், இராமகிருஷ்ணமடம், 10ம் பதிப்பு, மயிலாப்பூர், சென்னை,  டிசெம்பர் 2017, பக்.357 )

‘ஸ்வஸ்திநோ மிமீதாம் ஸூக்தம்’ என்ற ரிக் வேத பகுதி இது. அதன் தமிழாக்கம் என்னவென்றால், ‘சூரிய சந்திரர்கள் வானில் தடையின்றி சஞ்சரிப்பது போல் நாமும் மேலான பாதையில் பாதுகாப்பாகப் பயணம் செய்வோம். நமக்கு மேன்மேலும் உதவி செய்பவர்கள், அமைதியை விரும்புபவர்கள், நம்மைத் தெரிந்து கொண்டு நினைத்துப் பார்ப்பவர்கள் ஆகியோருடன் இணைந்து செல்வோம்.’

( இதில் இணைக்கப்பட்டுள்ள ஒளிப்படம்  Nan Tien என்ற சிட்னியில், சீனர்களால் பரிபாலிக்கப்படும் புத்தவிஹாரம் ஒன்றில் 10.4.21 அன்று எடுக்கப்பட்டது. புத்த விஹாரத்தினால் நடத்தப்பட்ட கண்காட்சியின் போது மூன்றாவது இடத்தைப் பெற்ற இக் கலைப்படைப்பு,  வயர்களால் பின்னப்பட்ட ’மரமும் வேரும்’ என்ற பெயரில் வெளிப்புறமொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. )