இன்று காலையிலேயே மழை!
’ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி; ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து; பாழியந் தோளுடய பத்மநாபன் கையில் ஆழி போல் மின்னி; வலம்புரி போல் நின்றதிர்ந்து; தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல...’, ஒரு மழை!
குடை பிடித்தேனும் இன்று நடந்தே வேலைக்குப் போவது என்று தீர்மானம்.
பாதையும் பயணமும் சிறியது தான். சொல்லப் போனால் அது ஒரு 15 - 20 நிமிட நடை தூரம் தான். இதனை நான் இத்தனை காலமும் எப்படித் தவறவிட்டேன் என்று தெரியவில்லை. சொகுசு கேட்கும் வாழ்க்கைமுறையின் சோம்பேறித் தனங்கள்..... - இது தான் காரணம்; வேறென்ன?
சரி உங்களுக்காக இன்றைக்கு ( 10.9.2025 புதன் காலை) பாதையில் கண்ட சில காட்சிகள்.
அவரிடம் இருந்து நேற்றய தினம் வட்ஸப்பில் ஓர் அழைப்பிதழ் வந்திருந்தது. இம்முறையேனும் நீங்கள் எங்கள் நவராத்திரிப் பூசையில் கலந்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று அவரை வீதியில் கண்டபோது சற்று சங்கோஜமாக இருந்தது.
புன்னகைத்துப் பிரிந்தோம்.
அவர் ஒரு தமிழகத்துப் பிராமணப் பெண்மணி. ஆசாரங்களைச் சிரத்தையாகக் கடைப்பிடிப்பவர். இந்த வேண்டுதலை என்ன செய்யலாம் என்று எனக்குத் தெரியவில்லை. அங்கு போய் என்ன செய்வதென்றும் எனக்குத் தெரியவில்லை.
பொதுவாக ஈழத்தவர்களாகிய நாம் தமிழகத்தவர்கள் போல் கோலாகலமாக நவராத்திரியைக் கொண்டாடுவதில்லை. கொலு வைப்பதும் துதிப்பாடல்கள் பாடுவதும் நம்மிடையே வழக்கத்தில் இல்லை. பாடசாலைகளில் மாத்திரம் ஒன்பது நாளும் கோலாகலமாக பூசைகளும் பிரார்த்தனைகளும் நடந்தேறும். கும்பம் வைத்து, ஐயர் வந்து, மந்திரங்கள் சொல்லி; சுண்டல், பொங்கல் பிரசாதங்களோடு கொண்டாட்டங்கள் நடைபெற்று ஒரு கலை விழாவோடு சரஸ்வதிப் பூசை நிறைவுக்கு வரும்.
பாடசாலை மாணவர்களைக் கொண்டிருக்கிற குடும்பங்கள் விரதமிருப்பதோடு கடைசி நாள் ( ஒன்பதாம் நாள் இரவு) ஆயுத பூசை என்று ஒன்றை வைத்து, அன்றைக்கு சுவாமி அறையில் தொழிலாளர்கள் தங்களுடய தொழில்சார்ந்த ஆயுதங்கள், உபகரணங்களையும்; பாடசாலைப் பிள்ளைகள் தங்கள் பாடப்புத்தகங்களையும் வைத்து பொங்கல், பிரசாதங்கள், பூ, பால், பழங்கள் எல்லாம் படைத்து வணங்குவதோடு எங்களுடய சரஸ்வதிப் பூசை இனிதே நிறவு பெறும்.
எங்கள் வீட்டிலும் இதுவே வழக்கமாக இருந்தது.
எங்கள் பாடசாலையில் நடைபெறும் சரஸ்வதிப் பூசை என்றைக்கும் என்னால் மறக்கவொண்ணாதது. பள்ளிக் கூடமே கலைக்கோலம் பூண்டிருக்கும். பாடசாலை ஆரம்பித்ததும் முதல் இரண்டு பாட வேளைகளும் பூசைக்காக ஒதுக்கப் பட்டுவிடும். ஒன்பது நாளும் ஒன்பது வகுப்புகளுக்குரியது. நாமெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு அலங்கரிப்பில் ஈடுபட்டிருப்போம். சுவரோடு அமைந்திருக்கிற கரும் பலகைகள் எல்லாம் வண்ணச் Chalk குகளினால் சரஸ்வதியும் லக்ஷ்மியும் துர்க்கையும் உயிர்ப்போடு விளங்குவார்கள்.
