Friday, September 30, 2022

சிட்னியின் பாரம்பரிய வீடுகள் - புகை போக்கிகளும் சங்கடப் படலைகளும் -

 சிட்னி அதி துரிதமாக தன் முகத்தை மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு பெரு நகரம். தனித்தனி வீடுகளாக இருந்த பல அழகான தோட்ட வீடுகள்- சுமார் 80 - 100 வருட பழமைமிக்க பாரம்பரிய வீடுகள் பல மறைந்து அந்த இடங்களில் துரித தொடர்மாடிக்குடியிருப்புகளும் உயர்ந்து வான் முட்ட நிற்கும் நவீன கோபுரங்களுமாக நாடு இயந்திரமுகம் கொண்டு வருகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் அழகிய வீடுகளும் பூமரங்களும் கொண்ட நகரம்  (Garden country ) என்றழைக்கப்பட்ட காலம் போய் concrete country என்றழைக்கப்படும் காலம் வந்து விடும்.

மேலும் அழகான அந்த வீடுகள் அதில் வாழ்ந்தவர்கள் மறைந்து போய்விட, பிள்ளைகள் அதனை விற்கும் போதோ அல்லது பிள்ளைகள் சொத்துகளைப் பங்கு பிரிக்கும் போதோ தவிர்க்கமுடியாமல் முகவர்களுக்கு அவற்றை விற்கும் நிலைக்கு உள்ளாகிறார்கள். அவற்றை வாங்கும் வியாபாரிகள் மற்றும் ஒப்பந்தகாரர்கள் அதில் எத்தனை வீடுகளைக் கட்டி எத்தனை பேருக்கு விற்கலாம் என்று கணக்குப் பார்ப்பதால் ஒரு அழகியல் மெல்ல மெல்ல மறைந்து காணாமல் போகிறது.

அதனோடு சேர்த்து ஒரு நாகரிகம், பழக்கவழக்கம், பண்பாடு போன்றனவும் நாட்டின்; ஊரின் தோற்றப்பாடுகளும் மறைந்து போகிறது. ஒருசில உள்ளூராட்சி மன்றங்கள் இன்னும் அதன் பழைமையை பேணி வருகிற போதும் எல்லா இடங்களிலும் இருக்கும் உள்ளூராட்சி மன்றங்கள் அதனை அமுல் படுத்துவதில்லை.

சில மாதங்களின் முன் சென்ற ஒரு பகுதியில் காணப்பட்ட சில பாரம்பரிய வீடுகளை ஒளிப்படம் எடுத்து வந்தேன். அவற்றை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அந்த மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் அந்தப் பாரம்பரிய வீடுகளில் காணப்பட்ட புகை போக்கிகள் மற்றும் சங்கடப்படலை போன்றமைக்கப்பட்ட படலைகள். இந்தப் புகைபோக்கிகளும் சங்கடப்படலைகளும் இலங்கையில் அதிலும்  குறிப்பாக தமிழர் வாழும் பிரதேசங்களில் பாரம்பரியமாக இருந்து வந்தவை.

இலங்கையின் பாரம்பரிய வீடுகள் புகைபோக்கிகளைக் கொண்டவை. அவை சமயலறையிலிருந்து மேலெழுந்து ஓடு வேயப்பட்ட கூரைக்கு ஒரு தனிக் கம்பீரத்தை அளிக்கும். கழிவறைகள் தொலைவில் தனியாக அமைக்கப்பட்டிருக்கும். அறைகளும் வரவேற்பு மண்டபமும் சமயலறை, களஞ்சிய அறையுமாகக் பாரம்பரிய வீடுகள் ஒரு வித கம்பீரத்தோடு காணப்படும். அங்கும் இப்போது அனேக மாற்றங்கள்.

மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை என்ற போதும் குறைந்த பட்சம் அவற்றை பதிவு செய்து வைத்துக் கொள்ளுதல் அவசியம்.

தமிழர் வாழும் பிரதேசத்து பாரம்பரிய வீடுகளில் காணப்படும் புகைபோக்கிகள் முன்னர் சொன்னது போல அவை சமையலறையில் நெருப்படுப்பில் சமைப்பதனால் வரும் புகையினைப் போக்க அமைக்கப்பட்டவை. ஆனால் சிட்னியில் உள்ள புகை போக்கிகள் குளிரை விரட்டுவதற்காக வரவேற்பறையினைச் சூடாக வைத்திருக்க வரவேற்பறையில் விறகினைப்போட்டு எரிப்பதனால் வரும் புகையை வெளியேற்ற அமைக்கப்பட்டவை.

புகைபோக்கிகள் ஒன்று தானென்றாலும் அதனைப் பயன்படுத்திய முறையும் தேவையும் வீட்டில் அது இடம்பெற்ற இடமும் வேறு வேறானவை. இப்போது நவீன வசதிகளோடு குளிரையும் உஷ்னத்தையும் விரட்டப் பல நவீன மின்சார இயந்திரசாதனங்கள் வந்து விட்டதால் புகைபோக்கிகளோடு யாரும் இப்போது வீடுகளைக் கட்டுவதில்லை. கட்டவேண்டிய அவசியமும் அற்றுப் போய் விட்டது.

அது போலத்தான் சங்கடப்படலையும். இலங்கையில் மக்கள் கால்நடையாக பல இடங்களுக்கும் போய் வந்த காலங்களில் பாதசாரிகள் இருந்து இளைப்பாறவும் குளிர் நீரைக் குடித்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் வீடுகளின் படலைகள் இருக்கைகளையும் இருக்கைகளுக்கு மேலே கூரையையும் கொண்டனவாக படலைகள் காணப்பட்டன. பாதசாரிகளின் சங்கடங்களைத் தீர்ப்பதால் அவற்றைச் சங்கடப்படலைகள்  என்றழைத்தார்கள். அவற்றின் ஓரத்தில் உயரத்தில் ஒரு மண்பானையில் தண்ணீரும் குடிக்க ஒரு குவளையும் வைக்கப் பட்டிருக்கும். 

இப்போது அவற்றின் பயன்பாடுகள் இல்லாதொழிந்து போயின. இலங்கையில் இத்தகைய அமைப்பினை இப்போது காண்பது கூட அரிது. சிட்னியிலும் அவ்வாறான அமைப்பினைக் கொண்ட பழங்கால வீடுகளைக் சில இடங்களில் மாத்திரம் தான்  காணலாம். வேறு சில சிட்னியின் பாரம்பரிய வீடுகள் தங்கள் படலைகளுக்கு பந்தல் போட்டு அழகு செய்திருப்பார்கள். அதில் பூமரங்கள் படர்ந்திருக்கும் காட்சி அழகு மிக்கது.

இன்றைக்கு என் கைபேசியில் எடுத்த சில ஒளிப்படங்கள் உங்களுக்காக...















ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்; 22.02.10 
Albert Road - 2135.

இதன் தொடர்ச்சியாக பதியப்பட்டிருக்கிற மேலும் சில ஒளிப்படங்களை கீழே உள்ள இணைப்பை அழுத்திச் சென்று பார்க்கலாம். 

No comments:

Post a Comment