Wednesday, November 10, 2010

விவேக சிந்தாமணிஎப்பொழுதேனும் மனதில் இலக்கிய வரட்சி ஏற்படும் போது அல்லது புத்தகங்கள் படிக்க முடியாது வேலைப் பழு என்னைச் சூழும் போது காரில் பயணிக்கும் அந்த ஒரு மணி நேரத்தை இன்னொரு விதமாக அதற்குப் பயன் படுத்திக் கொள்வேன்.அது ஒரு விதமான போதையைப் போல!மனதை ரம்மியமான ஓர் உலகுக்கு இட்டுச் செல்லும்.


சுமார் நான்கு வருடங்களின் முன்னால் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துத் தேன் மதுரத் தமிழ் ஓசையில் புதன் மாலைகளில் இடம் பெற்று வந்த ‘முத்து விதானம்’ என்ற இலக்கிய நிகழ்ச்சியின் ஒலிப்பதிவுகள் என்னை சூழ்ந்திருக்கும் அத்தகைய வெறுமையில் இருந்து என்னை விடுவித்துப் புத்துணர்ச்சியத் தரும்.

ஒரு மணி நேரம் இடம் பெற்ற அந்த நிகழ்ச்சியினை திருமலை மூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அதனை கேட்ட்ட பின்னர் மனதில் ஒரு உணர்வு மட்டுமே மிஞ்சும். அது கண்னப்ப நாயனார் சிவபெருமானுக்கு இறைச்சியைப் படைக்கும் போது முதலில் தான் சுவத்துப் பார்த்து சுவையற்றவற்றை விலக்கி சுவையானவற்றைப் தேர்ந்தெடுத்துப் படைப்பாராம்.அது போல மிகச்சுவையான இலக்கியங்களைத் தரம் பார்த்துப் படைப்பதில் கைதேர்ந்தவராக அவர் விளங்கியிருந்தார் என்பது அதன் சுவையை மீறி மனதில் நிலைக்கும்.

அச் சுவையின் நிமித்தம் அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு அவரோடு தொடர்பு கொண்டு மிக அருமையாக இருக்கிறதென்றும்; உங்கள் அனைத்து நிகழ்ச்சியையும் எனக்கு ஒலிப்பதிவு செய்து தர முடியுமா என்றும் கேட்டிருந்தேன்.முழுவதையும் கிரமமான முறையில் ஒலிப்பதிவு செய்து ஒழுங்கு முறைப்படி ஒரு கோப்பில் இட்டு இலவசமாக என் வீடு தேடி வந்து தந்து விட்டுப் போன அந்த பெருந் தன்மையை நன்றியோடு இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருகிறேன்.

இவற்றை இப்போது எதற்குச் சொல்கிறேன் என்றால் அண்மையில் அந்த வரிசையில் வந்த முத்து விதானம் ஒன்றினை சுமார் 4 வருடங்களின் பின் கேட்டுக் கொண்டிருந்தேன்.ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிது புதிதாய் அதில் சுவை சொட்டும்.அதில் விவேக சிந்தாமணி என்ற இலக்கியத்தில் இருந்து ஒரு பாடலை அதன் சுவை குன்றா வண்ணம் சுவைக்கத் தந்திருந்தார் அவர்.அவர் தந்த பாடல் இது தான்.

பாடல் 19;

“தேனுகர் வண்டு மது தனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனியென்று தடங்கையில் எடுத்து முன் பார்த்தாள்
வானுறு மதியும் வந்தது என்றெண்ணி மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது எனப் புகன்றாள்”

தேனினை உண்ட மயக்கத்தில் மயங்கிப் போய் கிடக்கிறதாம் வண்டு.அதனை சம்புவின் கனி - பழம் என்று எண்ணி தன் கரங்களால் எடுத்து பார்க்கிறாள் ஒருத்தி.(சம்பு என்பது தாமரை என்று நினைக்கிறேன்)அவளது முகத்தை மயக்கத்தில் இருந்து விழித்த வண்டு பார்க்கிறது.அதுவோ சந்ர வதனம்!ஐயையோ சந்திரன் வந்து விட்டது என்று மயக்கமுறுகிறது வண்டு.சந்திரன் வந்து விட்டால் என்ன செய்யும்? தாமரை கூம்பி விடும் இல்லையா?அதனால் அப்பெண்ணின் தாமரைக் கரத்தை தாமரை என நினைத்த வண்டு அது கூம்பி விடும் என்று அஞ்சி அவ் வண்டு பறந்து விட்டதாம்.இதென்ன புதுமை! பழம் பறக்கிற புதுமை என்று சந்ர வதனமும் தாமரைக் கரமும் கொண்ட அவள் கேட்கிறாள்.

