Monday, January 3, 2011

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்....எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்று பிடித்திருக்கும்.

இது தெரிய வந்தது வெளி நாடு வந்த பின் தான்.ஊரில் நாம் செய்வது எல்லாமே பிடித்திருந்தது.இங்கு செய்வது ஒன்று பிடிப்பது ஒன்றென்பதால் பிடிப்பதைச் செய்வதற்கு நேரமொதுக்கி சக்தியை மீட்டெடுக்க வேண்டி இருக்கிறது.

அது அன்றாட ஓட்டத்துக்கு காருக்கு பெற்ரோல் அடிப்பது மாதிரி!எங்கள் சக்தியை எமக்கு மீட்டுத் தரும் உபாயமாக அது இருக்கும்.பதிவு எழுதுவது, பாட்டு படிப்பது, இசைகேட்பது,வாத்தியங்கள் இசைப்பது,.....இப்படி!

என் தங்கைக்கு ஒரு வித விசித்திர வியாதி இருக்கிறது. விடுமுறையோ ஓய்வு நாளோ வருமிடத்து தன் ஆடைகள் நிறைந்த அலுமாரியை, முகம் பார்க்கும் கண்னாடி மேசையை மீண்டும் மீண்டும் அடுக்கி மகிழ்வாள்.அது அவளுக்கு தன் நாளாந்த சக்தியை மீட்டுத் தரும் ஒரு செயற்பாடு.

அது போல எனக்கும் ஒரு வித வியாதி இருக்கிறது.பார்க்கின்ற போது படிக்கின்ற போது பிடித்தவற்றைச் சேகரித்து வைக்கும் வழக்கம் ஒன்று இருக்கிறது என்னிடத்தில்.ஓய்வின் போது அல்லது (காருக்கு பெற்ரோல் அடிப்பது போல)சக்தி தேவைப் படும் போது முன்னர் ஒரு போது சேர்த்து வைத்த விடயங்களை மீண்டும் ஒரு முறை எடுத்துப் பார்த்து மகிழ்வதுவே அது.

நீங்கள் என்ன மாதிரி?

இது மாதிரி என் அக்காளுக்கு இருப்பது இன்னொரு விதமான விஷேச வியாதி.மரங்கள் செடி,கொடி பூக்களோடு பேசுவது தான் அது. அவற்றுக்கு உணவு, தண்ணீர்,சத்துகள் போடுவது,மண்ணைக் கிண்டி இதமாக்குவது,பூ இதழ்,நிறம்,வாசம்,மற்றும் அதன் செழுமை,வடிவம் இவற்றில் மனதைப் பறி கொடுத்து நிற்பது.. இப்படி தொடரும் அவர் வியாதி.

அது மாத்திரமல்ல வாழை, கொய்யா, பலா, மாமரம் எனவும் மேற்கொண்டு தொடரும் அது.சைவ போசனம் அருந்துபவர்கள் என்பதால் வல்லாரை தக்காளி, கத்தரி, வெண்டி,முருங்கை,பச்சை மிளகாய் என வீட்டுத் தோட்டமும் உண்டு பிறிம்பாக!பிதிரர்களுடய வருடம் ஒரு முறை வரும் நினைவு நாட்களில் தோட்டத்தில் விளைந்த மரக்கறிகளோடு வாழை இலையில் சைவ போசனம் அங்கு உண்ணக் கிடைப்பது - அதுவும் வெளி நாட்டில் -ஒரு வரம் மாதிரி.

அவவுக்குப் பிறந்த தினம் வருகிறது.அவவுக்கு என்ன வாங்கலாம் என யோசித்து கடை எல்லாம் சுற்றியதில் இறுதியாகக் கண்டு கொண்டது இது தான்.

மூங்கிலினால் மிக நேர்த்தியாக வளைத்துச் செய்யப் பட்ட பல வடிவங்களைக் கொண்ட பாத்திரங்கள் வியற்நாம் நாட்டவர்களால் வீட்டுக் கைவினையாகச் செய்து சந்தையிடப் படுகின்றன. மிக இலேசாகவும் வசீகரமாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கும் அப்பாத்திரங்கள் புழக்கத்துக்கும் சுகமானவை.இலேசானவை.கூடவே மரத்தினால் வடிவமைக்கப் பட்ட கரண்டிகளும் குடுவைகளும் உள்ளன.அது மாத்திரமன்றி ஓலைகளால் இழைக்கப் பட்ட பெட்டிகள்,பல ரகங்களிலும் பல அளவுகளிலும் மூடிகளோடும் வருகின்றன.

