Wednesday, April 21, 2010

சொல்லக் கூடாத ஒன்பது விடயங்கள்


ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று யாரிடமும் சொல்லக் கூடாத விடயங்கள் என்று ஒன்பது விடயங்களைப் பட்டியலிட்டிருக்கிறது."ஸூபாஷித ரத்ன பாண்டாகாரம்" என்பது அந்த ஸ்லோகம் காணப்படும் நூலின் பெயர்.ஸ்லோகம் இது தான்.

"ஆயுர்விருத்தம்,க்ருஹசித்ரம்,மந்த்ர மெளஷத மைதுனே,
தானம், மானாப, மானெளச நவ கோப்யானி காரவேத்".

இதன் பொருள் என்னவென்றால்,தனது வயது,சொத்து,சிறந்த மந்திரம்,நல்ல மருந்து,கணவன் மனைவியின் ப்ரியம்,மற்றும் வீட்டில் நடந்த சண்டை,தானம்,தனக்கேற்பட்ட புகழ்,மற்றும் அவமானம்,இந்த ஒன்பது விடயங்களையும் ஒருவருக்கும் கூறக் கூடாதாம்.(நன்றி தினக்குரல்.)

பொதுவாகப் பெண்களிடம் வயதையும் ஆண்களிடம் வருமானத்தையும் கேட்கக் கூடாது என்று கூறுவார்கள்.இப்போது பெண்களும் வேலைக்குப் போவதாலும், ஆண்களும் இளைமையோடு(!?) இருப்பதாலும் அதனை இருபாலாரிடமும் கேட்காதிருப்பதே நல்லது போல் தோன்றுகிறது.

சிறந்த மந்திரமும் நல்ல மருந்தும் சொன்னால் என்ன? நல்லது தானே! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மகிழ்ந்திருப்பது ஏன் கூடாது?

கணவன் மனைவியின் ப்ரியம், மற்றும் சண்டைகளை வெளியே சொல்வதைத் தவிர்த்தலே பல வேளைகளில் நலம் போலத் தோன்றுகிறது.குடும்பப் பிரச்சினைகள் சில,பல வேளைகளில் பெரிதாவது பிறரின் தலையீடுகளால் தானே!ஒரு பழமொழி ஒன்று ஞாபகம் வருகிறது.கணவன் மனைவி இருவரும் கத்திரிக்கோல் மாதிரியாம்.அடிக்கடி எதிர் எதிர் பக்கமாக இயங்குவார்களாம். ஆனால் யாரையும் இடையில் வர விட மாட்டார்களாம்.:)மூன்றாவது மனிதர்கள் அதனைப் புரிந்து கொள்வது நல்லது.

மற்றும் தானம், புகழ், இவற்றைச் சொல்லாது இருப்பதால் யாருக்கு என்ன நட்டம் வந்து விடப் போகிறது? சொல்லாதிருப்பது பெருந்தன்மையன்றோ!

இறுதியாக அவமானம். அதனை நீங்கள் சொல்லவே வேண்டியதில்லை. அது தன் பாட்டில் வளர்ந்து விருட்சமாகி உங்களுக்கே தெரியாத விடயங்களை எல்லாம் சொல்லித் தரும்.

பண்டைய பாரதம் மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது இதை.

Thursday, April 15, 2010

இயற்கையின் வண்ணங்கள் தரும் எண்ணங்கள்


ஒரு சிறு பூச்சி வீதியோரம் எவ்வளவு உற்சாகமாக கமறாவுக்கு முகம் கொடுக்கிறது பாருங்கள்!

அடுத்து வரும் ஒரு வாகனத்தில் அதன் தோற்றமே தெரியாமல் அது அடி பட்டு விடக் கூடும்.என்றாலும் அதன் அழகும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதனை வெளிப்படுத்தும் அதன் ஆற்றலும் அழகாக இருக்கிறதில்லையா?

அது உற்சாகமா? என்னை ஒன்றும் செய்து விடாதே என்ற வேண்டுதலா? அல்லது மனிதனைக் கண்ட வியப்பா? அல்லது அது சொல்லும் ஏதோ ஒரு மொழியா?

தெரியவில்லை.

தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்!

மின் தபாலில் வந்தது இப் படம்.

இது போல சிறு குருவியாக இருக்கும் தூக்கணாங் குருவியும் அதன் தூக்கணாங் குருவிக் கூடும் அதன் நேர்த்தியும் மூன்று அறைகள் கொண்ட அதன் உள் வீட்டு அமைப்பும் வீட்டுக்கு வெளிச்சம் வர அது கொண்டு போய் ஒட்டி வைக்கும் மின்மினிப் பூச்சிகளும் ....

எத்தகைய ஒரு மதி நுட்பம் அதன் சின்னஞ்சிறு தலைக்குள்!

யார் சொல்லிக் கொடுத்தார் இவை எல்லாம்? அதன் கூட்டை போல் ஒன்றை மனித வலுவால் பின்னி எடுக்க முடியவில்லையே!

இயற்கையின் வனப்புத் தான் எத்தனை அழகு!

நன்றி மணி.இந்தப் படம் 'எழிலாய் பழமை பேச' என்ற வலைப் பூவில் இருந்து நன்றியோடு பெறப்பட்டது.

இது போல பறவைகளின் நேச உணர்வு, நட்புறவு இன்னுமொரு அழகு. அவை யார் சொல்லிக் கொடுத்தும் வந்ததில்லை. பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்புப் பிராணிகளில் அத் தன்மை இயல்பாக அமைந்திருக்கும்.தமக்குள் ஒரு சுமூகமான உறவை அவை பேணிக்கொள்ளும். நாய்,பூனை,கோழி,தாரா,ஆடு,மாடு,இவைகளோடு அவர்கள் என்ன மொழியில் பேசிக் கொள்கிறார்களோ தெரியாது. ஆனால் தம் வீட்டு மனிதர்களைப் போலவே சக ஜீவராசிகளையும் அவை அடையாளம் கண்டு கொள்கின்றன.தம் பாசையில் நேசிக்கின்றன.

அண்மையில் ஆனந்த விகடனில் ஜனா என்பவர் இப்படி ஒரு கவிதை எழுதி இருந்தார்.

'எஜமானி குழந்தை பெற்று விட்டாள்'
ரைகரும் ரோஸியும் கிசுகிசுக்கின்றன
சந்தோஷமாய் வால்களை ஆட்டிய படி
அக்கம் பக்கத்து மனிதர்களை
அன்று மட்டும் முறைக்காமல்
வாலாட்டி வரவேற்றுக் கொண்டே இருந்தன
வீட்டு மனிதர்களைப் போலவே!

என்ன ஒரு அருமையான விலங்குலகம்!

இந்தப் படமும் மின் தபாலில் வந்தது தான்.

அது போல பறவைகளின் தாய்மை உணர்வு மிகப் பிரசித்தி வாய்ந்தது.பருந்திலிருந்து குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழியும், தாய்ப் பசுவிலிருந்து பாலினை மனிதன் கறக்கும் போதே பிள்ளைக்கு பாலை ஒழித்து வைக்கும் தாய்ப்பசுவும்,குஞ்சுக்கு இரை கொடுக்கும் பறவைகளும் நாம் அன்றாடம் சந்திப்பவை தான்.

இதனைச் சொல்லும் போது ஒரு அனுபவம் ஞாபகத்துக்கு வருகிறது.முன் ஒரு முறை எங்கள் வீட்டில் செல்வி என்றொரு தாய் பசு கன்று போட்டிருந்தது.காலையில் உணவு தேடச் சென்ற தாய்ப் பசு பின்னர் வீடு திரும்பவில்லை. (அதற்குப் பல காரணங்கள்! எல்லையோரக் கிராமம் என்பதால் சிலர் இதற்காகவே காத்திருந்து மாட்டை இறச்சிக்கு தடம் போட்டு பிடித்துச் சென்றிருப்பார்கள்.)சற்று நேரத்திலெல்லாம் அது வந்து கன்றுக்குப் பால் கொடுக்கும். அருகாகவே தான் எங்கேனும் மேய்ந்து கொண்டு நிற்கும். ஆனால் அன்று வரவில்லை. எல்லா இடமும் தேடிப் பார்த்தாயிற்று. அதனைக் காணோம்.கன்றுக்கோ பசி.இது ஜேசி இனத்தைச் சேர்ந்தது.

மாலையில் மற்றய மாடுகள் பட்டிக்கு வந்து சேர்ந்தன.நம்மிடம் சீமாட்டி என்றொரு மாடும் ஒன்று நின்றது. அதுவும் கன்று போட்டிருந்தது. இரண்டு கன்றுகளையும் அவிட்டு விட்டோம். இரண்டும் இரண்டு பக்கமும் ஓடிச் சென்று பாலைக் குடிக்க தாய் சீமாட்டி இரண்டுக்கும் பாலைக் கொடுத்துக் கொண்டு நின்ற காட்சி மனதை விட்டு என்றும் அகலாதது. மனதை நிறைத்த காட்சி அது.செல்வியின் கன்றையும் தன் பிள்ளை போல் வளர்த்தெடுத்து தந்தது அப் பசு!

அது சீமாட்டி தான்!

இப்படி விலங்கு, பறவைகளின் சாம்ராஜ்ஜியங்களுக்குள் எத்தனையோ வண்ணங்கள்,அழகுகள் செய்திகள் ஒழிந்து போயுள்ளன.

நமக்குத் தான் அவற்றை எல்லாம் பார்ப்பதற்கு நேரமில்லை.

இப்போதெல்லாம் அரசாங்கங்களும் நாடுகளும் கட்சிகளும் பசுமைப் புரட்சி என்றும் சூழல் வெப்பமடைவதைத் தடுக்கும் பொருட்டும்,இயற்கையோடு வாழும் வாழ்க்கையைப் பரிந்துரை செய்கின்றன.
இரசாயணங்களும், மின்சார பாவனைகளால் பாவிக்கப் படும் உபகரணங்களும், வா
கனங்களும் இல்லாத பூமியும்; போட்டிகளும் ஏமாற்றுகளும்,ஆடம்பரங்களும் இல்லாத அன்பும்,அகிம்சையும்,எளிமையும் சக பிராணியில் நேசமும்,மன நேர்மையும் கொண்ட மக்களும் பெருகும் போது தான் அது சாத்தியப் படும் போலத் தோன்றுகிறது.


எல்லோருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Monday, April 5, 2010

ஏகாந்த வேளைகள்



காலை வேளைகள் ஏகாந்தமானவையாக இருக்கின்றன.மனம் உறக்கத்திலிருந்து விழித்து அதிகாலையில் தன்பாட்டில் கால்கையாட்டி கண்ணுக்குப் புலனாகாத யாரோடோ விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையைப் போல தன்னைத் தானே வேடிக்கை பார்த்து மகிழ்கிறது அது.கடந்து போன காலங்களில் வந்து போன மனிதர்களை, நண்பர்களை,சம்பவங்களை, என்னைப் புடம் போட்டுப் பார்த்துக் கொள்ளவும்;அந்த குழந்தையைப் போலவே மகிழவும் இது உதவுகிறது.

நேற்றைய தினம் காலை வேலை.பெண்களும் ஆண்களுமாய் கூடி கல கல என்று சந்தைக் கூட்டமாய் இரைச்சலாய் இருக்கிறது பிரமாண்டமான அந்தக் கட்டிடம். என்னென்று தான் இவ் அதிகாலை வேளையிலேயே பேசி ஆர்ப்பரிக்க இத்தனை விடயங்கள் இவர்களுக்கு இருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.

அவர்களால் நேசிக்கப் படுகின்ற ஒருத்தியாக இருக்கின்ற பொழுதுகளிலும் கூட அவர்களில் இருந்து பல விதங்களிலும் வேறுபட்டவளாகத் தான் நான் இருக்கிறேன்.இருந்து வந்திருக்கிறேன்.வைத்திருக்கிற வாகனங்களால், அணிகின்ற உடை ஆபரணங்களால்,தோற்றத்தைப் பார்த்து எடைபோடும் வயதுகளால் - இப்படி கண்களால் அவர்களது வாழ்வு தீர்மானிக்கப் படுகிறது.தோற்றங்களால் ஆனது அவர்களின் உலகம்.வீடும் வாகனமும் தோற்றமும் பணமும் தான் எவ்வளவு விரைவாக மனிதர்களை எடை போட வைத்து விடுகிறது!பயம், பதட்டம், சந்தேகம்,தந்திரம்,தேவை கருதிய பற்று, கிடைக்காது என்கிற போது அவதூறு என்று விஷ்னுவின் சுதர்சன சக்கரம் சிறப்பாகவே சுற்றுகிறது.


கண்ணுக்குப் புலனாகாத அமானுஷங்களால் ஆகியிருக்கிறது என்னுடய உலகம்.அறிவினால்,ஒருவரிடம் இருக்கிற குணங்களால், இக்கட்டுகளை எதிர்கொள்ளும் திறத்தினால்,ஆளுமைகளால், நேர்மையான தன்மையினால், கோழைமைகள் இல்லாத வீரிய உண்மைத் தன்மையினால்,தன் குறை நிறைகளை அடையாளம் கண்டு கொண்ட - அதுவே நான் என்று ஏற்றுக் கொண்ட - முகமூடிகள் இல்லாத இயல்பான மனிதர்களால்,என் உலக மனிதர்கள் தெரிவு செய்யப் படுகிறார்கள்.அதனால் என் உலகத்து மனிதர்கள் மிகச் சொற்பமானவர்களாக இருக்கிறார்கள்.

ஆனாலும் தனிமை என்னை எப்போதும் வசீகரித்தே வந்திருக்கிறது.பாதுகாப்பு என்பதனால் இருக்குமோ? யாரும் என்னைக் காயப்படுத்தி விட முடியாது என்பது காரணமாய் இருக்குமோ?புத்தகங்களும் தனிமையும் சிறந்த கூட்டாக என்னோடு எப்போதும் பயணித்திருக்கின்றன.சில வேளைகளில் நெருங்கிய பந்தங்களில் இருந்து நானாக விலகிச் செல்லவும் அவை துணை நின்றிருக்கின்றன.

எல்லாவற்றையும் விட இந்த தனிமையான ஏகாந்த வேளைகள் என்னை நான் சுய விமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ளவும் மனச்சாட்சியோடு கை கோர்த்து மகிழ்ந்திருக்கவும்,நிரம்பவே உதவுகின்றன.சொர்க்க வெளியில் சஞ்சரிக்க முடிகிறது.'இது வரை நான் அறிந்து யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை' என்று தனிமையில் மனச்சாட்சி சொல்ல கேட்டிருக்கும் நிலை தான் உலகத்தில் மிக உயர்வான நிலை போலத் தோன்றுகிறது.

மகிழ்ச்சியைத் தருகின்றது இந்த ஏகாந்த வேளைகள்!