Sunday, February 13, 2011

புலவர் குறுங்கோழியூர்க் கிளார்



இவர் வேளான் மரபினர்.(விவசாயக் குடி வழி வந்தவர்).இவர் உறையூரைச் சேர்ந்தவர் என்பர்.இவர் மூன்று பாடல்களை புறநானூறு என்ற சங்க இலக்கியத்தில் பாடி இருக்கிறார்.அவை முறையே 17,20,22ம் பாடல்களாக அமைந்துள்ளன. அவருடய பாடல்கள் நீண்டவையாக அமைந்து கானப்படினும்; அதில் பொதிந்து நிற்கின்ற கருத்துக்கள்,சொல்ல வந்த பொருளைச் சொல்லும் பாங்கு,எடுத்துக் காட்டும் விடயங்கள் - அவரது புலமைக்கும் ஆற்றலுக்கும் மதி நுட்பத்துக்கும் சான்றாக அமைந்துள்ளன.

அவரது 17வது பாடல் ஒரு வரலாற்றுக் குறிப்பைத் தன்னுள்ளே தாங்கி நிற்கின்றது.அதனை வேறொரு சந்தர்ப்பத்தில் தனியாகக் காண்போம்.அது தனியாகப் படித்து இன்புறத் தக்க இயல்பு வாய்ந்தது.அவரது 22 வதாக அமைந்திருக்கின்ற பாடல்,’நாட்டில் வேளாண்மைத் தொழிலை செயலாற்றுக. அதுவே உனக்கு மேன்மையைத் தரும்’ என்று அரசர்க்கு சொல்வதைப் போன்ற பொருளைத் தந்து நிற்கிறது.இப்போது நாம் பார்க்க இருக்கின்ற பாடல் 20 வதாகும்.

இப் புலவரது பாடல் நாயகன் சேரமான் இரும்பொறை என்ற மன்னன்.இவன் செங்கோண்மையும் வள்ளல் தன்மையும் கொண்ட சிறந்த போர் வீரனாவான்.இவன் தலையலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோடு போர் செய்து தோற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியவன்.கபிலர் என்ற புலவனின் நண்பனாகவும் விளங்கிய இம்மன்னன் பாரி வள்ளல் காலத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று அறிஞர் கொள்வர்.

படித்துப் படித்து இன்புறவும் தக்கனவாக அமைந்திருக்கின்ற இவர் கையாளும் தமிழின் அழகும் பாடு பொருளும் அவற்றைச் சொல்லும் திறமும் அவற்றோடு இழையோடியிருக்கும் நேர்மை கலந்த அன்பின் ஊட்டமும் இப்புலவனின் அறிவழகுக்குச் சாட்சி.புறநானூற்றுப் புதையலில் இது ஒரு முத்து.

சரி, இனி இந்தப் பாடலையும் அதன் சொற் சுவையையும் பாருங்கள்!

“இரு முந்நீர் குட்டமும்,
வியன் ஞாலத்து அகலமும்,
வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும் என்றாங்கு,
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை!

அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும்,
சோறு படுக்கும் தீயொடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது,
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே!
திருவில் அல்லது கொலைவில் அறியார்;

நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அப்
பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,
பகைவர் உண்ணா அருமண் ணினையே!

அம்பு துஞ்சும் கடி அரணால்,
அறம் துஞ்சும் செங்கோ லையே
புதுப் புள் வரினும் பழம் புள் போகினும்
விதுப்புற அறியா ஏமக் காப்பினை!
அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின் அஞ் சும்மே!”

இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால், ‘சேர மன்னனே! பெரிய கடலாழமும்,அகன்று விரிந்த நிலப் பரப்பும், காற்று வீசும் திசைகளும்,குற்றமில்லாத ஆகாயமும் - என இவ்வாறானவற்றை அளந்து அறிய வேண்டுமானாலும் அறியலாம்.ஆனால் உன்னுடய ஆற்றலையும் புகழையும் அளந்து அறிவதற்கு இயலாது.அத்தகைய சிறப்புடையது உன்னுடய அறிவின் கூர்மையும் அன்பின் ஈட்டமும் யாவற்றையும் நுட்பமாக உணரும் கண்ணோட்டமுமாகும்.(கண்ணோட்டம் - ஒரு விடயத்தை விமர்சன நீதியாகப் பார்க்கும் ஆற்றல்).இதனை வள்ளுவர்,

‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - அஃது இன்றெல்
புண் என்று உணரப் படும்’ என்பார்.