பாடசாலை முடிந்த பிறகு மறுநாளுக்குரிய வகுப்பு ஆண் மாணவர்கள் நின்று அலங்கரிப்பில் ஈடுபடுவார்கள். எங்கிருந்தோ சைக்கிளில் டபிள் போய் செந்தாமரைப் பூக்களையும் தென்னை ஓலைகளையும் வெட்டி வந்து அந்த மண்டபத்தை அலங்கரிப்பது அவர்களுடய பொறுப்பு. பெண்பிள்ளைகள் மறுநாள் காலை வீட்டில் இருந்து எல்லோருமாகக் கொண்டுவரும் பிளிந்த தேங்காய் பூக்களையும் அரிசி முதலானவற்றையும் நிறமூட்டிக் கோலம் போடுவார்கள். மயிலும் தாமரையும் தண்ணீர் தடாகமும், பூக்களும் என பல்வேறு கோலங்கள் காட்சிப்படுத்தப்படும். மேலும் பூமாலைகள் கட்டி முப்பெரும் தேவியரையும் அலங்கரிப்பதும் பெண்பிள்ளைகளின் பிரதான கடமை.
பூக்களும் சந்தனமும் ஊதுபத்தியும் சாம்பிராணியும் கற்பூரமும் மாணவர்களின் ஒத்துழைப்பும் பிரசாதங்களுமாக அது ஒரு தெய்வீக வாசனை; தெய்வீகப் பொலிவு!....
இன்னுமொரு முக்கியமான காரியமும் அங்கு நடைபெறும். சகலகலாவல்லி மாலையும் நினைவில் இப்போது இல்லாத, வேறொரு நீண்ட பெரிய பாடலும் அந்த வகுப்பு மாணவர்கள் பாட வேண்டும். அந்த நீண்ட பாடல் நமோ நம என்று முடியும். அந்த நேரம் அதாவது, நமோ நம என்கின்ற போதும்; சகலகலாவல்லியே என்கின்ற போதும், மேடையில் திருவுருவப் படங்களின் இருபுறமும் நிற்கின்ற முழுப்பாவாடை சட்டை அணிந்திருக்கின்ற இரண்டு மாணவிகள் தாங்கள் ஏந்தி வைத்திருக்கும் தட்டில் இருந்து பூக்களை எடுத்துச் சுவாமிக்கு போட வேண்டும். அதற்கான பயிற்சியும் யார் பூ போடுவது என்ற தெரிவும் வகுப்பாசிரியரின் பொறுப்பாக இருக்கும். ( பூக்களை வெறுமனே எறியாமல் அதனைக் கைகளை மேலே உயர்த்தி மெதுவாகக் கீழே இறக்கிப் பூவினை மென்மையாக சாமிப் படத்தின் முன்னால் வைக்க வேண்டும் என்று ஆசிரியர் தந்த அறிவுறுத்தல் எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது ) அந்த இருவர் மாத்திரம் அன்றைக்கு முழுப்பாவாடை சட்டையோடு பாடசாலைக்கு வரலாம். எனையவர்கள் சீருடை தான் தரித்திருக்க வேண்டும்.
பூசை முடிந்ததும், மேடையில் வீற்றிருக்கும் சுவாமிகள் மாத்திரம் அப்படியே இருக்க, வீபூதி, சந்தனம், பிரசாதம் எல்லாம் அவற்றுக்குப் பொறுப்பான வகுப்பு மாணவர்கள் கொடுத்து முடித்த பின், கூட்டம் கலையும். அந்த மண்டபம் மீண்டும் வகுப்பறைகளாக மாறிவிடும். மாலை 3.30க்கு பாடசாலை விட்டதும் அடுத்த நாளுக்குரிய வகுப்பு மாணவர்கள் மாத்திரம் நின்று அலங்கரிப்பில் ஈடு படுவார்கள். வகுப்பாசிரியர் மேற்பார்வையில் ஈடுபட்டிருப்பார்.
