Tuesday, February 1, 2011

ஈழத்துக் கவிப் புலமை


ஈழத்துச் சின்னத்தம்பிப் புலவரை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.இவரது தந்தையார் ஒரு வித்துவான். ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்திருந்தவர்.பெயர் வில்வராய முதலியார்.அரசாங்கப் பதவி வகித்தவர். அவரது மகனார் நம்முடைய புலவர். அவருக்குப் படிப்பிலே நாட்டம் குறைவு. ஏழு வயதுப் பாலகனுக்கு விளையாட்டிலே தான் ஆர்வம் அதிகம்.

ஒரு நாள் இவர் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். வடதேசத்து முதலியார் ஒருவர் வில்வராயரைத் தேடிக் கொண்டு யாழ்ப்பாணம் வருகிறார். அவருக்கு இடம் தெரியவில்லை. அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் காண்கிறார் அவர். அதில் ஒரு பையனை - அது தான் நம்முடைய சின்னத் தம்பியாரை அழைத்து முதலியாரின் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்.பையன் மனதில் பாடலில் பதில் இயல்பாகப் பிறக்கிறது.பாடலில் பதில் சொல்கிறான் இவ்வாறு,

“பொன் பூச்சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின் பிரபை
வீசு புகழ் நல்லூரான் வில்லவரா யன்கனக
வாசலிடைக் கொன்றை மரம்”

அதாவது வில்வராயன் என்பவருடய வீட்டு முகப்பில் கொன்றை மரமானது அந்த வாசலைத் தங்க மயமாக்கிக் கொண்டு நிற்கிறது என்பது அப்பாடலின் பொருள்.

அப்படியாகக் கருவிலேயே திருவுடையவராக இவர் இருந்தார்.அவர் வளர்ந்து பெரியவராகிப் பாடிய பாடல்களில் பறாளை வினாயகர் பள்ளு மிகப் பிரசித்தம் வாய்ந்தது.அதில் மழை வருவதைப் பற்றிய ஒரு பாடல் இப்படி அமைந்திருக்கும்.

‘கருமயிலாடக் குயிலினம் வாடக்
கவியினம் ஓடக் கரடிபுல்வாய்
பொருபுலி யாளித் திரள் மரை சாரற்
புறமுழை பதறிக் கொடுகிடவே
அருங்குழை தவளக் குலவரை தகரத்
தடதிகி ரியின்முத் துதிர் தரவே
சொரிமல ரகிலப் பலமர முறியச்
சோவென மாரி பொழிந்ததுவே!’

அதாவது மயில்கள் ஆடுகின்றன, குயில்கள் வாடுகின்றன, குரங்குகள் ஓடுகின்றன, கரடி முதலிய விலங்குகள் கொடுகுகின்றன, குலமலைகள் தகருகின்றன,மரங்கள் முறிந்து நொருங்குகின்றன.சோ என்று மாரி பொழிகின்றது.

இவ்வாறு மழையினைக் கண்டு களித்தவாறு மலை நாட்டுக்குப் பயணமாகிறார் புலவர்.மலை நாட்டினை நம்முடய சின்னத் தம்பிப் புலவர் எப்படிப் பார்க்கிறார் என்று இனிப் பார்ப்போம்.அவருடய கண்களுக்கு அந்த மலை நாடு,

“மஞ்ச ளாவிய மாடங்கள் தோறும்
மயில்கள் போல் மடவார் கணஞ்சூழும்
அஞ்ச ரோருக பள்ளியின் மீமிசை
அன்ன வன்னக் குழாம் விளையாடும்
துஞ்சு மேதி சுறாக்களைச் சீறச்
சுறாக்களோடிப் பலாக்கனி கீறி
இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே”

