Wednesday, December 29, 2010

பிசிராந்தையார் போல வாழ்க




நல்லென கற்று
நலம் பெறுவீரென
நம்மரசளித்த
நன்கொடை இந்நூல்.
நன்கிதைப் பேணி
நலமே கற்று
நற்குணம் பெற்ற
நற்குடியாவீர்.

சிறு வயதில் இலவசமாகக் கிடைத்த அரச பாடசாலை நூல்களில் முதல் பக்கத்தில் எழுதி இருக்கும் வாசகங்கள் இவை.முதன் முதல் இலங்கையில் பிரேமதாசா ஆட்சிக்கு வந்த போது இலவச பாடநூல், இலவச சீருடைத் துணி, இலவச பிஸ்கற் என்பன பாடசாலையால் வழங்கப் பட்டதுடன் பல்கலைக் கழகக் கல்விக்கும் நல்ல புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு மஹாபொல என்ர்ற அரச மானியமும் வழங்கப் பட்டது மங்கலாக நினைவிருக்கிறது.

சுகம் வரும்; ஆள் தப்பாது என்ற கனக்காக அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதும் அது எவ்வளவு முக்கியம் என்பதும் புரிந்து கொள்ளப் படாது போய் விட்டதால் நாட்டில் நடந்த அனர்த்தங்களை நாமறிவோம்.மழையும் புயலும் அடித்தோய்ந்த தேசம் அது இப்போது.சேதப் பட்டுக் கிடக்கிறது தேசம்.

அதே நேரம் அந்த நற்குணம் பெற்ற நற்குடி என்பது பாடசாலைக் கல்வியால் கிட்டுகின்றதா? அல்லது பாரம்பரியமாகக் கற்பிக்கப் படாமலே நடைமுறை வாழ்க்கையினூடு கடத்தப் பட்டுக் கொண்டிருக்கும் குடும்பச் சமூகப் பண்பாட்டினால் வந்து சேர்கின்றதா அல்லது நாமாக ‘நம்மை’ உருவாக்கிக் கொள்கின்ற போது கிட்டுகின்றதா என்பதும் சுவாரிசமான விவாதப் பொருளாக இருக்கும்.

கற்றறிவு பெற வசதியற்ற ஏழைகள் நல்ல நற்குடி மக்களாக இருப்பதையும் நல்ல கல்வியறிவும் பண அந்தஸ்தும் கொண்டுள்ள மக்கள் சிலர் நற்குண இயல்புகள் என்பது பற்றி மேம்போக்கான தன்மையைக் கொண்டவர்களாக இருப்பதையும் நடைமுறை வாழ்வில் நாம் காண்கிறோம்.

நேற்றய தினம் பார்த்த இலங்கையின் தினக்குரல் என்ற தமிழ் பத்திரிகை ஒன்றில் (26 டிசம்பர்2010) திருமலை நவம் என்பார் “பனையோலையும் பாடும் மீனும் கட்டி வளர்த்த கலாசாரங்கள் வாழுமா” என்ற தலைப்பில் சமூகப் பொறுப்புணர்வுள்ள கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.அதில் மேலைத் தேய மாயங்கள்,மரபுகளின் திரிபு,இளவயதுத் திருமணங்கள்,விவாகரத்து மலிவுகள்,இளைஞர்களின் நடத்தை சார் மாற்றம்,சிறுவர்கள் துஷ்பிரயோகம்,மாணவ வக்கிரங்கள்,ரியூஷன் ஆதிக்கம்,மூத்தோரை மதியாமை,சடங்குகளின் தேய்வுகள்,மனம் முடிக்காக் கன்னியரின் மன உளைச்சல்கள்,கணிகையர் வியாபரம் என பல விடயங்களை மன வருத்தத்தோடு பட்டியலிட்டிருந்தார்.

இவற்றுக்கு என்ன காரணம்? அல்லது யார் காரனம்? பிச்சைக் காரர்களே இல்லாதிருந்த ஊர் நம்முடய ஊர்.வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்த மக்கள் எம் மக்கள்.தமிழையும் கோயிலையும் கண்ணெனக் காத்து நின்றவர்கள்.கல்வியிலும் தாம் சார்ந்த பண்பாட்டிலும் தனித்துவமாய் திகழ்ந்தவர்கள் அவர்கள்.

இன்று எத்தனை அநாதைக் குழந்தைகள் நம் ஊரில்!நிராதரவாய்,நிக்கதிக்குள்ளாகியிருக்கும் ஏதுமறியாச் செல்வங்கள் எத்தனை பேர்!போர் உக்கிரம் பெற்றிருந்த பொழுதில் B.B.C யே கதியாய் கிடந்த போது ஓர் இளந்தாய் இப்படிக் கதறினாள்.’என் கணவனைத் தொலைத்து விட்டேன்; என் 13 வயது மகள் இறந்து போனாள்; என் சிறுமகன் தன் கால்களில் ஒன்றையும் கைகளில் ஒன்றையும் இழந்து போனான்.இறந்த என் மகனின் உடலையும் காயமுற்ற என் மகனையும் இந்தத் திறந்த வெளி மருந்துகளற்ற வைத்திய சாலையில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

சுற்றிவரக் காயமுற்றும் இறந்தும் கிடக்கும் உடல்கள்.ஒன்றரை வயது நிரம்பிய பெண்குழந்தை ஒன்று அழுதவாறு என்னை நோக்கி வந்தது. யார் பெற்ற பிள்ளையோ! பசியோ? பெற்றோர் இறந்தனரோ? அல்லது தொலைத்து விட்டதோ? யாதுமறியேன். நான் எப்படி அக்குழந்தையைக் காப்பேன்”என்று கதறி அழுத குரல் இன்னும் காதுகளில் கேட்ட வண்னமாக இருக்கிறது.

