பல மாதங்களுக்குப் பின்கிடைத்த ஒரு ஓய்வு நாளில் இங்கு வருகிறேன்.
எல்லோரும் நலம் தானே? முன்னர் போல இப்போதெல்லாம் பலர் வலைப்பூக்களை நாடுவதில்லை. பலரும் பல வேறு பட்ட சமூக வலைத்தளங்களுக்குப் போய் விட்டார்கள்.
நானும் கூடத்தான்.
ஆனாலும் வலைப்பூவில் நம் மனதில் பட்டவற்றைப் பகிர்வதற்குக் கிடைக்கின்ற இடத்தைப் போல் ஏனைய தளங்களில் வாய்ப்புகள் அமைவதில்லை. அதனால் எப்போதும் இந்த வலைப்பூ எனக்கு தாய் வீடு மாதிரி. வருவோர் போவோர் யாரும் இல்லா விட்டாலும் நம் வீடு நமக்கு வசதியானது தானே!
கடந்த வருட இறுதியில் கிடைத்த விடுமுறையில் நான் பெற்றுக் கொண்ட ஒரு புத்தகம் வண்ணம் தீட்டுதல். வளர்ந்தவர்களுக்கான அந்த வண்ணம் தீட்டும் புத்தகம் ஐக்கியஇராச்சியத்தில் இருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை உருவாக்கியவர் Millie Marotta.
அந்தப் புத்தகத்தில் இருந்த சில படங்களுக்கு வண்ணம் தீட்டிய அனுபவம் மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது. மகிழ்ச்சியை; மன ஒருமைப்பாட்டை; அமைதியை; அது தந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் படங்களை எல்லாம் யார் வரைந்தார் என்ற தேடல் எழுந்தது. கூகுள் தேடலில் மைலி தனக்கென ஒரு வலைத்தளத்தை உருவாக்கி அங்கு தன் புத்தகங்களில் இருந்து வண்ணம் தீட்டி மக்கள் அனுப்பிய படங்களை எல்லாம் தொகுத்து வைத்திருக்கிறார் என்ற விடயங்களை எல்லாம் அறிய முடிந்தது.
ஆஹா! எத்தனை வண்ணங்கள்! எத்தனை யுக்திகள்!! ஒரு படத்திற்காக எத்தனை வகைகளில் எல்லாம் பார்வைகளும் வண்ணங்களும் பதிவாகி இருக்கின்றன!! என்றெல்லாம் பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
கூடவே ஒரு விதமான ’எல்லோரும் ஒரேவிதமான ஆர்வத்தால் ஒன்றிணைந்தவர்கள் என்ற ஒரு வித உறவும் ஆர்வமும் மகிழ்வும் கூடவே எழுந்தது.
ஒருவித ஆர்வக் கோளாறில் நானும் வண்ணம் தீட்டிய சில படங்களை அனுப்பி வைத்தேன். அனுப்பிய சில நாட்களில் அது அங்கு முதல் பக்கத்தில் பிரசுரமாகி மேலும் அது மகிழ்ச்சியைத் தந்தது.
உங்கள் பார்வைக்காக என்னுடயவையும் மேலும் உலகளாவிய அளவில் மக்கள் வண்ணந் தீட்டி அனுப்பிய படங்களையும் கீழ்வரும் இணைப்பில் சென்று காணலாம்.
புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் மனநிறைவையும் மன ஒருமைப்பாட்டையும் தரும் இவாறான பல புத்தகங்கள் கடைகளில் கிடைக்கின்றன. நீங்களும் ஒன்றை வாங்கி முயற்சி செய்து பாருங்களேன்!
Thank You Millie .❤
No comments:
Post a Comment