Thursday, May 20, 2010

நாளுக்கு ஒரு நன்மை- அ. முத்துலிங்கம்

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தந்தையாரின் சத்திர சிகிச்சை காரணமாக வைத்திய சாலைக்கும் வீட்டுக்குமாக ஓடியதில் நாளாந்த வேலை வெகுவாக மாறிவிட்டது.இப்போது தேறி வருவது மிகுந்த ஆறுதலை அளிக்கிறதெனினும் குறைந்த பட்சம் இன்னும் இரண்டு வாரத்துக்கு ஓட்டம் இவ்வாறே இருக்கப் போகிறது.

அது வரை உங்களுக்காக நான் அடிக்கடி வாசிக்கச் செல்லும் எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களின் வலைத் தளத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு நனைவிடை தோய்தலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அவரது வலைத் தளம் amuttu.com




நான் அப்போது பொஸ்டனில் இருந்தேன். எங்கள் வீட்டில் இரண்டு விதமான ஆட்கள் இருந்தார்கள். உட்கார்ந்து வேலைசெய்துவிட்டு நின்று இளைப்பாறுபவர்கள்; நின்று வேலை செய்துவிட்டு உட்கார்ந்து இளைப்பாறுபவர்கள். நான் மூன்றாவது வகை. நின்று இளைப்பாறிவிட்டு உட்கார்ந்து இளைப்பாறுபவன்.

அப்படியிருக்க அன்று அதிகாலை சூரியன் எழும்ப முன்னர் நான் எழும்பிவிட்டேன். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அந்த நேரத்தில் யார் தட்டுவார்கள் என்று நான் யோசிக்கவில்லை. திறந்துவிட்டேன். பார்த்தால் என்னிலும் உயரமான ஒரு whitetail deer. ஆண் மான் என்றபடியால் இரண்டு பக்கமும் கிளைவிட்டு பரந்த கொம்புகளை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு நின்றது. நான்கு கால்களையும் சரிசமமாக ஊன்றி பக்கவாட்டில் நின்று முகத்தை மாத்திரம் திருப்பி என்னை பார்த்தது. வீட்டு அபாய மணியை அணைக்க மறந்துவிட்டதால் அது அலறத்தொடங்கியது. வீட்டில் அன்று தூங்கிய அத்தனை நின்று இளைப்பாறுபவர்களும், உட்கார்ந்து இளப்பாறுபவர்களும் ஓடிவந்தார்கள். அப்ஸராவும் ஓடிவந்து என்னைக் கடந்து போனாள். நான் அவளைத் தூக்கிய பிறகும் அவள் கால்கள் ஓடிக்கொண்டிருந்தன. இந்தச் சத்தத்திலும் கலவரத்திலும் மான் துள்ளித் திரும்பி ஓடிவிட்டது. அபாய மணியை அணைத்துவிட்டு மற்றவர்கள் திரும்ப படுக்கைக்குப் போய்விட்டார்கள். அப்ஸரா மாத்திரம் என்னுடன் தங்கினாள்.

அவளுக்கு வயது ஐந்து. அறிவாளி. பிரச்சினைகள் என்றால் நான் ஆலோசனை கேட்பது அவளிடம்தான். எதற்காக மான் வந்து கதவை தட்டியிருக்கும் என்றேன். அது திரும்பி ஓடிவிட்ட துக்கம் என்னிலும் பார்க்க அவளுக்கு அதிகம். கண்களில் நீர் தளும்பி நின்றது. வீட்டுக்கு பின்னால் இருக்கும் காட்டில் பல மான்கள் வாழ்ந்தன. அவ்வப்போது அவை வரும், ஆனால் கதவை தட்டுவதில்லை. அப்ஸரா யோசித்துவிட்டு காலை வணக்கம் சொல்வதற்காக இருக்கலாம் என்றாள். நான் சரி அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி சிரிப்பு காட்டினேன். அவளும் சிரித்தாள். வந்த கண்ணீரைக் காணவில்லை. எப்படியோ கண்ணீரை கண்களால் உறிஞ்சி உள்ளே இழுத்துவிட்டாள்.

பெற்றோர் தூங்கும்போது முழு வீடும் அவளுக்குத்தான் சொந்தம். 'இன்று என்ன நல்வினை?' என்றாள். பூஞ்செடிக்கு தண்ணீர் ஊற்றலாம் என்று சொன்னேன். அவள் சின்னத் தலையை ஆட்டிவிட்டு போனாள். நாளுக்கு ஒரேயொரு நன்மை செய்தால் போதும் என்பது அவள் கற்றுக்கொண்டது.

