Sunday, December 8, 2024

ஈஸ்வரி அன்ரி

                 எங்களுக்கு வரம் தந்த சாமி

ஈஸ்வரி அன்ரி -

எங்கள் பால்ய காலங்களைத் தன் தன்னலமற்ற தேவதை அன்பினால் குளிப்பாட்டிய புனிதவதி.

அவர் ஒரு தேவதை அம்சம். வசீகரமிக்க பேரழகினால் மாத்திரமல்ல: யாராலும் பொழிய முடியா பேரன்பை; தாயன்பை: எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் யாரோ ஓர் அயலாராக இருந்த எங்கள் மீது பொழிந்த இறையம்சத்துக்குச் சொந்தக்காறியாக இருந்ததாலும் தான் அவர் ஒரு தேவதை எங்களுக்கு!

70களின் தொடக்க் காலம் அது. கல்முனையில் பக்கத்து வீட்டுக்காறராக அவர்கள் அமைந்தது ஒரு தற்செயல் தான். நாங்கள் மூன்று பெண் பிள்ளைகள்; நண்டும் சிண்டுமாய்; ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாய்...அன்ரி தான் எங்களுக்கு விளையாட்டுத் தோழி.

அவர்கள் வீடு எப்போதும் ஒருவித அப்பிள் பழத்தின் வாசனையை ஒத்த வாசனையோடிருக்கும். அது எப்படி என்று எனக்கு இன்றுவரைக்கும் புரியவில்லை. அங்கிள் நில அளவையாளராக இருந்ததாலோ என்னவோ அவர்களுடய வரவேற்பறையில் ஒரு நிஜமான காய்ந்த மரக்கிளையும் அதில் நிஜமான தூக்கணாங் குருவிக் கூடுகளும் தொங்கியபடி இருக்கும். சாப்பாட்டு மேசைக்கருகில் குளிர்சாதனப் பெட்டியும், அதன் மேலே ஒரு கண்ணாடிக் குவளைக்குள் பல வண்ண ஸ்ரோக்கள் அடுக்கியபடி இருக்கும். சாப்பாட்டு மேசைக்கு மேலே தாழ்வாக வண்ணக் கூடோடு இருக்கும் மின்சார விளக்கு ஒரு மங்கல் நிறமான வெளிச்சத்தை மேசைக்கு மட்டும் உமிழ்ந்தபடி இருக்கும்.  வீட்டு வாசலில் ஒரு தேமா மரம்.

இவை எல்லாம் எங்களுக்கு ஓர் ஆச்சரியமென்றால் அன்ரி எங்களுக்கு இன்னுமொரு பெரிய ஆச்சரியம். எங்களோடு விளையாடுவதில் அவவுக்கு அப்படி ஒரு பிரியம்.

அவர் தினமும் சாப்பாடு செய்வது எங்களுக்கும் சேர்த்துத் தான். அதில் மலைநாட்டு மரக்கறிகள் அதிகம் இருக்கும். கரட், பீன்ஸ், கீரை, மீன் அல்லது முட்டை கட்டாயமாக இருக்கும். இவைகள் எல்லாம் எங்களுக்கு அப்போது புது ருசிகள். அவற்றை எல்லாம் மசித்து, குழந்தைகளுக்கு ஏற்ற விதமாகப் பிசைந்து, எங்களுக்கு ஊட்டி விடுவார். அந்தச் சாப்பாட்டைக் கூட ஒழித்துப் பிடித்து விளையாடி விளையாட்டின் வழியாகத் தான் ஊட்டி விடுவார். கதவின் பின்னாலோ கட்டிலுக்குக் கீழோ அல்லது கதிரை மேசைகளுக்கு அடியிலோ நாங்கள் ஒழிந்து கொள்வோம். அன்ரி கண்டு பிடிப்பா. ஒருமுறை கண்டு பிடித்தால் நாங்கள் ஒருவாய் சாப்பிட வேண்டும். அப்படி எங்களை வளர்த்தவர் அவர்.