தெரிகிறது.மஞ்சு அளாவிய - முகில்கள் அளாவிக் கொண்டிருக்கின்ற மாடங்கள் தோறும் மயில்கள் போல பெண்கள் கூட்டம் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.அருகிலே தாமரைப் பொய்கை. அங்கே அந்தத் தாமரைப் பொய்கையிலே அன்னங்கள் விளையாடுகின்றன.அவற்றினருகிலேயே எருமைகளும் தண்ணீருக்குள் ஆழ்ந்து படுத்துக் கிடக்கின்றன.(மேதி - எருமை)அவ்வாறு ஆறுதலாகப் படுத்துக் கிடக்கின்ற எருமைகளைத் துள்ளி விளையாடும் சுறாக்கள் சீண்டுகின்றன.அதனால் எருமைகள் சினந்து சுறாக்களை தம் கொம்புகளினால் இடிக்கின்றன.அதனால் அதிர்ச்சியுற்ற சுறாக்கள் தம் இயல்பினால் துள்ளி மேலெழுகின்றன. அவ்வாறு துள்ளி மேலெழுந்து அருகிலே இருக்கின்ற வேலியில் போய் விழுகின்றன. அவ்வேலியோ இஞ்சியும் மஞ்சளும் கலந்து அமைந்த வேலி.செழிப்பான வயலோர வேலி.அருகிலே பலா மரங்களும் செழிப்புற்று நிற்கின்றன. அவற்றிலே ’பன்றி வயிற்றில் மோதுகின்ற குட்டிகளைப் போல பலாக்கனிகள்’ பழுத்துக் குலுங்குகின்றன.இவ்வாறு பாய்கின்ற சுறாமின்கள் பாய்கின்ற வேகத்தில் இப்படியாக முற்றிப் பழுத்திருக்கின்ற பலாக்கனிகளைக் கீறிப் பிளந்து கொண்டு மஞ்சளும் இஞ்சியும் விளைந்து கிடக்கின்ற வேலிகளில் போய் விழுகின்றன.

இவ்வாறு மலை நாட்டின் இயற்கை வளத்தினைப் பாடுகின்றார் நம்முடைய சின்னத் தம்பிப் புலவர்.

இது,

“வெளளத் தடங்காச் சினை வாளை
வேலிக் கமுகின் மீதேறி
துள்ளி முகிலைக் கிழித்து
மழைத் துளியோடிறங்கும் சோ நாட்”டுக்கும்

’பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கிட்டெறியக் குரங்கிளநீர்
தனைக் கொண்டெறியும் தமிழ் நாட்டுக்கும்

வனப்பிலும் வளத்திலும் கவியின் சிறப்பிலும் வித்துவத் திறத்திலும் சற்றும் குறைந்ததல்ல வல்லவா?

அங்கே மழையைப் பொழிய விட்டு விட்டு செழிப்பான அந்த வளங்களையெல்லாம் கண்களால் கண்டு களித்த படி போவோம்.

இப்போது நூற்றாண்டுகள் கடந்து விட்டன.இப்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துக்குள் நுழைந்து விட்டோம்.

அங்கே,நம்முடைய தங்கத் தாத்தா - எமக்கெல்லாம் கத்தரித் தோட்டத்து வெருளியையும் பவளக் கொடியையும் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்று குழந்தைப் பாடல்களையும் தந்த நவாலியூர் சோம சுந்தரப் புலவரிடம் போவோம்.

அட இதென்ன!இலங்கையைப் பார்த்த கம்பன் அங்கெங்கோ சற்றுத் தொலைவில் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.அவரைச் சற்றே மரியாதை செய்து கொண்டு அப்பால் போவோம்.அவன் கவிகளுக்கெல்லாம் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவனல்லவா?

”மாகாரின் மின்கொடி மடக்கினரடக்கி
மீகார மெங்கணு நறுந் துகள் விளக்கி
ஆகாய கங்கையினை அங்கையினால் அள்ளி
பாகாய செஞ் சொலவர் வீசு படு காரம்”

இது இலங்கை வளம் சொல்லும் கம்பராமாயணத்துக் காட்சி.