நான் சிறுவயதில் படித்த பள்ளிக்கூடத்தில் ஒரு வாத்தியார் படிப்பித்தார். காந்தி வாத்தியார் என்று பெயர். ஐந்தடி நாலு அங்குலம் உயரம் இருப்பார். மேல்சட்டை அணியமாட்டார். இரண்டே இரண்டு வேட்டிகள் அவரிடம் இருந்தன. ஒன்று கிழிந்தால்தான் இன்னொரு புதிசு வாங்குவார். காந்திபோல ஒரு போர்வைதான். உரத்துப் பேசத் தெரியாது. சிரிக்கும்போதுகூட இரண்டு ஸ்வரத்தில் மட்டும் சிரிப்பார். காந்தி வைத்திருந்ததுபோல உயரமான தடியை அவர் வைத்திருக்கவில்லை. மற்றும்படிக்கு காந்தியைப் போலவே நடந்துகொண்டார். அவர் என் அண்ணனைப் படிப்பித்தார்; தங்கையை படிப்பித்தார்; தம்பியை படிப்பித்தார். ஆனால் என் வகுப்பை அவர் படிப்பிக்கவே இல்லை. ஆனாலும் எனக்கு அவரிலே பிரியம் இருந்தது. அவர் அந்த வயதில் எனக்கு சொன்னது 'ஒரு நாளைக்கு ஒரு நன்மை செய்தால் போதும்' என்பது. அது சொல்லி பல வருடங்களாகிவிட்டது என்றாலும் அதை இன்னும் அவ்வப்போது நான் கடைப்பிடித்து வந்தேன். அப்ஸராவுக்கும் சொல்லியிருந்தேன். பெரிதாக ஒன்றும் இல்லை. பெரியவர்களுக்கு வணக்கம் சொல்வது; அஞ்சல் பெண்ணுக்கு நன்றி கூறுவது; முன்பின் தெரியாத ஒருவரைப் பார்த்து முறுவல் செய்வது. அவ்வளவுதான். அப்ஸரா ஒவ்வொரு செடியாக தண்ணீர் ஊற்றி வந்தாள். செடிக்கு போன தண்ணீரிலும் பார்க்க வெளியே அதிகமாக நீர் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் என் நண்பர் தொலைபேசியில் அழைத்திருந்தார். ஏதோ பேச்சில் காந்தி வாத்தியாருடைய பெயர் வந்தது. அவரும் மனைவியும் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்றார். எனக்கு காந்தி வாத்தியாருடன் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்பே இல்லை. எனினும் இன்றைய என் நன்மை இதுதான் என்று தீர்மானித்து நண்பரிடம் முகவரி பெற்று காந்தி வாத்தியாருக்கு என்னால் இயன்ற சிறு தொகை பணம் அனுப்பிவைத்தேன். இங்கே சிறுதொகை ஆனால் இலங்கையில் அது பெரும் கொடை. அனுப்பியதுடன் அதை மறந்துபோனேன்.

அவர் பற்றிய சின்னச் சின்ன சம்பவங்களை மறக்க முடியவில்லை. நான் புதுப் பாடப் புத்தகம் வாங்கியதும் அதற்கு மாட்டுத்தாள் கடதாசியில் உறைபோட்டு கொண்டுபோய் என்னுடைய பெயரை எழுத காந்தி வாத்தியாரிடம் கொடுப்பேன். புத்தகங்களில் பெயர் எழுதித் தருவது அவர்தான். அவர் என் பெயரை நான் எதிர்பார்த்த மாதிரி முன்பக்கத்திலோ, மட்டையிலோ எழுதாமல் இருபதாம் பக்கத்தில் எழுதினார். ஏன் என்று கேட்க பதில் சொல்லவில்லை ஆனால் 'புத்தகம் பத்திரம்' என்றார். அப்பொழுது எங்கள் பள்ளிக்கூடத்தில் புத்தகங்கள் களவு போய்க்கொண்டிருந்தன. இரண்டே இரண்டு நாளில் என் புத்தகமும் களவு போனது. நான் காந்தி வாத்தியாரிடம் போய் முறைப்பாடு செய்தேன். அங்கே படிப்பித்த எல்லா வாத்தியார்களிலும் இவரிடம் தான் பிரம்பு என்ற பொருள் இல்லை, அடிக்கவும் மாட்டார். ஆனாலும் இவரைத்தான் நான் தெரிவு செய்தேன்.

