Wednesday, November 17, 2010

மழலை மொழி



சிறு வயதில் நாம் கற்பவை அப்படியே இன்றுவரை மனதில் பதிந்திருக்கும்.’இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்பதை மெய்ப்பிப்பது போல் அமைந்த நிகழ்வொன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் இங்கு இடம் பெற்றது. அது வித்துவான் வேந்தனார் அவர்களுடைய மழலை மொழி என்ற புத்தக வெளியீட்டு விழா.

குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதற்கு சீரிய சிந்தனையும் நிதானமான ஞானமும் நல்ல உள்ளமும் வேண்டும்.குழந்தைகளின் உலகுக்கு இறங்கும் திறமை இருக்க வேண்டும்.அவை எல்லாம் விளங்கப் பெற்றவராகக் காலஞ் சென்ற வேந்தனார் விளங்கியிருந்தார் என்பதற்கு இன்று வரை நம் மனதில் பதிந்திருக்கும் அவருடைய பாடல்களும் அதன் உள்ளடக்கமும் அது கொண்டிருக்கும் எளிமையுமே சான்று.

மனதில் சிறுவயதுப் பாடல்களாக பதிந்திருந்த பாடல்களுக்கான காரண கர்த்தா வித்துவான் வேந்தனார் தான் என்பதையே அன்று தான் அறிந்தேன்.அத்தனை தூரம் தன்னை முதன்மைப் படுத்தாமல் பாடல்களை முதன்மைப் படுத்திய தகைமையாளர் அவர்.அதனை அவரது மகள் வெளியீட்டு விழாவிலும் குறிப்பிட்டிருந்தார். இலங்கைப் பாட நூல் வெளியீட்டுத் திணைக்களம் அவரது பெயரை நூலில் குறிப்பிட மறந்தது ஏனென்று தெரியவில்லை என்று மிகுந்த விசனமுற்றிருந்தார் அவரது மகளார்.தவிரவும் அவருடய பாடல்களில் சில மாற்றங்களையும் அது செய்திருந்தது என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பாடல்களை மிகச் சிறு வயதுகளில் அபிநயப் பாடல்களாகப் பாடி ஆடி களிக்கத் தந்த வித்துவானின் பாடல்கள் இப்போது மீண்டும் அச்சு வடிவில் பார்க்கக் கிடைத்தது பாக்கியமே.சிறுவயதுக்கு நம்மைக் கொண்டு சென்ற அப்பாடல்களை இன்று உங்களோடு பகிர்வதில் மகிழ்வெய்துகிறேன்.

1.அம்மாவின் அன்பு

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா

புழுதி துடைத்து நீருமாட்டிப்
பொட்டும் வைக்கும் அம்மா
அழுதிடாமல் பள்ளிக் கூடம்
அனுப்பி வைக்கும் அம்மா.
(’அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா’-என்பது மூலப் பிரதியில் உள்ள பகுதி)

அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா

பள்ளிக் கூடம் விட்டநேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி
தோளில் வைக்கும் அம்மா

பாப்பா மலர் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் தூக்கும் அம்மா



2.எங்கள் வீட்டுப் பூனை

சின்ன சின்னப் பூனை
சிறந்த நல்ல பூனை
என்னைப் பார்த்துத் துள்ளும்
எங்கள் வீட்டுப் பூனை

பாலைக் குடிக்கப் பார்க்கும்
பதுங்கி பரனில் இருக்கும்
வாலைப் பற்றி இழுத்தால்
வளைந்து கையைக் கடிக்கும்

நாயைப் பார்த்துச் சீறும்
நகத்தால் மரத்தால் கீறும்
பாயப் பதுங்கி ஓடும்
பந்தை உருட்டி ஆடும்

எலியைக் கிளியைப் பிடிக்கும்
ஏறி மரத்தில் நடிக்கும்
புலியைப் போல இருக்கும்
புள்ளிக் கோட்டுப் பூனை

உண்ணுஞ் சோறும் பாலும்
ஊட்டி வளர்த்த பூனை
கண்ணைப் போன்ற பூனை
கட்டிக் கரும்புப் பூனை



3.பறவைக் குஞ்சு

பறவைக் குஞ்சைப் பாரண்ணா
பறவைக் குஞ்சைப் பாரண்ணா
பறக்கும் இறகு முளைத்திடாத
பறவைக் குஞ்சைப் பாரண்ணா

கூடு காற்றில் ஆடி இந்தக்
குஞ்சு விழுந்து விட்டதோ
தேடித் தாயும் தூக்க முன்னம்
செத்துப் போகும் துடிக்குதே

கட்டெறும்பும் ஊருதே
காகம் கொத்தப் பாக்குதே
வட்டம் போட்டுப் பருந்தும் இந்த
மரத்தை நோக்கி வருகுதே

மரத்தில் ஏறிக் கூட்டிலே
வைத்து விடுங்கள் குஞ்சையும்
இரக்கமாக இருக்குதையோ
இளைத்துக் கிடந்து துடிக்குதே.

1 comment:

  1. ஆஹா... தித்திப்பு!! அதிலும் ' பறவைக் குஞ்சு' பாடல்... ஊட்டம் மிக்க சத்துணவு!!

    ReplyDelete