ஆஞ்சனேயருக்கூடாக இலங்கையைப் பார்க்கின்றான் கம்பன்.அங்கே,பாகினைப் போல இனிய வசனங்களைப் பேசுகின்ற பெண்கள் மா கார் - கருமேகங்களுக்கிடையே ஓடிக்கொண்டிருக்கின்ற மின் கொடிகளைப் பிடித்து மடக்கிக் கைகளுக்குள் அடக்கி (விளக்குமாறினைப் போல அவற்றினை ஆக்கி) காரம் - வீடு.மீகாரம் - மேல் வீடு.அந்த மேல் மாடத்தினை,அதன் உட்பரிகைகளில் விழுகின்ற மலர்களின் மகரந்தப் பொடிகளைக் கூட்டுகிறார்கள்.அவ்வாறு அவற்றைச் சுத்தமாக்கிய பின்னால் அருகில் இருக்கின்ற அருவியிலே ஓடுகின்ற நீரினைத் தம் உள்ளங்கைகளினால் மொண்டு கொண்டு வந்து தெளித்து புளுதியினை அடக்குகிறார்கள் என்கிறான் கம்பன்.

இதோ மகாவலி கங்கை. தங்கத் தாத்தா இங்கே நின்று கொண்டிருக்கிறார். அவரிடம் வாருங்கள் ஏது சங்கதி என்று கேட்போம்.அவர் ஈழ நாட்டு நீர் வளத்தில் சொக்கி நிற்கிறார். வாருங்கள் அவர் சொல் நீரில் முக்குளித்து நீராடுவோம்.இதோ இப்போது கங்கை, மண்ணோடு மட்டுமல்ல கவிஞர் வாயில் இருந்தும் புறப்படுகிறது.

“சீரான எந் நாடு மெப்பதியு மூரும்
சோர்வான தாவரமும் மாமரமும் காவும்
பேரான கனிமரமும்பெருமரமும் தாவில்
பெட்பாரும் பென்னைகளும் வாழையொடு மேவி
நேராக ஓரிடத்து நிலையாகக் காண
நிலமடந்தை வைத்ததென நின்று பயனுதவும்
பேராதனைப் புதிய நந்தவன மகவை
பேணி அமுதூட்டிமகா வலிகங்கை பெருகும்”

சோர்வான தாவரங்கள் (சில தூங்கு மூஞ்சி மரங்கள்)சிலவும் மாமரமும் கனி மரங்களும் பெரு மரங்களும் இருக்கின்ற,பெட்பாரும் பென்னைகளும் வாழைகளோடு ஓரிடத்தில் நேராகவும் சீராகவும் நிலைத்துக் கலந்திருக்கின்ற நிலையைக் காணுகின்ற மகாவலி கங்கை ‘இது நிலமடந்தை - பூமித்தாய் வைத்ததெல்லோ என்று நினைத்து பேராதனையின் புதிய நந்தவன மகவை பேணி கவனித்து தன் தண்ணீரினால் அமுதூட்டிய படியே தாய்மை தன்மை இதுவாகும் என்று சொல்லத் தக்க படியாக விரைகிறது.

அப்படி மகாவலி கங்கையைப் பார்த்ததும் அவருக்கு மாணிக்க கங்கையிலே மூழ்கி கதிரமலையானைத் தரிசிக்கும் ஆசை மேலோங்கி விட்டது. அவர் அப்படியே மாணிக்க கங்கையில் மூழ்குதற்குப் புறப்படுகிறார். இப்போது கண்களால் அருகி கொட்டுகிறது; அது பத்தித் தமிழருவி.பாடலைப் பாருங்கள்!