பாடசாலை நாட்களில் அது தான் எங்களுக்கான அதிகபட்ச சந்தோஷமும் கோலாகலமும்.
அது நிற்க,
இந்த அழைப்பிதழ் வந்த போது எனக்கு என் பாடசாலை ஞாபகமும் சகலகலாவல்லி மாலையுமே நினைவுக்கு வந்தது.
சகலகலா வல்லி மாலை! இதனைப் படித்துப் பார்த்திருக்கிறீர்களா? குமரகுருபரர் அருளிச் செய்த பத்துப் பாடல்கள்!
அது பக்தித் தமிழின் பிளிந்தெடுத்த அமுதம்!
ஆண்டாளின் திருப்பாவை போல; மாணிக்கவாசகரின் திருவெம்பாவை போல; தமிழும் பக்தியும் அதில் மிளிரும் கம்பீரமும், கடவுளுடனான அவர்களின் அன்னியோன்னிய உரிமை வெளிபடும்; பாங்கும்; பாட்டும்; பாடும் தமிழும்; அதன் இனிமையும் படித்துப் படித்து இன்புறத் தக்கவை.
தமிழ் கம்பீரமாகவும்; பக்தி வசீகரமாகவும்; விளங்குவது என்பதுவும்; அது நமக்குக் கிடைத்திருக்கிறது என்பதுவும்; தமிழர் பண்பாட்டுக்கே பெருமை சேர்ப்பது;. அவை தமிழ் மகுடத்துக்குப் பதிக்கப்பட்ட விலைமதிக்க முடியாத பெருமை மிகு இரத்தினங்கள்; ஒளிரும் பிரகாச நட்சத்திரங்கள்.
அது பாடப் பாட பரவசம் தருவது; பருகப் பருக பக்தி பெருகுவது...
குருபரர் பாடுகிறார்,
‘வெந்தாமரைக்கு அன்றி, நின் பதம் தாங்க, என் வெள்ளை உள்ள(மான) தண் தாமரைக்குத் தகாது கொலோ?’ என்கிறார். வெந்தாமரையில் பாதம் பதித்தபடி நின்றிருக்கிறாயே ( சரஸ்வதி தேவி) உன் பாதத்தைத் தாங்க எனது வெள்ளை உள்ளமான குளிர்மையான தாமரைக்குத் தகுதி இல்லையா? - என்று கேட்கிறார்.
மேலும், ’நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர, நாற்கவியும் பாடும் பணியில் ( என்னைப் ) பணிதருள்வாய்!’ என்று கேட்கும் அந்த தமிழின் கம்பீரத்தைப் பாருங்கள். அதிலே ஓர் அன்பும் கட்டளையும் ஒழிந்து / ஒளிர்ந்து கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சும்மா பாடல் இல்லை. சொற்சுவையும் பொருள் சுவையும் தோய்ந்திருக்கத் தக்கதாகப் பாடுகிற பணி - அதிலே என்னைச் சேர்த்து விடு என்று எத்தனை அழகாய் கேட்கிறார் பாருங்கள்!
பிறகு ஆதங்கப் படுகிறார் எப்படி என்றால், . புலவர்கள் உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவலினை ( அவர்கள் ) சிந்தக் கண்டு களிப்பவளே! ( கலாப மயிலே - சரஸ்வதி தேவி) (அந்தப் புலவர்கள் மாதிரி,) ‘அளிக்கும் செழுந்தமிழ் தெள்ளமுது ஆர்த்து உன் அருள் கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?’ - எனக்கும் அப்படி ஒரு பாக்கியத்தைத் தந்தருள மாட்டாயா? என்று இறைஞ்சிக் கேட்கிறார். அப்படிக் கேட்டுவிட்டுப் பிறகு, ‘ தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்(ந்த) வாக்கும் பெருக ( எனக்குப்) பணித்தருள் என்பது அவரது வேண்டுதல்./ ஒருவித உரிமைக் குரலாக அந்தத் தமிழ் தொனிக்கிறது பாருங்கள்! - ஒருவித அதட்டல்; உரிமையான - எனக்குத் தரவேண்டியதைத் தந்து விடு என்பதான ஒரு கோரிக்கை அது!