இதனைச் சுவை பட சொல்லியிருந்தார் திருமலை மூர்த்தி அவர்கள். அதன் பின்னர் கிடைத்த ஓர் ஓய்வுப் பொழுதில் விவேக சிந்தாமணியத் தேடி வலையில் பயணம் போனேன்.அதிஷ்ட வசமாகக் கிட்டியது விவேக சிந்தாமணி.அழகழகான மணிகளைப் போல கோர்க்கப் பட்ட பாடல்களின் தொகுப்பு அது.முழுவதும் சேர்த்தால் 121 பாடல்கள் அதில் உள்ளன.பெண்ணையும் உலகியல் நடப்புகளையும் கலந்து கோர்க்கப் பட்டிருக்கிறது அச் சிந்தாமணி.ஆனால்,யார் பாடினார்? எப்போது பாடப்பட்டது என்பது போன்ற விபரங்களைப் பெற முடியவில்லை.

ஆனால் பாடல்களை மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் மிகச் சிறப்பான முறையில் தொகுத்து இலகுவாகத் தரவிரக்கம் செய்து படிக்கத் தக்க வசதியோடும் தேவைப் பட்டால் அச்சு வடிவில் பெறும் வசதியோடும் மின் இதழாக தெளிவான அச்சில் வெளியிட்டிருக்கிறது.

மிக அழகானதும் பயனுள்ளதுமான அவர்கள் முயற்சி நின்று நிலை பெற வேண்டும்.அவர் தம் அமைதியான சமூகப் பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.அவற்றில் இருந்து சில விவேக சிந்தாமணிகளை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இரண்டு விடயங்கள் இதில் என்னை வியப்பில் ஆழ்த்தின.

1.பாடலும் அந்தக் கற்பனைத் திறனும் கருப் பொருளும்.
2.இத்தகைய பாடல்கள் ஏன் கவிஞர்கள்,இலக்கியவாதிகளால் கண்டுகொள்ளப் படவில்லை?

அதில் இருக்கின்ற கற்பனை நயமும் ஊடு பொருளும் மிக அழகானவை.பெண்ணின் எழிலை அது இவ்வாறு கூறுகிறது.

பாடல் 10,

“வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணினாள் கிளி மொழி வாயில் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ
அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே”

பெண்னின் நடையழகை அது இவ்வாறு கூறுகிறது.

பாடல்37,

பொன்னின் மணி கிண்கிணி சிலம்பொலி புலம்ப
மின்னுமணி மேகலைகள் மெல்லென ஒலிப்பச்
சின்ன மலர் கொண்டு சில சேடியர்கள் சூழ
அன்னம் என அல்ல என வாமென உரைத்தார்”

இன்னொரு பாடல், ’அன்னம் பழித்த நடை,அம்பு பழித்த விழி அமுதம் பழித்த மொழி...’என்று தொடரும்.அவை மட்டுமன்றி வேறு பல பாடல்களும் இந்த மணிகளில் வியந்து இன்புறத் தக்கன.

ஒன்பதாவது பாடல் இப்படிக் கூறுகிறது.

‘வானரம் மழைதனில் நனைய தூக்கணம்
தானொரு நெறி சொல தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனர்க் குரைத்திடில் இடர் அது ஆகுமே’

என்கிறது. அது போலவே இன்னொரு பாடல் (130)

“நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்
நற்றமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ?
பேய் வாழும் சுடுகாட்டை பெருக்கித் தள்ளி
பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடதாமோ?”

என்று கேட்டபடி தொடர்கிறது.

இன்னொரு பாடல்,(61)

“தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது
பாம்புக்குப் பால் வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா
வேம்புக்குத் தேன் வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா
தாம் பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார்”

என்று ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்பதை அழகாகக் கூறுகிறது.அதே பொருளைக் கொண்டதாக இன்னொரு பாடலும் அங்கு இருக்கிறது.அது 88வது பாடல்.

