மகா பாரதத்தில் ஒரு இடம் வருகிறது.
கங்கை கன்னியுடல் தரித்து மானிட உலகத்துக்கு வருகிறாள். அவளின் அழகில் மோகித்த சந்தனு மகாராஜா அவளை மணம் புரிந்து கொள்ள வேண்டுகிறான்.அவள் தன்னுடைய நிபந்தனைகளைச் சொல்கிறாள்.மகாராஜாவும் அதற்கு சம்மதிக்கிறான்.
சந்தனு மகாராஜாவின் மனைவியானாள் கங்கை.
அவர்களுடய இல்லறம் பற்றி மகாபாரதத்தில் ஒரு இடம் வருகிறது. சந்தனு மகாராஜாவின் மனைவியான கங்கையின் இல்லறக் குண இயல்பு பற்றியது அது.
"கங்கா தேவியினுடய வினயமும், ஒழுக்கமும்,உபசாரமும்,கூட இருக்கும் போதும் இல்லாத போதும்,ஒரே மாதிரியாக தன்னிடம் அவள் காட்டிய அன்பும்,அரசனுடய இதயத்தைக் கவர்ந்தன."
"கூட இருக்கும் போதும் இல்லாத போதும் ஒரே மாதிரியாக தன்னிடம் அவள் காட்டிய அன்பு"
ஒரு நுட்பமான பதிவு என்றே தோன்றுகிறது.இது ஒரு அரிய குண இயல்பு.உள்ளார்ந்த சுடரின் ஒளி அது.உண்மையின் பிரகாசம்.உண்மையாக இருத்தலின் அழகு அது.ஒரு மனிதனிடம் இருக்க வேண்டிய குண அழகு.சொத்து.அது தனக்கும் தன்னை வரிந்தவனுக்கும் அவள் கொடுக்கும் வெகுமதி.
இதே மாதிரியான வினயமும், ஒழுக்கமும், உபசாரமும், அகச் சுடரும் கொண்ட ஒரு பெண்ணை அண்மையில் வாசித்த ஒரிசா நாட்டுக் குறுநாவல் தந்தது.நாவலின் பெயர் கடமை. அந்த அரிய கதையைத் தந்தது யுகமாயினி இதழ் 32.மே 2010 சஞ்சிகை.மூலக் கதையாசிரியர் ஜே.பி. தாஸ் அவர்கள்.ஆங்கில வழியிலிருந்து அதனைத் தமிழில் மொழியாக்கம் செய்திருந்தார் சுப்ரபாரதி மணியன் அவர்கள்.(கட்டாயம் பெண்கள் வாசிக்க வேண்டிய குறு நாவல் அது)
அதில் வருகிற கதை நாயகி 17 வயதில் திருமணம் செய்து கொண்ட கிராமத்து அடக்கமும், அப்பாவித்தனமும், தனக்கென வரிந்து கொண்ட வாழ்க்கை நியமங்களையும் கொண்ட பெண்.
நகரம் பற்றிய பயங்கள் நிரம்பியவள்.சந்தனு மகாராஜாவைப் போலவே அவனும் நல்ல கணவன். நகரின் வேலை நிமித்தம் நகருக்கு வருகிறார்கள்.வெளியே போய் மற்ற பெண்களைப் போல நடமாடி வர அனுமதித்த போதும் வீட்டை விட்டு தனியே போக அவள் ஒரு போதும் விரும்பியதில்லை.அவளை ஒரு ஆசாரமிக்க ஒரு இஸ்லாமியப் பெண்ணாகக் கற்பனை பண்ணுங்கள்.
ஒரு நாள் கணவன் வேலைக்குச் சென்ற பின் கதவு தட்டப் பட்டது.அவள் கதவைத் திறக்க மறுத்து விட்டாள். கணவன் வந்த போது அது பற்றித் தெரிவித்தாள். அதற்கு அவன் அது தபாற்காரனாக இருக்க வேண்டும்.இதோ தபால் வெளியே கிடந்தது எனக் காண்பிக்கிறான்.வேறொரு நாள் அதே போல கதவு தட்டப் பட்டது.அவள் தபாற்காரனாக இருக்க வேண்டும் என்று நினைத்து கதவைத் திறக்காது தபாலைக் கதவுக்குக் கீழே போட்டு விட்டுப் போகும் படி கூறுகிறாள்.ஆனால் அது சுகயீனம் காரணமாக சீக்கிரமாக வீட்டுக்கு வந்து விட்ட அவள் கணவனாகும்.
கணவன் இருக்கின்ற போதும் இல்லாத போதும் ஒரே மாதிரியாக இருக்கின்ற பண்பினைப் பெற்ற துணை அது.உண்மையின் ஒளிர்வு.நேர்மையின் பிரகாசம்.அமைதியின் ரகசியம்.வாழ்க்கையின் சுபீட்சம் அதற்குள் இருக்கிறது."உண்மையாய் இருத்தல்" என்பதுவே அது.
அது இயல்பாகவும் இயற்கையாகவும் வெளிப்படுகின்ற போது அழகாகிறது.வாழ்க்கைத் துணையும் இல்லத்தின் அறமும் இவ்வாறு இருந்தால் அழகாகுமில்லையா?