அப்படிக் கேட்ட பிறகும் வரவில்லையே என்று விம்முகிறது அந்தப் பக்தித் தமிழ். ஏன் நீ இன்னமும் என்னிடத்தில் வரவில்லை என்ற ஏக்கம் தொனிக்கும் அடுத்த பாடலில் ( 5 ) அதனை அவர் இப்படி முன்வைக்கிறார். ‘பாத பங்கேருகம் என் நெஞ்சத்தடத்து அலராதது என்னே?’ என்று கேட்டுவிட்டு ஆறாவது பாடலில், ’பண்ணும் பரதமும், தீஞ்சொல் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது (தாக) எய்த நல்காய்!’ என்று மீண்டும் ஒரு வேண்டுதல் விடுக்கிறார்; விண்ணப்பம் வைக்கிறார். .- நான் நினைக்கிற போது பண்ணும் பரதமும் தீஞ்சொல் பனுவலும் எனக்கு எளிதாகக் கிடைக்க நீ அருள வேண்டும் என்பது அவரது கோரிக்கை.
’கிடைக்க வை’ என்பதை ’எய்த நல்காய்’ என்று சொல்லும் இந்தத் தமிழ் சுவை எத்தனை உவப்பாக இருக்கிறது! இல்லையா? இந்தத் தமிழை நாங்கள் வரலாற்றின் எந்தப் பாதையில்; எந்தத் திசையில்; எங்கு? எப்படித் தொலைத்தோம்?
அவரது அடுத்த இறைஞ்சுதலும் விருப்பமும் ஆவலும் இப்படியாக வருகிறது. ‘ பாட்டும், பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால் கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் (தேவி) என்று இவ்வாறாகக் கேட்டுவிட்டு என்னை உனது அடிமையாக்கு என்று அடுத்த பாடலில் ஒரு போடு போடுகிறார்.’ ’சொல்விற்பனவும் அவதானமும் கவி சொல்லவல்ல நல்வித்தையும் தந்து என்னை அடிமை கொள்வாய்’ ( தேவி) என்றவர், இறுதிப்பாடலில்
‘மண்கண்ட வெண்குடை(குக்) கீழாக
மேற்பட்ட மன்னரும்
என் பண் கண்ட அளவில்
பணியச் செய்வாய்!
படைப்போன் முதலாம் விண்கண்ட தேய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில், உன்போல் கண் கண்ட தெய்வம் உளதோ? சகலகலா வல்லியே! என்று முடிக்கிறார்!
பூமியிலே வாழ்கிற வெண்கொற்றக்குடைக்குக் கீழாக நிமிர்ந்து நிற்கின்ற மன்னரும் என்னுடய பண்ணை - பாட்டை - கேட்ட அளவில் பணியச் செய் என்று கம்பீரமாகக் கேட்கிறது குருபரனின் பக்தித் தமிழ்!
‘படைத்தல் தொழிலைச் செய்பவன் உட்பட எவ்வளவோ கோடானு கோடி தெய்வங்கள் இருக்கின்றன தான்; ஆனாலும், சொல்லப் போனால் (விளம்பில்) உன்னைப் போல ஒரு தெய்வம் உள்ளதோ சகலகலாவல்லியே? இது குருபரர். - குமர குருபரர்.
விண்ணுக்கொரு மருந்தை; வேத விழுப்பொருளை; கண்ணுக்கினியானை; பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக ... சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை என்று உருகினார் மாணிக்க வாசகர். ( திருவெம்பாவை)
’கோழி சிலம்ப, சிலம்பும் குருகெங்கும்; ஏழில் இயம்ப, இயம்பும் வெண்சங்கெங்கும்; கேழில் பரஞ்சோதி, கேழில் பரங்கருணை; கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?’ என்று உருகி உருகி வையகம் வாழத் தமிழ் செய்கிறாள் ஆண்டாள். ( திருப்பாவை)
என்னே தமிழ்!
என்னே பக்தி!!
சகலகலாவல்லியே நீயே சரண்!!