அங்கிளிடம் ஒரு பென்னாம் பெரிய குடை ஒன்று இருந்தது. ஒரு மழைநாளில் நாங்கள் மூன்று பேரோடு அன்ரி, அங்கிளுமாக அந்தக் குடைக்குள் நாங்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் ஒட்டியபடிக்கு மழைக்குள் வெறுங் காலோடு மழை வெள்ளத்துக்குள் கால்களை அலசிய படிக்கு சும்மா வீட்டு வளவினை சுற்றி வலம் வந்ததும் அது தந்த சந்தோஷமும் இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது.

கோயில் திருவிழாக்களில் அங்கிளிடம் இருந்த ஒரு கறுப்புக் காரில் அவர்களோடு நாங்களும் தொத்தி விடுவோம். அப்போதெல்லாம் எங்களுக்குக் காப்புகளும், மாலைகளும், வண்ணமயமான விளையாட்டுப் பொருட்களும் தின்பண்டங்களும் உடு புடவைகளும் வாங்கித் தந்து எங்கள் வாழ்க்கையை வளம் மிக்க; மகிழ்வான நினைவுகளாக ஆக்கி வைத்தவர் எங்கள் ஈஸ்வரி அன்ரி.

எங்கு அன்ரி போனாலும் அவவுக்குப் பக்கத்தில் யார் இருப்பது என்ற போட்டியில் அக்கா எப்போதும் ஜெயித்து விடுவதில் தான் எனக்குக் கொஞ்சம் மனவாட்டம் ஏற்படும். என்றாலும் ஒரு மாதிரியாக அவவுக்கருகில் இருக்கும் அதிஷ்டத்தை ஒருவாறு இறுதியில் நான் பெற்று விடுவேன். நீதி வழங்குவதில் அவ நீதி தேவதை.

அப்படி அவர் ஓர் ஆதர்ஷம் எங்களுக்கு!

எது; என்ன சம்பவம்; எந்த நிகழ்ச்சி எங்கள் வாழ்வில்; நினைவில் பெரிய இடத்தைப் பிடிக்கும் என்பதை யாராலும் அப்போதைக்குக் கணித்துக் கூறவியலாது. சில விடயங்கள் சிறியதாக இருந்தாலும் உள்ளத்தில் மிகப்பெரிய இடத்தை அது பிடித்துவிடும். சில பெரிய சம்பவங்கள் மனதில் இருந்து மறைந்தே போயிருக்கும். நினைத்துப் பாருங்கள்.... உங்களுக்கு என்ன விடயங்கள் இன்றும் நினைவில் இருக்கிறது.....?

என் ஞாபகக் கிடங்கில்; என் பால்ய கால சம்பவங்களின் தொகுப்பில் அன்ரி ஓர் ஆதர்ஷ தேவதையாக: பேரழகியாக: மங்காத நிதியமாக: எங்களோடு விளையாடி எங்கள் மீது எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத; நிபந்தனைகள் எதுவுமற்ற பேரன்பைப் பொழிந்து; பரிசுப் பொருட்களால் எங்களைக் குளிப்பாட்டி; எங்கள் குழந்தைப் பருவ வாழ்க்கையை ஆச்சரியங்களாலும் மகிழ்வினாலும் பேரன்பினாலும் நிறைத்த பேரழகியாக என்றென்றைக்கும் அவர் நிலைத்திருப்பார்.

மொக்குப் பெண்ணாக; அதே நேரம் வெகுளிப் பெண்ணாக; சுமாரான தோற்றம் கொண்ட; படிக்க விருப்பம் இல்லாத; விளையாட்டுக் குணங்கள் கொண்ட ஒரு குழந்தையை அவர் கையாண்ட விதம் இறையன்புக்கு நிகரானது!  அவர் என் மனதில் நிறைந்து போயிருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் தான். நாங்கள் மூன்று பெண்பிள்ளைகளும் மூன்று விதமாக இருந்த போதும் எங்கள் மூன்று பேரையும் அவர் சம அன்போடு நடாத்தினார். பேரன்பினால் எங்கள் பால்யத்தை பொற்காலமாக்கினார்.

