'Sometimes the smallest things take the most room in your heart' என்று அண்மையில் ஒரு வாசகம் ஒன்றைப் படித்துக் கடந்திருந்தேன்.
சில வேளைகளில் ஒரு சிறு வாசம் அல்லது ஒரு சிறு ருசி இல்லையெனில் ஒரு பாடல் அல்லது ஒரு மழைக்கால மாலை, அல்லது மழைபெய்து ஓய்ந்த ஒரு பொழுது, அடித்துப் பெய்த மழையில் ஒதுங்கிப் போயிருக்கும் சிறு மழைநீர் ஓடிய தடயம், ஒதுங்கிப் போயிருக்கும் ஒரு குப்பை, ஒருவரது சாயல், அல்லது குரல், ஒரு புத்தகம், ஒரு செம்பருத்திப் பூ, ஊதுபத்தி வாசம், .... இப்படி ஏதேனும் ஒன்று போதும்! எங்களை ஏதேனும் ஒரு ஞாபகப் பள்ளத்தாக்கில் அல்லது ஒரு நினைவூஞ்சலில் எங்களை இறக்கி விட அல்லது திளைக்க வைக்க....
எனது 13 வயது ஞாபகம் ஒன்று எனக்கு அப்படியாக அண்மையில் நினைவுக்கு வந்தது. அது எப்படி அவ்வளவு காலமும் என் ஞாபக அடுக்கில் அப்படியே பதிந்து போயிருந்தது என்று இது வரைக்கும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஓர் ஆச்சரியம்!
அது போகட்டும்,
எங்கள் பாடசாலை விடுமுறை வந்தால் எப்படியோ நான் யாழ்ப்பாணம் போய் விடுவேன். என் தகப்பனாரின் பூர்வீக வீடும் என் தாயாரின் பூர்வீக வீடும் அருகருகில் இருந்தாலும் எனக்கு அம்மாவின் பக்கம் தான் ஈர்ப்பு அதிகம்.
அங்கு அப்போது அம்மம்மாவும் அப்புவும் அம்மாவின் கடைசித் தங்கையும் இருந்தார்கள். ஜிம்மி என்றொரு நாயும் ஏதேதோ பெயர் ஞாபகத்தில் இல்லாத பசு மாடுகளும் அவர்களிடம் அப்போது இருந்தன. 5 அறைகள் கொண்ட கல்வீடும் மாட்டுக் கொட்டிலும் உள்ளடங்கலாக இருந்த கச்சிதமான வளவு அது! ஆனால் வளவு முழுக்க கல்; சுண்ணாம்புக் கல். அது ஆங்காங்கே தூக்கலாகத் தெரியும். எங்கள் கால் விரல்களையும் அவ்வப்போது பதம் பார்க்கும்.
முன்னாலே பெரிய விறாந்தையும் போர்டிக்கோவும் போர்டிக்கோவில் ஒரு சாய்வு நாற்காலியும் கேற்றின் கரையோரமாக ஒரு வெள்ளை எக்ஷ்சோறா மரமும் போர்ட்டிக்கோவின் கரையோரமாக வளர்ந்து முன்பக்கமாக தொங்கிக் கொண்டிருக்கும் குடிகாரன் பூக்களும் அந்த வீட்டுக்கு ஒரு தனி பவிசைக் கொடுத்தபடி இருக்கும்.
|
குடிகாரன் பூ - Rangoon ceeeper - |
சிட்னிக்கு ஒப்ரா ஹவுஸ் / ஹாபர் பிறிட்ஜ் மாதிரி எண்டு நினைச்சுக் கொள்ளுங்கோவன்!
கிணறு கேற்றுக்கும் வீட்டுக்கும் அருகாக வலது கைப்பக்க முன் மூலையில் அமைந்திருந்தது. கிணற்றைச் சுற்றி சில கமுகு, தென்னை, வாழை மரங்களும் நின்றன.