இவற்றைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து விட்டன.இப்போது வாயு,மின்சார அடுப்புகளும் ஸ்ரிமரும் பாவனைக்கு வந்து விட்டன.பிட்டு அவிப்பது வேலை மினைக்கேடு ஆகி ரெடிமேட் சாப்பாடுகள் வீட்டு மேசைக்கு வர ஆரம்பித்து விட்டன.இனி ஈழத்து முற்றத்துக்கு யாரும் வந்து முந்தி எப்பிடி நாங்கள் பு(பி)ட்டு அவித்தோம் என்று பார்க்கிற காலம் வரும்.

அதற்காகத் தான் இந்தப் பதிவு.

முன்னர் ஒரு காலம்! இற்றைக்கு 40 வருடங்களாவது இருக்கும்!!

அது ஒரு கொண்டாட்ட காலம்! தாயக மண்.போர் மூளாக் காலம்!!

யாழ்ப்பாணத்தில் ஊர் கோயில் திருவிழாக் கொண்டாட்டங்களின் போது என் தாயாரின் தாய் தந்தையரின் வீட்டுக்கு மற்றும் தந்தையாரின் தாய் தந்தையர் வீட்டுக்கு போவது வழமை.திருமணமாகி வெளியூர்களில் வாழ்ந்து கொண்டிருந்த சகோதர சகோதரிகளின் குடும்பம் ஒன்று கூடும் காலமும் அது தான்.

பலாப்பழம்,வெத்திலைத் தட்டம்,பாக்குரல்,மூக்குப் பேணி,சிவப்பு சீமேந்துத் தரை,பனையோலை,முள்முருக்கு, கட்டித் தொங்க விடப் பட்டிருக்கும் வாழைக்குலை, மற்றும் வெங்காயம்,மாட்டுக் கொட்டில்,மாதுளங்கன்று,விளாம்பழம்,புலவு என்று அழைக்கப் படும் தோட்டம்,கற்தறை,அதற்குள்ளும் செழித்து வளர்ந்திருக்கும் புகையிலைத் தோட்டங்கள்,செம்மண்,கிணறு,துலா,நெசவுசாலை,காங்கேசன் துறை சீமேந்துக் கூட்டுத் தாபனத்து விசில் ஓசை,எண்னை வைத்து வாரி இரட்டை பின்னலோடு திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டு வெள்ளைச் சீருடையில் சைக்கிள் ஓடும் மாணவிகள் மற்றும் மாணவர்கள்,,இரவு 8.30க்கு காங்கேசன் துறையில் வந்து நிற்கும் யாழ்தேவியில் இருந்து வரும் மாமா,மாமியை மச்சான்,மச்சாளை அழைத்து வரப் போகும் கறுப்புக் கார்,திருவிழாக்காலங்கள்,வாழையிலைச் சாப்பாடு,தண்னீர் பந்தல்,காப்புகள்,அம்மம்மா குழல்....என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நினைவுகள்!

இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் நினைவுகளிலும் நிழலாடக் கூடும்!

அத் திருவிழாக் காலங்களில் மாலை ஆறுமணி அளவில் சமையலறை பக்கமாய் மிக அமளியாய் இருக்கும்.தென்னந்தும்பும் சாம்பலும் கொண்டு விளக்கப் பட்ட வெங்கலப் பானையில் காய்ந்த தென்னம் மட்டைகளாலும் பன்னாடை மற்றும் பனை மட்டைகளாலும் எரிக்கப் படும் அடுப்பில் மருமக்களும் மச்சாள் மார்களுமாகக் குழல் புட்டு/ நீத்துப் பெட்டியில் பிட்டு அவிக்கும் வாசம் தூள் கிழப்பும்.பிட்டும் தேங்காய் பூவும் தரும் வாசம் என்பதையும் தாண்டி பனை ஓலையால் கூம்பு வடிவில் தயாரிக்கப் படும் நீத்துப் பெட்டிக்கும் மூங்கில் குளாயினால் செய்து பருத்தித் துணி கொண்டு சுற்றப் பட்ட பிட்டுக் குழலினால் அவிக்கப் படும் பிட்டு மீண்டும் பனை ஓலைப் பெட்டுக்குள் கொட்டப் படும்.பிட்டின் வாசமும் பனை ஓலையின் வாசமும் சேர்ந்து ஒரு வித வாசம் அந்த நாற்சார வீடு பூரா பரவும்.