மாணவர்களிடம் அவர் கேட்கும் முதல் கேள்வி 'இன்று என்ன நன்மை செய்தாய்?' ஒரு நாளைக்கு ஒரு நன்மை என்பது அவர் உபதேசம். ஒரு மாணவன் 'ஏன் சேர் இரண்டு நன்மை செய்யக்கூடாதா?' என்று கேட்டான். அவர் 'அது பேராசை, ஒரு நாளைக்கு ஒன்று போதும்' என்பார்.

காந்தி வாத்தியார் எங்கள் வகுப்புக்குள் நுழைந்து எல்லோருடைய புத்தகங்களையும் வாங்கி ஒற்றையை தட்டிப் பரிசோதித்த பின்னர் திருப்பி கொடுத்துவிட்டு போனார். பள்ளிக்கூடம் முடிந்த பிறகு என்னையும், எப்பொழுதும் வகுப்பில் கடைசி வாங்கில் குடியிருக்கும் கிருட்டிணபிள்ளை என்பவனையும் தன் வகுப்பறைக்கு கூப்பிட்டார். கிருட்டிணபிள்ளை உயரமானவன். ஒரு கண்ணாடி யன்னலுக்கு பின்னால் நின்று முகத்தை அழுத்திப் பார்ப்பதுபோல சப்பையான முகம். அவன் முன்னாலே ஏதோ பரிசு வாங்கப் புறப்பட்டதுபோல நடந்துபோக நான் பின்னால் போனேன். அவனுடைய புத்தகத்தில் இருபதாம் பக்கம் கிழிக்கப்பட்டிருந்தது. அந்தப் புத்தகத்தை எடுத்து காந்தி வாத்தியார் என்னிடம் தந்தார். அவனுக்கு ஒரு புதுப் புத்தகம் தன் காசில் வாங்கிக் கொடுத்தார். கிருட்டிணபிள்ளை ஓர் அடி பின்னுக்கு நகர்ந்து விம்மத் தொடங்கினான். காந்தி வாத்தியார் சொன்ன அறிவுரை இதுதான். 'நீ படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது நல்லது. ஆனால் களவெடுத்ததுதான் பிழை.' அங்கே நடந்த விசயம் எங்கள் மூவரையும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது.

அவர் வெள்ளிக்கிழமைகளில் முழு நாளும் உபவாசம் இருப்பது மாணவர்களுக்கு தெரியும். 'பசிக்காதா சேர், உங்களுக்கு நோய் பிடிக்காதா?' என்று கேட்பார்கள். அவர் சொல்வார், போன சனிக்கிழமையில் இருந்து அடுத்த வெள்ளிக்கிழமை நான் விரதம் என்பது எனக்கு தெரியும். என் வயிற்றுக்கும் தெரியும். அது தன்னைத் தயார் செய்துவிடும். எதிர்பார்ப்புத்தான் பசியைக் கொண்டுவருகிறது. எங்கள் ஊரில் வரும் நோய்களில் பாதிக்குமேல் தண்ணீரால் வருபவை. தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள், பாதி நோய் போய்விடும் என்பார். அனைத்து மாணவர்களும் வீடுகளில் போய் தங்கள் தாய்மார்களை தொந்திரவு செய்வார்கள். தண்ணீரைச் சுடவைத்தால்தான் குடிப்பேன் என்று அடம் பிடிப்பார்கள். அடுத்தநாள் பெற்றோர்கள் தலைமையாசிரியருக்கு முறைப்பாடு கொண்டுவருவது நிச்சயம்.

காந்தி வாத்தியாருக்கு கடிதம் போட்டு பல வாரங்களாகியும் பதில் இல்லை. அவர் இருப்பது திருக்கோணமலையில். அங்கே நிலவரங்கள் சரியில்லை என்று தமிழ் தினசரிகளில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆள் கடத்தலும் குண்டு வெடிப்புகளும் குறைந்தபாடில்லை. கடிதம் போய்ச் சேர்ந்ததோ என்றுகூடத் தெரியாது. ஒரு பதில் வந்தால் நிம்மதியாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டேன்.