இன்றைக்கு நான் வெளிநாட்டு இளஞ் சிறார்களோடு பாடசாலையில் பணிபுரியும் போது, குழந்தைகளோடு உறவாடும் சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் அன்ரியையே நான் என் ஆதர்ஷ ஆசானாக நினைத்துக் கொள்வேன். அன்பையும் அக்கறையையும் கவனிப்பையும் வழிநடத்துதலையும் வழங்குவதில் கல்வியறிவு கற்றுத் தந்த பாடங்களிலும் மேலாக அன்ரி எங்களை வழிநடத்தியதையே நான் எனக்கான முன் உதாரணமாகக் கொள்வேன். அது அவர் எனக்குத் தந்த வார்த்தைகளால் அளவிட முடியாத வெகுமதி; பெருநிதி.

அங்கிளோடு அவர் வாழ்ந்த இல்லற வாழ்வு ஆச்சரியமும் அழகும் மிக்கது. அங்கிளைப் போல ஒருவர் அவருக்கு வாழ்க்கைத் துணையாக வாய்த்தது தான் அன்ரியால் தன் இயல்பான வாழ்வை; குணங்களால் மேம்பட்ட வாழ்வை இவ்வாறு வாழ வழிவகுத்திருக்க வேண்டும் என்று இப்போது உறுதியாகத் தோன்றுகிறது. அவர்கள் பாலும் தேனும் போல; பூவும் வாசமும் போல வாழ்ந்தார்கள். அது ஓர் ஐக்கியமான பெருவாழ்வு. வரம்பெற்று கிட்டிய வாழ்வு போல்வது. அவர்கள் ஆதர்ஷ தம்பதிகளாகவே எப்போதும் இருந்தார்கள். 

அன்ரி தன் தாயை இறுதி மூச்சு உள்ளவரை எப்படி எல்லாம் சீராட்டி பாராட்டி போற்றிப் பார்த்துக் கொண்டார் என்பதை ஊரும் அயலும் சொந்த பந்தங்களும் உற்றார் உறவினரும் நன்கறிவர். 

அவர் ஒரு ஆச்சரியமே தான். இந்த உலகத்துக்கு அபூர்வமாக வந்து பிறந்த ஓர் ஆச்சரியம். அன்ரி உரத்துப் பேசியோ குரல் உயர்த்தி வாதம் செய்ததையோ நான் கண்டதேயில்லை.  இறைபக்தியில் அவரை மிஞ்ச ஆளில்லை. முருகக் கடவுளோடு பல வருடங்கள் தொடர் போராட்டங்கள் மேற்கொண்டு தன்னை வருத்திப் போராடி, கடும் விரதங்களும் தவமும் மேற்கொண்டு பிள்ளை பெற்று வெற்றி கண்டவர் அவர். கடவுளே இரங்கி வரம் கொடுத்த பக்தி அவருடயது.

மிக இளகிய; எதிர்த்து ஒன்றைச் செய்யத் தெரியாத குழந்தையாகவே அவர் இறுதிவரை இருந்தார். இறுதிக் காலங்களில் சகிப்புத்தன்மையோடு தன் உபாதைகளை அவர் பொறுத்துக் கொண்டார். தன்னை ஒறுத்துக் கொண்டு உலாவந்தார்.அங்கிள் அவரை அருகில் இருந்து கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டார். 

அங்கிள், நீங்கள் அன்ரிக்குக் கிடைத்த ரத்தினம்! "விஜய ரத்தினம்"! அரியதான ரத்தினம்!!

அன்ரி,

நீங்கள் எங்கள் குழந்தைப் பருவத்தை உங்கள் தன்னிகரற்ற பேரன்பால் நிறைத்தீர்கள். அங்கிளோடு நீங்கள் வாழ்ந்த வாழ்வு நமக்கெல்லாம் ஓர் ஆதர்ஷ வாழ்வாக - வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் படியாக இருந்தது. நீங்கள் உங்கள் தாயாரைப் பாத்துக் கொண்ட பாங்கு ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற பாடத்தை எங்களுக்குக் கற்றுத் தருவதாக இருந்தது. 

எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைக்கு என் 60 வது வயதில் இருந்துகொண்டு நான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது, நீங்கள் எங்களுக்குத் தந்த பெரு நிதியங்கள் எந்த அளவுகோல்களாலும் அளவிடற்கரியதாய்; எழுத்துக்களால் விபரிக்கவொண்ணாததாய்; வாழ்வு முழுக்கவுமாய் நிறைந்துபோய்க் கிடக்கிறது. 

அன்ரி, நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களின் தேவதை. நிஜமாக வாழ்ந்து அன்பையும் ஆதரவையும் வாரி வழங்கிய தேவதை. எங்கள் மனங்களில் நீங்கள் என்றென்றைக்கும் ஒரு தேவதையாகவே கொலு வீற்றிருப்பீர்கள்.

உங்கள் பூலோகத்துக்கான வருகை என்பது எங்களுக்குக் கடவுள் தந்த ஓர் அழகிய வரம்; வாழ்வு!

தேவதையை வணங்கி, தாழ் பணிந்து, விடைதருகிறேன். சொந்த தேசம் சென்று சேர்ந்தாய் தாயே வாழி! இறை நிழலில் இனிதே இளைப்பாறு தாயே, நீ நீடூழி!!

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி.

8.12.24.

இறுதிக் காலங்களில் கூட அழகு மாறா அவரின் தோற்றம்


7 comments:

  1. உயிரோட்டம் மிகுந்த இந்த அஞ்சலிக் குறிப்பை நான் மிகவும் விரும்பி வாசித்தேன். வாசித்தபின்பு என் மனதில் அலைமோதும் நினைவுகளை நிறுத்தமுடியவில்லை. இது போலவே அண்மையில் மறைந்த நண்பர் ஒருவரின் சாம்பலை கடலில் கரைத்துவிட்டு திரும்பியபோது ஏதோ செய்தது. சாம்பலை நீர்நிலைகளில் கரைத்துவிட்டு வந்திடலாம் ஆனால் நினைவுகளை எந்த நீரில் சென்று கரைப்பது?

    Uncle ஐப்பற்றி வாசித்தறித்தபின் மனதில் ஓர் ஆழ்ந்த ஏக்கம். வயதோடு பலருக்கும் uncle ஐப் போன்ற ஒருவர் தேவையாக இருக்கும். எவ்வளவுதான் நெருக்கமாக, புரிந்து கொள்ளும் அளவுக்குப் பழகியிருப்பினும் இணையர்கள் ஒருவரையொருவர் ஒருபோதும் அறிந்துகொள்வதே இல்லையோ என்றே பல சம்பவங்கள் சொல்லிச் செல்கின்றன.

    ஊரே குடும்பமாக வாழ்ந்த கட்டமைப்பு இன்று தாய்மண்ணிலும் மாறிவிட்டது. குடும்பம், உறவுகள் போன்றவை பணம், தேவை, தங்கியிருத்தல் போன்றவற்றின் அடிப்படையில்தான் கட்டியமைக்கப்படுகிறது.

    தான் நேசித்தவரை கடைசிக் காலம்வரை பேணிக்காப்பாற்ற முடியாத மனிதர்களின் அறம் தான் என்ன? Uncle ஐப் போன்றவர்கள் இருப்பதால்தான் உலகம் இன்றும் புன்னகைக்கிறது. எனக்கு இந்தத் தம்பதிகளை மிகவும் பிடித்திருக்கிறது. உண்மையான எழுத்து.

    ReplyDelete
  2. மிக்க நன்றி செளந்தரி.

