Wednesday, May 26, 2010

Super Singer Junior 2


தந்தை நலமாக வீடு வந்து சேர்ந்தார்.பெரியதொரு ஆறுதல் அது.

மகிழ்ச்சி என்னவென்றால் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது மட்டுமல்ல எனக்கு இன்னும் இரண்டு வாரங்கள் விடுமுறை இருப்பதும் தான்.

குளிர் காலம்;இவ்வாரம் முழுக்க மழை வேறு.தற்காலங்களில் குப்பையாக மலிந்து போயிருக்கும் படங்கள் 4 சேர்ந்தவை 50 சதங்களுக்கு ஏகபோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்க நான் ஐங்கரன் வீடியோவைத் துளாவியதில் பரிசோதனை முயற்சியாக வாங்கி வந்த D.V.D யின் பெயர் 'சுப்ப சிங்கர் யூனியர் 2'

மதிய உணவின் பின்பான செல்ல நித்திரையின் பின் மாலை நேரச் சிற்றுண்டியும் அவரவர் தேனீர் கோப்பைகளுடன் குடும்பமாக வரவேற்பறையின் வசதியான இருக்கைகளில் சாய்ந்து கொண்டோம்.ஒரு பக்கச் சுவர் பூராகவும் இடம் பிடித்திருந்த கண்ணாடி ஜன்னலுக்கப்பால் மழையும் மழையில் நனையும் மரங்களும் மங்கலான பொழுதும் அழகாய்த் தான் இருந்தன.மரங்கள் இலையுதிர்க்க இன்னும் காலம் இருக்கிறது.அதனால் அவை காற்றின் திசையை உரக்கச் சொல்லிய வண்ணம் இருந்தன.

டிஜிட்டல் டீவீ யில் காட்சி விரிய ஆரம்பித்தது.விஜய் TV யில் பாடும் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர் சிறுமிகள் தம் ஆற்றலைக் காட்ட ஆரம்பித்தார்கள்.நடுவர்களாக பாடகர்கள் சித்ரா,மனோ,மற்றும் மால்குடி சுபா. இவர்களுடன் குரல்வள நிபுணர் திரு.ஆனந்.வைத்தியநாதன் அவதானிப்பாளராக இருந்தார்.

அல்கா,ப்ரியங்கா,சிறிநிஷா,நித்யசிறி,சஹானா என்று பெண்குழந்தைகள் கலக்க; ஆண்குழந்தைகள் வரிசையில் ரோஷன்,பால சாரங்கன்,சிறிகாந்,ஷரத்,பிரசன்னா,ஷ்ரவன் என்று கலக்கினார்கள்.

ஆஹா! என்ன அருமை! என்ன திறமை!

ரோஷன் பாடுகின்ற போது யாரோ இனிய வாத்யம் ஒன்றை மீட்டுவது போல இருக்கிறது அச்சிறுவனின் குரல்.ஹர்மொனியின் தளத்துக்கு மனங்களை இட்டுச் செல்லும் ஆற்றல் மென்மையும் இனிமையும் சுகமும் பொருந்திய அந்தக் குரலுக்கு நிறையவே உண்டு. அல்காவும் பிரியங்காவும் பாடும் போது தேனாறே பாய்கிறது காதுகளில்.ஷரத் பாடும் போது தென்படும் கைவிரல்களின் அசாத்தியமான வசீகரம் அச் சிறுவன் பியானோவோ அல்லது கீபோட்டோ இசைத்தால் அவ் விரல்கள் எவ்வளவு அழகாக அதில் நடனமிடும் என்று தோன்றும் கற்பனையை நிறுத்த முடியாதிருக்கிறது.'விரல்களின் இசை மீதான நடனம்' என்று ஒரு புது கலையே அதன் பின்னர் தோன்றக் கூடும்.மற்றவர்களின் திறமைகள் வியக்க வைக்கின்றன.ஆறு வயது சிறுவன் சிறிகாந் பாடும் போது அவனின் திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.அந்த வயதில் பாடல்களை பாடமாக்கி இசைக்கு சற்றும் பிசகாமல் பாடுவது என்ன அத்தனை லேசா?

இது ஒரு பாடல் போட்டி. 25 லட்சம் இந்திய ரூபாய்கள் பெறுமதியுள்ள வீடு பரிசு. அத்துடன் கூடவே சுப்பர் சிங்கர் யூனியர் 2 என்ற பட்டமும் தான்.இவர்களையும் இவர்களின் பாடல்களையும் பார்த்த பின் தான் பாடல்களுக்குள் இத்தனை சங்கதிகள் உள்ளன என்ற விடயமே எனக்குத் தெரிந்தது.எத்தனை நுட்பம்! எத்தனை நயம்! எத்தனை சங்கதிகள்!அதனை அக்குழந்தைகள் உடனடியாகப் பிடித்துக் கொள்கிற கெட்டித் தனம்!....அப்பப்பா... வியக்காமல் இருக்க முடியவில்லை.

