Wednesday, February 18, 2009

அனுபவம் ஒரு துளி

துளி ஒன்று


சென்றவார நடுப்பகுதி.அது ஒரு மழைக் கால நள்ளிரவை நெருங்கும் வேளை.வேலை முடித்து வந்து S.B.S தொலைக்காட்சியில் பிறமொழிப் படம் ஒன்றின் யதார்த்தமான கதைஓட்டத்தில் ஒன்றித்திருந்தேன்.வழக்கத்திற்கு மாறாக கைத் தொலைபேசி மெல்லக் குரல் கொடுத்தது.ஓர் அதிர்ச்சியான தகவல்.

எனது சகோதரி முன்னிரவு வேளை வேலை முடித்து வரும் போது ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார் என்பது தான் அந்தத் தகவல்.அவுஸ்திரேலிய செல்வந்தர்கள் வசிக்கும் வட சிட்னியின் பிரமாண்டமான தனியார் வைத்திய சாலையின் எலும்பு முறிவுப் பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட தாதியாக பல வருடங்கள் கடமையாற்றும் அக்கா அதே எலும்பு முறிவுப் பிரிவில் இப்போது நோயாளியாக அனுமதிக்கப் பட்டிருந்தார்.

நள்ளிரவு ரக்ஸி பிடித்து ஆஸ்பத்திரியைச் சென்றடைந்த போது தகதகப்பான ஆஸ்பத்திரியின் பராமரிப்பிலும் முழு அளவிலான அதிர்ச்சியிலும் அவர் இருந்தார்.இருந்த போதும் அந்த வினாடித்துளிக்குள் ஓடிவந்த மக்களின் உதவிக் கரங்களின் இதமான மனிதத்திலும் அதன் மன அழகிலும்,அதன் சுறு சுறுசுறுப்பிலும் 3 நிமிடத்திற்குள் வந்துவிட்ட அம்புலன்ஸின் அதி தீவிரத்திலும் கொடுக்கப்பட்ட நம்பிக்கையிலும் பொலிசாரின் ஆதரவான கை கொடுத்தலிலும் மனம் நெகிழ்ந்து போயிருந்தார்.

காரினுடய சேதத்தை அளவிட்ட வீதிப் போக்குவரத்து அதிகாரிகளும் பொலிசாரும் காரிற்குள் இருந்த காற்றுப் பையினுடய உதவியையும் அவசியத்தையும் பற்றி விதந்து பேசியதாகப் பின்னர் அறிந்து கொண்டேன்.

மிகுந்த கவனமும் பொறுப்புமுள்ள என் சகோதரிக்கு நடந்த இவ் விபத்தின் பின் தான் "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்பதன் முழு அர்த்தத்தையும் விளங்கிக் கொண்டேன்."ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்" என்றும் இதைத்தான் சொன்னார்களோ!

பொதுவாக நான் தான் அவதானம் இன்றி கார் ஓடுவதாக என்னோடு வருபவர்கள் மிகவும் பயம் கொள்வது வழக்கம்.அதிலும் என்னுடயது 1992 ஆம் ஆண்டுக் கார் என்பதில் எனக்கு மகா பெருமை வேறு.எத்தனையோ பேர் எத்தனையோ முறை எத்தனையோ விதத்தில் காரை மாற்றும் படி தன்மையோடும் அக்கறையோடும் உள்ளார்ந்த நேசத்தோடும் அதன் உண்மையான அவசியம் குறித்தும் எனக்குக் கூறி விட்டார்கள்.