“கற்பூர பாத்தி கட்டி கஸ்தூரி எருப் போட்டுக் கமழ் நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும்
சொற்போதையர்க்கு அறிவு இங்கு இனிதாக வருமெனவே சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே”

என்கிறார்.

பாடல் எட்டோ இன்னொரு விதமாய் அதனை நவில்கிறது.

”தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானகத்து இடை இருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே!”

பொருள்;

மண்டூகம் - தவளை. தாமரைத் தடாகத்துக்குள் தாமரையோடு உடன் தவளை வசித்திருந்தாலும் தாமரையின் சிறப்பை அது அறிவதில்லை.ஆனால் வண்டானது காடுகளுக்குள் இருந்த போதும் தாமரையின் சிறப்பை அறிந்து வந்து மது உண்ணும்.அது போல பல காலங்கள் பழகி வந்தாலும் அறியாமையில் உள்ளவர்கள் அதனை கண்டு கொள்ள மாட்டார்கள்.ஆனால் அறிவுடைய கற்றவர்களோ எனில் (தூர இருந்த போதும்) சிறப்பினைக் கண்டு நாடி வந்து உறவாடி மகிழ்வர்.

பாடல் 56

”மங்குல் அம்பதினாயிரம் யோசினை மயில் கண்டு நடமாடும்
தங்கும் ஆதவ நூறாயிரம் யோசினை தாமரை முகம் விள்ளும்
திங்கள் ஆதவற்கு இரட்டி யோசினையுறச் சிறந்திடும் அரக்காம்பல்
எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டகலாரே!”

பொருள்;

மங்குல் - மழை முகில். மழை முகிலைக் கண்டு 50,000 யோசனை தூரத்தில் உள்ள மயில் மகிழ்ந்து நடனமாடும்;சூரியனோ 100,000 யோசனை தூரத்தில் உள்ளது. ஆனாலும் அதனைக் கண்டு தாமரை முகம் மலரும்.நிலாவோ 200,000 யோசனை தூரத்தில் இருக்கிறது. ஆனால் அதனைக் கண்டு செவ் அல்லி சிறப்பாக முகம் மலருகிறது.அது போல அன்பாக இருப்பவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இதயத்தில் இருந்து நீங்க மாட்டார்கள்.

எவ்வளவு அழகான உவமான உவமேயங்கள் இல்லையா? இது வரை இப்படி ஒரு கற்பனை ஏன் வேறொருவருக்கும் தோன்றவில்லை? அல்லது நான் தான் இவற்றை எல்லாம் காணாது தவற விட்டு விட்டேனா?

உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஆஈன மழை பொழிய இல்லம் வீழ என்ற பாடலும் இவருடையது தான்.அடுத்தடுத்து வரும் இடர்கள் பற்றி அப்பாடல் பேசும்.’பட்ட காலே படும்; கெட்ட குடியே கெடும்’என்பதை மெய்ப்பிப்பது போல அமைந்திருக்கும் பாடல் அது. வறுமை வந்துற்ற போது ஏற்படும் நிலைமை பற்றிப் பேசும் இப் பாடலைப் பாருங்கள்.

‘தாங்கொணா வறுமை வந்தால் சபை தனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லர்க்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே!’

புலவர்களில் அனேகமானோர்க்கு அன்பும் பணமும் எப்போதும் பற்றாக்குறையாகவே இருந்திருக்கிறது போலும்.இது பற்றிப் பல தனிப்பாடல்கள் இருக்கின்றன.அதிலும் நாயக்கர் காலப் பாடல்கள் சிறப்பாக அவற்றை வெளிப்படுத்தியிருக்கும். இரட்டையர்,காளமேகப் புலவர், ஒளவையார் வரை இது அவர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறது.இப்புலவரும் அதற்கு விதி விலக்கில்லை. இவர் இப்படிப் பாடுகிறார்.

‘ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்
முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும் பசி ஆகும் தானே’


அழகான மணிகளை நாம் இன்புறத் தந்து பெயரைப் பதியாது போன அந்தப் புலவனுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரம்.

