Thursday, April 18, 2024

சொல் மாலைகள்

படங்கள்; நன்றி இணையம்


படங்கள்: நன்றி இணையம்

படங்கள்: நன்றி இணையம்


 ’வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர் ஆழி நீங்குகவே என்று’  - பொய்கையாழ்வார் -

பொய்கையாழ்வார் இறைவனை ஐம்புலன்களாகவும் ( மெய், வாய், கண், மூக்கு, செவி)  ஐம்பூதங்களாகவும் -  நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்) அழிவற்ற மெய் ஞானமாகவும் ஞானமுடையவர்கள் செய்யும் வேள்வியாகவும் அறமாகவும் காண்கிறார்.

மண்னுலகம் அவருக்கு தகளியாகத் தெரிகிறது. கடல்நீரோ நெய். சூரியன் அதன் சுடர், அது ஞான விளக்கு! அது அக இருளை அகற்றும் ஞான தீபம். அந்த வெளிச்சத்தின் வழியாக மாயையை உண்மை எனக் கருதி இருக்கும் இருள் அகன்று  ஞானம் சித்திக்கும் என்பது பொய்கையாழ்வாரின் நம்பிக்கை!.

பூதத்தாழ்வாருக்கு அது வேறொரு வடிவம் காட்டுகிறது.

‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்’

அன்பே விளக்காகவும் ஆர்வம் நெய்யாகவும் உள்ளம் ( சிந்தை ) திரியாகவும் ஞானவிளக்கை ஏற்றுகிறார் அவர்.

உள்ளத்தையே பெரும் கோயிலாகக் கொண்டவர் திருமூலர். அவருக்கு,

‘உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் அனைத்தும் காளாமணி விளக்கே’ -

உள்ளத்தை இறைவனின் கருவறையாகவும்  உடலை ஆலயமாகவும் வாயைக் கோபுரமாகவும் ஞானமடைந்தவர்களுக்கு ( பேருண்மையை அறிந்தவர்களுக்கு) நம் உயிர் சிவமாகவும் மாயக்குள்ளே இழுக்கும் ஐம்புலன்களும் ( கள்ளப் புலன்) மணிவிளக்காககவும் கண்டவர் திருமூலர்.

அப்பரோ அதனை வேறுவிதமாக காண்கிறார்.

‘காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக

நேயமே நெய்யும் பாலாய் நிறைய நீரமைய வாட்டி

பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே’   என்று போற்றுகிறார்.

அப்பருக்கு உடல் கோயிலாகவும் உள்ளம் கடவுளின் அடியாளாகவும் ( அடிமை) உண்மையோடிருத்தல் தூய்மையாகவும் ஆத்மாவினை கடவுளாகவும் கொண்டு அன்பினை நெய்யும் பாலுமாக கொடுத்து இறைவனை வழிபடுகிறார் அவர்! 

நாவுக்கரசருக்கு அது இப்படியாகத் தோற்றம் தருகிறது. 

’ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே

உலகுக்கொருவனாய் நின்றாய் நீயே

வாச மலரெலாம் ஆனாய் நீயே 

மலையான் மருகனாய் நின்றாய் நீயே

பேசப் பெரிதும் இனியாய் நீயே

பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே

தேச விளக்கெலாம் ஆனாய் நீயே

திருவையாறு அகலாத செம்பொற் சோதி’      - நாவுக்கரசர் - 

உலகில் உள்ள அனைத்துமே அவருக்கு இறைவனின் தோற்றமாகத் தெரிகிறது.

பக்தியும் தமிழும் ஞானமும் அறிவும் இனிக்க இனிக்க தெய்வீக அமுதமாக சுவைக்கத் தந்தவர்கள் அவர்கள். ஞானத் தமிழாக; பக்தித் தமிழாக சுவைக்கும் அந்தத் தமிழ் தான் எத்தனை அழகு! எத்தனை சுவை! 

கலப்படமற்ற தனித்தமிழின் அழகன்றோ அழகு!

மேற்கண்ட இந்தச் சொல்மாலைகள் எல்லாம் வாடாத மலர் மாலைகள். தமிழகத்தின் பக்தி மாலைகள். தமிழ் மாலைகள்! 

ஆனால் இந்தச் சொல்மாலைகள் போல இப்போதெல்லாம் தனித்தமிழ் பாமாலைகளைக் கேட்பது அபூர்வமாகி விட்டது. சில பக்திப்பாடல்கள் வாத்திய இசையோடும் இனிய குரலோடும் பக்திப் பரவசத்தோடும் சிறந்த ஒலித்தரத்தோடும் வருவது உண்டு தான் எனினும்  தமிழின் குழைவு அதன் இலக்கிய அழகு அதில் ஏற்றப்பட்டிருப்பது குறைவென்றே எனக்குத் தோன்றுகிறது. 