நடுவர்களில் குறிப்பாக மனோ பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்.அவரது spirit மிக உயர்வானது.அவர் குழந்தைகள் மீது காட்டுகிற நேசம்,அன்பு,பற்று... அவர்கள் நொந்து விடக் கூடாது என்று கொள்கிற அக்கறை... பிள்ளைகளை இலகுவாக்கி அதே நேரம் சொல்ல வேண்டியதை நோகாமல் சொல்லும் பாங்கு ...இனி எப்போதேனும் மனோவின் பாடலைக் கேட்க நேர்ந்தால் குரலோடு கூடவே நல்ல மகிழ்வான குணங்களோடு சேர்ந்த மனோ நினைவுக்கு வந்து போவார்.அதிலும் குறிப்பாக 6 வயது சிறுவன் சிறிகாந் விடை பெறும் போது அக்குழந்தையோடு அவர் கலந்து கொண்ட நிமிடங்கள் மிகப் பெறுமதியானவை. பாடகி சித்ரா மிக நுட்பமான பார்வைக்குரியவராக இருந்தார்.தொழில் துறை சார்ந்த அனுபவத்தோடு கூடிய அவரது கருத்துரைகள் வளரும் அக்குழந்தைகளுக்கு மிக உபயோகமாக இருந்திருக்கும்.

பாலசாரங்கன் விடை பெற்ற நிமிடம் உணர்வு பூர்வமாக இருந்த அதேவேளை அச்சிறுவனின் ஆளுமையும் அந்த நிலையை அவன் எதிர் கொண்ட விதமும் அச் சூழலைக் கையாண்ட நேர்த்தியும் பெரியவர்களுக்கே இயலாதவை.சுற்றியிருந்த எல்லோரும் நெகிழ்ந்த போதும் நள்ளிரவில் விரியத் தயாராக இருக்கும் குண்டு குண்டான மல்லிகை மொட்டுக்களைப் போன்ற பற்களால் அச்சிறுவன் காட்டிய புன்னகை அதற்குள் ஒழிந்திருந்த ஒருவித அமானுஷமான குண இயல்பு அது ஓர் ஆத்மாவின் புன்னகை என்பதை நிச்சயம் பார்வையாளருக்குச் சொல்லியிருக்கும்.

இவையெல்லாம் அவர்களுக்கு இறைவன் அளித்த அருங் கொடைகள் என்பதில் சந்தேகமில்லை. அல்லது அவை அவ் ஆத்மாக்கள் பலபிறப்புகளால் பெற்று வந்த வரங்களாகவும் இருக்கலாம்.அத்தனை அற்புதமும் கச்சிதமுமாக அமைந்திருந்தது அது.

மார்கழியில் இந்தியா போகும் போது அல்கா,ப்ரியங்கா,ரோஷன், பாலசாரங்கன்... இவர்களைக் கட்டாயம் சந்தித்தாக வேண்டும்.ரோஷனின் குரலும் சாரங்கனின் புன்னகையும் பிரசன்னாவின் கண்களும்,ஷரத்தின் நேர்த்தியான கைவிரல்களும் அல்கா,பிரியங்காவின் தேன் குரலும் உலகத்து அளவு கோல்களால் அளக்கப் பட முடியாதவை.இவற்றையெல்லாம் பார்த்தும் கேட்டும் வெகுமதிகள் அளித்தும் உச்சி மோர்ந்து என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டும் வரவேண்டும்.அப்போது தான் என் மார்கழிப் பயணம் நிறைவு பெறும்.என் ஆத்மா திருப்தியுறும். உண்மையாக.அவர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறார்கள்.அவர்களின் திறமைகள் அசாதாரணமானவை.

இன்னும் பார்க்க நிறைய இருக்கின்றன.

வெளியே இன்னும் மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது.முற்றிலும் வேறானதோர் உலகில் நான்.

2 comments:

 1. ஆஹா... நீங்களும் இசையோடு இலயித்து விட்டீர்கள் போலும்? சிட்னியில் இருந்து இன்னொரு தமிழ்ப் பதிவரா? நம்பவே முடியவில்லை? இன்று தான் உங்கள் தளம் வருகை தந்தேன். தொடர்ந்தும் எழுதுங்கோ...
  வாழ்த்துக்கள்.
  இன்னும் மழை விடேல்லையோ?
  வெள்ளம் நிரம்பி வழிவதாக ரீவியிலை காட்டுறாங்கள்?

  ReplyDelete
 2. உங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது கமல்.அன்பும் நன்றியும் உரியதாகுக!

  மழை விட்ட பாடாய் இல்லை.மெல்போர்னிலும் அப்படியா?

  நான் பக்கத்து வீடு தான்.அடிக்கடி வாங்கோ!:-)

  ReplyDelete