வருகை தந்திருக்கும் எல்லோருக்கும் முதலில் எனது உளமார்ந்த புதுவருட நல்வாழ்த்துக்கள்.
பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டு எல்லோருக்கும் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் உடல் சுகங்களையும் எடுத்து வரும் ஆண்டாக அமையட்டும்.
எனக்கும் அதுவே வேண்டுதலாக இருக்கிறது.
கடந்த வருட இறுதி எனக்கு ஒரு முழுமையான வாழ்வின் இறுதிக் கொண்டாட்டமாக; என் தங்கையின் ஊரில்; அவளின் அன்பில் திக்கு முக்காடி களித்த கோலாகலமான கொண்டாட்டமாக அமைந்தது.
சுவிற்சிலாந்து - ஒரு சுவர்க்க பூமி.- அது குறித்த பயண அனுபவங்கள் ‘memory lane' என்ற தலைப்பில் தொடர் பதிவாக எழுத இருக்கிறேன். அங்கு மாத்திரமன்றி லண்டன், ஜேர்மனிக்குப் போன அனுபவங்களும் புதுமையானவையாக இருந்தன. அதிலிருந்த ஒரு சிறு துளி தான் இன்றைக்கு உங்களோடு பகிர இருப்பது.
ஏனென்றால் ஊருக்கு வந்து இருவாரங்கள் ஆகி எங்கிருந்து எழுத்தை ஆரம்பிக்கலாம் என்று எண்ணும் தோறும் இந்த ஒரு காட்சி மட்டும் என் நினைவில் இருந்து எழுது எழுது என்று சொல்லிக் கொண்டு அகலாது நிற்கிறது.
அத்தோடு இன்னொரு விடயமும் குறிப்பிட வேண்டி இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு விடயம் பற்றி நினைத்தீர்கள் என்றால் தானாகவே அது குறித்த விடயங்கள் நம்மை வந்தடைகின்றன.
இது விடயத்திலும் எனக்கு அவ்வாறே ஒரு அற்புதமான தகவலும் கிடைத்தது. ( அடுத்த பதிவில் அது வரும்)
அது தவிர, நான் இப்போது சட்ட ரீதியாக ஒரு ‘மூத்தகுடிமகள்’ என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். ஆகையினால் பின்வரும் எழுத்தோட்டங்களைப் பார்த்து நீவீர் தயவுகூர்ந்து முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட்டுவிடவேண்டாம் என்றும் அன்புரிமையோடு கேட்டுக் கொள்ளுகிறேன்.
இந்த முதுமையை அங்கீகரித்தல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கிறது. பாட்டியாகும் பாக்கியம்; அரசாங்கத்தின் மூத்த குடிமகளுக்கான அட்டை, பயணங்களில் கிடைக்க இருக்கும் சலுகைகள் என்று அது ஒரு விதமான புதுமையான அனுபவமாக இருக்கிறது.
வேறொரு உலகத்திற்குள் நுழைந்து விட்டதைப் போல...
சரி, அது இருக்கட்டும், வந்த விடயத்திற்கு வருகிறேன்.
நான் இலண்டன் மாநகருக்கும் சென்றிருந்தேன் என்று சொன்னேன் அல்லவா? அங்கு Victoria & Albert museum செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.
அது ஓர் அற்புதமான வாய்ப்பு.
சொற்களுக்குள்; கமறாவுக்குள்; வீடியோவுக்குள் அடக்க முடியாத - கண்களுக்குள் மட்டும் தேக்கி வைத்திருக்கக் கூடிய; பார்த்து மட்டுமே அனுபவிக்கத் தக்க அரிய அனுபவம் அது!
என்னை அழைத்துச் சென்ற என் தம்பி ஜெயந்தனின் அருமை மகள் பிரதீஷனா பற்றியும் இந்த இடத்தில் நான் அவசியம் சொல்லியாக வேண்டும்.
அந்த இளம் பெண் என்னை ஒரு ராணியை அழைத்துச் செல்வதைப் போல; என்னுடய ஆர்வத்துக்கும், தேடலுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும், சிலிர்ப்புகளுக்கும், நான் எடுத்துக் கொண்ட நேரத்திற்கும் என்னோடு ஈடுகட்டி; என் விருப்பத்தை மதித்து, எந்த ஒரு களைப்பையோ, நேரம் போவதையோ கருத்தில் கொள்ளாது, பார்ப்பதை முழுமையாகப் பார்க்க வேண்டும்; எந்த ஒரு இடையூறுமின்றிப் பார்க்க வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, எனக்கொரு அற்புதமான அனுபவத்தைச் சாத்தியப் படுத்தினாள் அந்த இளம் சிட்டு. அந்த இளம் பெண்ணை என்னால் நிஜமாகவே என்றைக்கும் மறக்க இயலாது. என்னை அவள் ஒரு ராணியைப் போல உணர வைத்தாள்;.பல விதங்களிலும்.
ஜெயந்தன் காயத்ரி தம்பதிகளில் மூத்த மகள் என்று பெருமையோடு நான் சொல்லக் கூடிய அந்தப் பருவ மகளுக்கு எனது தாய்மை நிறைந்த என் அன்பும் ஆசீர்வாதங்களும்!
’பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பிய ஓருயிர்’
சரி அது நிற்க! ( சிந்தனையை ஒழுங்கு படுத்துவது சிரமமாக இருக்கிறது. ஆகையினால் எழுத்தும் அங்கும் இங்குமாக ஓடித்திரிகிறது. அது குறித்து என்னைப் பொறுத்தருள்க!)
அந்த நூதன காட்சிச் சாலையில் பார்த்த ஒரு சிற்பம் இது.
இந்தச் சிற்பத்தில் இந்தத் தாடி வைத்த ஆணின் வெட்கம் அல்லது நாணம் எத்துணை அழகாக இருக்கிறது பாருங்கள்!
காதலிக்கும் ஆண்களே!
தாடி வைத்துக் கொள்ளுங்கள்!
( காட்சி தொடரும்....)

Memory Lane - புதிய தொடர்.... மகிழ்ச்சி....... சிறப்பான தொடக்கம்.
ReplyDeleteதாடி வைத்துக் கொள்ளுங்கள்..... :) வைக்கலாம் என்றால் அதற்கு எதிர்ப்பு இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்...... வாசிக்கக் காத்திருக்கிறோம்.