சரி இதற்குப் பொருத்தமா ஏதாவது கூகுளில் படம் ஏதாவது இருக்கிறதா பார்ப்போம் என்று பார்த்தால் மாதேவி என்றொரு சகோதரி பல அரிய - இப்போது பெரும்பாலும் கானக் கிடைக்காத படங்களைப் பதிவேற்றி இருக்கிறார்.(http://maathevi.wordpress.com/)
நன்றியோடு அவரிடம் இருந்து சில படங்களை இங்கும் காட்சிக்கு வைக்கிறேன்.நன்றி மாதேவி.

இது அரிக்கன் சட்டி.இதனை ஒரு வித தாள லயத்தோடு லாவகமாக ஆட்டி அரிசியில் இருந்து கல்லைக் களைவார்கள்.இது திரிகை.தானியங்களை மாவாக்க தரையிலே (நிலத்திலே) துணி விரித்து நடுவில் இருக்கும் துளையினுள் தானியத்தினைப் போட்டு கரையில் இருக்கும் தடியினைப் பற்றிய படி சுற்றச் சுற்ற தானியம் மாவாகி கீழே கொட்டுண்ணும்.இது அம்மி.இதில் அரைச்சு அரைச்சு அம்மி தேய்ந்து போய் விடும்.அப்போதெல்லாம் அம்மி பொழிவதற்கென்று ஆக்கல் வருவார்கள். அம்மியில் சின்னன் சின்னனாய் நுனி கூரான ஆயுதத்தால் சிறு சிறு பள்லங்கலை உருவாக்கி விடுவார்கள். அதன் பின் இலகுவாக அரைத்து விடலாம். அரைத்துச் சாப்பிடும் சம்பலின் சுவையை மறக்குமா நாக்கு?கொக்கத் தடி என அழைப்பது.உயர இருக்கும் பழங்கள், கெட்டுகளை கைக்குக் கொண்டுவந்து தருவது இது தான்.இது தயிர் கடையிற மத்து.தயிரில் இருந்து வெண்னையும் மோரையும் பிரித்தெடுக்கப் பயன் படுவது.


உரல்! மறக்க முடியுமா இதை? உரல் மாதிரி ஏன் நிக்கிறாய் என்று பேசுவதில் இருந்து இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அது மாத்திரமா? அது ஒரு ஜிம் மாதிரி! இயற்கையான எக்சசைஸ்.குறிபாகப் பெண்களுக்கு.அரிசியை நனையப் போட்டு இடிப்பது, மிளகாய் வறுத்து இடிப்பது என்று அதன் பயன் பாடு பல விதத்தில்.

