தமிழ் இலக்கியத்தில் மிகப் பிரபலமான பாடல் ஒன்றிருக்கிறது.உங்கள் எல்லோருக்கும் தெரிந்த பாடல் தான் அது. முக்காலத்திலும் பிரபலமாயிருக்கத் தகுதி வாய்ந்தது.தமிழனின் பண்பையும் பரந்த மனப்பாண்மையையும் சொல்லி நிற்கும் அற்புதமான வரிகள் செறிந்தது. இலக்கியப் பழைமையையும் பண்பாட்டுத் திறத்தையும் ஒருங்கே சொல்லி நிற்கும் அழகு வாய்ந்தது. தமிழினம் கம்பீரமாக நிமிர்ந்து நிற்க; சொல்லி நிற்க;பெருமை கொள்ள ஏற்ற பாடல்.
அது கணியன் பூங்குன்றனாரின்,
"யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா,
சாதலும் தணிதலும்,அவரன்றோ ரன்ன,
சாதலும் புதுவ(து) அன்றே வாழ்தல்
இனிதன மகிழ்ந்தன்றும் இலமே,முனிவின்
இன்னா(து) என்றலும் இலமே மின்னோடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொரு(து) இரங்கும்,மல்லல்ப் பேர்யாற்று,
நீர்வழிப் படூஉம் புணை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில்த் தெளிந்தனம்,ஆகலின் மாட்சியில்,
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே.
என்ற பாடல் தான். எல்லாம் நம்முடய ஊர் தான். எல்லோரும் நம் உறவினரே.(கேளிர் - உறவினர்)நன்றும் தீதும் பிறர் தருவதால் நமக்குக் கிட்டுவதில்லை.மலை மேலே மழை பொழிகிறது.ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.வெள்ளம் மரக்கட்டை ஒன்றையும் அடித்துக் கொண்டு வருகிறது.மரக்கட்டை எப்படி எல்லாம் வருகிறது?
அது ஆற்றின் வெள்ளத்தின் ஓட்டத்துக்கேற்ப வளைந்தும் நெளிந்தும் சுழல்களில் அகப்பட்ட இடத்து அதற்குள் சுளன்றும், மரங்கள் தட்டுப் படும் இடங்களில் அங்கே சற்று தரித்தும், மரநிழல் இருக்கும் இடத்தில் அதற்குக் கீழாகவும், வெய்யில் வருகின்ற போது அதற்குக் கீழாகவும், - இவ்வாறு ஆற்று வெள்ளத்தின் போக்குக்கேற்ப ஓடி இறுதியில் ஏரியை வந்து அடைகிறது.
ஆனால் இந்த மரக்கட்டை நான் அப்படி வந்தேன் இப்படி வந்தேன் என்று பெருமைப் படப் பேசலாமோ? அப்படி அது பேசினால் நாம் அதனை நகையாடத் தானே செய்வோம்? அது அவ்வாறு வந்தது அதனுடய செயல் அல்லவே! எவ்வாறு தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மரக்கட்டை வெள்ளத்தினுடய செயலை தன் செயல் என்று கருதுகிறதோ அவ்வாறே நாமும் நம்முடய கருமங்களை நம் செயலாக நினைத்து ஏமாறுகிறோம். எல்லாம் ஆற்று வெள்ளத்தினுடய செயலைப் போல கடவுளின் செயல் என நம்பி இருப்போருக்கு நல்செயல் தீச் செயல் என்ற பேதம் ஏது? பிறப்பும் மரணமும் இயற்கையானது என்ற தெளிந்த ஞானம் கைவந்து, எல்லாம் அவன் செயல் என்று ஆனந்தப் பெருக்கோடு அல்லவா வாழ்வர்?
அவர்களுக்கு அதன் பின் நல்வினை தீவினை என்ற பேதமோ நன்மை தீமை என்ற பலனோ இல்லை அல்லவா? அத்தகைய பக்குவம் கைவரப் பெற்றதால் அவர்கள் பெரியோரைப் பார்த்து வியப்பதும் இல்லை; சிறியோரைப் பார்த்து இகழ்வது அதனிலும் இல்லை!
