Wednesday, February 25, 2009

மனம்

ஆத்மா,உயிர், மனம், மனசாட்சி,எண்ணங்கள் இவைகள் எல்லாம் உடலில் எங்கிருக்கின்றன என்று கேட்டால் விடை தெரியவில்லை;ஆனால் உணர முடிகிறது என்று மட்டும் பதில் சொல்ல முடிகிறது.

இது பற்றி மெய்ஞானமும் விஞ்ஞானமும் பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்து வந்திருக்கின்றன.அவரவருக்குரிய வகையில் பதில்களையும் சொல்லி வந்திருக்கின்றன.அவை முடிவடையா ஆராய்ச்சியாகவே இன்று வரை உள்ளன.கண்டவர் விண்டிலர்:விண்டவரோ கண்டிலர்.

ஆனால்,அதனை இலகுவாக விட்டுச் செல்ல முடியாத வகையில் அது மனிதனின் அக,புற வாழ்வில் கொண்டிருக்கும் பங்கு மிகப் பெரியது.மகிழ்ச்சி,துக்கம்,அன்பு,வெறுப்பு,கோபம் நேசம்,சஞ்சலம்,சோகம்,பாசம்,பூரிப்பு,பெருமை,நின்மதி போன்ற உணர்வுகளின் ஊற்று அங்கிருந்து தான் பிறப்பெடுக்கிறது.அவை விரும்பியோ விரும்பாமலோ மனிதனின் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்ததைச் செலுத்துகின்றன.

கவிஞர்களும் அதைப் பற்றி பல விதங்களில் எழுதி வந்திருக்கிறார்கள்.என் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் என் தோழி - கவிஞையாக,சமூக சேவகியாக,பெண்ணின் உரிமைக் குரலாக, பல்கலைக் கழக விரிவுரையாளராக,தாயாக, மனைவியாக எனப் பல்வேறு வாழ்வியல் தளங்களில் இயங்கும் பாமதியின் இது வரை வெளி வராத கவிதை ஒன்று தன் மனதை இவ்வாறு கூறுகிறது.


தேவாங்கு

நான் என்ற ஒன்று
எங்கோ எனக்குள்
புதைந்து கிடக்கிறது.

தலைகீழாகத் தொங்கிக் கொண்டு
ஒரு தேவங்கு போல் அது
உன்னைப் பார்த்துச் சிரிக்கும்
அவர்களைப் பார்த்து வெறுக்கும்
வரையறைகளைத் தாண்டி
தாவித் திரிந்து
மேலும்கீழும் குதிக்கும்.

மெளனமானவர்களை எட்டிப் பார்க்கும்
இரைச்சல் போடுபவர்களைப் பார்த்து
தானும் கூச்சல் போடும்.

அது விரைந்து வரும்
பின்பு உறங்குவது போல்
கண் மூடி இருக்கும்

மறுபடியும் சில நொடிகளில்
எழுந்து தர தரவென அசைந்து போகும்
மொழி மறந்து போனதாய் பாசாங்கு செய்யும்

சோகமாய் அமர்ந்திருந்து
கனத்த மனத்துடன்
கண்ணீரை விழியில் தேக்கி வைக்கும்

தனக்கு உருவம் இல்லை என்று
மயக்கத்தில் இருக்கும்

உயரே உயரே குதித்து
திடீரென நிலத்தில் இறங்கி
குப்புறப் படுத்துக் கிடக்கும்

நான் என்ற ஒன்று
எங்கோ எனக்குள்
புதைந்து கிடக்கிறது.


(விரைவில் வெளிவர இருக்கும் அவரது கவிதைத் தொகுதியில் இருந்து)

நாமும் எம்மைப் பார்க்கத் தொடங்கும் போது பல வியப்பான அம்சங்கள் வெளிவரலாம்.எம்மை நாம் கண்டு கொள்ளும் ஆரம்பப் பாடம் அங்கிருந்து தான் ஆரம்பமாகிறதோ?


நம்முடய உருவத்தை நாம் பிடித்து ஒரு முறை பார்ப்போமா?

அடுத்த பதிவு "நான் என்ற நான்" பற்றி!

3 comments:

  1. வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்னும் தொடர் பதிவில் உங்கள் பதிவுகளை இடுவதற்கு ரசிகா அன்புடன் அழைக்கின்றார் தனது நண்பர்களை.

    ReplyDelete
  2. அறிந்து கொள்வதற்கான முயற்சி எடுத்தாலே போதும் பாதிப் பிரச்சனை தீர்ந்து விடும். உங்களது புதிய பதிவை ஆவலோடு எதிர்பார்கின்றோம்.

    ரசிகா பொருத்தமான ஒருவரைத்தான் அறிமுகப் படுத்தியுள்ளார். வழக்கொளிந்த தமிழ் சொற்கள் என்ற தொடர்பதிவிலும் உங்கள் பதிவை எதிர்பார்கின்றோம்.

    ReplyDelete
  3. இருவருக்கும் நன்றி.

    இரண்டு பேரும் நேரத்தோடு வீட்டுக்கு வந்து விடுங்கள்.

    ReplyDelete