இதைப் போல பொக்குணி உரல் என்றும் ஒரு உரல் இருந்தது. அது மரத்தாலானது. இடித்து இடித்து அது மிக ஆழத்துக்கு உட் குழிந்து போயிருக்கும். தோசைக்கு இடிச்ச சம்பல் என்று ஒன்று இதில் தான் இடிப்பார்கள்.அடுப்பு! பறன் மீது அமைந்திருக்கும். பறனுக்கு கீழே விறகும் தென்னம் மட்டைகளும் இருக்கும். போர் காலங்களில் அவசர கால பங்கராகவும் அது பயன் பட்டது. கொங்கிறீற்ரால் அமைக்கப் பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம்.சூட்டடுப்பு என்று ஒன்று பெரிய அடுப்புக்கு அருகாக இருக்கும். அதற்கு விறகு வைக்கத் தேவை இல்லை. பெரிய அடுப்பின் பிள்ளை அடுப்பு மாதிரி அது.பெரிய அடுப்பில் இருந்து வரும் நெருப்பும் சூடும் அதற்குப் போதும்.ஆ,..! இது தான் நீத்துப் பெட்டி, மற்றும் இடியப்ப உரல். இதைத் தேடிய போது தான் மாதேவியின் வலைப்பதிவினைக் கண்டடைந்தேன். மீண்டும் நன்றி மாதேவி!இதற்குள் அவிக்கும் புட்டுக்கு தனி வாசம். தனி மகத்துவம்!எங்கட ஊர் பாசையில சொல்லுறதெண்டா, ‘சொல்லி வேலையில்லை’பாக்கு வெட்டி! பாக்கு வெட்ட!!இப்ப காணக் கிடைக்குமோ தெரியாது!குறிப்பா வெளிநாட்டில பிறந்த தமிழ் பிள்ளையளுக்கு கட்டாயம் இது ஒரு புதினமாத்தான் இருக்கும்!சட்டியும் அகப்பையும்! களிமண்ணில் செய்து சுட்டெடுத்த சட்டி!தேங்காய் துருவிய சிரட்டையில் செதுக்கித் துளையிட்டு தடியினைச் சீவி உள் நுளைத்து செம்மையுறச் செய்யப் பட்ட அகப்பை!! நெருப்படுப்பில் சமையல்!! - அது ஒரு காலம்! இயற்கையோடு இசைவுற வாழ்ந்த கடந்த நூற்றாண்டு!காம்புச் சத்தகம்! இது வால்புறம் கூராக இருக்கும்.பெட்டி இளைக்கப் பயன் படுவது.ஓலை வார, மற்றும் இளைக்கப் பட்ட பெட்டிக்குள் ஓலையை செலுத்த ஓலையை பக்கவாட்டுக்கு கூராக வெட்டவும் அது சமயத்துக்குப் பயன் படும்.மேலும் கூரான பகுதி துளையிட்டு ஈர்க்கில் சொருகப் பயன் படும்.ஆட்டுக் கல்! வேறையென்ன தோசைக்கு அரைக்கத் தான். தோசைக்கு இட்லிக்கு மாவாட்ட!கருங்கல்லு மேட்.இப்ப கிறைண்டர் வந்து விட்டதால் இதுவும் இனி மியூசியம் குவாலிட்டி!!சுளகும் இடியப்பத் தட்டும்! சுளகு அரிசியில் இருந்து நெல்லை வேறாக்க,தானியங்களில் இருந்து குறுணிகளை,மேலும் கஞ்சல்களை வேறாக்க என்று பலதுக்கும் பயன் படுவது.அதனை பயன் படுத்துவதிலும் ஒரு லாவகம் இருக்கும். ’தனக்குத் தனக்கெண்டா சுளகு படக்கு படக்கெண்று அடிக்குமாம்’ என்ரொரு பழமொழி ஊரில் வழக்கில் இருந்தது.கடசி வரைக்கும் அந்த லாவகம் எனக்கு கைவரவே இல்லை என்பது ஒரு தனிப்பட்ட சோகம்.

இடியப்பத் தட்டு மூங்கில் நார்களினால் பின்னப் படுபவை. பின் நாட்களில் அவை வெள்ளை நிறப் பிளாஸ்டிக்கிலும் வந்த ஞாபகம்.இப்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அந் நாட்களில் கதிரைகளும் இந் நார்களினால் பின்னப் படுபவையே!திருவலகை! இது தான் சமையலறை நாயகன்.இதில இருந்து முழுத் தேங்காயும் துருவி எடுத்து முதல் பால், இரண்டாம் பால், கப்பிப் பால் என்று பிறிம்பாக எடுத்து வைத்து விட்டால் ஊர் சமையலில் பாதி வேலை முடிந்ததற்குச் சமன். இப்ப இங்கு தாய் லாந்தில் இருந்து ரின்னில் தேங்காய் பால் வருகிறது.குறைந்த விலையில் கிடைக்கவும் செய்கிறது.என்றாலும் யாரும் அதில் சமைப்பதில்லை!!வெத்திலத் தட்டம்!வெத்திலை வைக்கப் பயன் படுவது.யாரும் வீட்டுக்கு வந்தால் முதலில் நீட்டப் படுவது.இதுவும் மாதேவியின்ர வலைப் பக்கத்தில் தான் இருந்தது. தட்டத்துக்கு அருகில் இருப்பதைப் போடு செம்பு எண்டு எழுதி இருக்கிறா.அது வெத்திலையை ஸ்ரொக் பண்ணுற சாமானா இருக்கலாம்.இதுக்குப் பேர் விசிறி. பனையோலையில செய்யிறது.வெய்யில் காலத்தில விசுக்கிறது.இப்ப நீங்கள் பதிவ வாசிச்சும் நல்லாக் களைச்சுப் போயிருப்பியள். அவ்வளவு நீட்டாப் போச்சுது.

விசிறி வேணுமோ?
விசேட நன்றி;மாதேவி.

(http://maathevi.wordpress.com/)

No comments:

Post a Comment