கர்நாடக மானிலத்தில் 12ம் நூற்றாண்டில் ஒரு பக்தர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் பசவண்ணர். வீரசைவம் என்ற ஒரு புதிய மதப்பிரிவை உருவாக்கியவர் இவர் என்று சில குறிப்புகள் சொல்கின்றன. அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் வச்சனா என்றழைக்கப்படுகின்றன. ( வசனங்கள்)  அதில் ஒன்று இப்படியாக அமைகிறது.

‘வசதி இருப்போர் சிவாலயம் கட்டுவர். வறியவன் யான் என்ன செய்குவேன் ஐயனே? என் காலே தூண்; உடலே கோயில்; சிரமே பொற் கலசம் ஐயா; கூடல சங்கம தேவனே!கேட்டிடுவாய்! நிலையாய் இருப்பதற்கு அழிவுண்டு; சங்கமத்துக்கு அழிவில்லை’ - என்ற வாறு அமைந்துள்ளது.

தமிழில் இவ்வாறானதைப் போன்ற வசன வடிவங்கள் பாடல்களாக உருப்பெறுகிற போது இசையும் இனிய குரலும் இணைந்து கொண்டாலும் மொழிவளம்; கற்பனை வளம் அதனோடு இணைந்து கொள்ளாததனால் அவை ஏதோ ஒரு வித உணர்வோடு ஒன்றிய அன்னியோன்னிய உணர்வை ஏற்படுத்தி விடுவதில்லை.

மேலும் அவை மெருகேற்றப்பட்டு பாடலாகத் தவளுகிற போது அதன் உண்மை பக்தி மேக்கப் போட்டிருக்கும் மணப்பெண்ணின் அழகினைப் போலவே சமயா சமயங்களில் தோற்றம் காட்டுகிறது. 

( சில நல்ல வளமுள்ள பாடல்கள் இல்லாமலில்லை. மண்ணானாலும் திருச்செந்தூரில்..., கோகுலத்துப் பசுக்கள் எல்லாம்....., மருதமலை மாமணியே முருகையா....,திருச்செந்தூரின் கடலோரத்தில்....,கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்... , சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...)

இன்று என் வட்ஸப் பிற்கு ஒரு வீடியோ ஒன்று வந்திருந்தது. அது மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி வெண்ணைத்தாழி உற்சவம் குறித்த ஒளிப்பதிவு. சுவாமி வெளி வீதி வலம் வந்து கொண்டிருக்கிறது. இடைச்சிகள் எனப்படுவோர் இலைகளில் வெண்ணையை உருட்டி உருட்டிப் பக்தர்களுக்குக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். பக்தர்கள் அதனை வாங்கி வெண்ணை விரும்பியான சுவாமிக்கு அடித்துக் கொண்டே வருகிறார்கள். அர்ச்சகர்கள் வந்து விழும் வெண்ணை உருண்டைகளை வழித்து வழித்து எடுத்துக் கொண்டே வருகிறார்கள். இருந்தும் அவை உருகி உருகி வழிந்த படி இருக்கிறது.

ஊர்வலம் இவ்வாறாக நகர்கிறது. இதனை விளக்கிக் கொண்டு வருகிறார் ஓர் அர்ச்சகர். அவரின் தமிழ் தான் எத்தனை இனிமையாக இருக்கிறது! அவர் சொல்கிறார், ’வெண்ணையைத் திரட்டி இப்படியும் அப்படியும் அடித்து கோபாலா கோபாலா என்று பக்தி முழக்கம் செய்து கொண்டு பக்தர்கள் வருகிறார்கள்;  அந்த வெண்ணையை எல்லாம் அர்ச்சகர்கள் வழித்து வழித்து விட்டுக் கொண்டே வருகிறார்கள். அவை எல்லாம் வீதியிலே விழுந்து அதனை மக்கள் மிதித்து மிதித்து வருகிறார்கள். அதனால் அந்த ஊர்வலம் வரும் 15 மைல்களும் நெய் வாசம் கமளுது. ஊர் வரையிலும் பக்தர்களின் கால்கள் நெய்யால் தோய்ந்த வாறு இருக்க அவர்கள் பக்திப் பாடல்களைப் பரவசமாகப் பாடிய படி வருகிறார்கள். பங்குனி மாதத்து வெய்யிலில் வெண்ணை உருகி ஒரே சேறாக; ஆகி இருக்க அதனை எல்லாம் உழக்கியபடி வருகிறார்கள். நெய் வாசம் பெருகிக் கிடக்கிறது. அப்படியாகக் கண்ணன் வருகிறான். 