வீட்டின் ஐந்தாவது அறை விறாந்தைக்கு பக்கமாக; தனியாக; வெளிப்புறமாகவும் ஒரு வாசலைக் கொண்டமைந்திருந்தது. அதன் அருகில் நன்றாக உயர்ந்து வளர்ந்த ஒரு வேப்ப மரம் குசினிக்கு மேலாகவும் இந்த அறைக்கு மேலாலுமாக நிழல் தந்து கொண்டிருந்தது. எனோ தெரியவில்லை பச்சைநிறக் கண்ணாடிகளால் குசினி ஜன்னல் அமைக்கப் பட்டிருந்தது.
இந்த அறை தான் எனக்குப் பிடித்த அறை. அதற்குப் பிரத்தியேக காரணங்கள் ஏதேனும் இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சின்ன அறையாக அது இருந்ததும்; ஒரு சிறுகட்டிலும் மூலையில் ஒரு புத்தகத் தட்டும் அதில் ஆத்மஜோதி என்ற வழக்கமாக அப்பு வாசிக்கும் மாதாந்த சஞ்சிகைகளும் அம்மாவின் கடசித்தங்கை - அப்போது திருமணமாகாமல் இருந்ததால் - படித்து சிறுகதைகள் தனியாக தொடர்கதைகள் தனியாக என கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் புத்தகத்தின் இருந்து பிரித்து அச்சுக்கூடத்தில் கொடுத்துக் கட்டி வைத்திருந்த சிறந்த தொகுப்புகள் அங்கு இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அந்த வீட்டுக்கு என்று ஒரு வாசம் இருந்தது. அம்மாவின் தங்கை இந்து அன்ரி அந்த வாசத்தின் சூத்திரதாரி. சுருக்கு வைத்த அரைபாவாடை சட்டை போட்டிருக்கும் அவரிடம் ஓர் அபார சுறுசுறுப்பும் ஒழுக்கமும் எப்போதும் படிந்து போயிருக்கும். அவரது சுத்தமும் அடக்கமும் நேர்த்தியும் சுறுசுறுப்பும் வீட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் பதிந்து போயிருக்கும்.
அது மட்டுமன்றி, கண்டவுடனே அகமும் முகமும் மலர ஓடிவந்து, கட்டியணைத்து, உச்சிமுகர்ந்து, நிபந்தனைகள் அற்ற அன்பினால் என்னைச் சீராட்டிய கன்னித் தாயாக அவர் இருந்தார்.
முன் ஹோலில் பின்னல் கதிரைகள் நான்கும் மயில்கள் நடனமாடும் உறைகளைப் போட்டிருக்கும். அருகிலே இரண்டு சின்ன ஸ்ரூல்களும் நடுவிலே சிறு மேசையும் இருக்கும். றோஸ் நிற சுவரில் புறாப் பறவைச் சிலைகள் சில பறந்தபடி இருக்கும். ஒரு பெரிய றேடியோ ஷோகேஸின் மேலே ஒரு மூலையில் இருக்கும். சன்னமாக அது ஒலித்துக் கொண்டிருக்கும். ஷோகேசிற்குள்ளே சிப்பியில் செய்த கலைப் பொருட்கள், சில கொக்குகள், மேல் தட்டிலும் கீழ் தட்டில் பீங்கான் தட்டுகளும் இருக்கும். சிவப்புச் சீமேந்துத் தரை காலையும் மாலையும் கூட்டப்பட்டு பளிச்சென்று இருக்கும். வீட்டின் அழகையும் நேர்த்தியையும் இந்துவன்ரி எப்படி அவ்வளவு இயல்பாக பேணி வந்தார் என்று தெரியவில்லை.
அந்த வீட்டின் வாசமாக இந்துவன்ரி இருந்தார்.