யாரும் இவ்வாறு கூறும் போது சினம் கொள்ளத்தக்க அளவுக்கு அதனுடனான என் உறவு இருக்கிறது.எனது முதலாவது கார், ரொக்கமாய்க் காசு கொடுத்து முழுக்க முழுக்க சொந்த விருப்பின் பேரில் வாங்கியது,பிடித்த மொடல்(!?),பின் சீட்டை மடித்து விட்டால் கிடைக்கும் ஒரு நீண்ட இடம்,இதுவரை தானாக பிரச்சினை எதுவும் தராத அதன் இயல்பு,கையிற்கும் அதற்கும் இடையிலான தனித்துவமான ஓர் புரிந்துணர்வு,அதன் லாவகம்.....இப்படிப் அது பிடித்துப் போனதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.MS1992 என்பது அதற்கு நான் கொடுத்திருக்கின்ற செல்லப் பெயர்.(நம்புங்கள் 1992ம் ஆண்டு car of the year ஆகத் தெரிவு செய்யப்பட்ட மொடல்.)Toyota seca.

இப்போது எனக்கு முன்னால் இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால் AIR BAG இருக்கின்ற கார் ஒன்று நான் வாங்கித்தான் ஆக வேண்டுமா? எட்டு வருடங்களாக என்னை தினம் தினம் காவிச் செல்லும் அதனைப் பிரியவோ எனக்கு மனம் இல்லை. நான் என்ன செய்யட்டும்?

உங்களது முதல் கார் அனுபவங்கள் எப்படி?தேன் துளி ஒன்று;


சரி, அக்கா வீடு வந்தாயிற்று.மூன்று மாதங்களுக்கு கட்டிலில் தான் வாழ்வு நடத்தியாக வேண்டும்.நான் வேலை செய்கின்ற இடத்தைத் தாண்டி ஏலம் போடுகின்ற இடத்திற்கு காரும் போயாயிற்று.என்னுடய வேலைத்தலத்தில் இருந்து 15 நிமிட நேரத்தில் கார் ஏலம் போடும் இடம் இருந்ததால் காரிற்குள் இருக்கும் சொந்தப் பொருட்களை எடுத்து வருவதற்கு நான் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டேன்.அது தானே நியாயம்!எனக்கு அதில் ஒரு சிரமமும் இருக்கவில்லை.

மூளையைச் சோம்பேறியாக்கும் வழிகாட்டும் இயந்திரங்களில் விருப்பமற்ற நான் வழக்கம் போல் மூளையை இதிலேனும் பாவிக்க எண்ணி வழிகாட்டும் புத்தகத்தின் உதவியோடு இரண்டு வீதிகளைத் தவற விட்டு பின் தேடிக் கண்டுபிடித்து மழை நாளில் குடை எடுத்து வைக்காத என் கவனயீனத்துக்காக மழையைத் திட்டிக்கொண்டு( வழக்கம் போல்! கல்லில் நாம் காலை அடித்து விட்டு கல் அடித்து விட்டது என்று தானே கூறுவது வழக்கம் ) நிறுத்த இடம் கிடைக்காமல் தூரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு வழமை போல் வேலைக்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது அந்த குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்தேன்.

இப்போது நான் சற்று சூடாக ஆரம்பித்திருந்தேன். காரணம் சரியாக வீதிகளைக் கண்டுபிடித்து என் வேலைக்குச் சரியான நேரத்திற்கு நான் போயாக வேண்டும்.வரவேற்பாளினி என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவள் தொலை பேசியில் ஒன்றித்திருந்தாள்.நேரமோ 15 நிமிடங்களுக்கு மேலாயிற்று.

எனக்குப் பின்னால் 80,85 வயது மதிக்கத்தக்க இரு வயோதிபர்களும் தம்முடய வாகனத்திற்குள் இருக்கின்ற பொருட்களை எடுக்க வந்து எனக்கருகில் காத்திருந்தனர்.மிக நிதானமாகவும் மழைக் குளிருக்கு ஏற்றதான ஆடைகளோடும் ஆளுக்கொரு பெரிய குடைகளோடும் கணவான்களைப் போலவும் அவர்கள் காட்சி தந்தார்கள்.அவர்களுக்குச் சற்று அப்பால் ஒரு வயோதிப மாதும் அவரது மகளைப் போன்ற தோற்றமுடய பெண்மணியும் நின்றிருந்தார்கள்.