“அதிரவரு மாணிக்க கங்கை தனில் மூழ்கி
அன்போடு சிவாய என அரு நீறு பூசி
முதிரும் அன்பால் நெஞ்ச முருக,விழியருவி
முத்துதிர, மெய்ப்புளக, மூரவுரை குளறப்,
புதிய செந்தமிழ் மாலை புகழ் மாலை சூடிப்
பொருவில் கந்தா சுகந்த வென்று பாடி
கதிரமலை காணாத கண் என்ன கண்ணே
கற்பூர ஒளி காணாத கண் என்ன கண்ணே”

என்று பாடிப் பரவுகிறார்.இதனைப் பார்க்கின்ற போது எப்படியும் ஒரு சிலப்பதிகாரப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்து போகும். அது,

“பெரியவனை மாயவனை பேருலகமெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் கனிவாயும் செய்யக்
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே”

என்பதை நினைக்கத் தோன்றும்.ஆனால் யாழ்ப்பாணத்தவருக்கு -அந்த யாழ்ப்பாண மண்ணுக்குரியவருக்கு இந்த மாணிக்க கங்கை பெருகுவதைப் பார்த்தால் நாவலர் உடனே ஞாபகத்துக்கு வருவார்.அவரது கண்டனப் பிரசாரங்கள் ஞாபகத்துக்கு வரும். அதனால் நவாலி என்ற யாழ்ப்பானத்துச் சிற்றூரைச் சேர்ந்த எங்கள் தங்கத் தாத்தா கதிரமலையின் அருவியைக் கண்டதும்,

“உண்ட செந்தமிழ் சைவ நூலமு
தோங்க நல்லை வந்தருளு நாவலன்
கண்டனப் பிரசங்கமாமென
கதிரமலையருவி காலுமே”

என்று ஞாபகமூட்டிப் பாடுகிறார்.அப்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் அல்லவா. சமயப் பரம்பல் வெகு தீவிரமாக அமுல் படுத்தப் பட்டுக் கொண்டிருந்த பொழுது அது.ஆங்கிலம் ஆட்சி மொழியாகி தமிழ் இரண்டாம் பட்சமாகிக் கொண்டிருந்த வேளை. இவை இரண்டுக்கும் எதிராக தமிழையும் சைவத்தையும் மேலோங்கச் செய்யும் பொருட்டு நாவலர் எழுந்தார்.சைவத் தமிழ் பாடசாலைகள் பல ஆங்கில கிறீஸ்தவப் பாடசாலைகளுக்கெதிராக எழுந்தன. நாவுக்கு வல்லவராக நாவலர் திகழ்ந்தார்.

இங்கே மாணிக்க கங்கை கரை புரண்டோடுவதைப் பார்த்தவுடன் தங்கத் தாத்தா சோம சுந்தரராருக்கு நாவலரின் வாயிலிருந்து புறப்படும் அருவி ஞாபகத்துக்கு வந்து விட்டது.அதனால் கண்டனப் பிரசங்கமென இரைச்சலோடும் ஒரு வித ஆத்திரத்தோடும் மாணிக்க கங்கை பாய்வதாகத் தோன்றுகிறது அவருக்கு.

இந்தப் பொங்கிப் பிரவகித்து ஓடும் தண்ணீரைப் பார்த்ததும் புலவருக்கு இயற்கை அன்னை தனியாக வைத்திருக்கின்ற ஏழு வென்னீரூற்றுக்கள் நினைவுக்கு வந்து விட்டன. அவற்றைப் பற்றி இவ்வாறு பாடுகிறார்.

இதுவும் தங்கத் தாத்தா பாடி இருக்கின்ற பாடல் ஒன்று தான்.கந்தளாய் வென்னீரூற்றுப் பற்றியது.

“காதலனைப் பிரிந்தவளின் மனம் போல ஒன்று
கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று
தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று
செய்த பிழைக்கழுங்குமவன் மனம் போல ஒன்று
நீதி பெறா ஏழை துயர் மனம் போல ஒன்று
நிறை பழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று
காது மழுக்காறுடையான் மனம் போல ஒன்று
கனலேறு மெழுநீர்கள் உண்டு கன்னியாயில்”

ஏழு கிணறுகளுக்கும் ஏழு விதமான கொதி நிலை உண்டல்லவா? அவை எல்லாம் மேற்கண்டவாறு கொதித்துப் போயுள்ளன.இதில் நீராடி நல்லைக் கந்தனின் பாதம் பணிவோம்.

”ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞான மொழி பேசு முகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறு படு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புனர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!”

2 comments: