காலை வேளைகள் ஏகாந்தமானவையாக இருக்கின்றன.மனம் உறக்கத்திலிருந்து விழித்து அதிகாலையில் தன்பாட்டில் கால்கையாட்டி கண்ணுக்குப் புலனாகாத யாரோடோ விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையைப் போல தன்னைத் தானே வேடிக்கை பார்த்து மகிழ்கிறது அது.கடந்து போன காலங்களில் வந்து போன மனிதர்களை, நண்பர்களை,சம்பவங்களை, என்னைப் புடம் போட்டுப் பார்த்துக் கொள்ளவும்;அந்த குழந்தையைப் போலவே மகிழவும் இது உதவுகிறது.
நேற்றைய தினம் காலை வேலை.பெண்களும் ஆண்களுமாய் கூடி கல கல என்று சந்தைக் கூட்டமாய் இரைச்சலாய் இருக்கிறது பிரமாண்டமான அந்தக் கட்டிடம். என்னென்று தான் இவ் அதிகாலை வேளையிலேயே பேசி ஆர்ப்பரிக்க இத்தனை விடயங்கள் இவர்களுக்கு இருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.
அவர்களால் நேசிக்கப் படுகின்ற ஒருத்தியாக இருக்கின்ற பொழுதுகளிலும் கூட அவர்களில் இருந்து பல விதங்களிலும் வேறுபட்டவளாகத் தான் நான் இருக்கிறேன்.இருந்து வந்திருக்கிறேன்.வைத்திருக்கிற வாகனங்களால், அணிகின்ற உடை ஆபரணங்களால்,தோற்றத்தைப் பார்த்து எடைபோடும் வயதுகளால் - இப்படி கண்களால் அவர்களது வாழ்வு தீர்மானிக்கப் படுகிறது.தோற்றங்களால் ஆனது அவர்களின் உலகம்.வீடும் வாகனமும் தோற்றமும் பணமும் தான் எவ்வளவு விரைவாக மனிதர்களை எடை போட வைத்து விடுகிறது!பயம், பதட்டம், சந்தேகம்,தந்திரம்,தேவை கருதிய பற்று, கிடைக்காது என்கிற போது அவதூறு என்று விஷ்னுவின் சுதர்சன சக்கரம் சிறப்பாகவே சுற்றுகிறது.
கண்ணுக்குப் புலனாகாத அமானுஷங்களால் ஆகியிருக்கிறது என்னுடய உலகம்.அறிவினால்,ஒருவரிடம் இருக்கிற குணங்களால், இக்கட்டுகளை எதிர்கொள்ளும் திறத்தினால்,ஆளுமைகளால், நேர்மையான தன்மையினால், கோழைமைகள் இல்லாத வீரிய உண்மைத் தன்மையினால்,தன் குறை நிறைகளை அடையாளம் கண்டு கொண்ட - அதுவே நான் என்று ஏற்றுக் கொண்ட - முகமூடிகள் இல்லாத இயல்பான மனிதர்களால்,என் உலக மனிதர்கள் தெரிவு செய்யப் படுகிறார்கள்.அதனால் என் உலகத்து மனிதர்கள் மிகச் சொற்பமானவர்களாக இருக்கிறார்கள்.
ஆனாலும் தனிமை என்னை எப்போதும் வசீகரித்தே வந்திருக்கிறது.பாதுகாப்பு என்பதனால் இருக்குமோ? யாரும் என்னைக் காயப்படுத்தி விட முடியாது என்பது காரணமாய் இருக்குமோ?புத்தகங்களும் தனிமையும் சிறந்த கூட்டாக என்னோடு எப்போதும் பயணித்திருக்கின்றன.சில வேளைகளில் நெருங்கிய பந்தங்களில் இருந்து நானாக விலகிச் செல்லவும் அவை துணை நின்றிருக்கின்றன.
எல்லாவற்றையும் விட இந்த தனிமையான ஏகாந்த வேளைகள் என்னை நான் சுய விமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ளவும் மனச்சாட்சியோடு கை கோர்த்து மகிழ்ந்திருக்கவும்,நிரம்பவே உதவுகின்றன.சொர்க்க வெளியில் சஞ்சரிக்க முடிகிறது.'இது வரை நான் அறிந்து யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை' என்று தனிமையில் மனச்சாட்சி சொல்ல கேட்டிருக்கும் நிலை தான் உலகத்தில் மிக உயர்வான நிலை போலத் தோன்றுகிறது.
மகிழ்ச்சியைத் தருகின்றது இந்த ஏகாந்த வேளைகள்!
No comments:
Post a Comment