நான் வேலைகான கோடைக்கால சீருடையில் மழையில் சற்றே நனைந்து கதிரை ஒன்றில் குடங்கி இருந்தேன்.புன்னகையோ சினேகமோ கொள்ள முடியவில்லை.என்னைச் சுற்றி ஒரு இறுக்கமான போர்வை கவிந்திருந்தது.யாரும் வரக்கானோம். நேரமோ போய்க் கொண்டிருந்தது.என் பொறுமை அதை விட விரைவாகப் போய்க் கொண்டிருந்தது. அக்கா முதல் நாளே வருவது பற்றிய விபரத்தையும் நேரத்தினையும் அவர்களுக்குக் குறிப்பிட்டிருந்தமையாலும் அவர்களது முகவரி, தொலைபேசி இலக்கங்களைத் தந்திருந்தமையாலும் வரவேற்பறையில் இருந்தபடி குறிப்பிட்ட தொலை பேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ள உடனே ஒரு இளைஞன் ஓடோடி வந்தான்.

GREEN FORD என்றபடி எனக்கொரு பச்சை நிற பாதுகாப்பங்கியை தந்து விட்டு NAVY BMW என்றபடி அவர்களுக்கும் அந்தப் பாதுகாப்பங்கியைக் கொடுத்து தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு கூறி முன் சென்றான்.அவசராவசரமாக நான் பின்தொடர அவர்கள் இருவரும் என் பின்னே வந்தனர்.நீண்ட பாதை வழியே அடிபட்ட வாகனங்கள் இயந்திரத்தால் நசிபடத் தயார் நிலையில் கிட்டத்தட்ட ஒரு மைதான அளவுப் பரப்பில் நின்றிருந்தன.

ஏதோ ஒரு விபரிக்க முடியாத சோகம் - ஒரு மயாணத்திற்குச் சென்றததைப் போல - இறப்பை எதிர் பார்த்துக் காத்திருக்கும் நோயாளிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்றதைப் போல - ஏதோ ஒவ்வொரு வாகனங்களும் என்னைப் பார்த்து அழுவதைப் போல - பாவனையாளர்களால் புறக்கணிக்கப்பட்ட அனாதைகளைப் போல -அந்த இடம் சோகத்தைச் சுமந்திருந்தது.ஒவ்வொரு வாகனத்தின் பின்னாலும் சொல்வதற்கு அவலம் நிறைந்த சோகக் கதை ஒன்று இருந்தது.கேட்கத்தான் ஒருவரும் இருக்க வில்லை.இடத்தைச் சென்றடைந்ததும் (இரு வாகனங்களும் ஒரே இடத்தில் தான் நின்றன)காரணம் இன்றிக் கண்ணீர் வந்தது.

மனதை அடக்கிய படி பொருட்களை விரைவாக எடுத்துக் கொண்டு மீண்டுவிட நினைத்தேன்.அடுத்த காரைப் பார்க்க மனசு வரவில்லை.அவர்கள் இருவரும் மிக நிதானமாக கையுறைகளைப் போட்டு தம் பொருட்களை எடுத்து தாம் கொண்டு வந்த சிறு பையிற்குள் போட்டு விட்டு, கையுறைகளைக் களற்றியவாறு நன்றாக சுற்றித் தம் காறை ஒரு நோட்டம் விட்டு என் பக்கக் காரையும் பார்த்தார்கள்.

சினேகமாயும் ஆறுதலாயும் ஒரு புன்னகையை அவர்கள் எனக்குத் தந்த போது, நான் ஒரு நீண்ட கறுப்புப் பைக்குள் பொருட்களை நிறைத்துக் கொண்டிருந்தேன்.பின்னர் அவர்கள் நின்றிருந்த இளைஞனிடம் அவன் அழைத்து வந்த கருணைக்கு நன்றி கூறினார்கள்.பின் நிதானமாக என்னைப் பின் தொடர்ந்தார்கள்.