    எத்தனை வருடங்களுக்குப் பிறகு உங்களை இங்கு காண்கிறேன்! நீங்களும் மீண்டும் உங்கள் வலைப் பக்கத்தை மீளுருவாக்கம் செய்ய வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களை உரிமையோடும் அன்போடும் கேட்டுக் கொள்கிறேன்.

    மக்கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் அல்லது இங்கு கொட்டிவிடுதல் ஒரு மனச் சாந்தியைத் தருகிறது. யாரோ ஒருவர் எங்கோ ஒரு மூலையில் எப்போதோ ஒரு நாள் இவற்றை எல்லாம் வாசிக்கக் கூடும். அவர்களோடு நம் எழுத்துக்கள் ஏதோ ஒரு விதத்தில் பேசவும் கூடும்.

    அப்போது நாம் மீண்டும் உயிர்வாழ்வோம். நீங்கள் எழுத வேண்டும்.

    அது நிற்க,

    ஓர் உன்னதமான வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட; உறவுக்கும் உயிர்களுக்கும் மதிப்பளித்து வாழ்ந்த ஓர் பரம்பரை நம்மை விட்டுப் பிரிந்து செல்கிறது.....

    நாம் அவற்றை எல்லாம் தாண்டி வெகுதூரம் வந்து விட்டோம். இவற்றை எல்லாம் நாம் அனுபவம் செய்து கொண்டோம் என்ற திருப்தியாவது எங்களுக்கு மிஞ்சி இருக்கிறது. வருகிற சந்ததிக்கு வாழ்வின் அனுபவமாக எதை நாம் விட்டுச் செல்ல இருக்கிறோம்?

    உண்மையில் நாம் கற்றுக் கொடுப்பதை விட வாழ்வதைப் பார்த்துத் தான் பல விடயங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம் என்ற பாடத்தையே நான் இப்போது தான் உணர்கிறேன்.

    என்னை நானாக வடிவமைத்ததில் ஈஸ்வரி அன்ரியை அறியாமலே அவர் ஒரு பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். அது போல இந்துவன்ரி, அவர் வீட்டுக்கு வந்து போன சாமியார்கள் என்று என் வாழ்க்கையைத் தங்கள் வாழ்க்கையாலே என்னைச் செப்பனிட்டுளார்கள். ஒரு சிற்பியைப் போல என் வாழ்க்கையைச் செதுக்கி உள்ளார்கள்.

    ஏகன் - அனேகன் இறைவன் அடி வாழ்க!

    ReplyDelete
  3. யசோ உங்கள் ஈஸ்வர் அன்ரி எவ்வளவு அன்பானவர் பண்பானவர் அழகிய மனம் உள்ளவர் என்பது உங்கள் எழுத்தை வாசிக்கும் போதே உணர முடிகிறது இப்படிநல்ல உள்ளங்களை நாம் சந்திப்பது ஓரு வரம் தான் நீங்கள் இப்படியான நல்ல உயிரை இழந்தது பெரிய இழப்பு தான் இந்த போலியான நடிப்பு மிக்க உலகில் நல்லவர்கள் இல்லாமல் போனால் தாங்கமுடியாது தான் அவர் என்றென்றும் உங்களுடன் இருப்பார் யசோ ஆறு மனமே ஆறு என மனதை அமைதியடைய செய்யுங்கள் ❤️😍. செல்வி Penrith

    ReplyDelete
  4. மிக்க நன்றி செல்வி.

    எப்போதும் உடனடியாக வந்து கருத்துச் சொல்லும் உங்கள் குணம் வாழ்வதாக! அது எழுத்தின் மீதொரு உற்சாகத்தையும் எழுதலாம் என்ற உத்வேகத்தையும் தருகிறது.

    இந்த உலகத்தின் நியதியை நாம் ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும். இந்த உடலும் உயிரும் கொண்ட பொதி ஒரு expire date ஓடும் ஓர் இரகசிய சூட்சுமங்கள் நிறைந்த சூட்கேசோடும் இந்தப் பூமிக்கு ஒரு Holiday வருகிறது. குடுக்கல் வாங்கல்களைச் செய்து நமக்கே நமக்கு மட்டும் சொந்தமான அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் நம் சொந்த வீட்டுக்குப் பயணப்படுகிறோம்.