சேரனே!அரிசியைச் சோறாக்கும் நெருப்பும்,சூரியனுடய இயல்பான கோடை வெப்பமும் அல்லாது உன்னுடைய வெண்கொற்றக் குடையின் கீழ் வாழும் மக்கள் வேறு விதமான வெப்பத்தை அறிய மாட்டார்கள்.மற்றும் உன்னுடய நாட்டு மக்கள் வானத்தில் தோன்றும் செழுமையான வில்லை அறிவார்களே அன்றிப், பகைவர்கள் போர் தொடுக்கும் வில்லை அறிய மாட்டார்கள்.அவர்கள் நிலத்தில் உழுகின்ற கலப்பையை அறிவார்களேயன்றிப்,பகைமை கொண்டு போர் செய்யும் பகைவர்களது ஆயுதங்களை அறிய மாட்டார்கள்.

ஆற்றல் மிக்க வீரர்களைத் துணையாகக் கொண்டு, பகைவர் அழியுமாறு போர் செய்து, அவர்கள் நாட்டைக் கைக்கொள்ளும் மேன்மையுடையவனே! உன்னுடைய நாட்டில் உள்ள வீரத் தன்மை பொருந்திய கருவுற்ற மகளிர் விருப்பம் மிகுதியால் மண்ணைத் தம் கையால் எடுத்து சுவைக்கும் வகையில் கொள்வார்களே யன்றிப் பகைவர் ஒரு சிறிதேனும் உன் மண்ணைக் கொள்ள மாட்டார்கள்.

நீர் மிகுந்த அகழிகளை உடைய நீண்ட மதில்கள் சூழ்ந்த பாதுகாப்பும்,அறநெறி நிலவும் செங்கோண்மையும் உடைய மன்னனே! தீமை காட்டும் நிமித்தங்கள் புதிதாகத் தோன்றினாலும், முன்னமேயே காணப்பட்ட நல்ல நிமித்தங்கள்(அறிகுறிகள்) விலகுவதாகக் காணப்பட்டாலும் நிலை தளராத பாதுகாப்புடையது உன்னுடைய நாடு.அத்தகைய பாதுகாப்பைக் குடிகளுக்கு வழங்குபவன் நீ.ஆதலால் இத்தகைய சிறப்பு வாய்ந்த மன்னனுக்கு எந்தத் தீங்கும் வந்துவிடக் கூடாது என்று அன்புடைய உன் நாட்டு மக்கள் சற்றே கவலை கொள்ளவும் செய்கிறார்கள் என்கிறார்.

மேலும், இம்மன்னன் தோற்றுப் போகக் கூடிய விதமாக நிமித்தங்கள் (அறிகுறிகள்) தென்படுவதால் மக்கள் சற்றே கவலை கொள்வதாகக் குறிப்பிடுவது இப் புலவனின் மதி நுட்பத்தினதும் நேர்மைத் திறத்தினதும் மன்னன் மீது கொண்ட அன்பினதும் அழகே!அவை பரிசு பெறும் எண்னங்களைத் தாண்டிய, தன்னலம் அற்ற அன்பினதும்; மன்னன் மீது கொண்ட மதிப்பினதும் பாற்பட்டது.

இம்மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோடு போர் செய்து தோற்றுப் பின்னர் தனதாட்சியை மீண்டும் கைப்பற்றிக் கொண்டதாக வரலாறு சொல்லும்.அவ்வாறு நடந்து விடுமோ என்ற ஒரு சிறு கவலை இப்பாடலிலும் தொனித்து நிற்கக் காணலாம்.

பாடிப் பரிசு பெறுவதையும் தாண்டி உண்மை உரைத்த சிறப்பாலும் பாடல் பேசும் பொருளின் தரத்தாலும் மன்னனின் மகிமையை உரைத்த புலமைத் திறத்தாலும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அவர் புலவர் பெருமான்; குறுங்கோழியூர்க் கிளார்.

No comments:

Post a Comment