ஆறு மாதம் கழித்து அப்ஸரா ஒரு நீலநிற வான்கடிதத்தை தூக்கிக்கொண்டு வந்து அஞ்சல் பெண் தந்ததாகச் சொல்லிக் கொடுத்தாள். அஞ்சல் பெண்ணுக்கு நன்றி சொன்னாயா என்று கேட்டேன், சொன்னேன் என்றாள். அன்றைய நாளின் நன்மை அவளுக்கு முடிந்துவிட்டது. வான்கடிதத்தை பிரிப்பதற்கு நிறைந்த பொது அறிவும், பொறுமையும் தேவை. சிறு கவனயீனமும் கடிதத்தை மூன்று துண்டுகளாக கிழித்துவிடும்.

காந்தி வாத்தியார்தான் எழுதியிருந்தார். ஒரு 15 வயதுப் பெண்ணின் கையெழுத்துப்போல ஓர் எழுத்தோடு ஒன்று முட்டாமால் வட்ட வட்டமான எழுத்துக்கள். 'அன்புள்ள ஐயா' என்று கடிதம் தொடங்கியதும் எனக்கு துணுக்கென்றது. நான் என்னை யாரென்று அவருக்கு நினைவூட்டுவதற்காக என் தங்கையைப் பற்றியும், தம்பியைப் பற்றியும், அண்ணனைப்பற்றியும் எழுதியிருந்தேன். நான் அவரிடம் 'சத்திய சோதனை' புத்தகம் பரிசு பெற்றதையும் ஞாபகப்படுத்தியிருந்தேன். 'தங்களுடைய கடிதம் எனக்கு பெரிய மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தந்தது. அத்தோடு அதிசயமாகவும் இருந்தது. தங்கள் கடிதத்தை என் மனைவிக்கு வாசித்துக் காட்டினேன். அவர் மிகவும் சந்தோசப்பட்டார். இரண்டு நாள் கழித்து அவர் சிவபதம் அடைந்தார். அவருக்கு வயது 84. எனக்கு 90 நடக்கிறது.' இப்படி தொடர்ந்து அவர் பல விசயங்களை நீலக் கடிதத்தின் ஓர் ஓரத்தில் இருந்து மறு ஓரம் வரை நெருக்கி நெருக்கி, கடிதத்தின் முழுப்பெறுமதியையும் பெறும்விதமாக எழுதியிருந்தார். தான் வெள்ளிக்கிழமைகளில் நீராகாரம் மட்டுமே அருந்துவதாகவும் கடந்த 65 வருடங்களில் ஒரு நாள்கூட அதில் தவறியதில்லை என்றும் எழுதியிருந்தார். நடப்பது கஷ்டமாக இருக்கிறதாம். யாரோவுடைய சைக்கிள் பாரிலும், மோட்டார்சைக்கிள் பின் சீட்டிலும் அமர்ந்து வெளியே பயணம் செய்வதாகவும் தூர இடம் என்றால் ஓட்டோவில் போவதாகவும் கடிதத்தில் கூறியிருந்தார்.

'ஒரு நாளில் 24 மணி. ஆறு மணி சாப்பாட்டுக்காக உழைக்கவேண்டும். ஆறு மணி சுயகருமங்கள். ஆறு மணி நித்திரை. ஆறு மணி நாட்டு மக்களுக்கு சேவை.' சனங்களுக்கு சேவை செய்யாத ஒவ்வொரு மணி நேரமும் கடவுளிடமிருந்து தூரமாகவும், மரணத்துக்கு கிட்டவாகவும் தான் நகர்வதை உணருவதாக அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவருடைய இந்தக் கொள்கையில் கடந்த 65 வருடங்களில் ஒரு மாற்றம்கூட இல்லை என்பதையும் எனக்கு தெரிவித்திருந்தார்.

காந்தி வாத்தியார் கடிதத்தை இப்படி முடித்திருந்தார்.

'தாங்கள் மனமுவந்து மன நிறைவோடு அனுப்பிய பணம் வங்கிமூலம் பெற்றுக்கொண்டேன். நீங்கள் உங்களைப் பல வகையிலும், பல நிகழ்ச்சிகளிலும் நினைவூட்டி எழுதி அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். ஆனால் நீங்கள் யாரென்று எனக்கு ஞாபகமில்லை. என்னை மன்னியுங்கள்.'

நன்றி; எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.

No comments:

Post a Comment