எனக்கு வேலை என்று எதுவும் அதிகம் இருக்காது. அப்புவைத் தேடி தாடி வைத்த காவிகட்டிய சாமியார்கள் வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்துவன்ரி மூக்குப் பேணிக்குள் தரும் கோப்பியைக் கை சுடச் சுட விளிம்பில் பிடித்துக் கொண்டு நான் கொண்டுபோய் அப்புவுக்கும் சாமியாருக்கும் கொடுக்க வேண்டும். சாமியார் அதனை வாங்கி அருகில் வைத்து விட்டு என்னை நிமிர்ந்து பார்த்து ஓம் நமசிவாய என்று சொல்லித் தன் சுருக்குப் பையத் திறந்து வீபூதி தருவார். அதனை வாங்கி விட்டு போய் விடுவேன்.
அவ்வப்போது அப்பு கூப்பிட்டு கொக்கைத் தடியால் செவ்விளனி பறித்து வெட்டித் தருவார். பிறகு அதனைப் பிளந்து வழுக்கலையும் சாப்பிடத் தருவார். அவ்வப்போது மாலைகளில் வைக்கோல் போரில் இருந்து வைக்கலைப் பிரித்து மாடுகளுக்குப் போடும்படி அம்மம்மா உத்தரவிட்டால் அதனைச் செய்வேன். மற்றம்படி என் பொழுது சைட் அறைக்குள் சிறுகதைத் தொகுப்புகள், தொடர்கதைகள், ஆனந்தவிகடன் பகிடிகள், ஆத்மஜோதி இவைகளோடு கழியும்.
நான் நானாக வடிவமைக்கப் பட்டதில் / உருவானதில் இந்த வீட்டுக்கும் இந்துவன்ரிக்கும் இந்த என் புத்திளம் பருவத்திற்கும் அங்கு எனக்குக் கிடைத்த சுதந்திரமும் சுதந்திரமாக நானே விரும்பிப் படித்த புத்தகங்களுக்கும் பெரும் - மிகப் பெரும் பங்கு உண்டு.
ஆத்மஜோதி சஞ்சிகைகள், அப்புவோடு பகல் பொழுதில் வந்து பேசிப்போகும் சாமியார்கள், அப்புவின் தீட்சை பெற்ற தோற்றம், சிரட்டைக் குடுவைக்குள் தொங்கிக் கொண்டிருக்கும் திருநீறு, அந்த வீடு, இந்துவன்ரியின் அன்பு - இவைகள் என்னை உருவாக்கியதில் செல்வாக்கு செலுத்திய மேலும் சில காரணிகள்.
சரி அது போகட்டும்.
வெள்ளிக் கிழமை காலை மிக விசேசமானது. இந்துவன்ரி முழு வீட்டையும் ஈர்க்கிலினால் கட்டிய விளக்குமாற்றினால் கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளிவந்து கழுவுவார். முற்றம் கூட்டி சாணத்தண்ணீர் தெளிப்பார். வீட்டுக்குள் இருந்து சாம்பிராணி வாசம் வரும்.
அப்புவும் தீட்சை பெற்றிருந்ததால் கிணற்றடியில் இருந்து பலவிதமான அபிநயங்கள் எல்லாம் செய்து முழுகி வருவார். தன் வெள்ளித் தலைமயிரை முடிந்து ஒரு கொண்டை போடுவார். மூன்று குறிகளால் ஆன திருநீற்றினை வெற்றுடம்பிலும் புஜங்களிலும் நெற்றியிலும் பூசுவார். வேட்டியும் சால்வையுமாக அகன்ற நெற்றியில் தெளிவான மூன்று குறிகளால் ஆன திருநீற்றோடு அந்த ஆஜானுபவனான மனிதர் வந்து முன் போர்டிக்கோவில் இருக்கிற சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தார் என்றால் நேரம் காலை 10.00 மணியாகி விட்டது என்று அர்த்தம்.