இன்னும் இப்படி அழகழகான பாடல்கள் இலக்கியப் பரப்பெங்கும் சிந்துண்டு கிடக்கக் கூடும்.அவற்றைக் கோர்த்தெடுத்து மாலைகளாக்கித் தர தமிழ் இலக்கிய வாதிகள் முன் வர வேண்டும்.

15 comments:

 1. சம்பு என்பத தாமரை அல்ல. ஆனால் அதுவும் ஒரு சதுப்பு நிலத் தாவரம்.
  நெல் விளையும் இடங்களில்அதிகம் வளரும்.
  கிட்டத்தட்ட கரும்பின் தோற்றமுடையது.
  கரும்பை விட உறுதி குறைந்தது. மென்மையானது.
  மிகவும் பசுமையானதாக அடர்ந்து வளரும்.
  இந்த களையை அழிப்பதில் நெல் விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைவார்கள்.
  காரணம் மிக ஆரம்பத்தில் இது நெல்லின் இரண்டிலைப் பயிர் போன்றே தோன்றுவதுதான்.
  வேறு பிரித்துப் பிடுங்கி அழிப்பது கடினம்.

  எங்களுக்கு சொந்தமாக உள்ள வயல்களில் ஒன்றுக்கு
  சம்பு என்றே அடையாளப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
  அந்த வயலில் சம்பு போல செழுமையாக நெல் வளர்ந்து விளைவதே அதற்குக் காரணம்.

  சம்பு என்னும் பெயர் நினைவுக்கு வராமல்
  கடந்த சில நாட்களாக மண்டையைக் குடைந்து கொண்டிருந்தேன்.
  இதனுடன் கூடவே சீந்தில் என்னும் முட் பற்றையின் ஞாபமும் வந்தது.
  எலியாமணக்கஞ் செடியின் ஞாபகமும் வந்தது.
  மிகவும் நன்றி இவற்றை ஞாபகம் செய்து வைத்தமைக்கு.

  வேண்டுமானால் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் எனது புதிய புத்தகத்தில்
  என்னுரை பகுதியில் உங்களுக்கும் ஒரு நன்றி கூறி விடுகிறேன்.

  ReplyDelete
 2. உங்கள் இலக்கியப்பதிவு அருமை தோழி..அந்த பாடல்களை மிகவும் ரசித்தேன்.உவமை,வர்ணனைகள் உண்மையிலேயே அழகாக இருக்கிறது.இது போல் இன்னும் பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.....பகிர்வுக்கு மிக்க நன்றி...:)

  ReplyDelete
 3. திரு ரஞ்சன் அவர்களுக்கு,

  உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

  நீங்கள் நன்றி கூறும் அளவுக்கு நான் எதுவும் செய்து விடவில்லை.அநாவசியமான நன்றிகளை நான் விரும்புவதுமில்லை.

  நெற்களைகள் என்று கூகுளில் தேடினால் விபரங்களைக் கொண்டுவந்து கொட்டும் அது.

  ReplyDelete
 4. ஹாசினி,எங்கே ஆளைக் காணோம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.நலமா?

  இலக்கிய சம்பந்தமான சுமார் 40 கட்டுரைகள் கைவசம் இருக்கின்றன.அவற்றை இன்னும் சற்று மெருகேற்ற வேண்டி இருக்கிறது.சந்தர்ப்பம் வரும் போது பதிவிடுகிறேன்.

  ReplyDelete
 5. இரண்டு நாட்களாக இணையத்தில் அதிக நேரம் செவழிக்க முடியவில்லை.அது தான் தாமதம்..:)
  நான் நலம்.உங்கள் நலத்துக்கும் பிரார்த்திக்கிறேன்..

  நிச்சயமாக..நேரம் கிடைக்கும்போது அவற்றை பதிவிடுங்கள்..

  ReplyDelete
 6. உங்கள் பதிவையும் பார்க்க ஆவலுடையேன்.:)

  ReplyDelete
 7. திரு ரஞ்சன் அவர்கள் சம்பு என்பதற்குச் சொன்ன விளக்கத்தின் பின் அகராதியில் அது பற்றித் தேடினேன்.அவர் சொன்னது போல் சம்பங்கோரை என்று ஒருவித கோரை வகை இருப்பதாக University of Madras Tamil Lexicon கூறுகிறது.