அப்படி வரும் போது வீதிகளில் கண்ணனுக்காகக் காத்திருக்கும் பாட்டிகள் சிலர்  பெருமாள் புறப்பட்டு விட்டானா என்று கேட்க மாட்டார்கள். சாமி கிளம்பியாச்சா என்று கேட்க மாட்டார்கள். கோபாலன் எங்க நிக்கிறான்? கோபாலன் இப்ப எங்க நிக்கிறான்? என்று கேட்பார்களாம்! அவர்களைப் பார்த்து கிருஷ்ண தரிசனத்தை அறிந்து கொள்ள வேண்டும்! என்று அந்த அர்ச்சகர் சொல்லுகிற போது,

தமிழும் பக்தியும் இதோ இங்கு வாழுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது! சொல் மாலைகள் எப்பொழுதும் பாடலோடும் இசையோடும் இனிய குரலோடும் தான் ஒலிக்க வேண்டுமென்பதில்லை. அது சமயா சமயங்களில் வெண்ணையைப் போல உற்சவ காலங்களில் இரு கைகளிலும் பிரசாத்தைத்தை ஏந்திக் கொள்வதைப் போல சாதாரண பக்தர்களின் பொற் பதங்களில் பொதிந்து போயுள்ளது! 

இவ்வாறான அழகியல்களை; உண்மையான இயல்புகளை வைத்து தமிழையும் பக்தியையும் பாடல்களாகப் புனையலாமே!

அவை நிரந்தரமாய் வாழ வழி செய்யலாமே!

Friday, April 5, 2024

பொழுது போக்கு: வண்ணம் தீட்டல்


பல மாதங்களுக்குப் பின்கிடைத்த ஒரு ஓய்வு நாளில் இங்கு வருகிறேன்.

எல்லோரும் நலம் தானே? முன்னர் போல இப்போதெல்லாம் பலர் வலைப்பூக்களை நாடுவதில்லை. பலரும் பல வேறு பட்ட சமூக வலைத்தளங்களுக்குப் போய் விட்டார்கள்.

நானும் கூடத்தான்.

ஆனாலும் வலைப்பூவில் நம் மனதில் பட்டவற்றைப் பகிர்வதற்குக் கிடைக்கின்ற இடத்தைப் போல் ஏனைய தளங்களில் வாய்ப்புகள்  அமைவதில்லை. அதனால் எப்போதும் இந்த வலைப்பூ எனக்கு தாய் வீடு மாதிரி. வருவோர் போவோர் யாரும் இல்லா விட்டாலும் நம் வீடு நமக்கு வசதியானது தானே!

கடந்த வருட இறுதியில் கிடைத்த விடுமுறையில் நான் பெற்றுக் கொண்ட ஒரு புத்தகம் வண்ணம் தீட்டுதல். வளர்ந்தவர்களுக்கான அந்த வண்ணம் தீட்டும் புத்தகம் ஐக்கியஇராச்சியத்தில் இருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை உருவாக்கியவர் Millie Marotta.

அந்தப் புத்தகத்தில் இருந்த சில படங்களுக்கு வண்ணம் தீட்டிய அனுபவம் மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது. மகிழ்ச்சியை; மன ஒருமைப்பாட்டை; அமைதியை; அது தந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் படங்களை எல்லாம் யார் வரைந்தார் என்ற தேடல் எழுந்தது. கூகுள் தேடலில் மைலி தனக்கென ஒரு வலைத்தளத்தை உருவாக்கி அங்கு தன் புத்தகங்களில் இருந்து வண்ணம் தீட்டி மக்கள் அனுப்பிய படங்களை எல்லாம் தொகுத்து வைத்திருக்கிறார் என்ற விடயங்களை எல்லாம் அறிய முடிந்தது.

ஆஹா! எத்தனை வண்ணங்கள்! எத்தனை யுக்திகள்!! ஒரு படத்திற்காக எத்தனை வகைகளில் எல்லாம் பார்வைகளும் வண்ணங்களும் பதிவாகி இருக்கின்றன!! என்றெல்லாம் பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

கூடவே ஒரு விதமான ’எல்லோரும் ஒரேவிதமான ஆர்வத்தால் ஒன்றிணைந்தவர்கள் என்ற ஒரு வித உறவும் ஆர்வமும் மகிழ்வும் கூடவே எழுந்தது.

ஒருவித ஆர்வக் கோளாறில் நானும் வண்ணம் தீட்டிய சில படங்களை அனுப்பி வைத்தேன். அனுப்பிய சில நாட்களில் அது அங்கு முதல் பக்கத்தில் பிரசுரமாகி மேலும் அது மகிழ்ச்சியைத் தந்தது.

உங்கள் பார்வைக்காக என்னுடயவையும் மேலும் உலகளாவிய அளவில் மக்கள் வண்ணந் தீட்டி அனுப்பிய படங்களையும் கீழ்வரும் இணைப்பில் சென்று காணலாம்.










 புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் மனநிறைவையும் மன ஒருமைப்பாட்டையும் தரும் இவாறான பல புத்தகங்கள் கடைகளில் கிடைக்கின்றன. நீங்களும் ஒன்றை வாங்கி முயற்சி செய்து பாருங்களேன்!

Thank You Millie .❤