    நிலத்தில் பொழியும் ஒரு மழை கடலில் இருந்து உயரப் போய் மழையாகக் கீழிறங்கி பூமியை; அங்கு வாழும் உயிர்களைக் குளிரப் பண்ணிவிட்டு மீண்டும் தன் சொந்த இருப்பிடமான கடலைச் சென்றடைவது மாதிரி....

    அன்ரியை நான் அப்படியாகத் தான் காண்கிறேன். என் அன்பானவர்களும் எனக்கு அப்படியாகத் தான் தெரிகிறார்கள்.

    குறைந்த பட்சம் இப்படியாக நானும் ஓர் ஆறுதலைத் தேடிக் கொள்கிறேன்....

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வி.

    ReplyDelete
  5. யசோ உங்கள் எழுத்துக்கள் எவ்வளவு உண்மையானவை. உங்கள் ஈஸ்வரி அன்ரி அங்கிள் இருவரும் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி வாசித்தபோது அண்மையில் எங்களை விட்டுப் பிரிந்த எங்கள் சின்னத்தானின் ஞாபகம் தான் வந்தது. எங்கள் சின்னக்கா சின்னத்தானும் மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்தவர்கள். பிள்ளைகள் திருமணமாகி வெளிநாட்டிற்குப் போனபின் அவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களாக தனியே வாழ்ந்தவர்கள். என்றைக்குமே அவர்கள் தனிமையை உணர்ந்ததில்லை. அந்த தனிமையை மிகவும் இனிமையாக்கி வாழ்ந்தவர்கள். சின்னத்தான் 'அது ஒரு அழகிய நிலா காலம்' நூலை எழுதிய போது அக்காதான் அவரின் முதல் வாசகி. அவரின் ஒவ்வொரு எழுத்தையும் இரசனையுடன் விமர்சிப்பார். நாங்கள் அவர்களுடன் தொலைபேசியில் கதைக்கும் போது இருவரும் இணைந்திருந்து கதைப்பார்கள். ஒருவரை ஒருவர் புகழ்ந்து கதைப்பார்கள். இன்று சின்னத்தான் இல்லாத அக்காவின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது.. இவ்வுலகிற்கு வந்தவர்கள் யாரும் நிரந்தரமாக தங்கி விட முடியாது என்பதை அறிவு சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது.

    ReplyDelete
  6. யசோ உங்கள் எழுத்துக்கள் எவ்வளவு உண்மையானவை. உங்களின் ஈஸ்வரி அன்ரி அங்கிள் பற்றி வாசித்தபோது எங்கள் சின்னத்தான் சின்னக்காவின் இயல்புதான் கண்முன்னே வந்தது. அவர்கள் இருவரும் மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்தவர்கள். பிள்ளைகள் இருவரும் திருமணமாகி வெளிநாடு சென்றபின் கடந்த 15 வருடங்களாக குமரபுரத்தில் தனியே வாழ்ந்தவர்கள். ஆனால் என்றைக்குமே அவர்கள் தனிமையை உணர்ததில்லை. சின்னத்தான் ' அது ஒரு அழகிய நிலாகாலம்' நூலை எழுதத் தொடங்கியபோது அக்காதான் அவரின் முதல் வாசகி. ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதி முடித்த பின் அக்கா வாசித்து தன் கருத்துக்களைக் கூறியபின்தான் அவர் அடுத்த அத்தியாயத்திற்குச் செல்வார். இருவரும் தங்கள் வயதான காலத்தில் ஊரில் தங்கள் வீட்டில் தென்னஞ்சோலை மாஞ்சோலைகளுக்கிடையில் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். விடுமுறை நாட்களில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் வரும் போது அவர்கள் இன்னொரு உலகத்தில் வாழ்வார்கள்.. இப்படி இருவரும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். இன்று சின்னத்தான் இல்லாத சின்னக்காவின் வாழ்க்கையை நினைக்க கஷ்டமாக இருக்கின்றது. இவ்வுலகிற்கு வந்தவர்கள் நிரந்தரமாக இங்கே தங்கி விட முடியாது என்று அறிவு சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது.