அரசும் சமூகமும் இதற்கு எவ்வளவு தூரம் பொறுப்பேற்க முடியும் என்பது பற்றியும் அதன் தார்ப்பரியம் பற்றியும் யோசித்துப் பார்த்த போது ஒரு வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காகத் தயார் படுத்தி வைத்திருந்த சங்க காலப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. மகிழ்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் என்னென்னெ தேவை என்பது பற்றி அந்தப் புற நாநூற்றுப் பாடல் அழகாகச் சொல்கிறது.(பாடல்191)

பிசிர் என்றொரு ஊர். அங்கே ஆந்தையார் என்றொரு புலவர்.அதனால் அவருக்குப் பிசிராந்தையார் என்று பெயர்.இது என்ன விசித்திரமான பெயராக இருக்கின்றதே என்று நீங்கள் சற்றுச் சிந்திக்கலாம். இயற்கையோடு பின்னிப் பிணைந்த வாழ்வு முறையைக் கொண்டிருந்த வாழ்க்கை வாழும் மக்கள் அவர்கள்.காலம் கிறிஸ்து பிறப்பை அண்டிய நூற்றாண்டு. அதனால் கண்ணுக்குத் தென்படும் இயற்கை அம்சங்களை வைத்துப் பெயர் சூட்டும் மரபு புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.அவருக்கு ஆந்தையின் ஏதோ ஒரு அம்சம் பொருந்திப் போயிருக்க வேண்டும். அதனால் அவர் பெயர் பிசிராந்தையார் ஆகி விட்டது.

அவர் கம்பீரமாக நடந்து வருகிறார்.அவர் அக அழகு முகத்தில் பிரகாசிக்க கம்பீரமாக உற்சாகமாக நடந்து வருகிறார்.உடல் தளர்ந்திருந்தாலும் முகத்தில் ஒரு பிரகாசம். புன்னகையில் ஒரு பூரணம்.பரி பூரண திருப்தி ஒன்று அவர் முகத்தில் நர்த்தனமாடுகின்றது.அதனால் நடை குதியாட்டம் போடுகிறது.தலையில் கூட மூப்பின் சாயல் எதுவும் இல்லை.

பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு ஆச்சரியம்.அவரிடம் அவரது இளைமையின் இரகசியத்தைக் கேட்கிறார்கள்.அவர் பாடலில் பதில் சொல்கிறார் இப்படி.

“யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதீர் ஆயின்
மாண்ட என் மனைவியடு; மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான்; காக்கும் அதன் தலை;
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே”

பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னாலும் என் தலையில் நரை எதுவும் தோன்றவில்லையே காரணம் யாது என்று கேட்பீர்கள் ஆயின் (யாண்டு பலவாக நரையிலவாகுதல்; யாங்கு ஆகியர் என வினவுதீர் ஆயின்; யாண்டு - ஆண்டு; யாங்கு - எப்படி)அதற்குக் காரணம் மாண்புடைய எனது மனைவி!சொல் கேட்கும் என்னுடய பிள்ளை!விசுவாசமுளள என் வேலையாட்கள்!வேந்தனோ பிழையான எதனையும் செய்யாதவன்.காக்கும் அவனுடைய தலை(அவனுடைய தலைமை என்னைக் காக்கிறது).என்னைச் சுற்றிச் சூழ இருக்கின்ற குடிமக்களோ ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்.அதாவது நன்கு கற்று சரியான கொள்கையைக் கண்டறிந்து, அடங்கி;அதன் படி வாழும் சான்றோர்கள் என் சுற்றம் சூழ இருக்கிறார்கள்.இது நான் வாழும் ஊர்.

இதுவே அதற்குக் காரணம் என்கிறார் பிசிராந்தையார்.

புது வருடம் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன.இலத்திரனியல் கண்டுபிடிப்புகளால் உலகோடும் உலகத் தமிழர்களோடும் மிக இலகுவாகத் தொடர்பாட முடிகிறது.பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ள ஊரில் இருக்கிறேன்.என் தேசத்து மக்களை அவர் தம் இழப்புகளை நினைத்துப் பார்க்கிறேன்.

அவர்களுக்கான மன நிறைவை; மகிழ்ச்சியை யார் தருதல் கூடும்?

தாயகத்து அநாதைக் குழந்தைகளே!இளம் விதவைகளே!நிக்கதியான குடும்பங்களே!குடிசை வாழ் உறவுகளே!பிசிராந்தையாருக்குக் கிட்டியது போன்றதொரு வாழ்வு உங்கள் எல்லோருக்கும் அமைவதாக!.

மற்றும் என் சக பாடிகளே உங்கள் எல்லோருக்கும் கூட என் புது வருட வாழ்த்துக்கள் உரியதாகுக.

இப்படியான ஒரு அழகிய வாழ்வு எல்லோருக்கும் கிட்டட்டும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

(படம் எண்னை வர்ணம்;ஓவியர்;இளையராஜா; நன்றி; கூகுள் இமேஜ்)

2 comments:

  1. paaraadukal.
    vaazhthudan,
    ivan,
    http://kaatruveli-ithazh.blogspot.com/

    ReplyDelete
  2. நன்றி அமுதன் வரவுக்கும் அறிமுகத்துக்கும்.தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete