Saturday, October 9, 2021

புலனும் கலையும்

 ” கண் என்பது புலன்

பார்ப்பது என்பது கலை”

ஜோர்ஜ். பார்க்கின்ஸ் என்பவர் சொல்லி இருப்பதாக அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அது எத்தனை உண்மை இல்லையா? கண் இருக்கிற எல்லோரும் ஒரு காட்சியை ஒரு மாதிரியாகவா பார்க்கிறார்கள்? 

ஒரு அழகான பூவை பார்க்கிற கவிஞன் அதைக் கண்டதும் கவிஞன் ஆகிறான். கதாசிரியன் தன் கதையை அப் பூக்களால் அலங்கரிக்கிறான். ஒரு ரசிகன் சற்றே நின்று அதன் அழகில் கிறங்கி அப்பால் செல்கிறான். ஒரு தாவரவியலாளனின் கண்ணோ அதன் மண்ணிலும் வளர்ச்சியிலும் பூவின் தோற்றத்திலும் கொண்டுபோய் அவனை நிறுத்துகிறது. ஒரு மூலிகை வைத்தியனுக்கு இது தன் மருத்துவத்துக்கும் பயன்படக்கூடுமா என்று நோக்கத் தோன்றும்.ஒரு வியாபாரிக்கு இதனை எப்படிச் சந்தைப்படுத்தலாம் என்று அறிய ஆவல் ஏற்படும். மூலிகைத் தைலம் தயாரிப்பவருக்கோ இதனை எப்படிக் கசக்கிப் பிளிந்து சாறெடுக்கலாம் என்று எண்ணம் ஓடும். 

ஆனால் அந்தச் செடியோ பூவினைப் பூப்பித்து தேனீக்களுக்கும் வண்ணாத்துப் பூச்சிகளுக்கும் மேலும் சில குருவிகளுக்குமாக புன்னகை இதழ் விரித்து அதன் பின்னே தேனையும் உள்ளூர ஒழித்து வைத்து காத்திருக்கும்.

அதனைப் பார்த்தும் பார்க்காமல் போகிற கண்களும் உண்டு. அதனை அப்போதே பறித்து கடவுளின் சன்னிதானத்திற்குக் கொண்டு சேர்ப்போரும் உண்டு. 

எதை எடுத்து யாருக்குக் கொடுப்பது? இல்லையா? தோட்டக்காறன் பூக்களைப் பறிக்க வரும் போது மொட்டுக்கள் சொல்லிக் கொள்ளுமாம். ’இன்று அவர்கள்; நாளை  நாங்கள்’.

இது ஒரு உதாரணம் தான். ’பார்க்கும் கலை’ நம் எல்லோருக்கும் வாய்க்க வேண்டும். கலைக்கு மாத்திரமல்ல; ஒருவரைக் கவனிப்பதாக இருந்தால் என்ன, ஒருவரோடு உரையாடுவதாக இருந்தால் என்ன, ஒருவருக்கு ஒன்றைச் செய்து கொடுப்பதாக இருந்தால் என்ன அதிலெல்லாம் ஒரு கலையம்சம், அக்கறை, முழுமன ஈடுபாடு இதெல்லாம் இருக்கவேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

 இப்போதெல்லாம் மக்களைப் பார்த்தால் இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய அவசரம் காட்டுகிறார்கள். நேரத்தை மிச்சம் பிடிப்பதாகவும், நேரமே இல்லாதது போலவும் ஒன்றிலும் ஆழமான பார்வை இல்லாது மேலோட்டமாக எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும் என்ற அவசரத்தோடு செய்து முடிப்பதில் முனைப்புக் காட்டுகிறார்கள். தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது கணணியில் வேறொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், சமையலின் போது தொலைக்காட்சி நாடகங்களில் கண்களையும் காதுகளையும் பொருத்திக் கொள்ளுகிறார்கள், பிள்ளைக்கு பாலோ சோறோ ஊட்டும் போது கைபேசியில் வட்ஸப் பார்க்கிறார்கள்... இப்படியே தொடர்கிறது இதன் போக்கு. 

இவர்களைப் பார்க்கிற போது இவர்கள் தாம் செய்கிற செயல்களில் உண்மையில் அக்கறையோ அன்போ ஈடுபாடோ கொண்டிருக்கிறார்களா என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒன்றினை செய்கிற போது அதனை முழுமையாக அனுபவித்து செய்தல் என்பது எத்தனை மகிழ்வு தரும் ஒன்று! 

வாழ்க்கையை அனுபவித்தல் என்பது எது? அவசர அவசரமாக ஓடுவது என்பது தானா? ரசிக்கவோ பேசவோ நேரமில்லாதது மாதிரி நடந்து கொள்வது தானா?

அக்கறை செலுத்துகிறீர்களா? உண்மையாக அக்கறை செலுத்துங்கள். அதற்கான நேரத்தியும் அவகாசத்தையும் அதற்கான இயல்பையும் அதற்குக் கொடுங்கள். ஒரு நிகழ்ச்சிக்குப் போவதாக தீர்மானிக்கிறீர்களா? தீர்மானித்த பிறகு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அங்கேயே முழுமனசோடு ஆழ்ந்திருங்கள். அங்கிருந்தபடி போனைப் பார்க்காது அடுத்தவரோடு பேசி அவரையும் குழப்பாது நிகழ்ச்சியை நடத்துகிறவருக்கு அதற்கான ஒத்துழைப்பைக் கொடுங்கள். அன்பு செலுத்துகிறீர்களா? அந்த அன்பு உண்மையானது தானா என்பதை ஒருமுறை உங்களை நீங்களே கேட்டு அதனைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஒன்றில் ஈடுபடுகிறீர்களா? அதில் முழுமையாக ஈடுபடுங்கள். வாழ்க்கையை அனுபவித்து வாழுதல் என்பது அது தான். கலைத்துவமாக வாழுதல் என்பதற்கும் அது தான் பொருள். இதற்கு பணமோ, பதவியோ, பொருளோ புகழோ தேவை இல்லை. 

மனதைக் கொஞ்சம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சிறு குடிசை

முன்னால் ஒரு பூந்தோட்டம்

செய்ய ஒரு சிறு தொழில்

நீ

இது போதும் எனக்கு! 

என்று யாரோ ஒரு கவிஞன் எப்போதோ எழுதியதைப் படித்த ஞாபகம் இப்போதும் நினைவில் இருக்கிறது. இவர்கள் தான் வாழ்க்கையை அனுபவித்து முழுமையாக வாழ்பவர்கள் என்று தோன்றுகிறது எனக்கு.

போட்டிகளிலும் ஒப்பீடுகளிலும் பங்குபற்றாது சுயமான மூளையில் கிடைக்கிற வருவாயில் சரியான  தீர்மானங்களை எடுத்து தனித்துவமாக நம் வாழ்வை நாம் வாழ முனைதலில் ஆரம்பமாகும் இந்த புலனும் புலன் வழி காணும் பார்வையும் கலையம்சம் கொண்ட வாழ்வும்.

இறுதியாக விடைபெற்றுச் செல்லு முன் ’எழுத்தின் ரகசியம்’ என்ற புத்தகத்தில் பசுவய்யா அவர்கள் எழுதிய ’காலக் குழந்தைக்குப் பாலூட்டு’ என்ற இந்தக் கவிதையோடு விடைபெற்றுக் கொள்ளலாம் என்று தொன்றுகிறது.

காலக் குழந்தைக்குப் பாலூட்டு

எழுது.

எவர் முகமும் பாராமல்

உன் மனது பார்த்து,

உன் தாகம் தீர்க்க

நதியில் இருந்து நீரைக்

கைகளால் அள்ளுவது போல

கண்டுபிடி

உன் மன மொழியை.

மார்புக் கச்சையை

முற்றாக விலக்கி

காலக் குழந்தைக்குப் 

பாலூட்டு.


No comments:

Post a Comment