  அதே நேரம் சம்பு என்பதற்கு பெரு நாவல் வகை என்றும் ஒரு கருத்துக் காணப்படுகிறது.

  ’சம்புவின் பழம்’என்று இப்பாடல் குறிப்பிடுவதால் அது நாவல் பழத்தைக் குறிப்பதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. தவிரவும் வண்டும் நாவல் பழமும் தோற்றத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதால் சம்பு என்று இப்புலவர் குறிப்பது நாவல் பழமாக இருக்கலாம்.

  ஒரு சொல்லை புதிதாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 8. தெவிட்டாத தமிழ்ச் சுவை உங்கள் தயவால் விவேக சிந்தாமணியில்! மேலதிக விவரங்கள் விசாரிக்கிறேன் இங்குள்ளோரிடம். பதிவைப் படிக்கும் போதே சம்பு பற்றி சொல்ல விழைந்தேன். திரு. ரஞ்சனும், நீங்களுமாக சரியான முடிவு தேடி விட்டீர்கள்! இப்பாடலில் சம்பு என்பது தாங்கள் சொல்வது போல் வண்டைத் தான் குறிக்கிறது தோழி. தங்கள் தமிழார்வத்துக்கு தலை வணங்குகிறேன்!!

  ReplyDelete
 9. பொருத்தமான படம் வெகு சுகம்.

  ReplyDelete
 10. சம்பு என்பது நாவல் பழம் என்கிறது தமிழ்நாடு அரச தமிழ்ப் பாடநூல். (8ம் அல்லது 9ம் தர 2011-2012 புத்தகம்)

  ReplyDelete
 11. மிக்க நன்றி தீபிகா.

  விவேக சிந்தாமணியைத்தேடிய போது இங்கு வந்து சேர்ந்தீர்கள் போலும்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்!2013 வளமானதாய் மலரட்டும்!

  ReplyDelete
 12. அனைத்தும் அற்புதம்!

  ReplyDelete
 13. மிக்க மகிழ்ச்சி நண்பரே!

  உங்களுடய பின்னூட்டம் வந்த பின்னர் மீண்டும் இதனை வாசித்துப் பார்த்தேன்.மீண்டும் ஒரு இலக்கிய அனுபவத்துக்கு உங்கள் பின்னூட்டம் என்னைக் கொண்டு சென்றது.

  மிக்க நன்றி. சிரத்தையோடு கருத்தினைத் தந்து சென்றமைக்கு.

  இப்போது அதே ATBC வானொலியில் ‘சிலப்பதிகார சிந்தனைகள்” என்ற தலைப்பில் ஒரு ஒலிச் சித்திரம் நடந்து கொண்டிருக்கிறது.தற் செயலாக ஒரு நாள் கேட்கக் கிட்டியது.அழகு சொட்டும் கலை, கற்பனை நயங்கள். கேட்கத்தான் அதிகம் முடிவதில்லை. அது என் வேலை நேரமாய் போய் விட்டது.

  கோவலன் மீண்டு வந்த பிறகு கண்ணகி கணவனுக்கு விருந்து படைக்கிறாள். படைக்க முதல் நிலத்துக்கு தண்ணீர் தெளித்து அதன் பின் இலை போடுவது வழக்கமாம். அது அவள் கணவனுக்கு போட்ட கடசிச் சாப்பாடு.

  அதை இளங்கோ சொல்லும் போது பூமித்தாய் இவ்வாறு ஒரு கொடுஞ் செயல் ஒன்று இவளுக்கு நடக்கப்போகிறது என்று மூர்ச்சையடைந்து விட்டாளாம். அவளுக்கு தண்ணீர் தெளித்து மூர்ச்சைநீக்குவது போல இருந்ததாம் கண்ணகி செய்த செயல்!

  என்ன ஒரு கற்பனை பாருங்கள்?

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 14. நன்றி. வருகைக்கும் பகிர்வுக்கும்.

  பல வருடங்களின் பின்பும் இது பார்வைக்குரியதாக இருப்பதை இட்டு மகிழ்ச்சியும். உங்கள் இந்தப் பகிர்வின் மூலம் அதைக் கண்டு கொண்டேன்.

  ReplyDelete