இந்துவன்ரி என்னை அழைத்து அப்புவுக்கு மூக்குப் பேணியில் கோப்பி தருவார். அவரிடம் அதனை நான் கையளித்து விட்டு எனக்குப் பிடித்த றோஸ் நிற கிளாசில் எனக்கான தேநீரைக் குடிப்பேன்.
உங்களில் பலருக்கு அப்ப அம்மம்மாவின் வேலை என்ன என்று யோசிக்கத் தோன்றும். அவவின் வேலை பிலவு (புலவு?) என்று அவர்கள் சொல்லும் தோட்டத் தறை ஒன்று ஒரு சிறு நடைதூரத்தில் இருந்தது. காலையில் அவர் கடகத்தோடு அங்கு போனார் என்றால் மாடுகளுக்கு உழவாரத்தல் செருக்கிய புல்லும், கீரையும் மரவெள்ளிக் கிழங்கும் கொண்டு வருவார். சில வேளைகளில் வெங்காயத் தாள்களும் வரும். பத்துமணியளவில் அவர் வந்து பின் தாழ்வாரத்துக் குந்தில் குந்தினார் என்றால் அவருக்கான தேநீரையும் நானே கொண்டு சென்று சேர்பிக்க வேண்டி இருக்கும்.
சனிக்கிழமைகள் இன்னும் ஒரு படி விஷேசம். அம்மம்மா தோட்டத்தால் மரக்கறிகளைத் தந்து தேநீர் அருந்திய பிறகு பின் பனைவடலிகளுக்குள்ளால் செல்லும் ஒரு சிறு நடைபாதை வழியாக ஒரு ஓலைப் பையைக் கொண்டு தெல்லிப்பளைச் சந்தைக்குப் போவார். மீன்கள் வாங்கி வருவார்.
அம்மம்மா ஒரு விசித்திரப் பேர்வழி. அவர் அதிகம் யாரோடும் பேசமாட்டார். அன்பினை வெளிப்படையாக அப்பு மாதிரி பொழிய மாட்டார். ஆனால் வேலையில்; தன் கடமையில்; கண்ணும் கருத்துமாக இருப்பார்.
இந்துவன்ரியோடு அவர் பேசும் - எனக்கு ஞாபகத்தில் இன்றும் இருக்கும் பேச்சு இந்தமாதிரியாகத் தான் இருக்கும். ‘ இந்த நாலு குஞ்சு மீனுக்கு அறாவிலை சொல்லுறான்; நான் பேசிப்பறைஞ்சு வாங்கிக் கொண்டு வாறன்’ என்று சொல்லியபடி குசினிக்கு வெளிப்புறம் இருக்கும் பைப்பில் மீனை வெட்டிக் கழுவி சுத்தப் படுத்தி இந்துவன்ரியிடம் கொடுப்பதோடு அவரது கடமை அப்போதைக்கு நிறைவு பெறும்.
மீன்சட்டி குசினிக்குள் வரும் போது நெருப்படுப்பில் உலை கொதித்துக் கொண்டிருக்கும். மரவெள்ளிக் கிழங்கும் கீரையும் அடுப்பில் ஏறத் தயாராக மண் சட்டிக்குள் இருக்கும். முதல் பால் இரண்டாம் பால், கப்பிப் பால் என தேங்காய்ப் பால் தனித்தனிக் கிண்ணங்களுக்குள் இருக்கும்.
கஞ்சி வடித்த பிறகு அதனை ஒரு சிறு கிண்ணத்தில் ஊற்றி வடித்த சோறும் உப்பும் தேங்காய் பாலும் விட்டு இந்துவன்ரி என்னைக் குடிக்கச் சொல்வார். சுவையோ சுவை! அப்படி இரு சுவை!! குடித்த பிறகு மிச்சக் கஞ்சியும் வெட்டிய மரக்கறித் தோல்களும் தவிடோ புண்ணாக்கோ ஏதோ ஒன்று இவற்றை எல்லாம் வாளியில் கலந்து மாட்டுக்கு வைத்து விட்டு வருவார்.