வெளியே வந்தாயிற்று. நான் என் பாதுகாப்பங்கியைக் களற்றிக் கொடுத்து விட்டுப் போகத் தயாரானேன்.அவ்விரு முதியவரில் ஒருவர் அருகில் நின்ற பெண்மணிகளுக்கு இவ்வாறு சொன்னார்." நாம் போய் பொருட்களை எடுத்து வந்து விட்டோம் நீங்கள் போய் பார்ப்பது அவ்வளவு உசிதம் இல்லை: வாருங்கள் வீட்டுக்குப் போவோம்".தோழமையோடும் ஆதரவோடும் அந்த மூதாட்டியின் தோள்களில் கை போட்டு ஆதரவாக நடத்திய படி குடை பிடித்துச் சென்ற அந்த முதியவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

தேன் துளியாய் ஒரு "வாழ்வு" நடந்து போய்க் கொண்டிருந்தது.

இப்பொழுது மீண்டும் எனக்கு அழ வேண்டும் போல் இருந்தது.

4 comments:

 1. நீயில்லமல் நான் இல்லை என்று பசப்பு வார்த்தைகளால் மயக்கி விட்டு நொடிப்பொழுதுக்குள் ஆளையே மாற்றி விடும் உலகத்தில் ஒரு காரை மாற்றுவதற்கு நீங்கள் இவ்வளவு தூரம் யோசிக்க வேண்டுமா?

  ReplyDelete
 2. முகமறியா நண்பருக்கு வணக்கம்,

  "அடப் போங்கடா!
  இந்த விளையாட்டுக்கு
  நான் வரவில்லை என்று
  துண்டை உதறி
  தோளில் போட்டுக் கொண்டு
  போவதாய் அமைவதில்லை
  வாழ்க்கை."

  (நன்றி;சித்தன்,யுகமாயினி.)

  உண்மை தானே!வாழ்ந்து முடித்தாக வேண்டி இருக்கிறது: எமக்கேயான மகிழ்ச்சிகளோடும் நம்பிக்கைகளோடும்.

  நம்பிக்கையைக் கைவிடாதிருப்போம்.வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு:தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு.

  உங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வாருங்கள்.

  ReplyDelete
 3. ப்ரியமான தோழி,
  உங்கள் மென் உணர்வு புரிகின்றது. நமக்கு மிகப் பிடித்தமானவை அவை பொருளாய் இருந்தால் என்ன உயிராய் இருந்தால் என்ன, அவை நம்மைவிட்டு அகலும் போது சொல்லொண்ணா துயரை அடைவது இயல்புதான். அதுவும் கார் என்பது நண்பனைப் போல உங்களுடன் எப்போதும் பத்திரமாய் எல்லா இடங்களுக்கும் செலுத்தியது. உங்கள் மன நிலை புரிகின்றது யசோ. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு life time உண்டல்லவா? வருத்தத்தை கடந்து புதிய கார் விரைவில் வாங்கி அதனடம் எம் நேசத்தை செலுத்துவோம், சரியா? ‘தேன்’ துளியாய் அந்த வாழ்க்கை என்று நீங்கள் சொல்லியது புரிகிறது. நட்பில் துளிர்க்கும் தேன் துளிகளாய் நாம் இருக்கும்போது நீங்கள் ஒருபோதும் கண்ணீர் சிந்தக் கூடாது, என்னால் தாங்க ஏலாது. அக்கா சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 4. சில "கணங்கள்" வாழ்க்கை என்றால் என்ன என்பதை சுருக்கென்று தைத்து விடுவது போல் சொல்லி விடுகிறது.

  மயிலிறகால் வருடிப் போயின உங்கள் வார்த்தைகள் தோழி.அவை கோடி பெறும்.

  உங்கள் கருணைக்கு என் மரியாதைக்குரிய வணக்கங்கள்.

  அதிசயமான கணம் ஒன்றில் நாம் இணைந்திருக்கிறோம் இல்லையா உமா!

  நீங்கள் மீண்டும் வர வேண்டும்.

  ReplyDelete