ஆஹா ! என்ன ஒரு நிதானம்!பெருமிதப் பெருவாழ்வு! உலக பார்வை!சிந்தனைப் பெருக்கு!ஞான வாசனை!!
2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் தமிழ் புலவனுக்கு வந்த அந்த ஞானச் செருக்கைப் பார்த்தீர்களா? அது தமிழனின் வாழ்வின் ஆதாரமாக பற்றிப் பிடிக்க வல்லதல்லவா? தமிழின் இனிமைக்கும் பழைமைக்கும் இணக்கப்பாடான வாழ்வுக்கும் உரமான பாடல் அது.
புலம் பெயர்ந்து வந்து பலவருடங்களை இங்கு கழித்த பின் இப்போது திரும்பிப் பார்க்கிறேன். எங்கேனும் எப்போதேனும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஆசிய நாட்டவள் என்றோ பெண் என்பதாலோ வயது நிமித்தமோ எங்கேனும் நான் மரியாதைக் குறைவாக வேலைத் தலத்திலோ அல்லது பொது இடத்திலோ அவுஸ்திரேலியர்களால் நடத்தப் பட்டிருக்கிறேனா என்று.
இல்லை என்பதே ஆணித்தரமான உண்மையான பதில்.
பல்கலாசார நாடான இங்கு மக்கள் மிக அன்னியோன்யமாகவும் நட்புறவோடும் அன்போடும் ஆதரவோடும் மகிழ்வோடும் வாழ்வதையே நான் கண்டிருக்கிறேன்.புன்னகைத்து வாழ்த்திப் போகும் போகும் வழிப்போக்கர்கள், மற்றவர் வாழ்வின் மூக்கை நுழைக்காத நாகரிகம், அடுத்தவர் பழக்க வழக்கங்கள் பண்பாடுகளை தம்முடையது போல கொண்டாடும் - தாமும் கலந்து கொண்டு மகிழும் பாங்கு,உதவி செய்யும் மனப்பாங்கு, எளிமையாக குடும்ப வாழ்வை நோக்கியதான அவர்கள் வாழ்வு முறை,மனிதம் நிறந்த மனங்கள்,விடுமுறை எடுத்துக் கொண்டு இயற்கையோடும் புதியனவற்றை அறிந்து மகிழும் உச்சபட்சமான அவர்கள் சந்தோஷம், குடும்பங்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வான நேர்மை, பெண்னை சமனாக நடத்தும் அவர் தம் உயர்ந்த பண்பாடு.....இப்படி நிறைய உண்டு.
பெண் செய்கின்ற வேலை இது ஆண் செய்கின்ற வேலை இது என்ற பாகுபாடு அவர்களிடம் கிடையாது.குழந்தையின் தள்ளு வண்டிலை உருட்டிக் கொண்டு போகும் அப்பாக்கள், காதலிக்குமாகத் தேனீர் போட்டுக் கொண்டு வரும் காதலன்,ஆண் வீட்டிலிருந்து பிள்ளைகளைப் பார்க்க பெண் உழைத்துக் கொண்டு வரும் அன்னியோன்னியமான குடும்பம்,உச்ச பட்சமாக அவர்களுக்குள் இருக்கும் உண்மை நேர்மை.... இப்படி நிறைய நாளாந்த வாழ்வோடு நாம் காணக்கிடைப்பவை.
அவர்களோடு வாழக் கிடைப்பது பெருமையாகவே இருக்கிறது.2000 ஆம் ஆண்டு சிட்னி மாநகரில் இடம் பெற்ற புதுவருட விழாக் கொண்டாட்டத்தின் போது வெனசா.அமொறொசி பாடிய பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.அன்று பாடியது போலவே மனதில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது அந்தக் குரல்.
அதன் பின்னால் Back street boys பாடிய ஒரு பாடலையும் இணைக்கிறேன். இது தான் அவர்கள் வாழ்வு! எளிமையான அவர்கள் பண்பாடு!!
YouTube - Absolutely Everybody In Style Of Vanessa Amorosi Karaoke
YouTube - Backstreet Boys-As long as you love me*with lyrics*