இனி மீன்குழம்பும் மீன் பொரியலும் அடுப்பில் வாசம் பரப்ப ஆரம்பித்திருக்கும். சொதியும் கூட்டுச் சேர்ந்திருக்கும். 12.15 - 12.30 க்கிடையில் மதிய சமையல் சுடச் சுடத் தயாராகி விடும்.
முதலில் அப்புவுக்குத் தான் சாப்பாடு. அவர் வந்து பலகையில் அமர்வார். அவருக்கு முன்னால் ஒரு பெட்டியை தலைகீழாகக் கவிட்டு வைத்து விட்டு அதன்மேலை வாழை இலை போட்டு இந்துவன்ரி பரிமாறுவார். நான் விருந்தாளி என்பதால் எனக்கும் அப்போதே சாப்பாடு கிடைக்கும்.
நான் சாப்பிட்ட கோப்பை எனக்கு இன்னும் நல்ல ஞாபகத்தில் இருக்கிறது. அது ஒரு எனாமல் கோப்பை. அதன் விளிம்பு சிறியதாக உருண்டு நீல நிறத்தில் காணப்படும். சுட்டு விரல் அகல பரப்பு தட்டையாக இருக்கும். அதன் நடுப்பகுதி பள்ளமாக இருக்கும். அதன் நடுவில் சிவப்பு நீல நிறத்தில் பூவோ, கிளியோ ஏதோ ஒன்று தீட்டப் பட்டிருக்கும். பாரமில்லாதது. ஏந்த இலகுவானது. அந்தக் கோப்பை தான் என்னுடய கோப்பை. எனக்குப் பிரியமான கோப்பை.
சப்பாணிவெட்டி நிலத்தில் அமர்ந்து, அந்தக் கோப்பையை நிலத்தில் வைத்து, மீன்குழம்பும் கீரையும் மரவெள்ளிக் கிழங்கும் மீன்பொரியலும் சேர்த்து சாப்பிடும் சுவை இருக்குப் பாருங்கள்! அதன் பெயர் தான் அமுத சுவை!! பிறகு சொதியும் மீன்குழம்பும் பொரியலுமாக உண்பது ஓர் உபரி சுவை!
பேரின்பப் பெருஞ்சுவை!!
சுமார் 45 வருடங்களுக்குப் பிறகு கெளரி கொண்டுவந்து தந்தாள் பாருங்கள் ஒரு மீன் குழம்பு!
அதே மீன்குழம்பு!!
இந்துவன்ரி செய்து தந்த, அதே மீன் குழம்பு!
ஞாபக இடுக்கில் ஒழிந்துபோயிருந்த அத்தனை நினைவுகளையும்கூட அது ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வந்து நேர்த்திருக்கிறது அந்த மீன்குழம்பு!
கெளரியின் மீன் குழம்பு!
இந்துவன்ரி செய்து தந்த அதே மீன் குழம்பு!
ஒரு பெருமழை என் ஞாபக இடுக்கெங்கும் நுழைந்து எனக்கே தெரியாமல் ஒழிந்து போயிருந்த அத்தனை நினைவுகளையும் வெளியே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது!
சில மனிதர்களுக்கு; சில பொருள்களுக்கு; சில விடயங்களுக்கு; மேலும் ஒரு சிறு பொறிக்கு அப்படி ஒரு தார்ப்பரியம் இருக்கிறது!
அவற்றினை ஏந்தி வந்து மீட்டுத் தருகின்றன எதிர்பாரா அன்பின் நிமித்தங்கள்!
‘கடவுள் தந்த அழகிய வாழ்வு நினைவுகளால் நிறைகிறது....
கெளரி,
உன் மீன்குழம்புக்கு நன்றி!
சில அன்பின் கடன்களை இந்த ஜென்மத்தில் தீர்த்துவிட முடியும் என்று தோன்றவில்லை!