    ReplyDelete
  7. ஓம் கெளரி! எவ்வளவு பெரிய இழப்பு அது!

    சில வருடங்களே அவவோடு வாழ்ந்திருந்த போதும் அன்ரியின் நினைவுகள் நமக்கு இன்னும் நினைவில் நிறைந்திருக்கிறதென்றால் எத்தனையோ வருடக்களாக இணைந்து இன்பதிலும் துன்பத்திலும் பங்கு கொண்டு பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு ஓர் இனிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து வாழ்ந்தவர்களுக்கு அது எத்தகைய ஓர் இழப்பு!

    என்ன செய்வது கெளரி? நாங்கள் எல்லோரும் ஒரு தேவை/ கடமை/ நோக்கம் கருதி இந்த உலகத்துக்கு வந்திருக்கிறோம் போலும்! அவை முடிந்ததும் பயணப்பட்டு விடுகிறோம்.

    அங்கிள் அன்ரி மாதிரி; உங்கள் சின்னத்தான் சின்னக்கா மாதிரி ஓர் நிறைவான வாழ்வு எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. அன்ரியின் 31ம் நாள் நினைவு நாளில் அங்கிள் எழுதிய நன்றியுரையைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இறுதியாக அவர் ஒரு வசனம் எழுதியிருந்தார். 53 ஆண்டுகளாக என் வாழ்வில் என்னோடு என் இன்பதுன்பங்களில் பங்கு கொண்டு என் வாழ்வை இனிமையாக்க அவவைத் தனக்குத் தந்ததற்கும்; அவரது இறுதி நேரத்தில் அவவுக்கருகில் இருந்து அவவின் விழிகளை மூடி விடும் பாக்கியத்தைத் தனக்கு அருளியமைக்கும் அவர் கடவுளுக்கு நன்றி கூறி இருந்தார். கனதியான அந்த வசனங்கள் பாரமான இரு துளிக் கண்ணீரை வரவழைத்தது.

    பிறப்பாலன்றி எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து பருவ காலத்தில் இணையும் சில நீண்டகால பந்தங்கள் அமானுஷ்யமான சில இணைப்புகளை; இரகசியமான சில சூட்சுமங்களைக் கொண்டிருக்கின்றன போலும்! வாழ்வின் பின்பாதிக் காலங்களை முன் பின் அறிந்திராத யாரோ இருவர் இணைந்து இவ்வுலகத்துக்கு மேலும் சில உயிர்களைப் பிறப்பித்து வளர்த்து ஆளாக்கி விட்டு போகுதல் என்பது இப்போது நினைத்துப் பார்த்தால் எத்தனை அதிசயம்!

    உங்கள் அத்தான், அவரால் இந்த உலகத்துக்கு வந்த பிள்ளைகளில் அவர் அதிபராக இருந்து நிர்வகித்த பாடசாலை மாணவர்களின் மனங்களில்; அவர் எழுதிய ‘அது ஒரு நிலாக்காலம்’ என்ற வரலாற்று ஆவணப் புத்தகத்தில்; தன் காதல் மனையாளின் இதயத்தில் என்றென்றைக்கும் வாழ்ந்திருப்பார்.

    கெளரி, கலங்கற்க!

    இந்த நீண்ட கால இணைகள் மீண்டும் எங்கோ சந்தித்துக் கொள்ளும் என்றே எனக்குத் தோன்றுகிறது கெளரி. அது வரை அவர்களை நினைவுகள் வாழ வைக்கும்!

    அவர்கள் மீது அமைதியும் சாந்தியும் உண்டாவதாகுக!
    ( அஸ்ஸலாமு அலைக்கும்)

    ReplyDelete